”கள்ளம் கபடமற்ற நிலையில் எழுத்தைக் கையாளும் நிலைமை இனியும் சாத்தியமில்லை. தற்காலத்தின் ஒவ்வொரு எழுத்தாளனையும் கடந்த காலம் கட்டுப்படுத்துகிறது. பலநேரங்களில் பயமுறுத்திக் கொள்ளையடிக்கிறது. இதிலிருந்து விடுபட வேண்டுமானால் புது எழுத்து முயற்சியில் ஈடுபடும் இன்றையக் கவிஞன் ஒர் எழுத்து வன்முறையாளனாக மாற வேண்டிய அவசியம் நேர்கிறது” - கவிஞர் இந்திரன் (நெருப்பில் காய்ச்சிய பறை – முன்னுரை)
முதலியேயே டாக்டர் அகவியைப் பாராட்டிவிட வேண்டும்.
‘தலித் கவிதையியல்’ என்கிற வலிமையானக் கருத்தாயுதம் ஒன்றினை இலக்கு வைத்து எளிய மொழியில் தந்ததற்காக.வழக்கமான ஆய்வுமொழி நாமறிந்ததுதானே. மொழியின் அடர்ந்த கானகத்துக்குள்ளிருக்கும் குகையுள்ளிருந்து கொணர்ந்த திருகலான மொழியின் மீது விளக்கெண்ணெய் விட்டு காலிப்ளவர் தூவிப் பிசைந்த ‘கொசகொச’வென வாசகனின் குரல்வளை நெறிக்கும் கல்விப்புல இருண்மையிலிருந்து வாசிப்பவனுக்கு விடுதலை வாங்கித் தந்துள்ளார் அகவி.
தலித் கவிதைகளில் விடுதலைக்கூறுகள் என்கிற முனைவர் பட்ட ஆய்வேடே ‘தலித் கவிதையியல்’ என்ற நூlலாக வாசகனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
- தலித்தியக் கவிதையியல் ஓர் அறிமுகம்
- அநீதி ஒடுக்குமுறைகளைக் கட்டுடைக்கும் தலித்தியக் கவிதைகள்
- தலித்தியக் கவிதைகளில் வாழ்வியல் பதிவுகள்
- தலித்தியக் கவிதைகளில் விடுதலைக் கூறுகள் –
என நான்கு இயல்களாக இந்நூல் பகுக்கப்பட்டுள்ளதில் வேறு வேறு தலைப்பு களிலானக் கவிதைகளும் அகவியின் கருத்துக்களும் வித்யாசமான வாசக அனுபவத்தை தருகின்றன. 1991 இல் தொடங்கி 2008 வரை வெளிவந்துள்ள தலித் கவிதைநூல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப் படுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தலித்தியம் என்பது உலக மானுட விடுதலைக் கோட்பாட்டை உள்வாங்கிய தாகும். ‘தலித்’ என்கிற சொல்லை அறிமுகப்படுத்திய மகாத்மா ஜோதிராவ் புலே. தலித் மக்களை ஒரே கூறையின் கீழ் ஒன்றிணைத்த புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர், சாதிய ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்த அய்யா அயோத்திதாசப் பண்டிதர், தந்தை பெரியார் – போன்றோரின் சாதி ஒழிப்புகோட்பாடுகளின் வெளிச்சத்தில் தமிழின் தலித் கவிதைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
பல்வேறு உட்பிரிவுகளைத் தன்னகத்தே கொண்ட ஓர் பெரும் மக்கள் திரள் ‘தலித்’ என்கிற குடைச் சொல்லின் கீழ் கொணப்பட்டிருப்பினும்
- பறையர் (ஆதி திராவிடர்)
- பள்ளர் (தேவேந்திர குல வெளாளர்)
- சக்கிலியர் (ஆதித் தமிழர்)-
என்கிற மூன்று பிரிவுகளே தமிழ் தலித் சமூகத்தின் இயங்குசக்தியாக இருந்து வருகின்றன
தலித் படைப்பாளிகள் காலங்காலமான தமது சோகத்தைத் துயரவலியைப் படைப்புகளாக மாற்றுவதென்பது மிகப் பெரிய அவஸ்தை. ஏனெனில் அவை மத, சாதிய, அரசியல், சமூக விமர்சனங்களாகவே அமையும் அந்தக் கோபத்தீயில் கெட்ட வார்த்தைகளும் இலக்கியமாகும் சாத்தியமுண்டு. அதே நேரம் தம் உணர்வுகளை, நுட்பங்கள் கூடிய கலைப்படைப்புகளாக மலருதலும், அந்தப் படைப்பாற்றல் அனைத்து வாசகத் தளங்களையும் சென்றடைவதும் மிக முக்கியம்.
இலக்கிய முயற்சிகளின் புதிய தடங்களை (new trends) புரிந்து தேவையான தத்துவப் பின்னணிகள், உத்தி முறைகள், ஏற்ற வடிவங்கள் என தலித் படைப்பாளிகள் தேர்ந்தெடுக்க வேண்டியதும், வழக்கமான பொது மொழிகளைத் தாண்டி தமக்கான இலக்கிய மொழிகளைத் தாமே உருவாக்கிக்கொள்ள வேண்டியதும் தலித் படைப்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சங்கதிகள்.
கலை விமர்சகர்களின் வழிகாட்டுதல்களோடு புதிய தடங்கள் பதிப்பதும், சக தலித் படைப்பாளிகளோடு கரங்கோத்து இதுவரை வெளிவராத தலித் படைப்பாற்றலைத் தேடிப்பிடித்துப் பதிவு செய்வதும் தலித் படைப்பாளிகளின் சமூகக் கடமைகளாகும். கூடவே தலித் படைப்புகளானது முன்னவர்களின் போராட்ட அனுபவங்களை உள் வாங்கி அவற்றின் வெற்றி தோல்வியை விமர்சன மனதோடு எடைபோட்டுக் கற்பதோடு,இளைய தலைமுறை போராட வழிகாட்டும் வகையில் படைக்கப்படல் வேண்டும்.
தலித்துக்கள் தங்களுடைய கடந்த கால வரலாற்றில் அடிமைப் படுத்தப்பட்டார்கள் என்பதை உணரச்செய்து, அவர்களும் மனிதர்கள்தான் என எடுத்துக்காட்டி, அவர்களுடைய மனித உரிமைகளுக்காகப் போராட வேண்டியது அவர்களின் கடமை.‘தங்களை முன்னோர்கள் இந்த மண்ணுக்கு ஆற்றியப் பங்களிப்புக்கும் சேர்ந்தே பெருமைபேசும் போக்கும் தலித் கவிதைகளில் காணப்படுவதை பதிவு செய்யும் அதே வேளையில் அன்றாடம் நிகழும் செய்திகளையும் அரசியலையும் உள்வாங்கி மனித குலத்தின் சரியான சனநாயகக் குரலாகவும் விடுதலைக் குரலாகவும் உரைத்துத் தன் பயணத்தைத் தலித்தியக் கவிதைகள் நிகழ்த்துக்கின்றன என டாக்டர் அகவி குறிப்பிடுகையில் தமிழ் தலித் கவிதைகளின் சமகாலப் போக்கு (contenmperary) புலப்படுகிறது.
‘தலித்தியக் கவிதைகள் வட்டார வழக்குக் கவிதைகள், மண்ணின் மொழியில் பேசும் கவிதைகள் என்று மேலோட்டமாக சொல்லிவிட முடியாது’ – என்கிற அகவியின் கருத்துக்கள் ஆய்வுக்குரியவை.அதே நேரம் அழகியல் கலைத்தன்மை போன்ற கவிதைத் தன்மைகளைத் தாண்டி வாழ்க்கையைப் பெயர்த்துச் சொற்களில் அமுக்குபவையாகவும், யாருமே பார்க்காத அடித்தட்டு மக்களின் வாழ்வை விசாரிக்கும் விதமாகவும், விடுதலைக் குரலாகவும் , இன்றையத் தலித்தியக் கவிதைகள் அறச்சினப் புலப்பாட்டினைச் செல்நெறிகளாகக் கொண்டுள்ளன என்ற கருத்தும் ஏற்புடையது
“கவிதை வடிவம் நீண்ட காலமாகத் தலித் வாழ்க்கையிலிருந்து விலகியே இருந்தது. இருப்பினும் 1990 க்குப்பிறகு கவிதைகளில் தலித்தியம் தடம் பதிக்கத் தொடங்கியுள்ளது. தலித்தியக் கவிதை, அடித்தள மக்களின் பிரச்சனைகளை மிக கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். உணர்வுகளையும் பழகுமொழியையும் மிகச் சாதுர்யமாகக் கலைவயப் படுத்த வேண்டும். இயல்பாகவும் உண்மையாகவும் இது வெளிப்பட வேண்டும். நேச சக்திகளை நிராகரிக்காமல் அதே நேரம் ஆதிக்க சக்திகளுக்கு அடிபணியாமல் தமிழ் படைப்பிலக்கியப் பணி இயங்க வேண்டும்”
“தாம் எழுதிய ‘சனங்களின் கதை’ தலித்தியக் கவிதைகள் என்றே பழமலய் குறிப்பிடுகின்றார். மக்கள் வாழ்வை அசலாகப் பதிவு செய்வதும், பேசுவதும் தமது கவிதையின் மீறலாக வெளிப்படுத்துகிறார்” (பக்.32) எனக் குறிப்பிடும் முனைவர் அகவியின் பார்வையோடு முரண்படத் தோன்றுகிறது. ‘சனங்களின் கதை’ – தமிழில் தடம்பதித்த நூல் என்பதில் அய்யமில்லை. ஆனால் அந்நூல் தலித்தியக் கோட்பாட்டுக்குள் வருமா என்பது அய்யமே.
“அறுத்த சதையிலிருந்து ஒழுகும் புதுக்குருதியாய் தலித் படைப்பாளிகளின் பதிவுகள் எல்லாத் தளத்திலும் வருவது புதுப்பாய்ச்சலான அடையாளமாய்ப் பார்க்கலாம்” என்கிற விழி.பா. இதயவேந்தனின் கருத்து தலித் அடையாளமாய் விளக்கப்படுகிறது. சாதி ஒழிப்பு, சமத்துவம், சமூக நீதி என்கிற முக்கியமான மூன்று கோட்பாட்டு அடைப்படையில் தலித் அரசியல் புயலெனப் புறப்பட்டதை சமூகம் அறியும்..
தலித்தியக் கவிதைகளின் செல்நெறிகளாகக் டாக்டர் அகவியின் கருத்துக்கள்:
- அடித்தட்டு சமூக உழவனின் குரலில் எதிர்ப்புணர்வின் பதிவாக தலித் கவிதைகள்
- வெகுமக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிரான பதிவாக தலித் கவிதைகள்
- ஆதிக்கத் திறவுகோல் கைமாறிட, அதிகார வர்க்கத்துக்கு எதிரான குரலாக தலித் கவிதைகள்
- பெரியாரின் சிந்தனைகளையும், அம்பேத்காரின் கோட்பாடுகளையும் உள்வாங்கிய கவிதைகளே தலித்தியம் பேசும் கவிதைகள் எனப்படுகிறன.
- தலித் கவிதைகள் நேரடிப் பேச்சின் தன் வடிவத்தை வரையறுத்துக்கொண்டு கவிதை உத்திகளைவிட உணர்த்துதல் என்கிற நோக்கை கொண்டுள்ளன.
- இந்து சனாதனத்தின் மத நம்பிக்கைகளை உடைப்பதே தலித் கவிதைகளின் வேலை.
- சாதி ஒழிப்பு, சமூக நீதி, சமத்துவத்துக்கான குரலாக தலித் கவிதைகள்.
ப. 35 ல் தலித் ஆதரவு சக்தியாகக் குறிப்பிடப்படும் ச.சந்திரசேகரன், தலித்தியக் கவிதைகளைத் தொகுத்தவர். தலித் சமூகத்தை சார்ந்தவர். தனது சரவண பாலு பதிப்பகம் மூலம் உயரிய நூல்களை வாசக உலகத்துக்கு வழங்கியவர்.
தலித்தியம் பேசும் கவிதைகள் கவிதைத் தொழில்நுட்பங்களைமுற்றிலும் புறக்கணித்தே எழுதுகின்றனர். உவமைக் கூறுகளையும் கவிதைத் தொழில்நுட்பங்களையும் புறந்தள்ளி விட்டு உணர்வு நிலையில் வாழ்வைப் பேசும் கவிதைகளே நிரம்பியுள்ளன” என்கிற முனைவரின் கருத்தை படைப்பாளிகள் ஏற்கவியலாது. தமிழில் பல சிறந்த தலித் கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன என்பதை மறுக்கவோ மறைக்கவோ இயலாது.
தலித்களின் வாழ்க்கை என்பது கை ஏந்தல்கள், கூப்பாடு ஒப்பாரி, அழுகை, அசிங்கம் மட்டுந்தானா தலித்துக்கென்று பண்பாடு, வரலாறு, மொழி, ஒழுக்க நெறிகள், கூட்டு வாழ்வு, செழுமையான பதிவுகள் இல்லையா? இப்பகுதிகளைத் தலித் எழுத்தாளர்கள் ஏன் எழுதுவதில்லை” என்று வினா எழுப்பும் எழுத்தாளர் இமையத்துக்குப் பதிலாக அவை தொகுக்கப்பட்டுள்ளது. “தலித்தியக் கவிதைகளில் வாழ்வியல் பதிவுகள்” என்கிற இயல் 3
தலித் கவிதைகளில் இத்தகைய உரத்த குரல் கோபமாக, பட்ட அவமானங்களுக்குப் பழி தீர்ப்பதாக, வசைகளாக, சாபங்களாக வெளிப்படுகின்றன. வழக்கமான அழகியல் கோட்பாடுகளுக்குள் அடங்க மறுத்துத் திமிறி எழுகின்றன இவை. இக்கவிதைகளைச் சமூகப்பின்னணி கொண்டு விளங்கிக்க் கொள்வதன் வாயிலாகத் தான் இதன் கலைமதிப்பை உணரமுடியும். மாறாக இவற்றில் தொழில் நுட்பத்தை, அழகை, சொல் தேர்வை எதிர்பார்ப்பது மேட்டிமைக் குணம்” என்னும் கரிகாலனின் விமர்சனம் மிகச் சரியானதும், உண்மையானதுமாகும்.(தொண்ணூறுகளில் தமிழ்க்கவிதைகள்)
வர்ணாசிரம சமூகத்தின் இதயத்தைத் தொட்டு அவர்களின் மனதை மாற்ற முயன்று தலித்துகளின் உரிமைகளைப் பண்புடன் எடுத்துக் கூறி, தலித்துகளூம் மனிதர்கள்தாம் என்பதை உணரச்செய்து, காலம்காலமாக அவர்கள், அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டார்கள் என்பதை விளக்கி, தலித்துகளின் நடப்பு நிலையை வர்ணாசிரமத்தார் புரிந்து ஏற்க வைத்து அவர்கள் மாறவேண்டும் என உணர்த்த வேண்டும்” என்னும் மராத்திய தலித் எழுத்தாளர் சரண்குமார் லிம்பாலேவின் வழிகாட்டுதல் இங்கு கவனத்துக்குரியது.
இன்றைய உலகமயமாக்கலின் பின்னணியில் தலித்தியக் கவிதைகளின் பார்வையில் மாறிவரும் சூழலை வெற்றி கொள்ள எப்படி என்னும் தலித் அரசியலை கட்டமைக்க டாக்டர் அகவியின் ஏற்புடைய படைப்பாக்கப் பரிந்துரைகள்:
- அம்பேத்கரின் விடுதலைக் கூறுகளையும் உலக மாந்தர்களுக்கு விடுதலை வேண்டிய மார்க்சின் விடுதலைக் கூறுகளையும் படைப்பாளிகள் புரிந்து படைப்பை ஆக்கம் செய்தல் வேண்டும்.
- சர்வதேச மானுடனை தயார்செய்யும் பரந்த நோக்கை வழுவாமல் படைப்பாளிகள் படைப்புகளை படைத்தல் வேண்டும்.
- பாரபட்சமற்ற அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் சேர்த்துக்கொண்டு போராடும் இலக்கை உருவாக்க கருத்தியலை அமைக்க வேண்டும்.
- உட்சாதி பூசல் தவிர்த்து ஒடுக்கப்பட்டோரை ஒன்று திரட்டும் கலைப்பணிகளைப் படைப்பாளிகள் முனைந்து செய்யமுன்வரவேண்டும்.
- விடுதலையைக் கோரும் படைப்பாளிகள் கவிதை உத்தியினை, போக்கை முழுவதுமாகக் கைக் கொள்ளாமல் எளிய வாசகரையும் நெருங்குகிற உத்தியைக் கையாள வேண்டும் எனவும் யதார்த்தம் என்ற பெயரில் முற்றிலும் கலைத்தன்மை பேணாமல் மனசாட்சியைத் தொட்டு வழிநடத்தும் கவிதைகளைப் படைக்கக் கோரியும் இவ்வாய்வு பரிந்துரை செய்கிறது
தலித் படைப்பாளிகளும் இந்த இலக்கிய நெடுஞ்சாலையில் நீண்டபயணம் தொடர்வதும், நீரோட்டத்தில் கலந்து கரைந்தாலும், தனித்தன்மை இழக்காமலிருப்பதும் மிக முக்கியம். இந்த முயற்சியில் நுட்பக் கலைகளைக் கற்றலும், சகபடைப்பாளிகளோடு பரிமாறலும், இணைந்து செயல்படும் நேச சக்திகளோடு கரங்கோப்பதும், தலித் படைப்பாளிகளின் இலக்கிய கடமையாகும். அந்த வகையில் டாக்டர் அகவியின் ஏற்புடைய எதிர்கால ஆய்வுக்குரிய பரிந்துரைகள்:
- 2010க்குப் பிறகு தொடர்ந்து வீச்சாக வெளிவரும் தலித்தியக் கவிதைகள் ஆய்விற்குட்படுத்தப் படலாம்.
- தலித் பெண்ணியக் கவிஞர்களின் கவிதைகள் தனியாய் ஆய்வு செய்யலாம்.
தலித் படைப்புகள் என்பது அழுகுரலில் தனது சோகம் சொல்பவையாக மட்டுமில்லமல் உலகமயமாக்கலின் பின்னணியில் இன்றைய மாறிவரும் சூழலை வெற்றி கொள்வது எப்படி என்னும் தலித் படைப்பாளிகள் யோசிக்க வேண்டியுள்ளது. அதே போல் அதிகாரங்களைக் கைப்பற்றும் முயற்சியோடு, கையில் கிடைக்குமானால் அந்த அதிகாரம் தலித் மக்களுக்கு எதிரானதாக அமையாததாகவும் கவனமுடன் தனது காலடிகளை எடுத்து வைக்க வேண்டியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இன்றைய தலித் படைப்புகள், படைப்பாளிகள் பேராதிக்கத்தின் மேலாதிக்கத்திற்கும், அடிமைச் சிந்தனைக்கும் எதிரானதாகவும் இருத்தல் வேண்டும்.
தலித் மக்களின் எழுச்சிகளை, போராட்ட வரலாறுகளைப் பதிவுசெய்வதோடு, போராடத் தூண்டுபவையாகவும், போராட்டங்களுக்குத் துணை நிற்பவையாகவும் எழுதப்படவேண்டும். தலித் படைப்புகள் தலித் மக்கள் மட்டுமல்ல, பாதிக்கப்படும் எந்த ஒரு மக்களின் நியாயமான விடுதலையையும் நேசிப்பவையாகவும் இருந்த்தல் மிக முக்கியம். தலித் விடுதலை என்பது இதுகாறும் அழுத்தப்பட்டு, குரல் வளைகள் மிதிக்கப்பட்ட மக்களின் விடுதலை மட்டுமல்ல; அதுவே மனித குல விடுதலை.
அத்தகைய விடுதலைக் குரல்களை அடையாளம் கண்டு ஆய்வாக தொகுத்தளித்திருக்கும் முனைவர் அகவிக்கு தமிழ்கூறும் நல்லுலகம் காலமெல்லாம் கடன்பட்டிருக்கும். நீறுபூத்த நெருப்பினை விசிறி விசிறி வெப்பம் பெருக்கும் உன்னதப் பணிக்காக முனைவர் அகவிக்கு தமிழ் மற்றும் தலித் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடமுண்டு.
- அன்பாதவன்