மனித வாழ்க்கை எவ்வளவு வக்கிரமானது. மனித உறவுகள் எல்லாம் பணத்தாலும், சாதியாலும், மதத்தாலும் அளக்கப்படும் ஒரு சமூகத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அன்பை அள்ளிக் கொடுப்பதற்கு எவ்வளவு பண்பட்ட மனது வேண்டும். அந்தப் பண்பட்ட மனதைப் பெறுவதற்கு, இந்த உலகத்தில் யாரிடம் நாம் பயிற்சி பெற வேண்டும் என்று நாம் யாருக்காவது தெரியுமா? நாம் எப்போதாவது அப்படி ஒரு பண்பட்ட மனித வாழ்க்கையின் மேம்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைத்திருக்கின்றோமா? பல பேர் நினைத்து இருக்கலாம், சில பேர் முயன்று இருக்கலாம். ஆனால் அது அனைவருக்கும் எப்போதுமே சாத்தியமான ஒன்றாக இருந்ததில்லை. வாழ்க்கையின் ஏதாவது ஒரு தருணத்தில் நம்முடன் கூடவே இருந்த பல பேரை நாம் அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி, துரத்தி விட்டிருக்கின்றோம். அவர்கள் சொல்வதை காது கொடுத்துக்கூட கேட்க மனமில்லாமல் விரட்டி விட்டிருக்கின்றோம். ஒரு நிமிடம் கேட்டிருந்தால் இந்த வாழ்க்கையில் ஒரு கணம் கூட அவர்களைப் பிரியாமல் நம்மால் இன்று வாழ்ந்திருக்க முடியும். ஆனால் நம்முடைய ஆணவமும், அகம்பாவமும் அதை எப்போதுமே தடுத்தே வந்திருக்கின்றது.
(காவல் துறையால் எரிக்கப்பட்ட மீனவர் குப்பம்)
சாதி, மதம், பணம் என்ற சுயநலன் சார்ந்த சராசரியான வாழ்க்கையை வாழும் நம்மைப் போன்ற மனிதர்களிடம் இல்லாத பல பண்பட்ட குணங்களை நாம் எளிய மக்களிடம் தான் எப்போதுமே பார்க்க முடிகின்றது. அன்றாடம் உழைத்தால்தான் சாப்பாடு என்ற நிலையில் வாழும் அந்த மக்களிடம் நாம் பார்க்கும் ஒவ்வொரு தருணங்களிலும் அவர்கள் அன்பை மிதமிஞ்சி வெளிப்படுத்துகின்றார்கள். அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பணத்தை சேமிப்பதைப் பற்றியோ, தங்கத்தை சேமிப்பதைப் பற்றியோ, சாதிசனத்தைச் சேர்த்து வைத்திருப்பதைப் பற்றியோ அவர்கள் கிஞ்சித்தும் கவலைப்படுவது கிடையாது. தன்னுடன் இருக்கும் ஒவ்வொரு சக மனிதனையும் தன்னுடைய சகோதரனாக, தன்னுடைய மகனாகப் பார்க்கும் அந்தக் குணம் இயல்பாகவே பணமற்ற அந்த எளிய மனிதர்களிடம் கைவசப்பட்டு விடுகின்றது. நம்மைப் போன்று சித்தாந்தங்களை அவர்கள் பயிலவில்லை, நம்மைப் போன்று கள்ளங்கபடமாகப் பேசும் மொழி நடையை அவர்கள் பயன்படுத்துவதில்லை, பயன்படுத்தத் தெரிவதுமில்லை. ஆனாலும் அவர்களால் அன்பாக, எளிமையாக அனைவரையும் தன்வசப்படுத்த முடிகின்றது. அன்பை அலட்சியமாக நம்மீது வீசி நம்மை குற்ற உணர்வுக்கு ஆளாக்க முடிகின்றது.
எதிர்பார்ப்புகள் இன்றி சிறு புன்னகையைக்கூட நமக்கு இலவசமாகத் தர மனமில்லாத மனிதர்கள் மத்தியில், சென்னை மீனவ மக்கள் ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய இளைஞர்களுக்காக தங்களின் உடல் முழுவதும் ரத்தக்காயங்களை தாமாகவே முன்வந்து தடுத்து வாங்கியிருக்கின்றார்கள். அவர்களது குடிசைகள் கொளுத்தப்பட்டிருக்கின்றன, அவர்களின் சந்தை சூறையாடப்பட்டிருக்கின்றது, பெண்கள் மிகுந்த வன்முறைக்கும், அவமானத்திற்கும் ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள். இது எல்லாம் காக்கிச் சீருடை அணிந்த மிருகங்களால் நிகழ்த்தப்பட்டிருக்கும் அரச வன்முறை. இந்த சமூகத்தில் கடைக்கோடி எளிய மனிதர்களை கடித்துக் குதறுவது எப்போதுமே காவல் நாய்களுக்குப் பிடித்தமான ஒன்று. ஆளும் வர்க்கத்திடம் வாலை ஆட்டுவதை மட்டுமே செய்ய முடிந்த அந்த நாய்கள் எளிய மனிதர்களிடம் கடிப்பதற்குப் பயிற்சி எடுத்துக் கொள்கின்றன. அந்த மீனவப் பெண்களின் கதறல் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. காக்கிச் சட்டையும், குண்டாந்தடியும் இல்லாமல், இந்த நாய்கள் குப்பத்துக்குள் போய் இருந்தால் இவர்களின் உண்மையான வீரம் என்னவென்று தெரிந்திருக்கும்.
இதிலே கவனிக்க வேண்டியது அந்த மீனவ மக்களின் எதிர்பார்ப்பு அற்ற அன்பைத்தான். அந்த அன்புதான் தனக்கும், ஜல்லிக்கட்டுக்கும் சம்மந்தம் இல்லை என்றாலும், போராடும் இளைஞர்களுக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்றாலும், அந்த இளைஞர்களுக்கு உணவும், தண்ணீரும் கொடுத்து உதவியதோடு, அவர்களை காக்கி மிருகங்கள் சூழ்ந்துகொண்டு தாக்கியபோது ஓடோடி வந்து காப்பாற்றியது. அவர்களுக்காகவே குரல் கொடுக்கின்றோம் என்று சொல்லி ஊடக வெளிச்சத்தில் தன்னை பெரிய தர்ம பிரபுக்களாக காட்டிக்கொண்ட துரோகிகளுக்கு மத்தியில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி போராடும் இளைஞர்களுக்காக தமது உடல் முழுவதும் ரத்தக் காயங்களையும், தமது பொருளாதாரத்தையும் இழந்திருக்கின்றார்கள். இந்தக் குணத்தை அவர்கள் எங்கிருந்து கற்றுக் கொண்டு இருப்பார்கள்? போராடும் குணம் என்பது ஒருவனுக்குப் புத்தகங்கள் மூலம் கிடைப்பதில்லை. அதை அவன் சார்ந்த வாழ்நிலையே கொடுக்கின்றது. ஒவ்வொரு நாளும் கடலோடு போராடி, தங்களின் வாழ்வை உயிர்ப்போடு வைத்திருக்கும் அந்த மக்களுக்குப் போராடுவது என்ற குணம் அவர்களை அறியாமலேயே அவர்களுடன் இயல்பாய் இருக்கின்றது. மீன்களை மட்டுமே வகை பிரிக்க கற்றுக்கொண்ட அந்த மக்கள், மனிதர்களை அப்படி வகைபிரித்துப் பார்த்துப் பழகும் குணத்தைக் கற்றுக் கொள்ளவில்லை. இந்தச் சமூகத்தின் புராதான பொதுவுடமையின் எச்சம் அந்த மக்களிடம் இன்னும் உயிர்ப்போடு இருக்கின்றது.
ஆனால் மற்றொரு பக்கம், அதே ஜல்லிகட்டுக்காகப் போராடிய அந்த இளைஞர்களை, தங்களது காரியங்களை சாதித்துக் கொண்டு ஊரைவிட்டு ஓட ஓட விரட்டி அடித்து இருக்கின்றார்கள் அலங்காநல்லூர் பொதுமக்கள். இது தான் எதிர்பார்ப்புகள் இன்றி ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அந்த மீனவ மக்களுக்கும், ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய இளைஞர்களை சுயநலத்தோடு தங்களது ஊருக்குள் அனுமதித்த முக்குலத்தோருக்கும் உள்ள வித்தியாசம். அந்த மீனவ மக்கள் மீது தொடுக்கப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு ஜல்லிக்கட்டை நடத்தும் எந்த அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதையும் நாம் சேர்த்தே பார்க்க வேண்டி உள்ளது. அன்பை சில பேர் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தருகின்றார்கள். ஆனால் சிலபேர் எந்தவித நிபந்தனையும் அற்று, அதை அர்ப்பணிப்போடு தருகின்றார்கள். நாம் மேம்பட்ட மனிதப் பண்பாட்டை கற்றுக் கொள்ள வேண்டியது அந்த மீனவ மக்களிடம் இருந்துதான். உங்களது சித்தாந்தங்களையும், புத்தகங்களையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு அந்த எளிய மக்களிடம் இருந்து வாழ்க்கையைக் கற்றுக் கொள்ளுங்கள். சக மனிதனின் மீது அன்பு செய்வதற்கும், அவர்கள் நெருக்கடியில் சிக்கிக் கொள்ளும்போது பிரதிபலன் பார்க்காமல் ஓடோடி வந்து உதவி செய்வதற்கும், அவர்களில் ஒருவனாக வாழ கற்றுக் கொள்ளுங்கள். உங்களது சாதி, மதம், பணம் எல்லாம் அற்பமானது, அது சார்ந்து மட்டுமே கட்டமைப்பட்ட உங்கள் வாழ்க்கை அருவருப்பானது. இவ்வளவு உப்புக் காற்றை உள்ளிழுத்தும் அவர்களின் நுரையீரல் இன்னும் அரிக்காமல் இருப்பதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?
காக்கிக் சட்டை பொறுக்கிகளே! உங்களை இனி தமிழ்நாட்டு மக்கள் நாய்களைவிட கேவலமாகவே பார்ப்பார்கள். மக்களின் வரிப்பணத்தில் படித்து, மக்களின் வரிப்பணத்தில் இன்று வயிறு வளர்த்துக்கொண்டு, அதே மக்களை குண்டாந்தடிகளால் அடித்து நொறுக்கும் அதிகார வர்க்க அடிமைகளே! நீங்கள் செய்து கொண்டிருப்பதை வேலை என்றா நினைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள். அதற்குப் பெயர் வேறு! நாய்களும், தீண்டத்தகாதவனும் கருவறைக்குள் சென்றால், கருவறையில் இருந்து கடவுள் வெளியேறி விடுவான் என்று பார்ப்பன இந்துமதம் சொல்கின்றது. அதற்குப் பெயர் பார்ப்பன பாசிசம். சக மனிதனை நேசிப்பதைத் தவிர வேறு எதையுமே கற்றுக் கொள்ளாத அந்த எளிய மக்களின் சேரிகளுக்குள்ளும், குப்பத்துக்குள்ளும் காக்கிக் சட்டை நாய்கள் போனால், அந்தச் சேரிகளில் இருந்து நிம்மதியே போய்விடும். இது அதிகார வர்க்கப் பாசிசம். இரண்டுமே இந்தச் சமூகத்தில் இருந்து ஒழிக்கப்பட வேண்டியது.
- செ.கார்கி