school boys 450

மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை மிகவும் மோசமானதாகவும், அபாயகரமானதாகவும் உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டில்  பல மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்களை   கொண்டிருக்கக் கூடிய நம் சுதந்திர இந்தியாவில் ஒரு மதம், ஒருமொழி என்ற கோட்பாட்டில் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. 1968-ல் டி.என்.கோத்தாரி தலைமையில் 17 உறுப்பினர்களைக் கொண்ட குழு கல்விக் கொள்கையை உருவாக்கியது. அதன்பிறது 1986-ல் வெளியான கல்விக் கொள்கையில் 1992-ல் சில திருத்தங்களுடன் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. தற்போது வெளியிடப்பட்ட வரைவு அறிக்கையை தயாரித்த டி.எஸ்.ஆர். சுப்ரமணியன் தலைமையிலான ஐவர் குழுவில் 4 பேர் ஐஏஎஸ் அதிகாரிகள், ஒருவர் மட்டுமே கல்வியாளர், அவர்களும் யார் யாராக இருப்பார்கள் என்று உங்கள் யுகத்துக்கே விட்டு விடுகின்றேன். 

கல்விக்கொள்கையும் சமஸ்கிருத திணிப்பும்

 இந்த புதிய கல்வி கொள்கையில் சமஸ்கிருதம் ,  ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்கள், குலக்கல்வி  எல்லாம் வெளிப்படையாகவே திணிக்கப்படுகின்றது. கல்வியும் பண்பாடும் உயர்ந்த சாதி மக்களிடமிருந்து கீழ்த்தட்டு மக்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்.  அப்போதுதான் சமூகத்திற்கு ஒரு புதிய சக்தி கிடைக்கும்.  ஆனால் எப்பொழுதுமே அது கீழ்த்தட்டு மக்களிடமிருந்து மேல்தட்டு மக்களுக்குக் கொண்டு செல்லக் கூடாது”, என்று 1857-1858 ஆம் ஆண்டிற்கான பொதுக் கல்வி இயக்குநரின் அறிக்கை வடிகட்டும் கொள்கையை மீண்டும் வழி மொழிகிறது இந்த புதிய கல்வி கொள்கை. இப்போது எட்டுத் திக்கிலிருந்தும் பார்ப்பனியம் சூழ்ந்து கொண்டிருக்கிறது எனச் சொல்வது தகும்.

இந்தியாவில் அரசு இயந்திரம் பார்ப்பனமயமாகி இருக்கிறது என்பதை உணர்வதற்கு இது போன்ற சான்றுகளே போதும்,  குறிப்பாக மோடி பிரதமரான பிறகு இது மிகுந்த விரைவுடன் செயலாற்றுகிறது, நம் இந்திய நாட்டின்  கலாச்சாரக் கூறுகளை  இன்றைய கல்வி முற்றிலும் கைவிட்டு விட்டது என்று சொல்லி, இதைச் சரி செய்கின்றோம் என்ற பெயரில்  வகுப்பில் மூன்றாவது மொழியாக சம்ஸ்கிருதம் இணைக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு சமஸ்கிருத ஆசிரியர் நியமிக்கப்படுவார் என்ற மத்திய அரசின் இக்கொள்கை முன்வைக்கும் திட்டம் அப்பட்டமான காவி மயம என்பது நமக்கு தெளிவாகின்றது, சமஸ்கிருதமயமாக்கம், உயர்கல்விக் கூடங்களில் ஆக்கிரமிப்பு, மாட்டுக்கறி, என இதற்கு பற்பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம், இதில் ஒன்று தான் இந்த புதிய கல்விக்கொள்கை, வாருங்கள் இக்கல்வி கொள்கைகளின் வரைவு அறிக்கையை சற்று அலசுவோம்.

புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் சில ;

* தற்போது 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்றிருப்பது 5-ம் வகுப்பு வரை என மாற்றம்

* படிப்பில் பின்தங்கியவர்களுக்கு ஏற்ப தொழில்சார்ந்த, உடல்திறன் சார்ந்த படிப்புகள் அறிமுகம்

* அறிவியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு தேசிய அளவில் பாடத்திட்டம்

* சமூக அறிவியல் உள்ளிட்ட இதர பாடங்களுக்கு மாநிலங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பாடத்திட்டம்

* 10-ம் வகுப்பில் பகுதி-ஏ பாடங்கள் (அறிவியல், கணிதம், ஆங்கிலம்), பகுதி-பி பாடங்கள் (தொழிற்கல்வி பாடங்கள்) அறிமுகம்

* தேசிய அளவில் உதவித்தொகை வழங்க 10-ம் வகுப்பு இறுதியில் நுழைவுத்தேர்வு

*  இந்திய பல்கலைக்கழகங்களுடன் வெளிநாட்டு கல்லூரிகள் இணைந்து செயல்பட ஏற்பாடு

* கல்வி உள்கட்டமைப்புக்குச் செய்யப்படும் செலவினங்களுக்கு தனியாருக்கு வரிச்சலுகை

8-ம் வகுப்பிலிருந்து   5-ம் வகுப்பு வரை  () மாற்றம்

தற்போது 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெரும் முறையை மாற்றி 5-ம் வகுப்பு வரை  தான் என்று சொல்வதிலே இவர்களுடைய  உள்  நோக்கம் தெள்ளத்தெளிவாக தெரிகின்றது. மாணவன் தேர்ச்சி அடையாவிட்டால் அவனுக்கு தொழில் பயிற்சி மட்டுமே அளிக்கப்படும் என்று கூறி அவர்களை படிக்கவிடாமல்  தொழில் பயிற்சி மட்டுமே அளித்து அவனுடைய கல்வியறிவை தடுப்பதே தவிர வேறேதும் இல்லை, இதனால் கிராமப்புற மாணவர்களும்  ச மூக ரீதியாக பின் தங்கியுள்ள  பிரிவினரும் பெரும்பாலும் பாதிக்கப்படுவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

படிப்பில் பின்தங்கியவர்களுக்கு ஏற்ப தொழில்சார்ந்த, உடல்திறன் சார்ந்த படிப்புகள் அறிமுகம்

இவ் வரைவு அறிக்கையின் மூலம் சிறுபான்மையினர் மற்றும்  தாழ்த்தப்பட்டோரின் பிள்ளைகளை படிப்பில் பின்தங்கியவர்கள் என்று முத்திரை குத்தி மேலும் படிக்க விடாமல். அவர்களுக்கு தொழில்சார்ந்த, உடல்திறன் சார்ந்த படிப்புகள் அறிமுகம் என்ற பெயரில் அவர்களின் பொது கல்வியை தடுப்பதே இவர்களின் நோக்கமாக இருக்கும். மத்திய அரசிற்கு  உண்மையிலே மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் இந்த அறிக்கையை  விடுத்து மாணவர்களுக்கு  படிப்பின் மீது ஆர்வம் ஏற்பட வேறு எதாவது முயற்சியை செய்யலாமே.

 பகுதி- மற்றும் பகுதி -பி பாடங்கள் என்னும் பிரிவினை

அறிவியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு தேசிய அளவில் பாடத்திட்டமும்  சமூக அறிவியல் உள்ளிட்ட இதர பாடங்களுக்கு மாநிலங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பாடத்திட்டம் என்ற  அறிக்கையின் மூலம் கல்வியை உடைத்து இரண்டு தரமாக பிரித்து, எ கிரேட் படிப்பு மத்திய அரசும் , பி கிரேட் படிப்பு மாநில அரசிற்கும்  என்ற பிரிவினை அளவுகோளை வகுத்துள்ளது மத்திய அரசு. 10-ம் வகுப்பில் பகுதி-ஏ பாடங்கள் அறிவியல், கணிதம், ஆங்கிலம் என்றும்  பகுதி-பி பாடங்கள் என்று  தொழிற்கல்வி பாடங்களையும் மத்திய அரசு  வரையறுத்துள்ளது சரியானதல்ல, மதிப்பெண் அடிப்படையில் ஒருமாணவனின தகுதியை யாரும் கணித்துவிடமுடியாது,  கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் என்ற சொல் அவர்களின் மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும் என்பதை சற்று சிந்த்தித்து பார்க்கவேண்டும் .

பிரிவினைவாத அணுகுமுறையும் கல்வி வியாபாரமயமாக்கலும்

மத்திய அரசு மதரீதியாகவும், சாதி மற்றும் வகுப்புவாத அடிப்படையிலும் மிக அதிகமாகப் பிரிவினைவாத அணுகுமுறை கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் ஆனால் அது மாணவர்கள் கற்கும் கல்வியிலும் புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் நுழையும் போது தான் மிகவும் ஆபத்தானதாக தோன்றுகிறது.  சமஸ்கிருத மொழியைத் திணிக்கவும், வேத பாடத்திட்டத்தைக் கொண்டுவரவும் இக்கொள்கை முயற்சிக்கிறது. அது மட்டுமின்றி  பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை தனியாருக்கு கொடுப்பதற்கு இடமளிப்பதும்  கல்வி உள்கட்டமைப்புக்குச் செய்யப்படும் செலவினங்களுக்கு தனியாருக்கு வரிச்சலுகை என்னும் அறிக்கையின்  மூலமே  நமக்கு தெளிவாக புரிகின்றது.

இந்திய பல்கலைக்கழகங்களுடன் வெளிநாட்டு கல்லூரிகள் இணைந்து செயல்பட ஏற்பாடு என்ற கொள்கையானது வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்களை  நம் நாட்டில் அனுமதிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. இக்கொள்கை அமலானால் மாநில உரிமையை பாதிப்பது மட்டுமின்றி வெளிநாட்டு கல்லூரிகள் இந்திய பல்கலைக்கழகங்களுடன் இணைவதால் கல்வி பெரும் வியாபாரமயமாகும், அப்படி கல்வி பெரும் வியாபாரமயமாவதால், கல்வியானது சமூக ரீதியாக பின் தங்கியுள்ள  பிரிவினருக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் கிடைப்பது என்பது எட்டாக்கனியாகவே  இருக்க போகின்றது, நமது இந்திய தேசத்தின் எதிர்காலம் மாணவர்கள் கையில் தான் உள்ளது. அப்படிப்பட்ட  எதிர்கால தூண்களான எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான பாடம் கற்றுத்தரப்பட வேண்டும் அது தான்  மாணவர்களுக்கும் நலம் பயக்கும் என்பதை இந்த மத்திய அரசு புரிந்து கொள்ளவேண்டும். எனவே, மாணவர்களின் எதிர் கால நலன் கருதி, இந்த தவறான  ஒரு சார்பு கல்வி கொள்கைகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மாணவர் இந்தியா மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.

- அப்சர் சையத், மாநில துணை செயலாளர்மாணவர் இந்தியா