“திராவிட இயக்கம் மேலான தீண்டாமைக்குத் தமிழிலக்கியவாதிகளுடைய பிராமணியப் பார்வைதான் காரணம்" - கி.ரா. பேட்டி
திராவிட இயக்கத்தின் கலை இலக்கிய பங்களிப்பு தொடர்ந்து இலக்கிய மேதாவிகளால் இருட்டடிக்கப் படுகிறது. அப்படியே யாராவது திராவிட இயக்கத்தின் கலை இலக்கியப் பங்களிப்பு என்று பேச ஆரம்பித்தால் அப்படி பேசுபவரின் கலை இலக்கியப் பங்களிப்பையே கேள்விக்குட்படுத்தி’விடுவார்களோ என்ற அச்சத்தில் பலர் இன்றும் வாய்த் திறக்காமல் மவுனமாக இப்பக்கங்களைப் புரட்டி விடுகிறார்கள்.
இதற்கான காரணங்களை மூத்த எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் நேர்காணல் மிகத் தெளிவாக முன் வைக்கிறது. கி.ராவும் தன் மவுனத்திற்கான காரணத்தை ஒற்றை வரியில் சொல்லிச் சென்றிருப்பதும் இன்னும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.
இந்து பத்திரிகையிலிருந்து சம்ஸ் கேள்வி: (மாபெரும் தமிழ்க்கனவு.. பக். 270)
தமிழ் இலக்கியவாதிகளும் சரி; பெரும்பான்மை சிறுபத்திரிகைகளும் சரி; திராவிட இயக்கத்தைப் புறக்கணித்தும் எதிர்த்துமே செயல் பட்டிருக்கின்றன. நவீனத் தமிழ் இலக்கியம் என்பது பிராமண, பிள்ளைமார் சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்திய இடம் என்பதும் இந்த இரண்டு சமூகங்களுமே திராவிட இயக்கத்தால் தங்கள் மேலாதிக்கத்தில் சரிவு கண்ட சமூகங்கள் என்பதும் இந்தப் போரிலிருந்து பிரித்துப் பார்க்கக்கூடியவை அல்ல.
தமிழ்நாட்டில் இன்று அரசியல் மீது ஒரு வெறுப்பும் தீண்டாமை உணர்வும் நிறுவப் பட்டிருக்கிறது என்றால், நவீனத் தமிழ் இலக்கியவாதிகளுக்கு அதில் முக்கியமான ஒரு பங்கிருக்கிறது. நான் விமர்சனங்கள் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், அவை ஒரு இடையீடாக இல்லை என்று சொல்கிறேன்.
ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மேல் எவ்வளவோ குற்றச்சாட்டுகள் இருந்தாலும், பாப்லோ நெருடா அவருக்கு ஒரு மகத்தான இடத்தைக் கொடுத்து எழுதுகிறார். அப்படியான ஓரிடம் இங்கே உருவாகவில்லை. தவறு ஒரு தரப்பினுடையது என்று மட்டும் நான் சொல்லவில்லை. ஆனால், இலக்கியவாதிகளின் பின் ஒரு சாதி அரசியல் இருந்தது. திராவிட இயக்கத்தினர் மீது மலிந்த பார்வை இருந்தது. இதற்கான அடிப்படை பிராமணியம்தான் என்ற குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?
கி.ராவின் பதில்:
சரிதான். இந்த பிராமணியத்தைப் பத்திச் சொன்னீங்க பாருங்க, அந்தக் கருத்துல ரொம்ப ரொம்ப உடன்பாடு உண்டு எனக்கு. அது ‘மணிக்கொடி’ ஆட்கள் கிட்டேயிருந்தே தொடங்கிட்டுது.
நானும் கு.அழகிரிசாமியும் அந்தக் காலத்துலேயே இதைப் பேசியிருக்கோம். நீங்க சொன்ன ரெண்டு சாதிகளைக் கடந்தும் இன்னைக்கு நிறைய பேர் எழுத வந்திருக்காங்க. ஆனா, பிராமணிய மனோபாவம், பார்வை இப்பவும் எல்லா சாதிகள் கிட்டயும் தொடர்றதாதான் எனக்குத் தோணுது.
மேலும் இதே நேர்காணலின் இறுதியில் கிராவின் வாக்குமூலமாக வெளிவரும் சொற்கள் …” எங்களால ‘மணிக்கொடி’ பக்கமும் போக முடியல, ‘திராவிட நாடு’ பக்கமும் போக முடியல. ரெண்டு மேலேயுமே விமர்சனம் இருந்துச்சு... நாம இதை ரெண்டையுமே சொல்லக் கூடிய நிலையில இல்லை.
சொன்னா, முழுசா கட்டம் கட்டப் பட்டிருப்போம்கிறதுதான் உண்மை நிலை. ஆனா, இன்னைக்குத் தோணுது, நீங்க கேட்கும்போது, அண்ணாதுரையைப் பத்தி நாலு வார்த்தை பேசக்கூட நமக்கு வரலியேன்னு. நொந்துக்க ஏதுமில்ல, காலம் இப்படித்தான்!...”
காலம் இப்படித்தான் இருக்கிறது என்று கடந்து செல்ல முடியாது. கலை இலக்கியத்தின் மீதான சாதி ஆதிக்கத்தை ஒழித்து இலக்கியப் பிதாமகன்களின் சாதிய இலக்கியப் பட்டியலைக் கிழித்து அதில் அப்பட்டமாக தெரியும் சாதி முகத்தை அடையாளம் காணும் அறிவை அவர்களின் நுண்ணரசியலை தமிழர்களுக்கு கொடுத்ததில் பெரும் பங்காற்றி இருப்பது திராவிட இயக்கத்தின் பங்களிப்பு தான்.
இலக்கியமும் வாசிப்பும் சில சாதியினருக்கானவையாக இருந்ததை மாற்றி அமைத்து இன்று திராவிட இயக்கத்தின் மீது ஒவ்வாமையைக் காட்டும் இலக்கியங்களையும் வாசிக்கும் வாசகர் பரப்பை உருவாக்கியதும் திராவிட இயக்கமே.
இலக்கிய நோக்கில் பல மாறுதல்கள் சுயமரியாதை இயக்கத்திற்குப் பின் உருவானவை. . பகுத்தறிவை வலியுறுத்துகின்ற சிந்தனை எழுத்துலகில் பெருகியது. சற்றொப்ப 400 மாத வார நாளிதழ்களால் திராவிட இயக்கம் வளர்த்தது அரசியல் மட்டுமல்ல.
அதனூடாக வாசிப்பும் வாசகப்பரப்பும் வளர்த்தெடுக்கப்பட்டதை வசதியாக மறந்து விடுகிறோம்.
இருபதாம் நூற்றாண்டில் தமிழின் தொன்மையை வலியுறுத்தியவர்கள் இரு பிரிவினராக இருந்தார்கள். ஒரு சாரார் கடவுள் மறுப்புக் கொள்கையை முன்வைத்த தந்தை பெரியார் வழியைப் பின்பற்றினார்கள். இன்னொரு சாரார் தமிழன் இந்துவல்ல, அவன் சைவ சித்தாந்த கொள்கை உடையவன் என்றார்கள்.
பார்ப்பனரல்லாத தமிழ் ஆராய்ச்சியாளர்கள் சைவ சித்தாந்தத்தை முன் வைத்தவர்களாக இருக்கிறார்கள். இதில் திராவிடமும் சைவ சித்தாந்தமும் கலந்த கலவையாக இருந்தவர் திராவிட இயக்க முன்னோடி, சைவத்தமிழ் ஆய்வாளர், பேராசிரியர் - பெ. சுந்தரம் பிள்ளை.
இவர் எழுதியதுதான் “நீராருங்கடலுடுத்த..” தமிழ்த்தாய் வாழ்த்து. முதன்முதலில் திராவிடர் பெருமையைத் தமது நூல்களின் மூலமாக உணர்த்த முயன்ற இவரைத் திராவிட ஆராய்ச்சிகளின் தந்தை எனலாம்.
ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டத்தில் உருவான இந்திய தேசத்தின் கலாச்சார பண்பாட்டு அடையாளமாக வேத இந்தியா முன்னிறுத்தப்பட்டது. அதாவது வெள்ளையரின் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிராக வேத இந்தியாவின் கலாச்சாரமும் மேன்மையும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பாரதி போன்றவர்கள் கொண்டாடும் ஆரியவேதம், ஆரியதேசம் இந்த வகைப்பட்டதுதான். ஆனால் அறிஞர் அண்ணா இந்த திசையை தன் இயக்கத்தின் ஆணிவேராக மிகச்சரியாக அடையாளப் படுத்திக் கொண்டார்.
இந்தியா என்ற ஒரு தேசம் பிறப்பதற்கு முன்பே தமிழர்களுக்கான தேசமும் தமிழ்த்தேச அரசியலும் தமிழ் மண்ணில் இருந்தது என்பதை 2000 வருடத்திற்கு முந்திய சங்க இலக்கியத்திலிருந்தும் மற்றும் இடைக்கால தமிழ்க் காவியங்களிலிருந்தும் எடுத்துக் கொண்டார்.
தமிழனின் சங்க காலத்தைப் பொற்காலமாகவும் தமிழ் மொழியையும் இனத்தையும் அப்பொற்காலத்தின் அடையாளமாகவும் காட்டியதன் மூலம் தமிழ்ச் சமூகத்தின் இளைஞர்கள் உலகத்தில் ஒரு புரட்சியை மிக எளிதாக ஏற்படுத்தினார். இந்தப் புரட்சி விதைகள் காற்றில் கலந்து தமிழ் இலக்கியவெளியில் பல்வேறு வண்ணங்களாக வெளிப்பட்டன.
வானம்பாடி இயக்கத்தினராக - மார்க்சியச் சார்பானவர்களாக வெளிப்பட்ட கவிஞர்களும் திராவிட இயக்கத் தாக்கம் பெற்றவர்களே. அவர்களது கவிதைகளில் எல்லாம் திராவிட இயக்கச் சிந்தனைகள் வெளிப்படுவதைக் காணலாம்.
சான்றாக அப்துல் ரகுமான், முடியரசன், மீரா, புவியரசு, சிற்பி, மேத்தா, தமிழன்பன் போன்றோ ரைக் குறிப்பிட முடியும். தலித் இயக்கங்களின் பேச்சும் எழுத்தும்கூட திராவிட இயக்கத்தின் தாக்கம் பெற்ற ஒன்றாகப் பலசமயங்களில் அமைந்துள்ளது.
பெண்ணிய பெருவெளியில் பெரும்வெடிப்பை ஏற்படுத்திய பெரியார் பெண்ணியம் பெண்ணிய எழுத்துகளின் போக்கைத் தீர்மானித்தன. சாகும் தருவாயில் இருந்த தமிழிசைக்கு உயிரூட்டியவர் பெரியார்தான்.
இப்படியாக திராவிட இயக்கம் சமூக வெளியில் ஏற்படுத்திய மிகப்பெரிய மாற்றங்களும் அரசியலும் செயல்பாடுகளும் இச்சமூகத்தை முன்வைத்து எழுத வந்தவர்களின் எழுத்துகளில் தாக்கத்தை ஏற்படுத்தின.
இயல் இசை இலக்கியம் இவை அனைத்திலும் தமிழை முன்னிலை படுத்திய திராவிட இயக்கத்தின் நாடகத்துறை பங்களிப்பு கலைத்துறையில் மிகவும் முக்கியமானது. கலை வெளிப்பாடுக்காக எழுதப்பட்டு நடிக்கப் பட்டவை அல்ல அவர்களின் நாடகங்கள். ஆனால் நாடகங்களின் முகவரியை மாற்றி எழுதியதில் திராவிட இயக்கம் பெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.
திராவிட இயக்க நாடகங்கள் என்ற கட்டுரையில் வெளி. ரங்கராஜன் சில கருத்துகளை முன் வைக்கிறார்.
நாடகங்களை தூரத்தில் இருந்து பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் சக மனிதனின் பிரச்சினைகளைப் பேசி ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியவை திராவிடர் இயக்க நாடகங்கள். அண்ணாவைப் பின்பற்றி கருணாநிதி, ஏ.வி.பி. ஆசைத்தம்பி, சி.பி. சிற்றரசு போன்ற பல நாடக எழுத்தாளர்கள் உருவாயினர்.
ஆனால் சமூக விமர்சனத்தைத் தவிர இவர்களின் நாடகங்களில் அதிக கற்பனையோ, கலைநயமோ இல்லை. ஆனால், அண்ணாவிடம் ஒருவிதமான பல்நோக்கு பார்வை இருந்தது. இரு வேறுபட்ட இலக்குகள் இருந்தன. லெனினை கொலை செய்ய நிலவிய ஒரு சதி பற்றி `துரோகி கப்லான்' என்ற நாடகமாக எழுதினார்.
ரொம்பவும் திட்டமானதாகவும் கூர்மையாகவும் இருந்தது அந்த நாடகம். சுய சிந்தனையைக் கூண்டில் நிறுத்தி எதிரிகள் வழக்காடுவதாக `ஜனநாயக சர்வாதிகாரி' என்ற நாடகம் எழுதினார்.
இந்திய விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை காங்கிரஸ் அனுமதிப்பதாக உருவக பாணியில் `சகவாச தோசம்' என்ற நாடகத்தை எழுதினார். பெரும்பாலான நாடகங்கள் நேரடித் தன்மை கொண்டிருந்தாலும் ஒரு விஸ்தீரமும் விசாரணையும் அவருடைய நாடகங்களில் பிரதானமாக இருந்தன. “
அண்ணாவின் பாணியைப் பின்பற்றாமல் என்.எஸ். கிருஷ்ணன் நயமான நகைச்சுவை மூலம் சமூக விமர்சனக் கருத்துக்களை வழங்கினார். காந்தியத்தையும் பகுத்தறிவையுன் இணைத்துக் கொண்ட ஒரு போக்கை அவர் நாடகங்களில் காணலாம், அவருடைய நல்லதம்பி இதற்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு.
வேதம், புராணம், பக்தி என்ற பிராம்மணக் கலாச்சாரத்துக்கு மாற்றாக எளிமை, மனிதாபிமானம், சமத்துவம் கொண்ட புதிய தமிழ்க் கலாச்சாரத்துக்கு - மக்கள் கலாச்சாரத்துக்கு என்.எஸ். கிருஷ்ணன் ஆதாரமாக இருந்தார்.
எம்.ஆர். ராதா உருவகப்படுத்திய ஒரு கலகப் பண்பாடு திராவிடர் இயக்கத்தின் இன்னொரு முக்கியமான போக்கு. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நாடக மேடைக்கு ஒரு புதிய அழுத்தத்தை உருவாக்கியவர் அவர்.
தமிழில் முதன்முதலில் தடை செய்யப்பட்டவை எம்.ஆர். ராதாவின் நாடகங்களே. அந்த அளவுக்கு ஒரு கலகக்கார நாடகக்காரராக அவர் விளங்கினார். மிகவும் உண்மையானதும் கசப்புமான யதார்த்தங்களை அவர் எடுத்துக் கூறினார்.
ராமாயணப் பாத்திரங்களை கேலி செய்து அவர் எழுதிய கீமாயணம் நாடகம் தடை செய்யப்பட்டது. தடையை மீறி திருச்சி தேவர் ஹாலில் அந்த நாடகத்தை நிகழ்த்திக் காட்டினார். நாடக மேடையில் ஒருவிதமான பரிசுத்த நாயகர்களையே காட்டிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் தறிகெட்டு அலையும் ஒருவனை நாயகனாக்கி `ரத்தக் கண்ணீரை' உருவாக்கினார்.
ரத்தக் கண்ணீர் நாடகம் தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் நிகழ்த்தப்பட்டது. பெரியாரின் கருத்துக்களுக்கு நாடக வடிவம் கொடுத்து தமிழ்நாடு முழுவதும் சுயமரியாதை பிரச்சாரத்திற்கு ஒரு மதிப்பை அளித்தவர் எம்.ஆர். ராதா. எம்.ஆர். ராதாவைப் பின்பற்றி திருவாரூர் தங்கராசு போன்றவர்களும் நாடகங்கள் நிகழ்த்தினர்.
என்.எஸ். கிருஷ்ணனின் கலை அம்சத்தையும், எம்.ஆர். ராதாவின் கலகப் பண்பாட்டையும்பின்பற்றி பலர் உருவாகாதது திராவிட இயக்கத்தின் ஒரு பெரிய குறைபாடு.
இந்த நாடக உணர்வை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல திராவிட இயக்கம் தவறிவிட்டது. சக மனிதனை முதன்மைப் படுத்துதல், சமூக யதார்த்தம் பற்றிய விமர்சனப் பார்வை ஆகியவை பல்வேறுபட்ட இலக்கியப் போக்குகளை உருவாக்கி இருக்க முடியும்.
ஆனால், தி.மு.க. அரசியலில் தீவிரமாகப் பங்கெடுக்க ஆரம்பித்ததுமே அதன் கலை, இலக்கியக் கண்ணோட்டத்திலும், சமூக விமர்சனப் பார்வையிலும் பெரும் சரிவு ஏற்பட்டது. பகுத்தறிவுக் கருத்துக்களின் பின்னணியில் ஒரு புதிய எதிர்காலச் சமுதாயத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய ஒரு இயக்கம் கடந்த காலப் பெருமைகளில் தன்னை இழக்க ஆரம்பித்தது.
நம்முடைய வரலாற்றையும் இலக்கியங்களையும் பற்றிய அறிவு நிகழ்காலம் பற்றிய புதிய மதிப்பீடுகளுக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால் விமர்சனமற்று வெறும் கடந்த காலத்தைப் பூஜிப்பது மட்டுமே நிகழ்ந்தது.
ஆசாரம், பக்தி என்பதற்கு மாற்றாக அன்பு, சமத்துவம் ஆகியவற்றை முன்நிறுத்த வேண்டியவர்கள் போலித்தனம், கவர்ச்சி இவற்றில் மூழ்கிப் போனார்கள். ஆரம்பகால திராவிட இயக்க உணர்வுகள் நீர்த்துப் போய் சகமனிதனின் வாழ்நிலையும் சமூக யதார்த்தமும் மேடைப்பேச்சுகளில் நீர்த்துப் போனது தான் நடந்திருக்கிறது.
கலை கலைக்காகவே..
கலை மக்களுக்காகவே..
மக்களுடன் கலைகள் பிறந்த காலம் முதல் இந்த இரண்டு பக்கங்களும் இருக்கின்றன. கலை மக்களுக்காகவே என்ற கலை இலக்கியவாதிகள் திராவிட இயக்கத்தின் பங்களிப்பை கொச்சைப்படுத்துவதில்லை.
இந்தப் புள்ளியிலிருந்து தான் மீண்டும் கி.ராவின் நேர்காணலை வாசிக்கும் போது தமிழ் கலை இலக்கியவெளியின் நுண்ணரசியலும் சாதி முகமும் அப்பட்டமாக தெரிகின்றன.
இலக்கியவெளியில் இத்தடைகளை ஊடறுத்து பயணிப்பவர்களை வாழ்த்துவோம்
- புதிய மாதவி மும்பை