இளந்தமிழகம் இயக்கம் பிளவுபட்டு இரண்டு அணிகளாக இயங்குவதை சிலர் அறிந்திருக்கக்கூடும். கடந்த வாரம், அந்த இரண்டு அணியினருக்கு இடையே நடந்த வாக்குவாதம் முற்றி, இரண்டு அணியினரும் தனித்தனியாக காவல் நிலையத்திற்கு சென்று, தங்கள் மீது எதிர் அணியினர் தாக்குதல் நடத்த முயன்றதாக புகார் அளித்ததன் பேரில், இரண்டு அணியில் இருந்தும் தலா இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இப்போது அனைவரும் பிணையில் வந்துவிட்டார்கள்.

இழந்தமிழகம் இயக்கத்தை சேராத நண்பர்கள் சிலர், என்னிடம் இந்த சிக்கல் குறித்து கேட்டு அறிந்துக்கொள்ள முற்பட்டனர். தற்போது இளந்தமிழகம் இயக்கமாக அறியப்படுகிற அமைப்பு, இதற்கு முன்பு Save Tamils இயக்கமாக இருந்து, அதற்கு முன்பு பெயரற்ற ஒரு அமைப்பாக, "தகவல் தொழில்நுட்ப துறை அணியினர்" என்று பொதுவாக அறியப்பட்ட காலத்தில் இருந்து இந்த அமைப்பின் கடைநிலை உறுப்பினராக இருப்பவன் என்கிற அடிப்படையில் இந்த விளக்கத்தினை கொடுக்க முற்படுகிறேன்!

2008ஆம் ஆண்டு ஈழத்தில் நடந்துக்கொண்டிருந்த தமிழின அழிப்புப் போரை நிறுத்த வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் நாள்தோறும் போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தபோது, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய இளைஞர்கள் சிலரும் தங்கள் துறையினரை திரட்டி போராட்டம் நடத்த வேண்டும் என்று ஒரு முயற்சியை மேற்கொண்டோம். Stop War! Save Tamils! என்கிற முழக்கத்துடன் மனித சங்கிலி போராட்டம், உண்ணாவிரதம், பரப்புரை நிகழ்வுகள் என்று தொடர்ந்து செயல்பட்டோம், காலப்போக்கில் Save Tamils Movement என்கிற பெயரை தற்காலிகமாக சூட்டிக்கொண்டோம், இனவழிப்பு போர் முடிந்த பிறகும் தொடர்ந்து செயல்படுவதென்று முடிவெடுத்து செயல்பட்டோம். 2010 வாக்கில், தோழர் செந்தில் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், தோழர் சரவணகுமார் பொருளாளராகவும், தோழர் இளங்கோவன் செய்தி தொடர்பாளராகவும் மிகச் சிலரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களை தேர்ந்தெடுத்த அந்த மிகச் சிலரில் நானும் ஒருவன். பிறகு இளங்தமிழகம் இயக்கம் என்று பெயர் மாற்றம் பெற்றோம்.

நேரடியாக சிக்கலின் மைய புள்ளிக்கு வருவோம்!

2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒருங்கிணைப்பாளராக இருந்த தோழர் செந்திலின் ரகசிய செயல்பாடுகள், இளந்தமிழகம் இயக்கத்தின் பொதுகுழுவுக்கு அம்பலமானது. சிபிஎம்எல் என்கிற் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் பிற்காலத்தில் (Save Tamils Movement தோன்றி வளர்ந்த பிறகு) தோழர் செந்தில் ரகசிய உறுப்பினராக சேர்ந்திருக்கிறார். அவர் சேர்ந்தது மட்டுமல்லாமல், இளந்தமிழகம் இயக்கத்தின் பொதுகுழு உறுப்பினர்களில் ஒரு 10 பேர் வரைக்கும் தனித்தனியாக பேசி கொஞ்சம் கொஞ்சமாக அந்த ரகசிய கம்யூனிஸ்ட் கட்சியில் ரகசிய உறுப்பினராக சேர்த்திருக்கிறார். இளந்தமிழகம் அமைப்பின் பொருட்கள் மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்புகளை அந்த கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளுக்கு மறைமுகமாக பயன்படுத்தியிருக்கிறார். தோழர் செந்திலால் ரகசியமாக பேசி சிபிஎம்எல் கட்சியின் ரகசிய உறுப்பினராக்கப்பட்ட இளந்தமிழக பொதுகுழு உறுப்பினர்கள், அந்த கட்சியின் பல்வேறு ரகசிய செயல்பாடுகளாலும், எதேச்சதிகாரத்தாலும் அதிருப்தியுற்று, சிறிதுகாலத்திலேயே அங்கிருந்து விலகி வந்துவிட்டனர். அவர்கள் வெளியே வந்து, தோழர் செந்திலின் ரகசிய செயல்பாடுகளை பொதுகுழு உறுப்பினர்களுக்கும் பொது உறுப்பினர்களுக்கும் அம்பலப்படுத்தினர். மேலும், தோழர் செந்தில் தன்னுடைய இளந்தமிழக அதிகாரத்தைக் காட்டி, அந்த கட்சியின் தலைமைக் குழுவிலும் ரகசிய இடம்பெற்றிருக்கிறார் என்பதையும் அவர்கள் மூலம் நாம் அறிய முடிந்தது! பச்சையாக சொல்வதென்றால், இளந்தமிழகம் இயக்கத்தை அடகுவைத்து அந்த கட்சியின் தலைமைகுழுவில் இடம் வாங்கியிருக்கிறார்.

கடந்த ஆண்டு இளந்தமிழகம் இயக்கத்தின் பொதுக்குழு ஜூன் மாதம் கூட்டப்பட்டு இந்த சிக்கல் விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் தோழர் செந்திலும் வேறு சிலரும் தங்களுடைய ரகசிய செயல்பாடுகளை வேறு வழியின்றி ஒப்புக்கொண்டனர். தோழர் செந்தில் தரப்பினர், பொதுகுழுவுக்கு தெரியாமல் எவ்வளவோ ஏமாற்றுத்தனங்களை செய்தபோதிலும், அவர்களை மன்னித்து பொதுகுழு அவர்களுக்கு ஒரு வாய்ப்பினை அன்று வழங்கியிருக்கிறது. அதாவது, இளந்தமிழகம் இயக்கத்தில் பொறுப்பாளர்களாக இருப்பவர்கள், வேறொரு அரசியல் கட்சியில் உறுப்பினராகவோ பொறுப்பிலோ இருக்கக்கூடாது என்று அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களாலும் ஒருமனதாக ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, தோழர் செந்திலும் வேறு சிலரும் அந்த கட்சியில் இருந்து விலகிவிடுதாக உறுதியளித்தனர். சிக்கல் முடிவுக்கு வந்ததாக நினைத்து பொதுகுழு கலைந்தது.

ஆனால் பொதுகுழு கூட்டத்திற்கு பிறகு, தோழர் செந்தில் தனித்தனியாக பொதுகுழு உறுப்பினர்களை அணுகி தான் இரண்டு அமைப்பிலும் பொறுப்பில் இருப்பதற்கு வசதியாக, இரட்டை உறுப்பினர் முறையை இளந்தமிழகம் இயக்கம் அனுமதிக்க வேண்டும் என்று பேசி ஆதரவு திரட்ட முயன்றிருக்கிறார்.

இதனால், சிக்கல் மீண்டும் வலுபெற்றது. இரண்டு அணியாக இளந்தமிழகம் பொதுகுழு பிளவுபட்டது. முரண்பாடுகள் அதிகரித்தது. இரண்டு தரப்பினருக்கும் பொதுவானவர்களாக கருதப்பட்ட வேறுசில அமைப்புகளின் முன்னணியாளர்களைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தோழர்கள் கொளத்தூர் மணி, தியாகு, பேராசிரியர் மணிவண்ணன், விடுதலை இராஜேந்திரன், ஓவியா போன்றவர்கள் முன்னிலையில் சிலச்சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தது.

பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள், இளந்தமிழகம் இயக்கம் எந்தவொரு கட்சியின் தலையீடும் இல்லாத ஒரு தனித்த இயக்கமாக செயல்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளனர். தோழர் செந்தில் தரப்பினர் அதற்கு உடன்பட மறுத்தனர். இதன் விளைவாக பொதுக்குழு கூட்டப்பட்டு, தோழர் செந்தில் மற்றும் சிலர் இளந்தமிழகம் இயக்கத்தில் இருந்து பெரும்பான்மையான பொதுகுழு உறுப்பினர்களால் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து புதிய ஒருங்கிணைப்பு குழுவை, இளந்தமிழகம் இயக்கத்தின் பொதுகுழு கூடி தேர்ந்தெடுத்து, புதுவேகத்துடனும் வெளியாட்களுடைய தலையீடு இல்லாமலும் இயக்கம் செயல்பட்டு வருகிறது. பெரும்பான்மை பொதுகுழு உறுப்பினர்களின் முடிவை ஏற்கும் ஜனநாயகத்தன்மையற்று, தோழர் செந்தில் தரப்பினர் இன்னும் வீம்பாக இளந்தமிழகம் என்கிற பெயரை பயன்படுத்திவருகின்றனர். இளந்தமிழகம் இயக்கத்தின் பழைய அலுவலகத்தையும், அதிலிருக்கும் பொருட்களையும் கைபற்றி வைத்திருக்கிறார்கள். அலுவலக ஆக்கிரமிப்பு குறித்து பேசச்சென்ற இடத்தில்தான் வாக்குவாதம் முற்றி, இரு தரப்பினரும் பரஸ்பரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து, இருதரப்பில் இருந்து தலா இரண்டுபேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவே இந்த சிக்கலின் சுருக்கமான வரலாறாகும்.

தகவல் தொழில்நுட்ப துறையினரிடையே இருக்கின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவே, ஒரு அமைப்பை கட்டுவதென்பது மிகப் பெரும் சவாலாக இருக்கும் காலக்கட்டத்தில், ரகசிய செயல்பாடுகளைக் கொண்ட ஒரு கட்சி, கம்யூனிசம் என்கிற பெயரில் அதில் ஊடுருவி ஆள்பிடிக்கும் வேலையை செய்வது என்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு செயலாகும். கம்யூனிச கருத்தியலின் மீதே ஒருவித வெறுப்பையும், ஒவ்வாமையையும் வளர்க்கவே அவர்களுடைய இத்தகைய செயல்பாடுகள் இட்டுச்செல்லும் என்பதை அவர்கள் உணர்ந்துக்கொண்டு தங்கள் வழிமுறைகளை நேர்மையானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும்!!!

- பிரபாகரன் அழகர்சாமி

Pin It