இந்து சமய அறநிலையக் கொடைகள் திருத்தச் சட்டத்தின் மீது, முதல்வர் கலைஞர் சட்டசபையில் நிகழ்த்திய, இன உணர்வு மிக்க உரை.

சட்டப் பேரவையில் முதல்வர் கலைஞர் இந்து சமய அறநிலையக் கொடைகள் திருத்தச் சட்டத்தின் 8வது பிரிவைக் கைவிடுவது பற்றி ஆற்றிய உரை வருமாறு:-

"தமிழகத்திலுள்ள இந்துத் திருக்கோயில்களில் அனைத்துச் சாதியினரையும், சாதி வேறுபாடின்றி அர்ச்சகராக நியமிக்க வழி கோல வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம் - 2002 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் இது தொடர்பாக வழங்கியுள்ள தீர்ப்பினையும், அரசு தலைமை வழக்கறிஞரின் கருத்துரையையும் விரிவாகப் பரிசீலனை செய்து - இந்துக்களின் உரிய பயிற்சியும், தகுதிகளும் உள்ள அனைத்துச் சாதியினரும் தமிழ்நாட்டிலுள்ள இந்து சமயத் திருக்கோயில்களில் அர்ச்சகர் ஆகலாம் என்று அரசு முடிவு செய்து, 23.5.2006 அன்று, அதற்கான ஆணையை வெளியிட்டது.

இந்த அரசாணையை சிறப்பாகச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக - பயிற்சிக்கானப் பாடத் திட்டம், பயிற்சியாளர்களுக்கான அடிப்படை கல்வித் தகுதி, வயது, பயிற்சிகால வரையறை, எத்தனை இடங்களில் பயிற்சி நிலையங்களை அமைப்பது போன்ற அம்சங்களின் மீது கொள்கை ரீதியாக முடிவெடுப்பதற்காக சென்னை உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திரு.ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையில் உயர் நிலைக் குழு ஒன்று 10.6.2006 அன்று அமைக்கப்பட்டு இந்தக் குழு செயல்படத் தொடங்கிய நாளிலிருந்து இரண்டு மாதக் காலத்திற்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டது. 23.5.2006 அன்று வெளியிடப்பட்ட அரசாணை, 12.6.2006 அன்று தமிழ்நாடு அரசிதழிலும் பிரத்தியேகமாக அறிவிக்கை செய்யப்பட்டது. அனைத்துச் சாதியினரும் திருக்கோயில்களில் அர்ச்சகர்களாக அமர்த்தப்படுவதற்கு வழக்கமோ அல்லது வழக்காறோ இடையூறாக இருந்திடக் கூடாது என்ற கருத்தில் - 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டத்தின் 55வது பிரிவை தக்கவாறு திருத்துவதென்று முடிவு செய்யப்பட்டு அவசரச் சட்டம் ஒன்று 16.7.2006 அன்று வெளியிடப்பட்டது.

இந்த அவசரச் சட்டத்தை, சட்டமாக்குகின்ற வகையில் 12.8.2006 அன்று சட்ட முன் வடிவு, தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சட்டமன்றத்திலுள்ள பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்ட முன் வடிவினை ஏற்றுக் கொண்டன.

இதற்கிடையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சக ராவதற்கேதுவான அவசரச் சட்டத்தின் ஒரு பிரிவினை மட்டும் எதிர்த்து ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச் சங்கமும், தென்னிந்திய திருக்கோயில் அர்ச்சகர்கள் பரிபாலன சபையும் உயர்நீதி மன்றத்தில் உரிய முறையில் முறையீடு செய்யாமல், நேரடியாக உச்சநீதிமன்றத் திலேயே வழக்கு தொடுத்தனர்.

14.8.2006 அன்று உச்சநீதி மன்றம் தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டப் பிரிவு 8 அதாவது அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள் ஆவதற்கு வழக்கமோ அல்லது வழக்காறோ இடையூறாக இருந்திடக் கூடாது என்ற இந்தப் பிரிவுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்தும், பதில் மனு தாக்கல் செய்வதற்கு ஆறு வார கால அவகாசம் கொடுத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து சமயத் திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்ட போதும், உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடுத்து தமிழில் பக்தர்கள் அர்ச்சனை செய்ய வேண்டுமென்று விரும்பும்போது மட்டும் தமிழிலே அர்ச்சனை செய்வதற்கான வசதியை செய்து தரலாமென்று 1992 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

1971 ஆம் ஆண்டு தமிழக அரசு இந்து சமயத் திருக்கோயில்களில் பரம்பரை முறையில் இல்லாமல் தகுதியுள்ளவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க வழி வகை செய்து சட்டம் இயற்றியபோது, அப்போதும் உச்சநீதிமன்றம் வரை வழக்கு எடுத்துச் செல்லப்பட்டு, உச்சநீதிமன்றம் தமிழக அரசின் சட்டம் செல்லுபடியாகும் என்று 1972 இல் தீர்ப்பு அளித்தது.

உச்சநீதிமன்றம் 1972 இல் அளித்த தீர்ப்பிலும் 2002 இல் அளித்த தீர்ப்பிலும் மதத்தைப் பற்றி குறிப்பிடுகிறதே தவிர, சாதியைப் பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. மறைந்த எல்.இளைய பெருமாள் அவர்கள் தலைமையில் மத்திய அரசு நியமித்த தீண்டாமை ஒழிப்பு ஆணையம் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக உரிமை வேண்டும் என்ற பரிந்துரையை செய்திருந்தது. அதைப் போலவே நீதியரசர் மகராசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக ஆகம விதிகள் தடை செய்யவில்லை என்றும் உரிய பயிற்சியளித்து அவர்களை அர்ச்சகர்களாக ஆக்கலாம் என்றும் பரிந்துரைத்திருந்தது.

இந்தப் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கான வழி முறைகளை நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்கள் தலைமையிலான ஆணையம் ஆய்வு செய்து அதற்கான திட்டங்களையும் பாடங்களையும் பட்டியலிட்டு அரசுக்கு அளித்திருந்தது. அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கேரள மாநிலம் தொடர்பான வழக்கு ஒன்றில் இந்திய உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் துரைசாமி ராஜூ, ராஜேந்திர பாபு ஆகியோர் மிகத் தெளிவான தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளார்கள். இந்து சமயத்தைச் சார்ந்த எவரும் சாதி வேறுபாடு இல்லாமல் அர்ச்சகர் ஆகலாம் என்ற தீர்ப்பினை அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலே தான் தற்பொழுது நாம் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்ய ஆணை வழங்கியுள்ளோம். சாதி முறை என்ற பிறவி இழிவைப் போக்கவும், தீண்டாமையை அடியோடு ஒழிக்கவும், சமூக நீதியை நிலைநாட்டவும், நாம் முயற்சி செய்யும் போதெல்லாம் ஒரு பிரிவினர் முட்டுக்கட்டை போடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனினும் நாம் இடையறாது போராடி அந்த முட்டுக்கட்டைகளை உடைத்தெறிந்து நமது இலட்சியங்களை நிலைநாட்டியுள்ளோம்.

ஆலயங்களுக்குள் செல்லவே அனுமதி மறுக்கப்பட்ட நிலையும், சிலர் வசிக்கும் தெருவிலே ஆடுமாடுகள் நடமாடலாம். ஆனால் சாதியால் பிரிக்கப்பட்டவர் நடமாடக் கூடாது என்றிருந்த நிலையும், தாய்மார்கள் மேலாடை அணியக் கூட கூடாது என்ற நிலையிலும், ஆடவர்கள் மேல் துண்டு போடக் கூடாது. கால்களிலே செருப்பு அணியக் கூடாது. டீக்கடைகளில், அலுவலகங்களில், பள்ளிகளில் தனித்தனி பாத்திரங்கள் என்ற கொடுமைகளிலிருந்து விடுபட்ட தமிழகம், இன்னமும் முழு விடுதலை பெறாத நிலை இருப்பதைத்தான் தற்போதுள்ள சூழ்நிலைகள் நமக்குத் தெளிவாக்குகின்றன.

“வேத காலத்தில் பிறப்பால் சாதி எதுவும் இல்லை என்றும், ரிக் வேத மக்கள் அனைவரும் ஒரே வகுப்பைச் சார்ந்தவர்கள் என்றும்; வேத காலத்தில் சமுதாய இடப் பெயர்வு இருந்தது என்றும்; மிகப் பிற்காலத்தில்தான் அவரவர் மேற்கொண்டு வந்த தொழில்கள் இன்றைய அருவருக்கத்தக்க சாதிகள் எனும் வடிவத்தைப் பெற்றன என்றும்; பண்டித நேரு அவர்கள் உறுதிபடக் கூறியிருக்கிறார்.”

இவ்வாறு வேதங்களே பிறப்பால் சாதி எதுவும் இல்லையென்றும், அனை வரும் சமம் என்றும் உறுதியாக சொல்லி விட்டதற்குப் பிறகும்,வேதங்களின் பெயரால் இன்றைய விஞ்ஞான யுகத்திலும் கூட சாதிப் பிரிவினைகள் பேசப்படுவதும், மேல் சாதி - கீழ் சாதி என்று வேறுபடுத்தப்படுவதும்; ஒரு சாதியினர் செய்யக்கூடிய அர்ச்சகர் பணியை மற்றொரு சாதியினர் செய்யக் கூடாது என்று தடுப்பதும்; இந்தக் கொடுமை களுக்கு எல்லாம் சட்ட அங்கீகாரம் தேடுவதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்பது நமக்கெல்லாம் மிகுந்த வேதனை தரக்கூடிய செய்தியாகும்.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்வதற்கு ஏதுவாக இந்து சமய அறநிலையச் சட்டத்தில் திருத்தம் செய்து அவசரச் சட்டம் இயற்றியதை எதிர்த்து இந்திய உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த சட்டத் திருத்தத்திற்கு தடையாணை விதித்து இடைக்கால தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இடைக்காலத் தீர்ப்பெனினும் இதனை ஏற்று, சட்டத்தின் ஆட்சி தொடர்ந்து மேலோங்கி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ள குறிப்பிட்ட இந்தச் சட்டத் திருத்தத்தை, நீதிக்குத் தலைவணங்கு என்ற அடிப்படையில், அதாவது, அவசரச் சட்டம் 5/2006-ல் பிரிவு 8 ஐ நீக்கி விடுவதென்று அரசு முடிவு செய்துள்ளது.

அந்த முடிவினை ஒட்டி திருத்தச் சட்ட முன் வடிவை நிறைவேற்றிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இந்திய அரசியல் சாசனத்தின் 25-வது பிரிவில், சமுதாய நலனைக் கருதியும், சமுதாய மறுமலர்ச்சியை உருவாக்கிடவும் உரிய சட்டம் கொண்டு வர அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் உரிய முறையில் நிலைநாட்டப் படவும், அந்த உரிமைகளின் பலன்களை அனைத்து சாதியினரும் அனுபவித்திடவும் தொடர்ந்து நாம் முயற்சிகளை மேற்கொள்வோம்.

அனைத்துச் சாதியினரும் எந்தவித வேறுபாடுமின்றி இந்து சமய ஆலயங்களில் அர்ச்சகராகப் பணியாற்றுவதற்கு இடர் எதுவும் ஏற்படுமானால் அதனைக் களைந்து நமது இலட்சியத்தை நோக்கிய பயணம் தொடர்ந்து நடைபெறும்.

அரசியல் சாசனத்தை நமக்கு வடித்துத் தந்த சிற்பிகளில் தலைமைச் சிற்பியான அண்ணல் டாக்டர் அம்பேத்கர் கண்ட கனவை நனவாக்கிட ஒல்லும் வகையெல்லாம் நாம் தொடர்ந்து உழைத்திடுவோம். அனைத்து இந்தியாவையும் கவர்ந்த கழகத் தேர்தல் அறிக்கையிலே சொல்லப்பட்டுள்ள உறுதிமொழிகளில் பெரும்பாலானவற்றை மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றி வரும் இந்த அரசு, இந்து சாதியினர் அனைவரும் எந்தவித வேறுபாடுமின்றி இந்து சமயத் திருக்கோயில்களில் அர்ச்சகர்களாகப் பணியாற்ற வேண்டும் என்ற நமது நீண்டநாள் கனவு நிறைவேறுவதை எண்ணியும், தந்தை பெரியார் நடத்திய சமுதாயப் புரட்சியில் ஒரு அத்தியாயம் இது எனினும், இன்னும் பல படிக்கட்டுகளைக் கடந்திட, இது பயன்படட்டும் என்ற நம்பிக்கையுடனும் நடைபோடுவோம்."

அர்ச்சகர் சட்டம் : மக்கள் மன்றத்தின் அய்யங்கள்!

கடந்த ஆகஸ்டு 21 ஆம் தேதி இந்து சமயம் அறநிலையக் கொடைகள் திருத்தச் சட்டம் நிறைவேறியது. ஏற்கனவே அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதற்கான அவசரச் சட்டத்தை, ஆளுநர் உத்தரவு வழியாக, தமிழக அரசு பிறப்பித்திருந்தது. அந்த அவசரச் சட்டத்துக்கு - சட்டப் பேரவை வழியாக அங்கீகாரம் தரவேண்டும் என்ற நடைமுறையின் கீழ் - சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு - பிறகு, தீர்மானமாக நிறைவேறியிருக்கிறது. இதற்கிடையே - அவசரச் சட்டத்தின் 8 ஆவது பிரிவுக்கு எதிராக - பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரவே, உச்சநீதிமன்றம் 8வது பிரிவுக்கு இடைக்காலத் தடை விதித்து, தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பியது.

“அனைத்து சாதியினரும் திருக்கோயில்களில் அர்ச்சகர்களாக அமர்த்தப்படுவதற்கு வழக்கமோ அல்லது வழக்காறோ (Custom of Usage) இடையூறாக இருந்திடக் கூடாது” என்ற பிரிவுக்குத்தான் இப்போது உச்சநீதி மன்றம், இடைக்காலத் தடை விதித்துள்ளது. எனவே - இந்தப் பகுதியை நீக்கிவிட்டு, தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது.

இந்தப் பகுதியை நீக்கியிருப்பதன் மூலம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம், முடங்கிவிட்டதா? அது செயல்படுத்தப்படுமா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சட்டமன்றத்தில் - இதுபற்றி கலைஞர் உரையில் தெரிவித்த இன உணர்வுக் கருத்துகள் மிகவும் சிறப்பானது என்பதால், அந்த உரையை இங்கு பதிவு செய்திருக்கிறோம். அதே நேரத்தில், 8வது பிரிவு நீக்கப்பட்டுள்ளதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி மக்களுக்கு தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

அத்துடன், ஆகமப் பயிற்சிப் பள்ளி உருவாக்கி, அதில் முறையான பயிற்சி பெற்றவர்கள் தான் அர்ச்சகராக முடியும் என்ற நிலையில், ஏற்கனவே முறையான பயிற்சிகள் பெறாமல் பிறப்பின் அடிப்படையில் அர்ச்சகர்களாக இருப்பவர்கள், தொடர்ந்து அப்பதவியில் எப்படி நீடிக்க முடியும்? அவர்களை பதவி நீக்கம் செய்தாக வேண்டும். அப்போது தான் - பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராக நியமனம் பெற முடியும். இந்த நடைமுறைகள் குறித்தும், அரசு உரிய விளக்கம் தர வேண்டியது அவசியமாகும் என்று வற்புறுத்துகிறோம்.

Pin It