ஏழு கடல்
ஏழு மலை தாண்டியே
நீயும் வருகிறாய்
இந்தக் கிளிப் பேச்சு கேட்கத்தான்
எத்தனை மும்முரம்
காதலின் கடைசி சொட்டு வரை
பருகி விடும்
உன் தொட்டிச் செடி நினைப்பின்
உருவம் நான்
இன்புற்றுத் தழுவ
இதயம் பெயர்த்து வரும்
ஈரக்காற்று நீ
எனக்குள் இருக்கும் பாறையை
சிரித்தே சிற்பமாக்குகிறாய்
உனக்குள் இருக்கும்
தூரிகை முழுக்க மயிலிறகு
அத்தனை வகை முத்தங்களையும்
உதிர்த்து விடும் முத்த மரம் நீ
நிழல் தேசத்தில் இருந்தும்
எழுந்து வருகிறேன்
வெறுங்கையிலும் மருதாணி வாசம்
தரமுடிகிறது உன்னால்
சரம் சரமாய் சாயங்கால வேளை
மடி சாய்கிறது
அன்பின் சூட்டை
ஆலிங்கனத்தில் காட்டுகிறாய்
சிரிக்க சிரிக்க அவிழும்
உனைத்தான்
செரிக்க செரிக்கத் தின்னுகிறேன்
இருவரின் ஆகாயமும்
இணைந்து இளைப்பாறுகிறது
இப்போது நம் திசைகளில்
கோடி சிறகுகள்
கொண்டை ஊசி வளைவுகள்
நட்சத்திரம் பூக்கும் நேரம்
கிளம்புகிறாய்
உன்னை விட்டு
என்னை எடுத்துப் போவது
இம்முறையும் நிகழ்கிறது...!
- கவிஜி