தமிழகத்தின் வீதிகள் அரை நூற்றாண்டுகளுக்குப் பின்னர், இன்று மிகப்பெரும் மக்கள் புரட்சியைச் சந்தித்திருக்கிறது. போராட்டத்திற்கே வராதவர்கள் ‘வாடி வாசல் திறக்கும்வரை வீடு வாசல் போகமாட்டோம்’ என கொள்கை சபதமிட்டனர். ஜல்லிக்கட்டில் தொடங்கி தமிழர்களின் பறிபோன அத்தனை உரிமைகளையும் மீட்டெடுக்கும் களமாக மாறிப்போனது ‘தைப் புரட்சி.’
தென்தமிழகத்தில் மட்டுமே நடத்தப்படும் ஜல்லிக்கட்டிற்கு தலைநகர் சென்னை தொட்டு, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஆதரவுப் போராட்டங்கள் வலுப்பெற்றன. குறிப்பாக கோவை, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டம் சாலைகளை நிறைத்தது. தமிழகத்தில் மூன்றாண்டுகளாகத் தொடரும் ஜல்லிக்கட்டிற்கான தடையை உடைத்தெறிந்துவிட்டது, தைப் புரட்சி. அந்தத் தைப் புரட்சியின் மையமாகவும், பிரதானமாகவும் இருந்தது மெரினாவில் கிளர்ந்தெழுந்த புரட்சியாகும்.
ஜனவரி 8ஆம் தேதி, ஜல்லிக்கட்டிற்காக ஒரு தொண்டு நிறுவனம் மெரினாவின் களங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலைவரை நடத்திய ஆயிரக்கணக்கானோர் பங்குகொண்ட பேரணியின் தொடர்ச்சியில்தான் உருவெடுத்தது ‘மெரினா புரட்சி’. ஜனவரி 17ஆம் தேதி காலை சில நூறு இளைஞர்களுடன் தொடங்கிய ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம், ஒரு புரட்சியாய் உருவெடுக்கும் என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.
முதல்நாளின் இரவில் நான் சென்று பார்த்தபோது, போராட்டக்காரர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்தது. நான் அங்கு சென்றதுமே களத்திலிருந்தவர்களுடன் இணைந்துகொண்டேன். ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அவசரச் சட்டம் இயற்ற வேண்டும், பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்பதுதான் அப்போது அங்கிருந்த பிரதான கோரிக்கையாக இருந்தது. போராட்டக் குழுவினர் விவேகானந்தர் இல்லத்தின் எதிர்ப்புறமும், காவல்துறையினர் விவேகானந்தர் இல்லத்திலிருந்து களங்கரைவிளக்கம் வரையிலும் திரளாக இருந்தனர்.
காலையிலிருந்து தொடர்ந்துகொண்டிருந்த போராட்டக் குழுவினருடன், அரசு தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நள்ளிரவு 1 மணி அளவில் அமைச்சர் ஜெயக்குமார் வர உள்ளதாக, தகவல் கிடைத்து. ஆனால் அமைச்சர் ஜெயக்குமாரும், மாஃபா பாண்டியராஜனும் தொலைக்காட்சிகளில் மட்டுமே பேசினரே தவிர, போராட்டக் குழுவைச் சந்திக்க வரவில்லை.
ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவருவது தொடர்பாக முதலமைச்சர் பிரதமரைச் சந்திக்க உள்ளதாகவும், போராடும் இளைஞர்களின் பக்கம் மாநில அரசு நிற்கும் என்றும் அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்பை வைத்து, போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களின் குரலை வலுப்படுத்த போராட்டக்காரர்களில் இருந்து சிலரைத் தன்வயப்படுத்திய காவல்துறை, அவர்களைத் தங்களின் வாகனத்தில் ஏற்றிப் பேச வைத்தது. ஆனால் போராட்டத்தின் பெரும்படை அதை நிராகரித்துவிடவே போராட்டம் தடைகளற்று அப்படியே தொடர்ந்தது.
இரண்டாம் நாளில் கூட்டம் மெல்ல, மெல்ல அதிகரித்துக்கொண்டே சென்றதால், அங்கு உணவுத் தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. அதுகுறித்து சமூக வலைத்தளங்களில் செய்தி பகிரப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களுக்குத் தேவையான உணவு பெருமளவில் வந்து குவியத் தொடங்கின. இரண்டாம் நாளில் மதியம்வரை களத்தில் இருந்துவிட்டு, மீண்டும் இரவு நான் அங்கு திரும்பியபோது போராட்டத்தின் நகர்வுகளைக் கண்டு அதிசயித்துவிட்டேன்.
முதல் நாளோடு ஒப்பிடுகையில் கூட்டம் பன்மடங்கு அதிகரித்திருந்தது. சென்னை கடற்கரைச் சாலையில் சிவாஜி சிலையிலிருந்து, கண்ணகி சிலைவரை கூட்டம் பெரும் திரளாய் இருந்தது. முதல்நாள் கோஷங்கள் மட்டுமே காணப்பட்ட இடத்தில், இரண்டாம் நாளில் பறை ஒலிகள் பெரும்சப்தமாய கேட்டன. குழுகுழுவாய் இணைந்து பறை அடித்தவர்கள், அதன் தாளத்திற்கேற்ப ஆடவும் செய்தனர். முதல்நாளில் பீட்டாவிற்கு எதிராக முழங்கப்பட்ட கோஷங்கள், இரண்டாம் நாளில் முதலமைச்சர் ஓ.பி.எஸ். சின்னம்மா, மத்திய அரசு, பிரதமர் மோடி, சுப்பிரமணிசாமி போன்றோர்களுக்கு எதிராகவும் வளர்ச்சி பெற்றிருந்தது.
முதல்நாளில் மெரினாவில் மட்டும் திரண்டிருந்த ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம், இரண்டாவது நாளில் திரைப்பட உதவி இயக்குனர்களின் ஒருங்கிணைப்பில் வடபழனியிலும் நடைபெற்றது. நான் மெரினாவிலிருந்து இரவு 1:30 மணிக்கு வடபழனி போராட்டக் களத்திற்குச் சென்றபோது, ஏ.வி.எம். ஸ்டுடியோ எதிரில் நூற்றுக்கணக்கானோர் தரையில் அமர்ந்த வண்ணம் போராடிக்கொண்டிருந்தனர். இந்த வடபழனி போராட்டம் 23ஆம் தேதி காலைவரை நடைபெற்றது.
நான் வடபழனியிலிருந்து மீண்டும் மெரினா வந்தபோது, கூட்டம் சற்று குறைந்திருந்தது. பறை ஒலிகள் அடங்கியிருந்தன. பெரும்பாலானவர்கள் அயர்ச்சியில் புல் தரைகளிலும், கடற்கரை மணலிலும் படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். அதில் பெண்களும், குழந்தைகளும்கூட இருந்தனர். இரண்டாம் நாளின் இரவு எந்தவித எதிர்ப்புமற்று தொடர்ந்து மூன்றாவது நாளையும் எட்டியது.
மூன்றாவது நாளில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவர்கள் திரளாக பைக்குகளில் அணிவகுத்த வண்ணம் மெரினாவிற்கு விரைந்தனர். கடற்கரைக்கு வரும் சாலைகள் அனைத்திலும் போராட்டக் குழுவுடன் இணையவரும் வாகனங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே சென்றது.
மதியம் 12:30 மணிக்கு ‘ஸ்டெல்லா மேரீஸ்’ கல்லூரிப் பெண்கள் கதீட்ரல் சாலையை அதிரவைக்கும் வண்ணம் அவர்களது போராட்டத்தைத் தொடங்கினர். ஜெமினி மேம்பாலம் வழியாக மெரினாவை நோக்கிப் பயணிக்கும் போராட்டக்காரர்கள் அனைவரும், ஸ்டெல்லா மேரீஸ் போராட்டக்காரர்களுடன் சற்றுநேரம் உற்சாகமாய் பங்கெடுத்துக்கொண்ட பின்னரே, மெரினாவை நோக்கிப் புறப்பட்டனர். அந்தளவிற்கு ஸ்டெல்லா மேரீஸ் போராட்டக்களம் உத்வேகம் பெற்றிருந்தது.
இந்தச் சூழலில்தான் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தி தோல்விகண்ட செய்தி போராட்டக் களத்திற்குக் கிடைத்தது. ‘வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், தான் எதுவும் செய்ய இயலாது’ என மோடி கைவிரித்தது தெரிந்து, போராட்டக் களம் அனல் கக்கியது. மோடிக்கு எதிரான கோஷம் விண்ணை முட்டிய நிகழ்வு அப்போதுதான் உக்கிரம் அடைந்தது. ‘மோடி மோடி கார்ப்பரேட் கேடி’ என்கிற வாசகங்கள் எல்லா மைக் குழுவினரிடமிருந்தும் ஒன்றன்பின் ஒன்றாக எழுப்பப்பட்டது.
போராட்டத்தில் வந்து குழுவாக இணைகின்றவர்களில் சிலர் தங்களுக்கென பிரத்யேக மைக்கும், வெகுசிலர் மேடையாகப் பயன்படுத்த அதற்குத் தகுந்தாற்போன்ற வாகங்களையும் கொண்டு வந்திருந்தனர். அதனால் போராட்டத்தில் பல குழுக்கள் செயல்பட்டன. ஒரு மைக்கிற்கும் இன்னொரு மைக்கிற்கும் அதிகபட்சமாக 300 மீட்டர் இடைவெளி இருந்தன. எனவே கோஷங்கள் ஒரு குழுவிலிருந்து இன்னொரு குழுவிற்கு எளிதாக பரிமாறிக்கொள்ளப்பட்டன.
‘ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்க நள்ளிரவில் திறக்கப்படும் நீதிமன்றத்தின் கதவுகள், இத்தனைபேரின் உணர்வுகளுக்காக ஏன் உடனடியாகத் திறக்கப்படக்கூடாது? காவிரி பிரச்சினையில் மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது, மத்திய அரசை உச்சநீதிமன்றத்தால் கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்த மோடி அரசிற்கு, ஜல்லிக்கட்டிற்கும் ஏன் அதுபோல சொல்ல இயலாமல் போனது?’ என்று சூரியன் உச்சியில் இருக்கும் அந்தவேளையிலும் பலகுரல்கள் உரத்து கேள்வி எழுப்பின. இந்தக் கட்டத்திலிருந்து போராட்டத்தின் கோஷங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக வலுப்பெற்று நின்றது.
தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தைத் தொடர்ந்து எழுத்தாளர் இலட்சுமி சரவணக்குமார் தனது ‘யுவ புரஸ்கார்’ விருதைத் திருப்பியளிப்பதாக முகநூலில் பதிவிட்டார். அதுபோலவே மறுநாள் அவர் தனது யுவபுரஸ்கார் விருதைத் திருப்பியும் அளித்துவிட்டார். ஆனால் பிற தமிழ் எழுத்தாளர்கள் யாரும் இப்போராட்டத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு பங்குகொள்ளவில்லை. இலட்சுமி சரவணக்குமாரின் செயல்பாட்டைத் தொடர்ந்து, ‘சாகித்ய அகாடமி’ விருதுபெற்றவர்கள் களத்தில் இறங்குவார்கள் என எழுந்த எதிர்பார்ப்பு உருவம்கொள்ளாமலே கடந்துவிட்டது.
மூன்றாம் நாள் போராட்டத்தில் மதியத்தோடு சென்றுவிட்ட நான், அதன்பின் மீண்டும் நான்காம் நாளின் மதியத்தில்தான் மெரினாவிற்குச் சென்றேன். அப்போது பெண்களுக்கு கழிப்பறை வசதிதான் அங்கு பெரும் பிரச்சினையாக இருந்தது. இதனால் அதுகுறித்து செய்திகள் பரப்பியதைத் தொடர்ந்து, அன்று மாலையே ‘மொபைல் டாய்லெட்’ அமைக்கும் ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுவிட்டன.
போராட்டம் எவரெஸ்டைப் போல வளர்ச்சியடைந்து கொண்டிருந்த நிலையில், மெரினாவில் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டார்கள் என தமிழகத்தின் பிற பகுதிகளில் போராடுபவர்களிடம் காவல்துறையினர் கூறி, எல்லோரையும் கலைந்துபோகச் சொல்லியுள்ளனர். இது சீர்காழி, தஞ்சை, பெரம்பலூர், கோவை, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளது. அதனால் மெரினாவில் போராட்டம் தொடர்ந்து கொண்டுதானுள்ளது என்கிற உண்மையை சமூக வலைத்தளங்களில் பரப்பியதோடு, தமிழகத்தின் பிறபகுதிகளில் இருக்கும் போராட்டக் குழுக்களை இணைக்கும் முயற்சி பலரால் மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து கலைந்து சென்றவர்கள் பலரும், மீண்டும் இரவில் களத்திற்குத் திரும்பினர்.
முதல்நாளில் ஆயிரத்திற்கும் நிகரான காவலர்கள் அணிவகுத்திருந்த கடற்கரைச் சாலையில், நான்காம் நாளான 20.01.2017 அன்று நூறுபேர்கூட இருந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு காக்கித் தொப்பிகளைத் தேடித்தான் பார்க்க வேண்டியிருந்தது. அதனால்தான் போராட்டக்காரர்களே போக்குவரத்துக் காவலர்களாக மாறி, பணி செய்தனர். உண்மையில் தன்னார்வலர்களின் பணி அளப்பரியது. காலையும், இரவும் ஆள்மாற்றி ஆள்மாற்றி அவர்கள் ஆற்றிய பணி, இந்தப் போராட்டத்தின் தூண்களில் ஒன்று. உணவு பரிமாறுதல், போக்குவரத்தை சரி செய்தல், மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல், குப்பைகளை சுத்தம் செய்தல் என நீண்டபெரும் சேவையை கடமையாகச் செய்தார்கள் தன்னார்வலர்கள்.
நான்காம் நாளில் மெரீனா, போராட்டம் எனும் எல்லையைத் தாண்டி ஒரு பண்பாட்டுத் திருவிழாவாக மாறியிருந்தது. காணும் திசையெல்லாம் மக்கள் திரள் வியாபித்திருந்தது. சாலையின் மையத்தில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாகன அணிவகுப்பு அடிக்கடி நடந்தது. பலர் குடும்பத்துடன் நள்ளிரவிலும் உற்சாகமாய் போராட்டக் களத்தைக் காண வந்துசென்றனர்.
போராட்டக்காரர்களை ஊக்கப்படுத்தும்விதமாய், மக்கள் பாடகர் கோவன் மெரினாவிற்கு வந்து எழுச்சி பறக்கும் பாடல்களைப் பாடினார். அவரின் பாடல்களைக் கேட்க பெரும்கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டிருந்தது. இன்னொருபுறம் திருவள்ளுவர் சிலைக்குக் கீழே ‘கருஞ்சட்டைக்’ கூட்டமொன்று பெரும்திரளாய் குவிந்து, பீட்டா அமைப்பிற்குக் பின்னாலுள்ள அரசியலைப் பற்றிப் பேசினார்கள். அவர்களின் பேச்சின் நீட்சியில் வெறுமனே பா.ஜ.க. என்றில்லாமல் அதன் அடிப்படையான ஆர்.எஸ்.எஸ். அரசியல் குறித்தும் விளக்கிக் கூறிக்கொண்டிருந்தார்கள்.
அதேபோல கண்ணகி சிலை அருகே திரண்டிருந்த கூட்டம் வித்தியாசமான ஒரு பேனரைக் கையில் வைத்திருந்தது. அதில் ‘சார், கொஞ்சம் காறித் துப்பிட்டு போங்க’ என்ற வாசகத்துடன் பீட்டா அமைப்பின் ராதாராஜனின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. ‘இலவச செக்ஸ் என்றால்கூட 50,000பேர் கூடுவார்கள்’ என்று ராதாராஜன் தமிழர்களின் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை இழிவுபடுத்தியதற்காக, அவருக்கு இப்படியரு தண்டனை கொடுக்கப்படுகிறது என விளக்கியது அந்தக் குழு. மற்றொருபுறம் சுப்பிரமணியசாமியின் படத்துடன் ‘கைது செய்’ என்கிற வாசகப் பதாகையை தாங்கியிருந்த கூட்டம், ‘நினைச்சுக்கூடப் பார்க்காத, எங்க ஊருக்குள்ள; பி.ஜே.பி.யைக் கொண்டுவர, நினைச்சுக்கூடப் பார்க்காத’ என பா.ஜ.க.விற்கு எதிராக முழக்கமிட்டது.
இப்படி நான்கு நாள் கழிந்த நிலையில், ஐந்தாவது நாளில் தமிழக அரசு ‘அவசர சட்டம்’ கொண்டுவருவதாக அறிக்கை வெளியிட்டது. ஆனால் போராட்டத்தின் திசை அவசர சட்டத்தைக் கடந்து, ‘நிரந்தர சட்டம்தான்’ தீர்வு என்கிற எல்லைக்கு இரண்டாவது நாளே சென்றுவிட்டது. ஆகையால், தமிழக அரசின் அறிவிப்பு போராட்டாக்காரர்களிடையே எந்தவித தாக்கத்தையுமே ஏற்படுத்தவில்லை. இந்தத் தருணத்தில்தான் போராட்டத்தைக் அதிகாலை 5 மணிக்குள் கலைத்துவிட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனால் அதனை எதிர்பார்த்தபடி ஐந்தாம் நாள் இரவில் காத்திருந்தோம். ஆனால் அப்படியான எந்த ஒன்றும் அன்று நடைபெறவில்லை.
ஐந்தாம் நாளின் இரவு திருவிழாவின் உச்சம் என்று சொல்ல வேண்டும். அன்று புதிதாக வியாபாரத் தளங்கள் நிறையவே முளைத்திருந்தன. இதுநாள்வரை டீ, காபி போன்றவை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த போராட்டக் களத்தில், ஐந்தாம் நாளில் ‘ஐஸ்க்ரீம், பானிபூரி’ போன்ற கடைகளெல்லாம் நுழைந்துவிட்டிருந்தன. அதேபோல போராட்டக்காரர்களுக்காக ஒரு லாரி முழுக்க இளநீர் வந்து இறக்கப்பட்டதும் ஐந்தாம் நாள் இரவில்தான்.
ஆறாம் நாள் காலை 7 மணிவரை அங்கிருந்துவிட்டு திரும்பிய நான், மீண்டும் மாலைதான் சென்றேன். அதற்கிடையில் மறுநாள் சட்டமன்றக் கூட்டம் நடைபெறப் போவதாக வெளியான அறிவிப்பும், ஹிப்ஹாப் ஆதி போராட்டத்தைவிட்டு விலகுவதாக வெளியான தகவலும் புதிய விவாதங்களை எழுப்பியிருந்தது.
‘பெப்சி கோக்கிற்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷமிடுகின்றனர்’ என்றும், ‘தேசியக்கொடியை அவமதிக்கின்றனர்’ என்றும் கூறி ஆதி ஆட்டத்தைவிட்டு வெளியேறினார். ஆனால் தேசியக்கொடியை அவமதிக்கும் எந்தச் செயலுமே எங்குமே நிகழவில்லை. இன்னொன்று, ஹிப்ஹாப் ஆதி போராட்டத்தைத் தொடங்கியவர் ஒன்றும் அல்ல. எல்லாம் தொடங்கப்பட்ட பின்னர் களத்திற்கு வந்து சிறிதுநேரம் பேசிவிட்டுச் சென்றதே அவரின் ஆகப்பெரும் போராட்டம். இதில் அவர் விலகுவதை விளம்பரப்படுத்தியது அப்பட்டமான அரசியல் பின்புலம் கொண்ட ஒன்றுதான்.
மேலும் கார்த்திகேய சிவசேனாதிபதி, ராஜேஷ் உள்ளிட்டவர்களும் திடீரென ஜல்லிக்கட்டுப் போராட்டம் நிறைவடைந்துவிட்டதாக அறிக்கையை வெளியிட்டனர். உண்மையில் இவர்களின் பெயர்களே அப்போதுதான் வெளியே தெரிகிறது. இன்னொன்று ‘அவசர சட்டம்’ கொண்டுவரப்படும் என்கிற மாநில அரசின் அறிவிப்பை மட்டும் வைத்து, சட்டம் சட்டசபைக்கே வராததற்கு முன்னர், அதைப் படித்துக்கூட பார்க்காமலேயே அதன்மீது நம்பிக்கைகொள்ளும் இவர்களின் செயல்களைச் சந்தேகிக்காமல் இருக்க இயலாது.
நான் மாலை களத்திற்குச் செல்ல மந்தைவெளி இரயில்நிலையம் சென்றபோது, அங்கு கூட்டம் இயல்பிற்கு மாறாக இருந்தது. இரண்டு இரயில்களைவிட்டு மூன்றாவது இரயிலில்தான் பயணிக்க முடிந்தது. அதுவும் மூச்சை அடைத்துக்கொண்டுதான் செல்ல இயன்றது. மந்தைவெளியில் ஏறிய நான், திருவல்லிக்கேனியில் இறங்கி இரயில் நிலையத்தைவிட்டு வெளியே செல்ல திணறிப்போய்விட்டேன். அப்படியரு கட்டுக்கடங்காத கூட்டம் அன்று அலைமோதியது.
இரயில்களின் ஜன்னல்களில் தொற்றிக்கொண்டெல்லாம் பலர் பயணித்தனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தின்போதுகூட இரயில் நிலையத்தில் இப்படியரு கூட்டத்தை நான் பார்க்கவில்லை. கூட்ட நெரிசலில் சிலருக்கு காலில் இரத்தம் வழிந்ததைப் பார்க்க முடிந்தது. பலர் முண்டியடித்துக்கொண்டு எப்படியாவது வெளியேறிவிட வேண்டுமென்பதில் முனைப்பு காட்டினர். அப்போது திடீரென உருவெடுத்த தன்னார்வலர்கள், மனிதச் சங்கிலி அமைத்து வெளியே செல்பவர்களுக்கும், உள்ளே வருபவர்களுக்கும் வழிவகை செய்துகொடுக்க ஆரம்பித்தனர். உண்மையில் இந்தக் காட்சிகளெல்லாம் என்னைப் பெரிதும் நெகிழ வைத்தன. ‘யார் இவர்கள்? எப்படித் திடீரென மக்கள் சேவகர்களாக மாறினார்கள்?’ என்கிற கேள்விதான் போராட்டத் தன்னார்வலர்களைப் பார்க்கும்போது எனக்குள் எழுந்துகொண்டே இருந்தது.
ஆறாம் நாள் மாலை கூட்டத்தின் எல்லை நேப்பியர் பாலத்தையும் தாண்டி நின்றது. அண்னா மற்றும் எம்.ஜி.ஆர். சமாதியில்கூட சிலர் மைக் வைத்துப் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் இந்தக்கூட்டம் நேரம் செல்லச் செல்ல குறைந்துகொண்டே சென்றது. மாலை ஆறு மணிக்கு இலட்சக் கணக்கில் இருந்த கூட்டம், எட்டு மணிக்கெல்லாம் ஆயிரத்திற்குச் சுருங்கியது. பிறகு, 11:30 மணி அளவில் கூட்டம் 5000க்கும் குறைவாக மாறியது. மெல்ல மெல்ல பலர் வெளியேறினர். கூட்டத்தின் திரட்சி, விவேகானந்தர் இல்லத்திலிருந்து கண்ணகி சிலைவரை மட்டுமே இருந்தது.
இரவு 12 மணிக்கு விவேகானந்தர் இல்லத்திற்கு எதிர்ப்புறம், கடற்கரை உட்புறச் சாலையில் நின்றிருந்த நீளமான வாகனமொன்றில், பெரிய டிஜிட்டல் திரையில் ஒரு வீடியோ ஒளிபரப்பட்டுக்கொண்டிருந்தது. அங்கு சென்று பார்த்தபோது, அதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுத் திருவிழாவின் காணொளிகள் காட்டப்பட்டுக் கொண்டிருந்தன. டிஜிட்டல் திரையில் சீறிவரும் காளையைக் காணும் கூடியிருந்த கூட்டம், உற்சாகக் குரலெழுப்பி அதை வரவேற்றது. இதற்குப் பிறகு திரண்டிருப்பவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும்விதமாக, அந்த வாகனத்திலேயே மேடை வசதி செய்து தரப்பட்டது. பின் ஒவ்வொருவராய் சென்று ஒரு நிமிடம், இரண்டு நிமிடமென கர்ஜித்துவிட்டுத் திரும்பினர்.
இதற்கிடையில் ஓயாமல் பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் குரல்கேட்டு, அந்தக்கூட்டத்திற்குச் சென்றேன். தெளிந்த அரசியலில் அப்பெண் பேசியதைப் பார்க்கும்போது, அவர் ஒரு புரட்சிகர அமைப்பைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. பிறகு மீண்டும் டிஜிட்டல் திரை வைத்திருந்த வாகனத்திற்குத் திரும்பியபோது, அங்கு வசனமற்ற நாடகமொன்றை சிலர் அரங்கேற்றிக்கொண்டிருந்தனர்.
ஜல்லிக்கட்டு தொடங்கி விவசாயிகளின் தற்கொலை, காவிரிப் பிரச்சினை, அணு உலை ஆபத்து, மீத்தேன் திட்டம் என எல்லாவற்றையும் உடல் அசைவுகளாலேயே உணர்த்திய அவர்களின் நடிப்பு, கூடியிருந்த கூட்டத்தின் களைப்பை பெருமளவு நீக்கி உற்சாகமளித்தது. இதில் தன் கையில் மிக்சர் பொட்டலம் வைத்திருந்த கதாபாத்திரம் தோன்றும்போது மட்டும் கைதட்டல்கள் அதிர்ந்து கேட்டன. இந்த நாடகம் முடியும்போது மணி 3 ஆகியிருந்தது.
நாங்கள் சிலர் மெல்ல நடந்து ஜெயலலிதா சமாதிக்குச் சென்றுவிட்டு திரும்பிய பொழுதில்தான், கண்ணகி சிலை அருகே காவல்துறையினரின் எண்ணிக்கை கூடியிருப்பதைக் கவனித்தோம். பிறகு அப்படியே போராட்டத்தின் மையப்பகுதிக்கு வந்தபோது, பெரியார் மாளிகையில் காவலர்களின் வாகனங்கள் அதிகமாகச் செல்வதைப் பார்த்தோம். அதிகாலை 4:30 மணிக்கு, பெரியார் மாளிகையில் காவலர்கள் அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டிருந்தனர்.
அதைக்கடந்து சென்றபோது, விவேகானந்தர் இல்லத்திலும் இதுபோன்றே காவலர்கள் அணிவகுத்திருந்தனர். சற்றுத்தள்ளி செல்லச் செல்ல காவலர்கள் கூட்டம் பெருகிய வண்ணமிருந்தது. மிகச்சரியாக 5 மணிக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையை ஆக்கிரமித்த காவல்துறை, அந்த வழியாக வரும் வாகனங்களைத் திருப்பிவிட்டுக் கொண்டிருந்தது.
பெரியார் மாளிகையில் போலீஸ் குவிக்கப்படுவதை அறிந்ததும், அதுகுறித்து ஊடகங்களுக்குத் தகவல் அளித்தோம். ஆனால் ஊடக நிருபர்கள் பெரியார் மாளிகை கேட்டின் முன்பே நின்றிருந்தும்கூட, அவர்கள் கேமராக்களைப் பின்புறமாகத் திருப்பி காவல்துறையின் படைக் குவிப்பைக் காட்ட முனைப்பு காட்டவில்லை. அதிலேயே நடக்கப் போகும் விபரீதம் ஓரளவு புரிந்துவிட்டது. காவல்துறையினரின் படை குவிப்பை புகைப்படம் எடுக்கப்போன என்னையும், அங்கிருந்த சில காவலர்கள் தடுத்துவிட்டனர். போராட்டக்காரர்கள் ஒரு எல்லைக்குள் சுற்றிவளைக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெளிவாகியது.
சரியாக 23.01.2017 போராட்டத்தின் ஏழாம் நாள் காலை 6:30க்கு, மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஒரு வாகனத்தில் ஏறி பேசத் தொடங்கினார். தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவர உள்ளதால், உங்கள் போராட்டம் வெற்றியடைந்துவிட்டது. நீங்கள் இதற்குமேல் போராட வேண்டாம் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று கூறிவிட்டு இறங்கிவிட்டார். அதனால் போராட்டக்காரர்கள், அவசரச் சட்டத்தின் நகலைக் கேட்டனர். அதற்கு துணை ஆணையர் ஒரு காகிதத்தைக் காட்டினார். அதில் அரசு முத்திரையும், கையெழுத்தும் இல்லை என்று போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
இதனையடுத்து துணை ஆணையரோ எல்லோரையும் கலைந்துபோகச் சொல்லி மிரட்ட ஆரம்பித்தார். அதனால் போராட்டகாரர்கள் முதலில் அரைநாள் அவகாசம் கேட்டனர். பின்னர் அது இரண்டு மணிநேரமாகச் சுருங்கியும்கூட, காவல்துறை அதை ஏற்கவில்லை. சற்றுநேரத்திற்கெல்லாம் போராட்டத் தன்னார்வலர்களை நோக்கி தனது தடியைக் காவல்துறை பிரயோகிக்க ஆரம்பித்துவிட்டது. பிறகு இரும்புத் தடுப்புகளைத் தள்ளிவிட்டு, போராட்டக்காரர்களின் இடத்திற்குள் நுழைந்த காவலர்கள் தங்களது கண்மூடித்தனங்களை கட்டவிழ்த்துவிட்டனர். பெண்களும், குழந்தைகளும்கூட தடியடிக்கு ஆட்பட்டனர். பலரைக் காவலர்கள் பிடித்து இழுத்தும், குண்டுகட்டாகவும் வெளியேற்றினர். சிலரைக் காவல் வாகனத்தில் ஏற்றிக் கைதும் செய்தனர்.
பின்னர் சிதறுண்ட கூட்டம் பெரும்பகுதி சாலைகளில் வெளியேற, மீதமிருந்தோர் கடலை நோக்கி உள்ளே சென்றுவிட்டனர். கடலை நோக்கிச் சென்றவர்களையும் காவல்துறை விரட்டியதால், அவர்கள் வேறு வழியற்று கடல் நீருக்குள் இறங்கி நின்று போராட ஆரம்பித்தனர். மெரினா புரட்சியின் அபாயகரமான நிமிடங்கள் இதுதான்.
கடல் நீரில் நின்று போராட்டத்தைத் தொடர்ந்த நபர்களை காவல்துறை நெருங்கிப் பேசியபோது, அவர்கள் நெஞ்சுரத்துடன் நீரில் இன்னும் சற்று பின்னோக்கிச் சென்றனர். பிறகு சிறிது நேரத்தில் மீனவ மக்கள் உள்ளே புகுந்து இளைஞர்களுக்கு தோள்கொடுத்து அரணாக நின்றனர். அதில் குறிப்பாக மீனவப் பெண்கள் முன்னணியில் நின்று காவல்துறையினரைப் பின்னோக்கி நகர வைத்து, நீரில் இருந்த இளைஞர்களைக் கரைக்கு கொண்டுவர உதவினர். அதன்பின்னர் கடல் போராட்டத்தில் இருந்தவர்கள் அச்சம் தரும் கட்டத்தைக் கடந்துவிட்டனர்.
நான் உட்பட சிலர் கடலுக்குள் இருப்பவர்களுடன் இணைவதற்காக முயற்சி செய்து, அண்ணா சாலையின் வழியாகப் பயணித்து நேப்பியர் பாலத்தை அடைந்தோம். அண்ணா சமாதி வழியாக கடற்கரைக்குள் நுழைந்துவிடலாம் என்பதுதான் திட்டம். ஆனால் நேப்பியர் பாலத்திலேயே தடுக்கப்பட்டு, திருப்பியும் விடப்பட்டோம். அதனால் மந்தைவெளி வழியாக வந்து சௌத்கெனால் ரோட்டில் பயணித்து சாந்தோம் நெடுஞ்சாலையை அடைந்தோம். அதிலிருந்து ஒரு ஒற்றையடிப்பாதையில் சென்று லூப் ரோட்டிற்குச் சென்றோம். அது சாந்தோம் தேவாலயத்தின் பின்புறப் பக்கமாகும். லூப் ரோட்டிலிருந்து கடலுக்குள் செல்லும் மணற்பரப்பில் இறங்கி நடந்தோம்.
ஒரு 500மீட்டர் நடைபயணத்திலேயே காவல்துறையினரால் தடுக்கப்பட்டதால், செய்வதறியாது பின்வாங்கிவிட்டோம். அந்தநேரத்தில் மீனவர்களின் உதவியால், படகில் ஏறி கடலுக்குள் சென்றோம். படகு புறப்படும்போது, காவல்துறையினர் தடுக்கவே செய்தனர். ஆனால் மீனவர்களின் துணிச்சல் மிகுந்த பேச்சிற்கு முன்னால் காவலர்கள் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. நான் உட்பட சிலர் காலை 9:40 மணிக்கு, கடல் போராட்டத்தின் மையப் பகுதியிலிருந்தவர்களுடன் இணைந்துகொண்டோம்.
அப்போது காவல்துறை சற்று தூரம் தள்ளித்தான் நின்றிருந்தது. சிறிதுநேரத்தில் மூன்று படகுகளில் காவல்துறையினர் கடல்வழியாகச் சுற்றி வந்தனர். ஆனால் பலத்த எதிர்ப்பு இருந்ததையட்டி அவர்கள் கரையிலிருந்த காவலர்களுடனே சென்று ஐக்கியமாகிவிட்டனர். அதன்பின்னர் 10:30 மணியளவில் மீண்டும் காவல்துறை நெருங்கி வந்தபோது, பழையபடி போராட்டக்காரர்கள் கடலுக்குள் இறங்க வேண்டி வந்தது. கடலுக்குள் இறங்கி நின்றோம். ஆனால் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஏதோ பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அழைப்பு கொடுத்தார். அதனை ஏற்று போராட்டத்தின் முன்வரிசையில் இருந்தவர்கள், அவருடைய பேச்சிற்கு செவிகொடுத்தனர்.
அதனையட்டி போராட்டக் குழுவிலிருந்த வழக்கறிஞர்கள் சிலரை அனுப்பி பேசவைத்தோம். பேச்சுவார்த்தையின் முடிவில், உங்கள் தரப்பிலிருந்து காவல்துறையினர்மீது தாக்குதல் நடத்தாத வரைக்கும், காவலர்கள் உங்களைத் தாக்கமாட்டார்கள் என்றது காவல்தரப்பு. நாம் முன்னர் இருந்தே அமைதி வழியில்தான் இருந்தோம். இனியும் அப்படித்தான் இருப்போம் என்பதை வழக்கறிஞர்கள் தெளிவுபடுத்திவிட்டு, கோரிக்கைகளையும் அவர்களிடத்தில் கூறினர்.
“அவசர சட்டம் வேண்டாம், நிரந்தர சட்டம்தான் தீர்வு. கைது செய்யப்பட்டவர்களை காவல்துறை உடனடியாக விடுவிக்க வேண்டும். தேவையற்ற முறையில் கர்ப்பிணி பெண்கள்மீது கூட தடியடி பிரயோகித்ததற்கு காவல்துறை தரப்பிலிருந்து மன்னிப்புக்கோர வேண்டும்” என்பதுதான் போராட்டக் குழுவின் கோரிக்கையாக காவல்துறையினரிடம் முன்வைக்கப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் தொடரவே செய்தது.
ஆனால் எங்களுக்கு வெளிப்புறமான கடற்கரைச் சாலையில்தான் போர் உக்கிரத்திலிருந்தது. திடீரென பெரும்புகை கிளம்பியதைப் பார்த்தோம். பிறகுதான் ஐஸ்ஹவுஸில் பைக் ஒன்று எரிக்கப்பட்டுள்ளதை, உள்ளே இருந்த காவல்துறை அசிஸ்டெண்ட் கமிஷனரின் எச்சரிக்கையின் மூலமாக அறிந்துகொண்டோம்.
பிறகு எங்களின் தலைக்குமேல் ஐந்துமுறை கப்பற்படை ஹெலிகாப்டர் ரோந்து சென்றது. அதனையடுத்து வெளியே துப்பாக்கிச் சூட்டின் சப்தம் மூன்று முறை கேட்டன. கண்ணீர் புகைகுண்டுகளின் புகையும், அடர்கருப்பு புகையும் சேப்பாக்கம் மைதானம், டி.ஜி.பி. அலுவலகம், திருவல்லிக்கேனி உள்ளிட்ட பகுதிகளில் வெளியாகிக்கொண்டே இருந்ததையும் தூரத்திலிருந்து கண்டோம். அந்த நிமிடங்கள் ஒருவித அச்சம் எல்லோரையும் மிரளவைத்திருந்தது.
இதற்கிடையில் படகுகளில் தண்ணீர் பாக்கெட், பிஸ்கட், பிரட் உள்ளிட்டவைகளை போராட்டக்காரர்களுக்காக மீனவர்கள் கொண்டுவந்து அளித்தனர். அதனைப் படகிலிருந்து இறக்கி, எல்லோருக்கும் கொடுத்தனர். சிறிதுநேரம் எல்லோரும் அவைகளை வாங்கிச் சாப்பிட்டு ஓய்வெடுத்தோம். இந்தத் தருணத்தில்தான் நடிகர் லாரன்ஸை காவல்துறை அழைத்துக்கொண்டு வந்தது. லாரன்ஸ், ‘அவசர சட்டம் நமக்குக் கிடைத்த வெற்றிதான் அதனால் போராட்டத்தைக் கைவிடுங்கள்’ என்றார். ஆனால் போராட்டக்காரர்கள் அதனை மறுத்துவிட்டனர். இதனையடுத்து ‘என்மீது நம்பிக்கையுள்ளவர்கள், என்னோடு வாருங்கள்’ என லாரன்ஸ் அழைத்ததை அடுத்து நூறு பேர் லாரன்ஸின் பின்னால் சென்றுவிட்டனர்.
இந்த நூறுபேரை வைத்துக்கொண்டுதான், லாரன்ஸ் போராட்டம் முடிந்துவிட்டதாக செய்தியாளர் சந்திப்பில் கூறினார். அதுபோக, மாணவர்கள் வெளியேறிவிட்டார்கள், உள்ளே இருப்பவர்கள் ரவுடிகளும் அரசியல் குழுக்களும்தான் என்று பேசினார். இது உள்ளே இருப்பவர்களிடையே ஆத்திரத்தைக் கிளப்பியது. இந்தச் சூழலில் படகில் சீமான் வந்து இறங்கினார். அவர் எதுவும் பேசாமல் கூட்டத்திற்குள் வந்து அமர்ந்தார். சிறுது நேரத்தில் இளைஞர்கள் சீமானை வெளியே போகச் சொல்லி வற்புறுத்தினர். சீமானோ, தான் போராட்டத்தில் ஒருவனாய் இருக்கிறேன் என்று சொல்லி அமர்ந்தே இருந்தார்.
இந்த மெரினா புரட்சியின் ஆரம்ப நாட்களிலிருந்தே அரசியல்வாதிகள் யாரையுமே இந்தக்கூட்டம் அனுமதிக்கவே இல்லை. பலரைத் திருப்பித்தான் அனுப்பியுள்ளது. அதன் தொடர்ச்சியாய் சீமானையும் பலவந்தப்படுத்தி திருப்பி அனுப்பியது கூட்டம். அதனால் சீமான் போராட்டத்தின் மையத்திலிருந்து தள்ளி, வேறொரு இடத்தில் அமர்ந்துகொண்டார். அவருடன் சிறிது நேரத்தில் இயக்குனர் சேரனும் இணைந்துகொண்டார்.
பிறகு படகின் மூலமாக எல்லோருக்கும் உணவு தொடர்ந்து வரத் தொடங்கியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததினால் ஒவ்வொரு படகும் அப்போது பெரும் சிரமத்திற்கு மத்தியில் கடலில் வருவதைப் பார்த்தோம். இங்கிருந்து கிளம்பிய ஒரு படகு, அலையின் தாக்கத்தால் செங்குத்தாகச் சென்று பின்மெல்லத் தணிந்தது. உண்மையில் அந்தளவிற்குத்தான் காற்று அப்போது இருந்தது. அந்தநேரத்தில் கடற்கரை மணல் வழியாக ஒருவர் உணவைக் கொண்டுவந்தார். அவரைக் காவலர்கள் கீழேபிடித்துத் தள்ளினர். இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் அவரைத் தூக்கிவிட முன்னேறியபோது, நான் உட்பட சிலர் தடியடிக்கு ஆட்பட்ட நிகழ்வும் நடந்தது.
மாலை 4 மணியை எட்டியிருந்த நிலையில் போலீஸ் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஆர்.ஜே.பாலாஜியை அழைத்துக்கொண்டு வந்தது. ஆனால் லாரன்ஸ்மீது இருந்த ஆத்திரத்தால், பாலாஜியை யாரும் பேசக்கூட அனுமதிக்கவில்லை. ‘பாலாஜி வெளியே போ’ என்கிற கோஷம் தொடர்ந்து எழுந்ததால், பாலாஜி உடனே வெளியேறிவிட்டார். இதன்பிறகு 4:45 மணியளவில், நீதிபதி ஹரிபரந்தாமன் வரவிருப்பதாக தகவல் கிடைத்தது. இந்நிலையில்தான் அவசரச் சட்டம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட செய்தியும் வந்தது.
மிகச்சரியாக மாலை 5:15க்கு நீதிபதி ஹரிபரந்தாமன் உள்ளே வந்தார். அவருடன் தோழர் தியாகுவும் வந்திருந்தார். சிறிதுநேரத்தில் ஹரிபரந்தாமன் பேசத் தொடங்கினார். தன்னைப் போராட்டக்காரர்களுடன் பேச அழைத்தபோதே தான் அவசர சட்டத்தின் நகலைக் கேட்டதாகவும், ஆனால் அது அவருக்கு இங்கு வந்தும் தரப்படவே இல்லையென்றும் தெரிவித்தார். பின்னர் சட்டத்தின் நகலைக் கொடுத்தால்தான் உள்ளே செல்வேன் என்று உறுதியாக நின்றதன் பின்னரே எனக்கு நகல் கொடுக்கப்பட்டது. இப்போது நான் இங்கு அதனுடன்தான் உங்கள்முன் நின்றுகொண்டுள்ளேன் என்றார் ஹரிபரந்தாமன்.
போராட்டக்காரர்கள் பெரும் வட்டமாய் அமர்ந்து நீதிபதியின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தோம். நீதிபதி சட்டத்தின் கூறுகளை விளக்கிக் கூறத் தொடங்குகையில், இது நிரந்தர சட்டத்திற்கு நிகரானதுதான் என்பதற்கு உறுதியளித்தார். பின்னர் அரசு ஏன் இதுவரை இந்தச் சட்டத்தின் கூறுகளை ஊடகங்களுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ, போராட்டக்காரர்களுக்கோ தெரிவிக்காமல் இருந்தது என்பது புரியவில்லையென தன்னுடைய சந்தேகத்தை வெளிப்படுத்தினார். அதன்தொடர்ச்சியில் இந்தச் சட்டம் சிறந்த சட்டம்தான் என்றாலும், இதனை இன்னும் அட்டவணை 9-இல் சேர்க்கவில்லை. அப்படி சேர்க்காதபட்சத்தில் இதற்கு எதிராக வழக்கு தொடுக்க வாய்ப்புள்ளது என்றார்.
அட்டவணை 9 குறித்து நீதிபதி பேசிய தருணத்தில், காவல்துறையினர் திடீரெனக் கூட்டத்தை சுற்றிவளைத்தனர். அதனால் கூட்டம் முழுக்க எழுந்துநின்று காவல்துறையினரை வெளியே போகச் சொல்லி பலத்த கோஷம் எழுப்பினோம். அரசு தரப்பிலிருந்து வந்தவர்களில் நீதிபதியின் பேச்சைத்தான் கூட்டம் அமைதிகாத்துக் கேட்டது. அப்படியிருக்க கூட்டத்தில் சலசலப்பை காவல்துறை ஏன் உண்டாக்க வேண்டும் என்பது கேள்வியே.
பிறகு ஹரிபரந்தாமன் அங்கிருந்து நகர்ந்து சென்றார். நான் உட்பட சிலர் அவரைச் சூழ்ந்து சட்டம் குறித்துக் கேட்டோம். அவர் சட்டத்தின்மீதான தனது நம்பிக்கையைக் கூறினார். நாங்கள் அதைக்கடந்து காவல்துறையினரின் தடியடி குறித்துக் கேட்டபோது, அதனைத் தான் கண்டிப்பதாக வெளிப்படையாகத் தெரிவித்தார். பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் இதனையே அவர் வெளிப்படுத்திவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதன்பின்னர் மாலை 6:30க்கு போராட்டக்காரர்களின் சார்பாக உயர்நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர்கள், உள்ளே வந்தனர். ‘காவல்துறையினரின் தடியடியை நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. மேலும் அமைதிவழியில் போராடுபவர்களின்மீது தடியடி நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. அவசரச் சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. எனவே போராட்டத்தை தொடர்வதும், தொடராமல் இருப்பதும் உங்களின் விருப்பம்’ என்றுகூறி விடைபெற்றது வழக்கறிஞர்களின் குழு.
நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து காவல்துறையினர் முற்றும் முழுதாக கடற்கரை மணலிலிருந்து வெளியேறி, கடற்கரை உட்புறச் சாலைக்குச் சென்றுவிட்டனர். நீதிபதி ஹரிபரந்தாமனின் உறுதி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் பேச்சு உள்ளிட்டவைகளை வைத்து சிறிதுநேரம் விவாதிக்கப்பட்டது. அவசர சட்டம் சிறந்த சட்டமே என்றாலும்கூட, காவல்துறையினர் கைது செய்தவர்களை விடுவிக்கும்வரையிலும், தடியடிக்கு மன்னிப்புகோரும் வரையிலும், வெளியே நடத்தப்பட்ட வன்முறைக்கு காவல்துறை பொறுப்பேற்கும் வரையிலும் நாம் போராட்டத்தை தொடரவே செய்வோம் என பெரும்பான்மை குரல் எழுந்ததினால், போராட்டம் அதன்பின்னரும் நீடித்தது. ஆனால் ஹரிபரந்தாமன் வருகையோடு போராட்டத்தை ஊடகங்களின்மூலம் அரசு முடித்து வைத்துவிட்டது.
நாள் முழுக்க கடல் மணலில் இருந்த அசதியினால் பலரும் ஓய்வெடுப்பதற்காக வீடுகளுக்குத் திரும்பினர். அப்படி இரவு 9 மணிக்கு நானும் அறைக்குத் திரும்பினேன். கடற்கரையின் உட்புறச் சாலையில் வந்துதான் வெளியேறினேன். காவல்துறையினர் கிடைத்த இடங்களில் ஆங்காங்கே அமர்ந்திருந்தார்கள். நான் அங்கிருந்து மந்தைவெளிவரை நடந்தே வந்தேன். வரும் வழியில்தான், வெளியே நடத்தப்பட்ட கோரங்களை என்னால் பார்க்க முடிந்தது.
சிவாஜி சிலை அருகே ரீப்பர் கட்டைகள் குவியலாய்க் கிடந்தன. அதனையட்டி எரிந்த நிலையில் பல பொருட்களைப் பார்த்தேன். செருப்புகள் நிறைய பிய்ந்து கிடந்தன. டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் ஓரமாய் நின்றிருந்த பைக்குகள் பெருமளவு சேதமடைந்திருந்தன. சிட்டி சென்டரின் முன்புறம் கண்ணாடிச் சில்லுகள் குவியல், குவியலாய்க் கிடந்தன. ஒவ்வொரு சிக்னலிலும் தடுப்புகளைப் போட்டு ஐம்பது காவலர்களுக்கு நிகராக நின்றிருந்தனர். மக்கள் நடமாட்டமற்று சாலை எங்கும் காவலர்களைத் தவிர, மனிதர்களைப் பார்ப்பதே அரிதாக இருந்தது. பின்னர் வன்முறைக் காட்சிகளை தொலைக்காட்சிகளில்தான் பார்த்தேன்.
மறுநாளான 24.01.2017 அன்றும் போராட்டம் தொடரவே செய்தது. ஆனால் கடலுக்குச் செல்ல இயலாத வண்ணம் காவல்துறை இரும்பு வளையம் அமைத்திருப்பதாகத் தகவல் வந்தது. நான் அன்று மாலை உள்ளே செல்வதற்காக முயற்சி செய்தேன். ஆனால் காவலர்கள் முன்பைவிட அதிகமாகக் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்குமுன்பாக நாங்கள் சென்ற லூப் சாலை வழியாகவும் முயற்சி செய்துபார்த்தேன். அங்கும் காவலர்கள் பெரும் படையாகக் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போதுதான் நொச்சிக்குப்பம், நடுக்குப்பத்தில் காவலர்கள் நடத்திய வேட்டையைத் தாமதமாக அறிந்தேன். நான் அங்கிருந்தபோதே என்னை விசாரித்த காவலர்கள், பெயரைக் கேட்டனர் நான் பெயரைச் சொன்னதும், ‘உனக்கெல்லாம் இங்கென்ன வேலை’ எனச்சொல்லி இழுத்தனர். நான் வேடிக்கை பார்க்க வந்ததாகக்கூறி சிறிதுநேரத்திற்குப் பின் அங்கிருந்து விரைவாக வெளியேறிவிட்டேன்.
அதன்பின்னர் இரவு 8 மணி அளவில் போராட்டக்காரர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டனர். அவர்கள் வெளியேற்றப்பட்டதில் மகிழ்ச்சிதான் அடைந்தேன். நான் உள்ளே செல்ல முயன்றது, அங்கிருந்த உணர்வுள்ள சில நூறுபேரை மனதில் வைத்துதான். அவர்களுக்கான உணவினை ஏற்படுத்தி தரவும், அரசியல் பிரமுகர்களை வைத்து அவர்களை வெளியே கொண்டுவரவும்தான் நான் உட்பட சிலர் முயற்சித்தோம்.
அங்கு காவல்துறை மீண்டும் வெறியாட்டம் நடத்திவிடக்கூடாது என்று பயந்தோம். ஆனால் காவல்துறையே அவர்களை மெல்ல வெளியேற்றியது மனநிறைவைத் தந்தது. இருந்தும் போராட்டக்காரர்களை எப்படி அணுகி வெளியேற்றினார்கள் என்பது சந்தேகத்திற்குரியதே. ஒருவழியாக எட்டாவது நாளில் மெரினா புரட்சி நிறைவுபெற்றது. அதற்கு ஒருநாள் முன்பாக ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழகத்தின் பிறபகுதிகளிலும் முடிவுக்கு வந்திருந்தது.
இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மெரினா புரட்சியின் துவக்கத்தைப் போலவே, அதன் முடிவும் அறியப்படாமலேயே போய்விட்டது. ஆரம்பத்தில் யார் இருந்தார்கள், முடிவில் யார் இருந்தார்கள் என்பது களத்திலிருந்த என்போன்ற ஏராளானமானவர்களுக்குத் தெரியாது.
எல்லாப் போராட்டத்திலும் ஏதேனும் ஒரு தலைவர் உருவெடுப்பார்கள் அல்லது குறிப்பிடத்தகுந்த அளவில் ஒரு ஆளுமைகள் அடையாளமாகியிருப்பார்கள். ஆனால் இதில் அப்படி எந்த முகங்களையுமே காணமுடியவில்லை. இதன் பின்னாலுள்ள அரசியலை எந்த அரசியல் கட்சிகளாலும் இதுவரை இனம்காண முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். ஒருவகையில் இது மாநில அரசிற்கும், மத்திய அரசிற்கும் இடையிலான அரசியல் சதுரங்கம் என்றொரு கருத்துமட்டும் வலுபெற்றிருக்கிறது. ஆனால் அது ஒரு கட்டத்தில் அரசின் கையைமீறி, மக்கள் எழுச்சியாய் உருவெடுத்துவிட்டது என்பதுதான் பட்டவர்த்தனமான உண்மை.
செப்டம்பர் 17, 2011இல் நியூயார்க் நகரில் உருவெடுத்த ‘வால்ஸ்ட்ரீட் போராட்டத்திற்கு’ இணையானது இந்த மெரீனா புரட்சி. வட இலத்தீன் பிராந்தியங்களில் கம்யூனிஸ்டுகளால் முன்னெடுக்கப்பட்ட ‘ரெட் கார்னிவல்’ போன்ற, கொண்டாட்டமான போராட்டத்தைத்தான் இந்த மெரீனா புரட்சியில் எங்கெங்கும் காண முடிந்தது. இப்படியான கொண்டாட்டம் நிறைந்த போராட்டத்தை இந்தியா இப்போதுதான் முதன்முறையாகக் கண்டிருக்கிறது. ஒரு தலைவர் இல்லாத புரட்சியை உலகத்திற்கு தமிழர்கள் இதன்மூலம் அறிமுகப்படுத்தியுள்ளனர். யுக யுகமாய் தொடரக்கூடிய அழுத்தமான வரலாற்றை மெரினா புரட்சி ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் புரட்சி முதலில் இளைஞர்களால் தொடங்கப்பட்டிருந்தாலும், பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள் என பலரும் திரண்டு இதனை மக்கள் புரட்சியாய் மாற்றிவிட்டனர். அந்தவகையில் இதனை மக்கள் புரட்சி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
இந்தப் புரட்சி நீர்த்துப் போகவில்லை. இந்தப் புரட்சியினுடைய கோரிக்கைகளின் நியாயங்கள் அப்படியே இருந்தாலும், இது வெற்றியே அடைந்திருக்கிறது. வேறொரு வகையில் சொன்னால் வெற்றிப் படிகளில் ஏறிய தருணத்தில் சற்று இளைப்பாறிக்கொண்டுள்ளது மெரினா புரட்சி. இதற்கு வேறொரு களமும், காலமும் கனியும் என்கிற நம்பிக்கைவிதை எல்லோரிடத்திலும் விதைத்திருக்கிறது.
இந்தப் போராட்டத்தின் நிறையாகவும், குறையாகவும் ஒன்றை மட்டும் என்னால் குறிப்பிட முடியும். அது அரசியல்வாதிகளை அனுமதிக்காத செயலாகும். ஆரம்பத்தில் அரசியல்வாதிகளை அனுமதிக்காமல் இருந்திருந்தாலும், இறுதியில் அரசியல்வாதிகளை அனுமதித்திருக்க வேண்டும். அப்படி சிலரை அனுமதித்திருந்தால் ஒரு வெற்றிப் பேரணி நடத்தி இதனை முடித்திருக்கலாம். அதற்கு வழியற்று வெற்றியைக் கொண்டாடாமலேயே போராட்டம் முடிவுக்கு வந்ததுதான் ஜீரணிக்க முடியவில்லை.
இது ஜல்லிக்கட்டிற்கான போராட்டம் மட்டுமல்ல, தமிழினத்தின் எழுச்சிக்கான ஒரு யுகப் புரட்சி!
– பழனி ஷஹான்
(நன்றி - உயிர்மை பிப்ரவரி 2017)