கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பகுப்பாய்வு -1

எல்லா போராட்டங்களும் குறியீடுகள் வழிதான் நிகழும். அதிகாரத்தின் குறிகளை சிதைத்தல், மாற்றுக் குறிகளை உருவாக்குதல் என்பதே இன்றைக்கான போராட்ட வழிமுறை. இதுவே புதிய- இடதுசாரி சிந்தனைமுறையாகும். அதை சரியாக செய்துள்ளது “மெரினா தை-எழுச்சி”.

சல்லிக்கட்டு என்பது ஒரு ஆதிக்கசாதியின், அதிகாரத்தின், ஆணவத்தின் குறியீடாக இருந்ததை சிதைவாக்கம் (டிகன்ஸ்டரக்ஷன்) செய்துள்ளது. சல்லிக்கட்டு என்பது வெறும் தமிழ் பண்பாட்டை சொல்லும் காளையின் வீரவிளையாட்டு மட்டுமல்ல அதனுள் பொதிந்துள்ள பொருளியல் நலன், சமூகவயம், வரலாற்று தொடர்ச்சி என்பதை வெளிப்படுத்தியுள்ளது. சல்லிக்கட்டு என்கிற குறியை முற்றிலுமாக சிதைத்து கார்பரேட்-காவிகளின் நலனை வெளியேற்றி தமிழினம் என்கிற புதிய குறியாக்கியுள்ளது. இனியான தமிழன் இந்த எழுச்சியின் வழி அறியப்பட்ட குறியாகவே குறிப்பீடு செய்யப்படுவான். இதுதான் இது தரும் மகத்தான செய்தி.

பகுப்பாய்வு-2

தமிழ் என்கிற சாதிய -சைவக் கருத்தியல் முற்றிலுமாக சிதைவாக்கம் செய்யப்பட்டு மதச்சார்பற்ற -சாதிசார்பற்ற தமிழன் என்கிற இனக்கருத்தியலுக்கான வடிவத்தை எடுத் துள்ளது. இது ஒரு நல்ல சமூகவயப்பட்ட குறியாடல். இதில் கலந்துகொண்ட அனை வரும் இதே கருத்தியலுடன் தொடர்ந்து இருக்கப்போவதில்லை. அதில் பலரோ அல்லது சிலரோ மீண்டும் சாதிய, மத, இனவெறி கொண்டவர்களாக மாறலாம். என்றாலும், ஒரு எழுச்சிக்குள் நுழைந்து வெளியேறும் உடல் என்பது நனவிலயாக பெறும் உயிர்-ஆற்றல் முக்கியமானது. அதில் சில ஆயிரம் இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், பெண்கள், மாணவிகள் அரசியல்வயப் படுத்தப் படுவதே இந்நிகழ்வின் மாபெரும் வெற்றி.

அடையாளம் என்பது மாறாத மோலார் தன்மைகொண்டது அல்ல. அது மாறிக் கொண்டிருக்கும் மூலக்கூறு தன்மைகள் கொண்டது என்பதால் அடையாளங்கள் வேர் பாய்ந்து நிற்பதில்லை. வலைப்பின்னலில் அது மற்றமைகளினால் உருவாகி உருவாகி கலைவது. ஆனால் ஒவ்வொரு கலைவிற்கும் ஒரு கூறை அது உள்ளிருத்துகிறது. அப்படியான அரசியல் கூறுகள் உடலில் பதிவாகும் ஒரு வெளியே இது.

தூங்கியதாக, உதிரிகளாகிவிட்டதாக, சுயமரியாதை அற்றதாக எண்ணிய ஒரு சமூகம் தனது விழிப்பை காட்டியுள்ளது என்பதே முக்கியம். எத்தனை சதிகள் இதில் இருந்தாலும் இந்தி எதிர்ப்பு போர் என்பது எப்படி ஒரு வரலாற்று நனவிலியாக மாறியதோ அப்படி ஒரு நனவிலியாக மாறியுள்ளது இந்நிகழ்வு. இது ஒரு படைப்பூக்கமிக்க புனைவுவெளியை திறந்துவிட்டுள்ளது. இனி தமிழில் மொழிபெயர்ப்பு படைப்புகளால் நிறைந்து வழியும் இலக்கிய வெளியைத்தாண்டி இதில் கலந்துகொண்டவர்கள் உருவாக்கும் கதையாடல்களின் புனைவு என்பதே இனியான தலைமுறைகளின் கதைகேப்பதாக அமையும். இதுதான் இதன் சமூக-வெற்றி. இது ஒரு புதிய சமூகநனவிலியை கட்டியுள்ளது.

பகுப்பாய்வு-3

மெரினா செல்லும் பேருந்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கருப்பு சட்டை, கருப்பு டீசர்ட், கருப்பு துண்டு எனக் காணப்படுகின்றனர். கருப்பு என்கிற பெரியாரின் எதிர்ப்பு என்கிற குறியீடு ஒரு நனவிலிப்போல எல்லா இளைஞர்களிடமும் விரவியுள்ளது. பெரியாரை யார் என்று அறியாமலே எண்ணற்ற பெரியார்களாக உருவாகுதல் நிகழ்கிறது. கருப்பை பெரியார் திராவிட இனம் கருப்பர்கள், மிலேச்சர்கள் என்று குறியிட்ட வர்ணக்கோட்பாட்டு சனாதன இந்து மதத்தை எதிர்க்க அதையே தனது சிந்தனையின் குறியீட்டு நிறமாக மாற்றினார். கருப்பை துக்கம், மரணம் போன்ற தாழ்ந்த செயல்களுக்கானதாக ஒதுக்கிய இந்து சனாதனக் கோட்பாட்டையும், உலக அளவில் வெள்ளை ஐரோப்பியம் அறமற்றதாக குறிநிலைப்படுத்தியுள்ள கருப்பை (கருப்பு பணம், கருப்பு சந்தை) விடுதலைக்கான போராட்டத்திற்கான எதிர்ப்பிற்கான நிறமாக்கியவர் பெரியார். திராவிடத்தின் கருப்பு தற்போது இளைஞர்களால் தமிழின் குறியீடாக மாற்றப்படுகிறது. கருப்புச்சட்டைத் தமிழனாக பலரும் குழுமியுள்ளதும், அதை ஒரு போராட்ட வடிவமாக ஏற்றிருப்பதும் கருப்பு என்கிற திராவிடக் குறியினை தமிழினக் குறியாக மாற்றியுள்ளது.

விடுதலை, சுதந்திரம் என்பது மிகைல் பக்தின் கூறிய கார்னிவல் களிப்பாக மாறியுள்ளது. மத்திய-மாநில அரசுகளின் கொடும்பாவிகளும், தாரை தப்பட்டை சவ ஊர்வலங்களும், உருவ பொம்மையை செருப்பாலடிக்கும் பெரியார் வழி சுயமரியாதை போராட்ட வடிவங்களும் நிறைந்து வழிகிறது மெரினாவில்.

mariana 600பகுப்பாய்வு-4

பால் அரசியல் பள்ளிலிக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றும் கார்பரேட்டுகளால் கைப்பற்றப்படுவது உணரப்பட்டுள்ளது. சிறுவியபாரிகளை ஒழிக்க மோடியின் செல்லாக்காசுத்திட்டம். விவசாயிகளை ஒழிக்க காவேரிப்பிரச்சனை. கார்பரேட்டுகள் தண்ணீரை களவாடி கோக்காக விற்பதற்காக நதிநீர்களை கையில் எடுப்பது. இப்படி வாழ்வின் அனைத்து அடிப்படை மூலங்களிலும் கார்பரேட்டுகள் தங்கள் அதிகாரவலையை விரிப்பதை இப்போராட்டம் உணரவைத்துள்ளது. எல்லோருக்கும் ஏதோ ஒருவகையில் நாம் கார்பரேட்டுகளால் சுரண்டப்படுகிறோம் என்ற உணர்வு வந்துள்ளது.

தொடர்ந்து மக்களை மதிக்காத அரசுகளின் திமிர்த்தனம் ஏற்படுத்திய அதீத வெறுப்பு. தன்னை வாக்கு வங்கியாகவும், பணத்திற்கு வாக்களிக்கும் சோரம் போனவர்களாக கருதும் அரசியல் கட்சிகளின் அலட்சிய மனப்போக்கிற்கு எதிராக தனது சுயத்தை வலிமையாக வெளிப்படுத்தும் ஏக்கம். அதற்கு கிடைத்திருக்கும் ஒரு நல்வாய்ப்பாக மக்கள் இதில் கூட்டம் கூட்டமாக வந்து பங்கேற்பதில் புரிந்துகொள்ள முடிகிறது. மனக்காயங்களை வெளிப்படுத்தும் குமுறல்களே முழக்கங்களாக ஆட்டங்களாக பாட்டாக வெளிவருகிறது. காளை ஒழிப்பின் கார்பரேட் நலன்களை அதற்கு காவடி தூக்கும் காவிகளின் நலனை, அதற்கு கைகட்டி நிற்கும் தமிழக அரசை அம்பலப்படுத்தி நடுத்தெருவில் அம்மணமாக்கியுள்ளது ”மெரினா தை-எழுச்சி”.

பகுப்பாய்வு-5

மெரினா தை-எழுச்சி இன்றைக்கான சமூகத்தில் ஒரு பின்நவீன உத்தியாக பிரடரிக் ஜேம்சன் என்கிற மார்க்சியர் முன்வைத்த “பேஷ்டிச்” (றிணீstவீநீலீமீ) என்கிற “பழமைக்கு புதிய அர்த்தம் தந்து நவீனத்தில் ஒட்டுதல், பழமையை நவீன பொருள் போலச் செய்து காட்டுதல், பழமையை முன்வைத்து நவீனத்தை பகடி செய்தல், பழமையை புத்தாக்கம் செய்தல்” என்ற செயலை சல்லிக்கட்டு போராட்டம் என்ற குறி வழியாக நிகழ்த்தியுள்ளது.

இது ஒரு பின்காலனியப் போர். பண்பாடு என்ற பெயரில் பழமையை காப்பதோ தூக்கிப்பிடிப்பதோ அல்ல. பண்பாட்டை மீளாக்கம் செய்வதன் வழியாக அதன் பின் உள்ள கார்பரேட்-காவிகளை விரட்டியடிப்பதே. தேசியம் என்ற பெயரில் இழிநிலைக்கும், இரண்டாந்தர குடிமக்களாக தமிழ்நாட்டு மக்களை நடத்தியதற்கும் எதிரான ஒரு குறியீடு. இதற்குள் சாதியை, மதத்தை, தீண்டாமையை தேடுவதும் அதன் காரணமாக எதிர்ப்பதும், வரலாற்றில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் தற்கொலை முயற்சியே.

இது தெல்யுஸ்-கத்தாரி கூறும் ரைசோமேட்டிக் (தமிழில் சல்லிவேராக்கம் அல்லது குறுக்குமறுக்கு என்று சொல்லலாம்) அசம்பலேஜ். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போராட்டத்தில் இணையலாம், கலையலாம். வேறு ஒரு இடத்தில் மீண்டும் இணையலாம். முழக்கங்களில் தனது அரசியலை முன்வைத்து செயல்படலாம். மையமற்ற பல்கிப் பரவி நிகழும் ஒரு எழுச்சி.

தமிழ் என்கிற கருத்தியல் காவி-கார்பரேட்டை எதிர்க்கும் சல்லிக்கட்டு அரசியலாக உயிர்-முதலீடு செய்யப்படும் நிகழ்வே இந்த போராட்டத்தில் கிடைத்த வெற்றி.

பகுப்பாய்வு-6

மையமற்ற எழுச்சியான புதியதொரு போராட்ட முறையை உண்மையில் பெருந்திரள் மக்களுக்கான குடியாண்மை ஜனநாயக அரசியலை அதற்கான போராட்ட வடிவை அறிமுகப்படுத்தி வெற்றியடைந்துள்ளனர். திரள்கள்தான் இனி புரட்சிக்கான அடிப்படைகளை உருவாக்குபவர்கள் என்பதை நடத்திக் காட்டியுள்ளார்கள். இனி புரட்சிகர சக்திகள் இந்து பெருந்திரளிலிருந்துதான் உருவாகும்.

இதற்கு ஒரு மையத்தை உருவாக்க முயன்ற எல்லா ஊடக, பத்திரிக்கை, முகநூல் வாசிகளையும் திணறடித்துள்ளனர். சிலர் தற்போது மையமாகி இதை தங்களது சுயலாபத்திற்கு கடத்தி செல்லமுயல்கிறார்கள். இனிதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போராட்டமே கடினம், அதன் பலனை அறுவடை செய்வது எளிது. தற்போது அந்த கட்டத்தை நெருங்குகிறது போராட்டம். இது ஒரு காவியசோகம்தான்.

பகுப்பாய்வு-7

இனி வெற்றி தோல்வி என்கிற தன்முனைப்பு விளையாட்டில் ஈடுபடாமல் கூடியது தெரியாததைப்போல கலைவதும் தெரியாமல் கலைவதே சரியான வழிமுறையாக இருக்கும் எனத் தோன்றுகிறது. அரசை திணறடிப்பதற்கு இப்புனைவு வெளியின் மர்மமே முக்கியமானது. அரசோடும் அதிகாரத்தோடும் மக்கள் நிகழ்த்தும் கண்ணாமூச்சி விளையாட்டாக இது நிகழ்வதால் மக்களிடம் அரசு தன்னை கிள்ளுக்கீரையாக நடத்தமுடியாது என்கிற உளவியல் பலத்தை தரக்கூடியதாக அமையும்.

முடிவை அடைவதற்கு இது ஒரு நாவலோ, கதையோ அல்ல. முடிவுகள்தான் ஆரம்பத்தை தீர்மாணிக்கிறது. முடிவற்றது எப்பொழுதும் ஆரம்பமாக மட்டுமே அமையும். துவக்கம், முன்னணி இதுவே போராட்டத்திற்கு தேவை. செல்லாக்காசு திட்டத்தைவிட ஒரு பெரும் அவலத்தை, சோகத்தை மக்கள் அனுபவித்திருக்க மாட்டார்கள். துன்பமும், துயரமும் இயல்பு என அதை ஏற்று வாழும் ஒடுங்கிய நிலைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் கையறு நிலையிலிருந்து ஒரு பெரும் சுதந்திரத்தை, விடுதலையை, நம்பிக்கையை பெற்றிருக்கிறார்கள். ஒரு உரிமைக்கான வேட்கை திறக்கப்பட்டுள்ளது. அது பற்றி பரவ, மக்கள் தங்களுக்குள் அதை பொறியாக காப்பதற்கு இப்போராட்டம் பயிற்று வித்திருக்கிறது. இதை இப்படியே மையமற்ற தான, முடிவற்றதான, பொருள்புரியா ஒரு சொல்லாடலாக மாற்றுவதே சரியான உத்தி.

பகுப்பாய்வு-8

தற்போது அரசும் போராட்டக்காரர்களும் தங்களது தற்போதைய செயலுக் கான நியாயப்படுத்தல்களை (லெஜிட்டைமை சேஷனை) உருவாக்க முனைகிறார்கள்.

"பின்நவீன நிலமை" என்ற புகழ் பெற்ற நூலை எழுதிய லியோதார்த் "லெஜிட்டைமை சேஷனை" என்ற கோட்பாடு பற்றி பேசுகிறார். ஒவ்வொரு செயலும் போராட்டம், தினவாழ்வு, அரசின் செயல், பொதுவாழ்வின் செயல், சுயநல செயல்கள் போன்ற சிறுகதையாடல்கள் அல்லது சின்ன கதையாடல்கள் தன்னை லெஜிட்டைமைஸ் (நியாயப்படுத்திக்கொள்ள) செய்துகொள்ள ஒருபெருங்கதையாடலுடன் தன்னை இணைத்துக் கொள்ளும். நவீனத்து சமூகத்தில் அத்தகைய பெருங்கதை யாடல்களாக உருவானவைதான் விடுதலை, சுதந்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் என்பதெல்லாம். இப்படியான சிறுசிறு கதை யாடல்கள் இந்த பெருங்கதையாடலுடன் இணையும்போது மட்டுமே லெஜிட்டிமைஸ் (நியாயப்படுத்துதல்) ஆகும். இப்போராட்டம் நமது சமூகத்தின் ஒரு சிறுகதையாடல். அதை அப்படியே பெருங்கதையாடலுடன் (புரட்சி, வளர்ச்சி, முன்னேற்றம்) இணைக்காமல் அதற்கான நியாயத்தை வழங்குவதே முக்கியம். இப்போராட்டம் ஒரு சமூக-சிறுகதையாடலாக உருவாகியுள்ளது. பெருங்கதையாடலை வைத்து இதை ஆராய்வது ஒரு உட்டோப்பியாவின் கனவாகவே முடியும்.

பகுப்பாய்வு-9

ஏன் ஆட்டோ மற்றும் காவல்நிலையம் தீ வைக்கப்பட்டது? இதற்கு விடை சமூக உளவியல் ஆய்வில்தான் உள்ளது. போராட்டம் என்பது எரிக்கப்பட்டு தீயின் ஒளிச்சுவாலைகளுடன் முடிந்தால்தான் அதை ஒரு அதிகாரத்தின் உக்ரமான வன்முறையான காட்சிப்பிம்பமாக்க முடியும். திரும்ப திரும்ப அந்த தீயை காட்டி அறப்போராட்டங்களை வன்முறைப் போராட்டங்காளாக காட்டி மக்களிடம் போராட்டம் என்றாலே பயத்தீயை மூட்டும் பிம்பத்தை மனப்பதிவாக்குவதே அதன் நோக்கம். அதனால் தீ இல்லாமல் இந்த போராட்டத்தை முடிக்கமுடியாது. அறப்போராளிகள், ஆதரவு மக்கள் தீவைக்கும் போராட்டத்தில் ஈடுபடாதபோது என்ன செய்வது?

ஆங்கில தமிழ் காட்சி ஊடகங்கள் தொடர்ந்து தீயை மட்டுமே காட்டுவதன் நோக்கம் இதுதான். போராட்டம் என்பது தீமையானது என்ற உணர்வை படிமமாக்கவே. இது மொழியற்ற தளத்தில் பதிவாகும் ஒரு உளப்படிமம். அது நம்மை அறியாமல் பயமாக மனதில் உணர்வாகிவிடும். (இந்த பிம்ப உணர்வாக்கத்தைதான் அஃபக்ஃட் என்ற விளைவாக விவரிக்கிறார்கள் டெல்யுஸ்-கத்தாரி இரட்டையர்கள்.) நாம் இருட்டை, பேயை, சத்தத்தை கண்டு திடுக்குறுதல் என்பதே இப்படி நம் உடலில் கட்டப்பட்ட உணர்வுதான்.

மக்கள் மனதில் போராட்டங்கள் பற்றிய கொடுமையான பிம்பங்களை உருவாக்குவது, அதன்பின் போராட்டம் பற்றிய அச்சத்தை உருவாக்குவது. தொடர்ந்து ஊடகங்கள் காட்டும் பிம்பங்களில் தீ என்பது முக்கியமான பிம்பமாதல். வன்முறையின் உச்சமாக எரித்தல், கொளுத்துதல் என்பதே. அதை மனதில் நம்மை அறியாமல் புகுத்தும் ஒரு உளவியல் தாக்கத்தை உருவாக்குவதே ஊடகங்களும் அதன் டாக் ஷோக்களும். தற்போது போராட்டம் உருவமைக்கப்ட்ட களத்தைவிட்டு தொலைக்காட்சிகளின் திரைகளுக்கு நகர்ந்துவிட்டது. இனி பல கதையாடல்கள் உருவாக்கப்படும். இவைதான் வரலாறாக மாற்றப்படும். இப்படியான அதிகாரப்-புனைவாகவே வரலாற்றை நாம் வாசித்து வருகிறோம்.

பகுப்பாய்வு-10 

1. சல்லிக்கட்டை முன்வைத்து நிகழ்ந்தது ஒரு எழுச்சியே. அதனால்தான் அதை ”தை-எழுச்சி” என்று குறிக்கிறோம். அதை ஒரு போராட்டமாக மாற்ற முனைவதே அரசின் அவசரச் சட்டம். இந்த எழுச்சியைக்கூட ஏற்காத காவல்துறையும், அரசும் அதனை முன்வைத்து மீனவ குப்பங்களை தாக்குதல் நிகழ்த்தி இந்த எழுச்சியை சல்லிகட்டிற்கு மட்டுமான போராட்டமாக நியாயப்படுத்த முனைகின்றன. அரசு மற்றும் குடியாண்மை சமூகம் பற்றிய அதன் விழிப்பு கொள்ளல் பற்றிய இந்த எழுச்சி உருவாக்கிய கருத்தாக்கங்களே முற்போக்கு அரசியலுக்கு முக்கியமானது. இது ஒரு முழுமையான புரட்சியோ, அல்லது அரசு எதிர்ப்பிற்கான ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டமோ அல்ல. ஒரு முழக்கத்தை சுற்றி தானாக இணைந்த ஒரு ஒன்றுகூடல். இந்த எழுச்சி பல இடையீட்டு விளக்கங்களைக் கொண்டது. அதற்கான பலமும், பலவீனம் கொண்டது.

2. தை- எழுச்சியில் கலந்துகொண்டவர்கள், மற்றும் ஆதரித்த மக்களில் 80 சதவீதம் பேர் சல்லிக்கட்டு என்பது ஒரு எழுச்சிக்கான முகாந்திரம் என்ற அடிப்படையில் ஆதரித்தவர்களே. ஒட்டமொத்த மக்களின் மத்திய மாநில அரசுக்கு எதிரான கோபமே இந்த எழுச்சிக்கான அடிப்படை. இதை மறுப்பதில்தான் அரசின் அடக்குமுறையின் காரணம் அடங்கியுள்ளது. எழுச்சியை சமூகவிரோத செயலாக மாற்றவே அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. கைது செய்ய தலைமையற்ற நிலையில் ஆதரித்தவர்களை குறிவைக்கிறது.

3. தை- எழுச்சி சாதியை, மதத்தை ஒழித்துவிடுமா? என்பதுபோன்ற கேள்விகளும் கற்பனையும் அதன் எல்லைக்கு அப்பாற்பட்டது. ஒருவகையில் அது சிதறலாக உள்ள பல குழு அடையாள அரசியலை தமிழன் என்ற அடையாளத்திற்குள் திணிக்க முயற்சித்துள்ளது. குறிப்பாக இந்திய தேசியம் என்பதை கருத்தளவில் நிராகரித்துள்ளது. ஏதோ ஒருவகையில் புதிய தலைமுறையினருக்கு தமிழ் இன அரசியலுக்கான அடிப்படையை மறுஉருவாக்கம் செய்துள்ளது.

4. தை -எழுச்சியை ஒரு புரட்சியாக, அரசு எதிர்ப்பாக, சாதியமற்றதாக கற்பனை செய் பவர்களே அந்த போராட்டத்தின்மீது கேள்வி களை எழுப்புவார்கள். உண்மையில் இப்போராட் டம் தமிழ் இனம் என்பதைவிட தமிழ் என்கிற பிராந்தியத்தை முன்வைக்கும் ஒன்றே. இந்திய கூட்டாச்சியில் தனக்கான உரிமையைக் கோரும் அரசியலே. இது இனவாத அரசியலைக் கொண்ட ஒரு எழுச்சியல்ல. இதன் மதமற்ற தன்மைதான் அரசை பயங்கொள்ள வைக்கிறது. அதனால் காவல்துறையும், காவித்துறையும் இணைந்து இதை சமூகவிரோதிகள் ஊடுறுவிய நிகழ்வாக ஊடகங்கள் வழியாக பதிவு செய்ய முயல்கின்றன.

5.சல்லிக்கட்டை நடத்துபவர்கள் மீனவ குப்பத்திற்காக ஏன் அதை நிறுத்தவில்லை என்பது இந்த எழுச்சியே சல்லிக்கட்டிற்குதான் என்கிற அரசு வாதத்தை புரிந்துகொள்ளாத நிலையில் வருவதே. இந்த எழுச்சி சல்லிக்கட்டில் உள்ள சாதியத்தை கலைந்துவிடாது. சமத்துவ சல்லிகட்டும் நடைபெறாது. இது தமிழ் பண்பாட்டை காத்துவிடுமா? நிச்சயமாக இல்லை. பண்பாடு என்பது இருமுனையுள்ள கத்தி போன்றது. அதை கையெலெடுப்பவனையும் குத்தும். நாளை தமிழ் பண்பாடு என்று ஒவ்வொரு சாதியம் தனக்கான வட்டாரப் பண்பாட்டிற்கு தமிழ் அடையாளம் தரலாம்.

தனது மதச்சடங்கிற்கு தமிழ் அடையாளம் தரலாம். இப்போராட்டத்தில் தமிழ் பண்பாடு என்று முன்வைக்கப்பட்டிருப்பது ஒரு மேலோட்டமான குறியீடே. அதனால்தான் இன்று சல்லிக்கட்டு நடத்தும் அமைப்புகளை தமிழக மக்கள் ஒரு பொருட்டாக கருதுவுதில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அதில் கலந்துகொள்வதும் இல்லை. இதுவே சல்லிக்கட்டிற்கான நிராகரிப்புதான். சல்லிக்கட்டு என்பது வேட்டி கட்டிக் கொள்வதைப் போன்ற மற்றொரு தமிழ் பண்பாட்டை காட்டும் ஒரு நிகழ்வே. எல்லோரும் தமிழர் என்றாலும் வேட்டிக் கட்டிக் கொள்வதில்லை.

6. அரசு மாணவர்களின்மீதான தாக்குதலை நியாயப்படுத்த தொடர்ந்து மீனவ குப்பங்களை, ஆதரித்தவர்களை தாக்குகிறது. இந்த தாக்குதலுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் கிளர்ந்தெழாதபோது அரசு இப்போராட்டத்தை வெறுமனே சல்லிக்கட் டிற்கான ஒரு மாணவர் எழுச்சியாக குறியீடு செய்வதை நியாயப்படுத்தும். தற்போது நிகழ்வது குறியியல் தளத்திலான ஒரு போராட்டமே.

மீனவ குப்பங்கள் தாக்கப்பட்டிருப்பது இந்த குறியமைப்புகளை மாற்றியமைக்கவே. இதைதான் சாணக்கிய தந்திரம் என்பது. சல்லிக்கட்டுகளை புறக்கணிப்பதே மாணவர்கள், அவர்களை ஆதரித்தவர்கள் மீதான தாக்குதலையும், அரசையும் எதிர்ப்பதாக அமையும். ஆக, நமது முழக்கம் சல்லிக்கட்டை புறக்கணிப்பதாகவே அமைய வேண்டும். உடனடியாக மீனவ குப்பங்களுக்கு நிவாரணம் மற்றும் அரசின் மாணவர்கள், மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள் வழியாக தமிழகம் முழுவதும் இந்த எழுச்சியை ஒரு அரசு எதிர்ப்பு எழுச்சியாக மாற்றியமைப்பதே இன்றைய தேவை.