1.

மோனத் தவத்தில் எப்பவுமிருந்தாய்

உலகம் உய்விக்கப் போவதாய்

காவலிருந்த பூதகணங்கள் சொல்லித் திரிந்தன

நீளுகின்ற தவத்தில்

யாருக்கும் பயனின்றி

ஒரு நாள் எல்லார்

பார்வையிலிருந்தும் மறைந்து போனாய்

 

காற்றில் கலந்து போன ஆண்பாலை

என்னில் உயிர்த்துக் கொள்ள வேண்டி வர

சக்தியின் பாதியில் சிவன்கள் முளைக்கின்றன

அழித்தலுக்காய் உனைத் தேடி திரிந்தவர்கள்

என்னில் பாதியை நீ சுமந்திருப்பதாக

பிதற்றித் திரிகின்றார்கள்

 

தலை மாற்றியே வாசித்து

பழக்கப்பட்ட கூட்டம்

அர்த்த நாரி என்பதைக் கூட

உன்னில் நானென்றே சொல்ல

நானோ இருபாலுமாகி

விசுவரூபமெடுக்கின்றேன்

 

நெருப்பில் சாம்பலாகிக் கரைகின்றாய்

கார்த்திகைக் குளத்தில்

உருவாகவே முடியாதபடிக்கு

 

 

2.

நீ விரும்பிய போது தேரோட்டியாகி

வலுவேறின என் தோள்கள்

 

ஆணாகுதலும் பெண்ணாகுதலும்

கூடு விட்டு கூடு பாய்தலாய்

நிகழ்த்திக் கொண்டிருந்தேன

நீ தட்டேந்தி காசையும்

குரலேந்தி கரவொலியினையும்

பெற்றுப் போனாய்

 

உனக்கான ஆணாயும்

உனக்கான பெண்ணாயும்

எப்பவும் மாற முடிகிறதென்பது

உணர்ந்த போது

எனக்கான ஆணாய் மாறினேன்

 

சிவ சக்தி என்று நீ

பாதி இடம் தந்ததாய் கன்னத்தில்

இட்டுக் கொள்ளும்

கூட்டம்

- ம. திலகபாமா

Pin It