இந்தியாவில்  CFTI (Centrally Funded Technical Institutes) என்றழைக்கப்படும் மத்திய அரசின் நிதியில் இயங்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள், IIT (Indian Institute of Technology), NIT (National Institute of Technology), IIIT (Indian Institute of Information Technology), IISER (Indian Institute of Science Education and Research), IIST (Indian Institute of Space Science and Technology)  என பல மத்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் உள்ளன.

JEE தேர்வு

iit madrasஇந்தியாவைப் பொறுத்த வரை தரமான தொழில் நுட்பக் கல்வியை வழங்கும் மேற்கூறிய நிறுவனங்களில் இளங்கலைப் பொறியியல் பட்டப் படிப்பான பி.டெக் படிக்க Joint Entrance Examiation (JEE) என்னும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். JEE தேர்வு, ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஓர் ஐ.ஐ.டி ஆல் நடத்தப்படுகிறது. இது இரண்டு கட்ட நுழைவுத் தேர்வாகும்.

அதாவது, மாணவர்கள் முதலில் JEE Main என்னும் தேர்வை எழுத வேண்டும். அதில் தேர்ச்சியடையும் மாணவர்கள் இரண்டாம் கட்டத் தேர்வான JEE Advanced என்னும் தேர்வை எழுத வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 12 இலட்சம் மாணவர்கள் JEE Main தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர். 2018 இல், JEE Main தேர்வில் வெற்றி பெறும் முதல் 2,24,000 மாணவர்கள் JEE Advanced தேர்வெழுதத் தகுதியடைவர் என அறிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது 2016 இல் 2,00,000 ஆகவும், 2017 இல் 2,20,000 ஆகவும் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் இவ்வெண்ணிக்கை மாறும்.

JEE MAIN நுழைவுத் தேர்வு

B.Tech படிக்க, JEE Main தேர்வின் முதல் தாளிற்கு (Paper-1) மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். டிசம்பர் முதல் வாரத்திலிருந்து ஜனவரி முதல் வாரம் வரை www.jeemain.nic.in என்ற இணையதளத்தில் தேர்வுக்கான கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். 2016 அல்லது 2017 ஆம் ஆண்டில் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவர்களும், இந்த ஆண்டில் (2018 இல்) பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதவிருக்கும் மாணவர்களும் மட்டுமே “JEE MAIN-2018” தேர்வை எழுதத் தகுதியுடையவர்கள் ஆவர். எனவே, ஒரு மாணவர் 3 முறை மட்டுமே “JEE Main” தேர்வை எழுத முடியும்.

பெரும்பாலும் ஏப்ரல் மாதத்தில் இத்தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கான பாடத்திட்டத்தை (Syllabus) தேர்வுக்கு விண்ணப்பித்த இணையதளத்திலேயே பெறலாம். வினாத்தாளை இந்தி, ஆங்கிலம் ஆகிய ஏதேனும் ஒரு மொழியில் மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் குஜராத், டையூ டாமன் மற்றும் தாத்ரா நகர் ஹவெலி ஆகிய இடங்களில் தேர்வெழுதும் மாணவர்கள் மட்டும் குஜராத்தி மொழியிலும் வினாத்தாளைப் பெறலாம்.

இத்தேர்வின் கால அளவு 3 மணி நேரம். வினாத்தாளில் இயற்பியல், வேதியியல், கணிதம் என மூன்று பகுதிகளிருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் 30 கேள்விகள் வீதம் மொத்தம் 90 கேள்விகள் இருக்கும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண் என மொத்தம் 360 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு தவறான விடைக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.  

பெரும்பாலும், ஏப்ரல் மாத இறுதியில், இத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இத்தேர்வின் மதிப்பெண் அட்டையில் மதிப்பெண்கள், இந்திய அளவில் அம்மாணவர் பெற்ற ரேங்க் (All India Rank), JEE Advanced தேர்வை அம்மாணவர் எழுதலாமா? போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (The Ministry of Human Resource Development)  2017 ஆம் ஆண்டிலிருந்து JEE Main தேர்வில் இரண்டு மாற்றங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அவை...  

1) JEE Main தேர்வின் ரேங்க் கணக்கிடுவதற்கு, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் எடுத்துக் கொள்ளப்படாது. JEE Main தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வைத்து மட்டுமே ரேங்க் கணக்கிடப்படும்.

2) JEE தேர்வின் ரேங்க்-ஐ அடிப்படையாகக் கொண்டு  NIT, IIT, IIIT, CFTI - களில் சேர்க்கை நடைபெறும். சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் SC/ST மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் 65% பெற்றிருக்க வேண்டும். மற்ற மாணவர்கள் 70% பெற்றிருக்க வேண்டும்.

JEE Main தேர்வின் தரவரிசைப்படி, பொதுப் பிரிவைச் சேர்ந்த முதல் 1,13,120 மாணவர்கள் (50.5%), OBC-Non creamy layer பிரிவைச் சேர்ந்த முதல் 60,480 மாணவர்கள் (27%), SC பிரிவைச் சேர்ந்த முதல் 33,600 மாணவர்கள் (15%), ST பிரிவைச் சேர்ந்த முதல் 16,800  மாணவர்கள் (7.5%) என மொத்தம் 2,24,000 மாணவர்கள் JEE Advanced தேர்வை எழுதத் தகுதி பெறுவர்.

JEE ADVANCED நுழைவுத் தேர்வு

JEE Main தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே JEE Advanced தேர்வை எழுதலாம். அதாவது “JEE Advanced 2018” தேர்வை, 2017 அல்லது 2018 இல் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்த மாணவர்கள் மட்டுமே எழுத முடியும். JEE Advanced தேர்வை எழுத www.jeeadv.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். வினாத்தாளை இந்தி, ஆங்கிலம் ஆகிய ஏதேனும் ஒரு மொழியில் மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இத்தேர்வானது பெரும்பாலும் மே மாதம் நடைபெறும்.

B.Tech சேர விரும்பும் மாணவர்கள் இத்தேர்விலுள்ள இரண்டு தாள்களையும் (Paper-1 and Paper-2) எழுத வேண்டும். ஒவ்வொரு தாளும் 3 மணி நேரம் நடைபெறும். முதல் தாள் காலையிலும், இரண்டாம் தாள் மதிய வேளையிலும் நடைபெறும். இரண்டு தாள்களிலும் JEE Main தேர்வைப் போன்றே இயற்பியல், வேதியல், கணிதம் என மூன்று பகுதிகளிருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் 54 வினாக்கள் இருக்கும். ஆனால், JEE Advanced தேர்வின் மொத்த மதிப்பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் வேறுபடும்.

தேர்வுக்கான பாடத்திட்டத்தை (syllabus) தேர்வுக்கு விண்ணப்பித்த இணையதளத்திலேயே பெறலாம். தேர்வு முடிவுகளை வெளியிடும் போது, மாணவர்களுக்கு மதிப்பெண் அட்டைகள் வழங்கப்படும். அதில் அவர்கள் பெற்ற மதிப்பெண், ரேங்க் (All India Rank)) இடம் பெற்றிருக்கும்.

JoSAA கலந்தாய்வு

இந்தியாவிலுள்ள 31 என்.ஐ.டி-கள், 23 ஐ.ஐ.டி.-கள், 23 ஐ.ஐ.ஐ.டி-கள் , 20 CFTI என மொத்தம் 97 நிறுவனங்களிலுள்ள B.Tech இடங்கள் JoSAA (Joint Seat Allocation Authority என்ற கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படுகின்றன.  

JEE Main தேர்வில் மட்டும் தகுதி பெற்ற மாணவர்களும் (அதாவது முதல் 2,24,000 மாணவர்கள்), JEE Advanced தேர்விலும் சேர்த்துத் தகுதி பெற்ற மாணவர்களும் இக்கலந்தாய்விற்கு ஜூன் மாதத்தில் https://josaa.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போதே மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களையும், பாடப்பிரிவையும் வரிசைப்படுத்த வேண்டும்.   

மாணவர்களின் JEE Main ரேங்க் அடிப்படையில்  NIT, IIIT, CFTI, போன்ற நிறுவனங்களின் இடங்கள் நிரப்பப்படும். JEE Advanced ரேங்க் அடிப்படையில் IIT இடங்கள் மட்டுமே நிரப்பப்படும். எனவே IIT - இல் சேர்வதற்கு விரும்பும் மாணவர்கள் JEE Advanced தேர்விலும் சிறந்த ரேங்க் பெற்றிருக்க வேண்டும்.

இக்கலந்தாய்வு ஆன்லைனில் மட்டுமே நடைபெறும். மாணவர்களின் தரவரிசைப்படி, இடங்கள் ஒதுக்கப்படும். முதல் சுற்றில் விருப்பமான இடம் ஒதுக்கப்படவில்லையெனில், அடுத்த சுற்றுவரை காத்திருக்க வேண்டும். இவ்வண்ணம் ஏழு சுற்றுகள் நடைபெறும். மாணவர்கள் தங்களுக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்த பின், அந்த நிறுவனத்திற்கு நேரடியாகச் சென்று மற்ற வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும், JEE Advanced தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மூலம் IISER, IIST போன்ற நிறுவனங்களிலுள்ள B.Tech இடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.

JEE Main மற்றும் JEE Advanced தேர்வுகளை சிறந்த முறையில் எதிர்கொண்டு, IIT, NIT-களில் சேர விரும்பும் மாணவர்கள் ஒன்பதாவது வகுப்பிலிருந்தே அதற்குரிய புத்தகங்களைப் படிக்கத் தொடங்கி தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

Pin It