இலக்கிய விழா என்றாலே இறுகிய முகத்தோடு தான் இருக்க வேண்டுமா என்ன... இளகிய இதயத்தோடும் இருக்கலாம் தானே.

யார் வேணாலும் யார்கிட்ட வேணாலும் பேசி சிரிக்கலாம் தானே.. அன்பை பரிமாறிக் கொள்ளலாம் தானே...

நான் பெரிய கொம்பு.. நானா போய் பேச மாட்டேன்... அவுங்களா வந்து பேசினா... அப்போது தான் பார்த்த மாதிரி டக்கென்று மூஞ்சியை மாத்திக் கொண்டு இன்ஸ்டன் சிரிப்பு சிரித்து மழுப்பவது....எப்போதும் கற்பனை உலகத்தில் இருந்து கொண்டு ஒரு கிலோ வெங்காயம் என்ன விலைன்னு கூட தெரியாம.........எனக்கு இமேஜ் இருக்கு... எனக்கு டேமேஜ் இருக்குன்னு- இப்படி ஒரு வெங்காயமும் இல்லை. எல்லாரும் எல்லாருக்கும் பொதுவாக.. எல்லாரும் எல்லாரையும் மதிப்பது. இலக்கியம் ஒரு வகையில் கூட்டு முயற்சி. அன்பின் மீட்டெடுத்தல். கூடி கொண்டாட்டம் செய்வது. அவரவர் திறமைகளை பொதுவில் வைத்து நல்லது கெட்டது உணர்ந்து கொள்வது... இது தான் இங்கே நிகழ்ந்தது.

மிதமான பொன்னிற நிலவில் மெல்ல மெல்ல கால் எடுத்து வைப்பது போல அத்தனை இலகுவாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் "தோழர் ரத்தினசாமி" அவர்கள். எந்த வித தோரணையும் இல்லை. எந்த வித தோற்ற மயக்கமும் இல்லை. என்ன எதுவோ அது தான் அது என்பது தான்..அவரின் உடல்மொழி. மிக தெளிவாக நேரத்தை முடிந்தளவு கட்டுக்குள் வைத்துக் கொண்டிருந்தார்.

முதல் நூல்: வெளி தேடும் சொற்கள்.

"அம்பிகா குமரன்" அவர்களின் முதல் கவிதை நூல். மரபிலும் புதுமை சொல்லும் இவரின் நூலை... இவரின் நண்பர்..."சத்தியசீலன்" அவர்கள் அறிமுகப் படுத்தினார். அலட்டல் இல்லாத அழகிய உரை. ஆரம்ப கட்ட பேச்சாளராக இருப்பதால் கொஞ்சம் நினைவில் இருந்தும் கொஞ்சம் எழுதியதில் இருந்தும்.....ஆனால்.. நம்பிக்கை சார்ந்து இருந்தது உரை. அம்பிகா குமரன் மரபும் எழுதுவார் என்று இவர் பேச்சில் இருந்து தான் தெரிந்தது. மரபு மீது மீரா காதல் இருந்தாலும்... கொஞ்சம் பழைய பயம் என்னுள் இருக்கிறது. அதைத் தகர்க்க வேண்டும் என்று இவரைக் கண்ட பிறகு உத்வேகம் வந்திருக்கிறது.

தனக்கு நிறைய சொல்லிக் கொடுத்து... அதன் அடுத்த கட்ட நகர்வாக தன் நூலை அறிமுகம் செய்யும் வாய்ப்பையும் தனக்கு தந்ததாக தன் குருவைப் பற்றி சத்தியசீலன் சொன்னது நெகிழ்வு. கூட இருப்பவர்களுக்கு நாம் தாம் ஏணிப்படியாக இருக்க முடியும். இருக்க வேண்டும். சொற்களோடு மட்டும் நிற்காமல் வெளி தேடவும் செய்த அம்பிகா குமரன் அவர்கள்.. ஏற்புரையில்... மிக லாவகமாக மேடையை தனதாக்கிக் கொள்ளும் உடல்மொழியை கொண்டிருந்தார். மேடைப் பேச்சு சற்று பிசகினாலும் கோணல் மாணல் கதையாகி விடும் என அறிந்ததால் பிசிறடிக்காத சொற்களால் வாக்கியம் செய்து மேடையில் நடைபயில வைத்த இவர் ஏற்புரையை மெச்சத்தான் வேண்டும்.. வாழ்த்துக்கள்.

அடுத்த நூல் நம்ம "கோ லீலா" அவர்களின் : மறைநீர்.

இந்த நூலைப் பற்றி நான் ஏற்கனவே கட்டுரை எழுதி விட்டதால்.. இவரை விட இந்த நூலில் என்னென்ன இருக்கிறது என்று எனக்கு தெரியும். மேடையிலே இந்த நூலை நான் எழுதி இருக்க வேண்டும்.... நீங்க எழுதியது கொஞ்சம் பொறாமை தான் என்றே சொல்லி விட்டேன். அத்தனை அவசியமாக இருக்கும் இந்த நூலில் இருக்கும் செய்திகள் மனதளவில் மிக பெரிய பயத்தை என்னுள் விதைத்தது என்றால் அது நிஜம். நிஜமும் அது சார்ந்த நித்தியமும்....சதா தொந்தரவு செய்தபடியே இருந்த..... சொட்டுதல்களின் நிமித்தம்.. மறைநூலை மிக கவனமாக மனதுக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டும். காலத்துக்குமான ஒரு நூல். இது. காலத்தேவைக்கான நூல்.

நூலைப் பற்றி பேசிய "பெண்சிங்கம் சாய்ரா பானு" அவர்கள்.. ஏற்கனவே எனக்கு பழக்கம் என்பதால் மிக எளிதாக முதல் வணக்கத்தை முதல் கை குலுக்கலை அவரிடம் பெற முடிந்தது. அதே தன்னம்பிக்கை.... அதே சொல் விளையாட்டு...... அதே துடுக்குத்தனம்.... நான்கு பக்களில் மறை நீரை பாய்ச்சி தன் ஸ்டைலில் அதகளம் செய்தது ஆஸம்.

ஒரு கட்டத்தில் துருவன் பாலா சார் காலத் தேவையான ஒரு அரசியல் கேள்வியை முன் வைக்க அரங்கம் கிட்டத்தட்ட ஒரு விவாதத்துக்குள் போனது. ஆனால்.. தொகுப்பாளர் நிலைமையை புரிந்து கொண்டு அதோடு அந்த நூலின் நிகழ்வை முடித்துக் கொண்டு... ஆனாலும் லீலா அவர்களின் பதில்கள்.. மிக நேரடியாக உண்மைக்கு அருகாமையில் இருந்ததை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அதே நேரம் துருவன் பாலா சார் கேட்ட கேள்வியின் முக்கோணம்.... சாட்டையடியின் வசம் என்பதையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து துபாயில் இருந்து வந்திருந்த தோழி "ஸ்ரீ" அவர்களின் தமிழ் சார்ந்த அனுபவங்களை எடுத்து வைத்தார். வறுமை எப்படி தன் வாழ்நாளில் பெருமையாக மாறியது என்றும் அதற்கு தமிழ் எவ்விதம் உதவியது என்றும்..... இப்போது தமிழ் சார்ந்து தன் இயக்கங்கள் குறித்தும் முகம் நிறைய பேசினார்.

சில கருத்துக்களில் முரண்பாடு இருந்தாலும்.. ஒரு தமிழ் குழந்தையின் குதூகலத்தை அவர் கண்களில் காண முடிந்தது. தமிழ் பேய் பிடித்தால் தான் அல்லது தமிழ் சாமி பிடித்தால் தான்.. இப்படி தனியாக எங்கு வேண்டுமானாலும் வந்து தமிழ் பற்றி பேச இயலும். கேட்க இயலும். அந்த வகையில் அவரின் ஆர்வத்தையும் சேவையையும் நாம் பாராட்ட வேண்டும்.

கிட்டத்தட்ட விழா முடியும் நேரம்... அடுத்து இருப்பது எனது நூல் "நிழல் தேசத்துக்காரனின் சித்திர பறவைகள்" மட்டும் தான். பேசப் போவதோ வயதில்......அனுபவத்தில் ரெம்ப குறைவாக இருக்கும் "முத்துமீனாட்சி" அவர்கள். எப்படி பேசப் போகிறார்களோ.. சரி பேசி முடித்தால் கிளம்பலாம் என்ற மனோபாவனை தான் எனக்கு.

இந்த நூல் எனது முதல் நாள் இதற்கு பின் மூன்று நூல்கள் வந்து அதற்கான அங்கீகாரத்தை ஓரளவு பெற்று விட்ட போதிலும்.. இந்த முதல் நூல் அது வெளி வந்த கால கட்டத்தில் (4 வருடங்களுக்கு முன் ) அதற்கான அங்கீகாரத்தை பெறவில்லை. படித்த பெரிய மேதாவி அறிவாளிகள் இந்த நூல் புரியவில்லை என்று சொல்லி கை விட்டு விட்டார்கள். அவர்களுக்கு கை விட ஒரு காரணம் வேண்டும் என்று எப்போதோ உணர்ந்தது தான்.... இப்போது புரிந்தது.

மீனாட்சி பேச ஆரம்பித்த பிறகு நூல் பற்றிய அறிமுக உரை ஜெட் வேகத்தில் டேக் ஆப் ஆனது. கிரிக்கெட்டில் கடைசி நேர ஆட்டத்தை மாற்றி விடுவாரே யூசுப் பதான். அப்படி ஒரு அட்டகாசம். சின்னவங்க பெரியவங்க என்றெல்லாம் ஒன்றுமில்லை. அவரின் ஆழமான நுட்பமான உள்வாங்கும் வெளிப்படுத்தும் அறிவு எப்படி என்று தான் பார்க்க வேண்டும் என்று மீனாட்சியிடம் இருந்து ஒரு பாடம் கண்டேன். எடுத்துக் கொண்ட எல்லா கவிதைகளிலும் நான் எழுதும் போது என்ன ஆழத்தில் இருந்ததோ அதில் துளியும் குறைய விடாமல்.... சும்மா போட்டு வாங்குவதென்பது நிகழ்ந்தது. ஒரு நிகழ்த்துக் கலையை மீனாட்சி நிகழ்த்தியதை ஒரு மேஜிக் போல தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அசராமல் அடித்துக் கொண்டே போவது அதுவும் சிரித்த முகத்தோடு மெய் சிலிர்ப்பு..

இந்த நூலுக்கு முதன் முறையாக மிகச்சிறந்த அங்கீகாரம் இது. நல்ல சரக்கு காலம் கடந்து விலை போகும். என்னைத் தாண்டி என்னைத் தெரியாத ஒருவருக்கு மிக துல்லியமாக என் கவிதை நூல் சென்று சேர்ந்திருப்பது மனநிறைவு. மீனாட்சி தன் அப்பா அம்மாவுடன் விழாவுக்கு வந்திருந்தது அழகியல்.

பொதுவாகவே ஏற்புரையில் விருப்பம் இல்லாதவன் நான். எழுதுபவனைக் கூட்டி போய் பேசு பேசு என்றால் என்ன பேசுவது. மேடையில் பேசி ஏதாவது வம்பை விலைக்கு வாங்கி விடுவேனோ என்ற பயம் இருப்பதால் எழுதி வைத்துக் கொண்டு ட்ரேக் மாறாமல் பேசி விட்டு வந்து விடுவேன். ஆனால்.. மீனாட்சி கொடுத்த தைரியம்.. எழுதி வைத்திருந்ததை தாண்டி மிக இயல்பாக நண்பர்களிடம் பேசுவது போல பேச முடிந்தது. அதை கூட்டமும் கவனித்து அங்கீகரித்தது.....கனம் குறைந்த மனநிறைவு. என் ஆசான் அகன் ஐயாவுக்கு நன்றி கூற ஒரு வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன்.

ஒரு கை தேர்ந்த புகைப்படக்காரர் என்பது "விஷாகன்" அவர்கள் உடல் மொழியிலேயே நான் உணர்ந்து கொண்டேன்.

இதற்கெல்லாம் காரணமாக இருந்த "மருத்துவர் கவிஞர் செல்லம் ரகு" சார்க்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும். இப்படி ஒரு கூட்டத்தை நடத்துவதெல்லாம் சிக்கல் நிறைந்த ஒன்று. எல்லாவற்றையும் மிக அழகாக ஒருங்கிணைத்து.....எழுத்தாளனுக்கு செய்ய வேண்டிய மரியாதையை செய்து... விருது கொடுத்து...... அனுப்பி வைத்த... அந்த மேன்மையான குணம்.. மெச்சத்தக்கது. நன்றி சார்.

துருவன் பாலா சாருக்கும் குமரன் சாருக்கும் தனிப் பட்ட முறையில் எனது நன்றிகள். அன்புகள். எப்போதும் என்னோடு இருக்கும் என் நண்பன் கமல்- க்கு அன்பு.

தம்பி காதலாரா....... டியர் சேகுவேரா சுகன் உள்பட கவிதை வாசித்த நண்பர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

தளிர் இலக்கிய களம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடைக்கும் அது சார்ந்த அனைவர்க்கும் மனமார்ந்த நன்றிகள். வந்திருந்த தோழர்கள் அனைவர்க்கும் மனம் கனிந்த நன்றிகள். அன்புகள்.

மீண்டும் மீண்டும் புரிந்து கொள்வது இதுதான். இலக்கிய கொம்பு என்று ஒன்றும் இல்லை. தொடர்ந்து படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்பது தான் நாமாக இருப்பதற்கான இயல்பான வாழ்வியல் முறை.

அந்த நிழல் தேசத்துக்காரன் என்பவன் ரகசியம் என்று மீனாட்சி சொன்னது எத்தனை நிஜம் என்று ஒரு ரகசியனாகவே உணர்ந்து பார்க்கிறேன். சித்திர பறவைகள் சிறகடிக்க ஆரம்பிக்கின்றன.

- கவிஜி

Pin It