தந்தை பெரியார் இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற சிந்தனையாளர். மக்களில் சரி பாதியாக உள்ள - பெண்கள் விடுதலைக்காக, 1928 முதல் பேசியவர். பெண்களைப் பற்றித் தந்தை பெரியார் சிந்தித்த அளவுக்கு உலகத்தில் வேறு எந்த ஒரு சிந்தனையாளரும் சிந்திக்கவில்லை. பெண் விடுதலை பெற வேண்டுமானால் “ஆண்மை” அழிய வேண்டும் என்றார். பெண்கள் விடுதலை குறித்துப் பேசுவதும், எழுதுவதும் இன்று எளிது. ஆனால் 70-80 ஆண்டுகளுக்கு முன்பு இப்படிச் சிந்தித்து அதற்குச் செயல்வடிவமும் கொடுத்து வெற்றியும் பெற்றார்.
ஒரு ஆண் படித்தால், அவன் மட்டுமே படிக்கின்றான்; ஒரு பெண் படித்தால் அந்தக் குடும்பமே படிக்கின்றது. பெண்கள் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ளக்கூடிய அளவுக்கு ஊதியம் தேட ஆரம்பித்து விட்டாலே, ஆண்களுக்கு அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியவர் பெரியார்.
பெரியார் கூறுகிறார் : வாழ்க்கையில் இன்ப, துன்பங்கள் போக, போக்கியங்களில் இருவரும் சம உரிமையுடன் வாழுங்கள். கணவன் மனைவி இருவரும் தாங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். வரவுக்கேற்ற செலவு செய்ய வேண்டும். சிறிதாவது வருமானத்தில் மிச்சப்படுத்த வேண்டும். வரவுக்கு மேல் செலவு செய்வது “விபச்சாரம்” செய்வதை ஒத்ததாகும்.
“மூடநம்பிக்கைகளை ஒழித்துப் பகுத்தறிவுக்கேற்ற முறையில் நடக்க வேண்டும். கோயில் திருவிழாக்களுக்குச் செல்லக்கூடாது. எங்காவது போக வேண்டுமானால், அறிவை விசாலமாக்கும் பொருட் காட்சிச் சாலை, இயந்திரத் தொழிற்சாலை போன்றவற்றிற்குச் சென்று பார்க்க வேண்டும். அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு பகவான் (கடவுள்) கொடுத்தார் என்று சொல்லக் கூடாது. ஒன்று, இரண்டு குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியுடன் வாழுங்கள். ஆண்கள், பெண்களுக்கு சம உரிமையும், சம பங்கும் கொடுங்கள். உங்கள் மனைவியை நினைத்துக் கொண்டே - யோசிக்காதீர்கள். உங்களுடைய செல்லப் பெண் குழந்தைகளையும், உங்கள் தாய், சகோதரிகளையும் மனதில் வைத்து யோசி யுங்கள். நம் நாட்டுப் பெண்கள், மேல்நாட்டு பெண்களைவிடச் சிறந்த அறிவு, ஆற்றல், வன்மை, ஊக்கம் உடையவர்கள், பெண்களை வீரத்தாய்மார்களாக உருவாக்குங்கள்.
பெண்களே! சட்டை, பேண்ட், லுங்கி கட்டுங்கள். முடியைக் கழுத்தளவுக்கு வெட்டிக் கொள்ளுங்கள். உருவத்தில் ஆண்களா, பெண்களா என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வாழுங்கள். கும்மி, கோலாட்டங்களை ஒழித்து, ஓடவும் தாண்டவும் குதிக்கவும் குஸ்தி போடவும் போலீசாக, இராணுவ வீரராக, விமானியாக உருவாகுங்கள்.
மனுநீதி சாஸ்திரப்படி நமக்குத் திருமணம் கிடையாது; நாம் எல்லோரும் தாசி மக்கள்; நாம் திருமணம் செய்வதாக இருந்தால் நம் வீட்டுக்குப் பார்ப்பான் வந்து நமக்கு பூணுல் மாட்டித்தான் திருமணம் செய்வான். கன்னி காதானம், மாங்கல்யதாரணம், பாணிக்கிரகணம், விவாக சுபமுகூர்த்தம், தாராமுகூர்த்தம் என்று வேற்று மொழிச் சொற்கள்தான், தமிழில் சொற்கள் இல்லை. நாங்கள் தான் “வாழ்க்கை ஒப்பந்தம்” - என்ற சொல்லை, திருக்குறளில் இருந்து கண்டு பிடித்தோம். கல்யாணம் என்பதன் பொருளே ஒரு பெண்ணை ஆணுக்கு அடிமைப்படுத்துவது என்றுதான் பொருள் ஆகும்.”
மேலும் பெரியார் கூறுகிறார் : “பெண் என்பவள் ஒரு ஆணுக்கு சமையல்காரி, சம்பளம் வாங்காத வீட்டு வேலைக்காரி - ஆணின் காமக் கிழத்தி, ஒரு ஆணின் குடும்பப் பெருக்கிற்கு - பிள்ளை உற்பத்தி செய்யும் பண்ணை, “இயந்திரம்”, பிள்ளைக் குட்டி சுமக்கும் தோல்பை என்றும்; பெண்ணின் கழுத்தில், காதில், உடலில் ஆங்காங்கே நகையை மாட்டி உள்ளார்கள். நகை மாட்டும் ஸ்டேண்டா? என்றார், பெரியார். பெண்கள் வைரம் காய்க்கும் மரங்களா? பட்டு போர்த்திய, அலங்கார பொம்மைகள் போன்று உள்ளார்கள்.
1929-இல் செங்கல்பட்டில் நடத்திய சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாட் டின் தீர்மானங்களில், “கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும்”. கணவனை இழந்த பெண்கள் விதவைக் கோலத்துடன் மொட்டை அடிப்பது, வெள்ளை ஆடை உடுத்தச் சொல்வது, நகை மணிகள், அணியக்கூடாது. பூ-பொட்டு வைத்துக் கொள்ளக்கூடாது. மகிழ்ச்சிக்குரிய குடும்ப விழாக்களில் கலந்து கொள்ளக்கூடாது என்பவை. இவை அனைத்தும் இந்து மதத் தின் மூலம் பெண்களுக்கு - இழைக்கப்படும் அநீதியாகும்.”
“பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்பட வேண்டும்”- 1989-இல் கலைஞர் ஆட்சியில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. “இளைஞர்கள் விதைவைப் பெண்களையே, திருமணம் செய்து கொள்ள வேண்டும்”. தேவைப்பட்டால் பெண்கள் - கர்ப்பப்பையை அகற்றவும் தயாராகுங்கள்.
போர்ப் படையில் பெண்கள் : பெண்களை அடிமைப்படுத்தும், கூர் ஆயுதம் தாங்கிய பழமைக்கு எதிரான ஒரு போரே நடத்தத் துணிந்த தந்தை பெரியார், தமது போராட்ட முன்னணிப் படையில் தாய்மார்களையே முன்னிலைப்படுத்தினார். மதுவிலக்குப் போரில் நாகம்மையார், சமூகச் சீர்திருத்த எழுச்சிப் போரில் தம் தங்கை மகள்; இந்தி எதிர்ப்பு போரில் தர்மாம்பாள் அம்மையார் - கைம்மை கொடுமை எதிர்ப்பு போரில் மஞ்சுளாபாய், சாதி மறுப்புக் கிளர்ச்சியில் காரைக்குடி விசாலாட்சி, நீலாவதி அம்மையார், மரகதவல்லி இப்படி - எண்ணற்ற பெண் சிங்கங்கள் தங்கை கிளர்ந்தெழுந்தனர்.
“1952-54-இல் அன்றைய சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் அவர்களால் கொண்டு வரப்பட்ட The Hindu Code Bill - இந்து பெண்களுக்கான - சொத்துரிமை திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தின் பிற்போக்கு வைதிக சக்திகள் வரவிடாமல் தடுத்தன. அதனால் தனது பதவியை ராஜி னாமா செய்துவிட்டு கம்பீரமாக அம்பேத்கர் வெளியேறினார்.”
2006-இல், அதே இந்து பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம் காங்கிரஸ் தலைமை யில் (U.P.A.) எனப்படும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய ஆட்சியில் (தி.மு.க. அங்கம் வகித்தது) நிறைவேற்றப்பட்டுச் சட்டமாக்கியது.
பெரியார் பட்டம்
தமிழ்நாட்டுப் பெண்குலத் தலைவர்களான நீலாம்பிகை அம்மையார், மீனாம்பாள் சிவராஜ், பண்டித நாராயணி அம்மாள், டாக்டர் தருமாம்பாள், மலர் முத்தம்மாள், உள்ளிட் டோர் இணைந்து 13.11.1938 அன்று சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு என்ற பெயரில் நடத்தி, அதில், தோழர் ஈ.வெ. இராமசாமி என அழைக்கப்பட்டவரை - “பெரியார்” என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கிப் பெருமைப்படுத்தினர். அப்போது அவர் கள் அப்பட்டத்திற்கான நியாயங்களை, உணர்வுகளை எழுத்து வடிவத்தில் வடித்துப் பாராட்டினர்.
“இந்தியாவில் இதுவரையும் தோன்றிய, சீர்திருத்தத் தலைவர்கள் செய்யாமற் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ. இராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவர் இல்லாமையாலும், அவர் பெயரைச் சொல்லிலும் எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் “பெரியார்” என்ற - சிறப்பு பெயரையே வழங்குதல் வேண்டுமென இம் மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கின்றது.”
தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களை வென்ற தால், “தந்தை பெரியார்” என்று மரியாதை யுடன், பாசத்துடன் இந்தப் பட்டம் மக்களிடம் நிலையாக நின்றது.
பெரியார் பொது வாழ்க்கைக்கு அடி யெடுத்த காலந்தொட்டுப் பெண் விடுதலைக்காகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். பெரியார் சொல்கிறார் : “பூனைகளால், எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால், ஆடு கோழிகளுக்கு - விடுதலை கிடைக்குமா?” அப்படி ஒருக்கால் விடுதலை கிடைத்தாலும், ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது.
மனிதப்பற்றைத் தவிர வேறு எந்தப் பற்றும் எனக்கு இல்லை என்ற மானுடப் பற்றாளர் பெரியார் - பெண் விடுதலைக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய சமூகப் போராளி பெரியார் மறைந்து 46 ஆண்டுகள் கடந்தும் அவரை மறக்க முடியவில்லை. மானமும் அறிவும் கொண்ட மக்களாக எனது மக்களை மாற்றுவேன் என்று சூளுரைத்தவர் பெரியார்.
தந்தை பெரியார், பெண் விடுதலைக்காகப் போராடியதால்தான், இன்று கல்வியில் மாணவர்களைவிட மாணவிகள் முதல் இடத்தில் உள்ளார்கள். “அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?” என்று கேட்ட காலம் போய், இன்று பட்டதாரியாக, பேராசிரியர்களாக, மருத்துவராக, பொறியாளராக, துணைவேந்தர்களாக, முதல்வராக, பிரதமராக, வக்கீலாக, நீதிபதியாக, அமைச்சர்களாக, விளையாட்டு வீரர்களாக, விமானியாக இப்படிப் பல துறை களிலும் பெண்கள் உயர்ந்து நிற்பதற்கு, பெரியார் உழைத்த உழைப்புத்தான் காரணம்.
வாழ்க பெரியார்.