15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் பொறியியல், மருத்துவம் போன்ற உயர்படிப்புகளைப் படிப்பதற்கான நுழைவுத் தேர்வு நடைபெற்று வந்தது.
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுக்குப் பிறகு இந்த நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை தயாரிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
இதனால் தெருவுக்குத் தெரு புற்றீசல் போல நுழைவுத் தேர்வுப் பயிற்சி மையங்கள் முளைவிடத் தொடங்கின.
பல தனியார் பள்ளிகள் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வழங்குவதாக விளம்பரப்படுத்திக்கொண்டு கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டன.
இந்தச் சூழலில்தான் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்விக்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
தமிழ்நாட்டில் எந்த உயர்கல்விப் படிப்பிற்கும் நுழைவுத் தேர்வு நடத்துவது தடை செய்யப்பட்டது. நுழைவுத் தேர்வுத் தடைச்சட்டம் நடைமுறையிலிருந்து வருகிறது.
இந்நிலையில் ஒன்றிய அரசு இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பிற்கு ‘நீட்’ என்ற தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது.
இதற்கு முன்பு நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வை விட ஆபத்தானது இந்த நீட் தேர்வு.
நுழைவுத் தேர்வு தரவரிசை அடிப்படையில் முன்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனால் தற்போது தகுதி மதிப்பெண்கள் பெற்று விட்டாலே மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பு மாணவருக்குக் கிடைத்து விடுகிறது.
பணத்தைக் கொட்டிக் கொடுத்துத் தனியார் கல்லூரிகளில் படிப்பதற்கான அத்தனை வாய்ப்புகளும் அந்த மாணவருக்குக் கிடைத்து விடுகிறது. 720 மதிப்பெண்களுக்குச் சுமார் 177 (சில நேரங்களில் 100-க்கும் கீழ்) மதிப்பெண்கள் எடுத்தாலே மருத்துவம் படிக்கத் தகுதி மதிப்பெண் கிடைத்துவிடும்.
அப்படியென்றால் இது எல்லோருக்கும் எளிதுதானே என்று எண்ணத் தோன்றும். தகுதி மதிப்பெண் பெற்றுவிடுவது எல்லோருக்கும் எளிது என்றாலும் அரசுக் கல்லூரிகளில் படிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றிட உயர்தரவரிசை மதிப்பெண் பெற வேண்டும்.
ஒரு பக்கம் மிகக் குறைவான தகுதி மதிப்பெண்களைப் பெற்றுக் கொண்டு பணத்தைக் கொட்டிக் கொடுத்துத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.
மற்றொரு பக்கம் உயர் மதிப்பெண் பெற்று அரசுக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம்.
தகுதி மதிப்பெண் பெற்று, நீட் தேர்வில் வெற்றி பெற்றாலும் ஏழையாக இருந்தால் அரசுக் கல்லூரிகளில் படிப்பதற்கு வாய்ப்பு இல்லாத சூழலில், தனியார் கல்லூரிகளிலும் படிப்பதற்குப் போதிய பணமில்லாமல் மருத்துவராகும் கனவை மறந்துவிட்டுச் செல்லலாம். இதுதான் நிலை.
உதாரணத்திற்கு 177 மதிப்பெண் பெற்ற ஒரு செல்வந்தர் வீட்டு மாணவன் தனியார் கல்லூரியில் பணம் கட்டிச் சேர்ந்து படிக்க முடியும்.
350 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவர் பணமின்றி அரசுக் கல்லூரிகளில் படிப்பதற்கான வாய்ப்பும் இல்லாமல், தன்னைவிடக் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எல்லாம் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதைப் பார்த்துக் கொண்டு தனது மருத்துவக் கனவை மறந்துவிட வேண்டியதுதான்.
தகுதி அடிப்படையில் 350 மதிப்பெண் பெறுவது தகுதியா? 177 மதிப்பெண் பெறுவது தகுதியா? யாருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்...
இந்த நிலையில் நீட் தேர்வு தகுதியானவர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறது என்று கூறுவது எப்படிச் சரியாகும்?
மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் நீட் தேர்வில் தகுதி பெற்றுவிட்டால் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு படிக்கவைக்கும் தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை நீட் தேர்வு தடுத்து நிறுத்தவில்லை.
வடமாநிலங்களில் பன்னிரண்டாம் வகுப்புப் படிப்பதற்குப் பதிலாக, நீட் தேர்வு தகுதி மதிப்பெண்களுக்காக இரண்டு ஆண்டுகள் படித்து, பன்னிரண்டாம் வகுப்பிலும் குறைந்த மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி அடைந்து, பணத்தைக் கொட்டிக்கொடுத்துத் தமிழ்நாட்டுத் தனியார் கல்லூரிகளை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். இதில் எங்கிருந்து வந்தது தகுதி?
நீட் தேர்வு முறையால் தமிழ்நாட்டு மாணவர்களுக்குக் கிடைத்த ஒரே ஆதாயம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான ஏழரை விழுக்காடு (7.5%) இடஒதுக்கீடு.
தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநிலங்களைத் தவிர வேறு எங்காவது அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதா?
சமூகநீதி அடிப்படையில் அதிமுக அரசு இந்த ஏற்பாட்டை உடனடியாகச் செய்தது. திமுக அரசு அதைத் தொடர்ந்தது.
இதைத் தவிர வேறு ஏதாவது நன்மைகள் நடந்திருக்கின்றனவா?
அனிதா தொடங்கி எத்தனை எத்தனை மாணவர்களை நாம் இழந்திருக்கிறோம்!
பன்னிரண்டாம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் பெறுவது அவ்வளவு எளிதானதா? அந்த மாணவிக்கு மருத்துவ வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் இன்று மருத்துவராகியிருப்பார்.
அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை நாடி ஓடுகிறார்கள்.
லட்சக்கணக்கில் கட்டணமாகக் கொடுத்துப் பயிற்சி எடுத்து நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் இலவசமாகப் படித்து வரும் மாணவர்கள் கடனை வாங்கியாவது நீட் தேர்வுப் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கிறார்கள்.
பணத்தையும் காலத்தையும் செலவு செய்து தேர்வில் தேர்ச்சி பெற்றும் அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போனால், விரக்தியின் விளிம்பிற்குச் சென்று தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைதான் கொடுமையிலும் கொடுமை. இதை இன்னும் தொடர விடலாமா?
தமிழ்நாட்டில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முற்றுமுழுதாக இந்தத் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் இவர்களைத்தான் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்திருக்கிறார்கள்.
மக்களின் உணர்வுகளை மதிக்காமல் ஒன்றிய அரசு நீட் தேர்வைத் தமிழ்நாட்டில் திணிப்பது தனியார் கல்லூரிகளை ஊக்கப்படுத்தும் செயலாகும்.
வடஇந்தியப் பணக்கார மாணவர்களை மருத்துவம் படிக்க வைப்பதற்காக வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதுதான் நீட் தேர்வின் நோக்கமாக உள்ளது.
இந்தத் தேர்வு முறையால் இவ்வளவு சிக்கல்கள் என்றால் தேர்வு நடைபெறும் முறை அதனினும் சிக்கல்.
ஒருபக்கம் வடஇந்தியாவில் வினாத்தாளைக் கசிய விடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் துப்பட்டா போட்டுச் செல்வதற்குக் கூட அனுமதி மறுக்கிறார்கள்.
அரசுப்பள்ளி மாணவர்களின் சீருடையான கோட்டினைக் (Coat) கழற்றிவிட்டுத் தேர்வு அறைக்குச் செல்லுமாறு மாணவிகளை அச்சுறுத்துகிறார்கள்.
வினாத்தாள் கசிந்தது வடஇந்தியாவில்...
மோசடி நடந்தது வடஇந்தியாவில்...
தமிழ்நாட்டில், பெரும் தொகையைக் கட்டணமாகச் செலுத்திப் பயிற்சி பெற்று, தங்களின் கடுமையான பயிற்சிக்குப் பிறகு தேர்வை எழுதிவிட்டு "அப்பாடா" என்று மூச்சுவிடும் நேரத்தில், "தேர்வில் குளறுபடி நடந்துள்ளது, எழுதிய தேர்வு ரத்து செய்யப்படுகிறது... மீண்டும் தேர்வு எழுத வேண்டும்" என்று கூறினால் அது எவ்வளவு பெரிய மன உளைச்சலை மாணவர்களுக்கு ஏற்படுத்தும்!
துளியும் உளவியல் சார்ந்த உணர்வுகள் இன்றி, தனியார் கல்வி நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்காக, வடஇந்தியப் பணக்கார மாணவர்களின் வசதிக்காக நடத்தப்படும் இந்தத் தேர்வை இனி நடத்த விடலாமா?
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போன்று பேரெழுச்சியாக நடைபெறும் நீட் தேர்வு மோசடிக்கு எதிரான போராட்டத்தை நாம் ஆதரிக்க வேண்டும்.
நீட் தேர்வில் நடைபெற்ற மோசடிக்காகப் போராடும் மாணவர்களிடம் "நீட் தேர்வே ஒரு மோசடிதான்" என்பதை உணர்த்தி, நீட் தேர்வு முறையை ரத்து செய்வதற்கான போராட்டக் களமாக மாற்ற வேண்டும்.
உயர்கல்விக்காக நாம் உருவாக்கி வைத்திருக்கும் கல்வி நிறுவனங்களை ஒன்றிய அரசிடமிருந்து பாதுகாத்துத் தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை மாணவர்களுக்காக விட்டுச் செல்ல வேண்டும்.
- நா.வெங்கடேசன், ஆசிரியர், மெய்ச்சுடர்.