இன்றைய காலகட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருவதற்கான பல சான்றுகளைக் கண்டுவருகிறோம். அதில் முதலாவதாக வருமானம் ஈட்டுவதற்கான தேடலில் ஆணுக்கு நிகராகப் பெண்கள் வளர்ந்து வருகின்றனர்.

 “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்ற சான்றோரின் வாக்கினை இன்றைய பெண்கள் பொய்ப்பிக்கும் வகையில் அனைத்துத் துறைகளிலும் வெற்றி பெற்று வருகின்றனர். இதற்குச் சான்றாக, கடந்த மாதம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏவப்பட்ட பி.எஸ் எல்.வி சி-37 ஏவுகணையில் 104 விண்கலன்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்த விஞ்ஞானிகள் குழுவில் எட்டு சாதனையாளர்கள் பெண்களே. இவர்கள் வெற்றி பெற்றதால் மொத்த பெண்கள் சமுதாயமே வெற்றி பெற்றதாகக் கருத இயலாது. காரணம் நம் நாட்டில் இன்னும் அடித்தட்டு நிலையில் பல லட்சம் பெண்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை, கல்வியை இழந்து வாழ்ந்து வருகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் படிப்பதற்காகவும், வேலைக்காகவும் மேலை நாட்டிற்கோ, பெரிய மாநகரங்களுக்கோ சென்று அங்குள்ள நிறுவனத்தில் சேர்ந்து, அங்குள்ளவர்களிடம் பழகுவதும், பேசுவதும் கலாச்சாரச் சீரழிவாகப் பார்க்கப்படுவது ஏன்? பெண் என்பவள் யார்? பெண்ணியம் என்பது என்ன? பெண்களுக்கு சமுதாயத்தில் இன்றைய நிலைமை என்ன? ஒதுக்கப்பட்டிருக்கார்களா? உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கிறதா? அவர்களின் சாதனைகள் அங்கீகாரம் பெற்றுள்ளதா? சாதனையாளர்களை ஆண் சமுதாயம் எப்படிப் பார்க்கிறது? அவர்களை மனதார வாழ்த்தி, அவர்களுக்கு ஊக்கம் அளிக்குமா இந்தச் சமுதாயம்? இல்லை, அவர்கள் சமுதாயக் கலாச்சாரத்திற்குக் கேடு செய்கிறார்கள் என்று முடக்கிடுமா?

சமுதாயம் என்பது ஒரு நாணயம் போன்றது. இருபாலரும் சமமாக மதிக்கப்பட்டால்தான், ஒன்றாக இருந்தால்தான் அந்த நாணயம் மதிப்பு பெற்றதாக இருக்க முடியும். எம்போன்ற கல்லூரிப் பெண்கள் சமமான தோழர்களுடன் பேசுவது தவறு. இன்னும் உடைதான் கலாச்சாரச் சீரழிவிற்குக் காரணம் என்றும், மாலை 6 மணி தான் விதிக்கப்பட்ட காலம் என்றும் கூறுகின்றனர். இராசாளி போல் பறக்க நினைக்கும் எம்மை கிளி என்று அடைத்து வைப்பது நியாயமா?

‘கற்பு’ என்ற சொல் ஏன் இந்த வளரும் நிலையிலும் பெண்களுக்கு மட்டுமே வகுக்கப் பட்டிருக்கிறது. இது ஆண்களுக்கும் சம்பந்தம் உடையது தானே? பெண்களை மாலை வேளையிலே வீட்டிற்குச் சென்றிட வேண்டும் என்று கூறும் சமூக சீர்திருத்தவாதிகளே! ஆண்களிடம் பெண்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்றும், பெண்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஏன் அறிவுறுத்தவில்லை?

“மனிதி வெளியே வா;

மனிதன் என்ற சொல்லுக்குள்ளே அடங்காத பெண்ணே;

உயரம் என்பது உன்னுடையதே”

என்ற பாடல் வரிகளுக்கேற்ப பெண் என்பவள் இருக்க வேண்டும்.

வன்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் சொந்தமாகும். பெண் என்பவளுக்கு அமைதியும், அதிகாரமும் உண்டு.இதனை ஆண் சமூகத்தினர் ஒப்புக்கொண்டு அவர்களின் முன்னேற்றப் பாதைக்கு வித்திட்டு நல்லதொரு சமுதாயம் உருவாகப் பாடுபட வேண்டும்.

Pin It