அரசியல் ஒரு சாக்கடை எண்டு சொல்லிச் சின்னவயதில் மாணவர் மனங்களில் நஞ்சை விதைக்கிற வித்தைக்காறங்கள்தான் அந்தச் சாக்கடையில குளிக்கிறாங்கள். தம்பி... உண்மையில அரசியல் ஒரு சாக்கடை இல்லை.  அரசியல் தான் எல்லாம்.

எழுத்தாற்றல் உள்ள ஒருவர் சிறைசெல்லும் போது  அது அவரது ஆளுமையை வெளிக் கொணருவதற்கான வாய்ப்பாக அமைகின்றது. அந்த வகையில் ஈழத்தில் அரசியல் கைதிகளாக துன்புறுபவர்கள் மத்தியில் வெளித்தெரிகின்ற சிறந்த படைப்பாளியாக திகழ்பவர் சிவ ஆரூரன். இவரது ‘யாழிசை’ நாவல்  முன்னைநாள் பெண்போராளியின் இன்றைய வாழ்வு பற்றி விவரிக் கின்றது.

இவ்வாறான நாவலைத் தந்த அந்த படைப்பாளியை ஒக்ரோபர் புரட்சியின் நூற்றாண்டு இன்னொரு நாவலை எழுத தூண்டியுள்ளது. இடதுசாரியாக தம்மை அடை யாளம் காட்டிய எந்தப் படைப்பாளியையும் தூண்டாத உணர்வு இந்த கைதியை தூண்டியுள்ளது என்றால் இன்னும் மாக்ஸிசம் மரணித்துவிடவில்லை. அது வீறுகொண்டு பாயும் வலிமை பெற்றது என்ற உண்மை புலப்படுகின்றது.

சிறைச்சாலையில் உடனுறையும் மாக்ஸிச தோழர் களின் தொடர்பும் இளமைக்காலத்தில் இவர் தொடர்பு பட்ட முற்போக்கு எழுத்தாளர்களின் பரிச்சயமும் தேடித் தேடி வாசித்த நூல்களுமே அவருக்கு இந்த ஆளுமையைக் கொடுத்திருக்கின்றது.

வரித்துக் கொள்ளும் கொள்கையை வாழும் வரையிற் கொள்ளும் பொதுவுடமை வாதியினருக்கு சமர்ப்பித்திருக்கும் ‘யாவருங் கேளிர்’ என்ற இந்த நாவல் நிலாவில், அல்வாய் வடமேற்கு, அல்வாய் என்ற முகவரியில் அமைந்துள்ள பூமகள் வெளியீட்டகத்தின் வெளியீடாக வந்துள்ளது.

இந்த நாவலின் வெளியீட்டு நிகழ்வு அவரது சொந்த ஊரான அல்வாயிலும் அறிமுக அரங்கு தேசிய கலை இலக்கிய பேரவையின் யாழ்ப்பாண அலுவலகமான கொக்குவிலில் அமைந்துள்ள முருகையன் கேட்போர் கூடத்திலும் வவுனியாவிலும் நிகழ்ந்துள்ளன.

60 களில் யாழ்ப்பாணத்தில் முனைப்பு பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி இனவாத அலை யினாலும் குறுந்தேசிய வாத எழுச்சியினாலும் தொய் வடைந்த போதிலும் தமது கொள்கையிலிருந்தும் வழுவாது வாழும் முதியவரான கதாபாத்திரமான சபாபதியை சுற்றி தனது போக்கினை நெறிப்படுத்தும் இளைஞனான பூங்குன்றன் என்ற பாத்திரத்தை மையப்படுத்தி கதையை நகர்த்திச்செல்கின்றார் சிவ ஆரூரன்.

யாழ்ப்பாணத்து மண்வாசனையோடு சுவைபட சித்திரிக்கும் இவரது நடையில் இயல்பாக யாழ்ப் பாணத்தில் வழக்கிலுள்ள ஆங்கிலச் சொற்பிரயோகங் களுக்கு பதிலாக தனித்தமிழ்ச்சொற்களை கலந்து தருவதில் சாதாரண வாசகருக்கு சங்கடங்களை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும் கதை கூறும் பாங்கு அலாதியானது.

இருபாலை என்ற கிராமத்தை முற்போக்குத் தளத்தில் வளர்த்துவரும் சபாபதி இளைஞர்களை நல்வழிப்படுத்தி  சமூக அக்கறையுடன் இளைஞர்கள் திகழ உதவுகின்றார்.

போரும் தாராளவாதபொருளாதாரமும் இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்த மக்களை சூழலியல் தாக்கத்திற்கு உள்ளாக்கும் வகையில் மாற்றியிருக்கும் வேளையில் இளைஞர்களின் தலைமைத்துவம் சபாபதியின் வழிகாட்டலில் இயக்கமாக பரிணமிக்கும் மையக் கதையை நோக்கி கதை நகர்கின்றது.

இருபாலையூர் இளைஞர் கழகமாக களமிறங்கும் இளைஞர்கள் பனைவளம் அழிந்துபோகும் நிலையில் மனைதோறும் பனங்கன்றுகளை நாட்டும் செயற் திட்டத்திலிருந்து தொடர்கிறது அவர்களது சூழலியல் பணி.

சபாபதியின் குரலாக நாவலாசிரியர் கூறுகின்றார்: ‘முந்தியெல்லாம் வீட்டு வளவுக்குள்ள குறைஞ்சது இருபது பனையாவது இருக்கும். விறகுகள் கூடப் பனை யிலயிருந்துதான் எடுத்தாங்கள். இப்ப ஒண்டிரண்டு வீடுகளில் சமையல் எரிவாயு பயன் படுத்துறதையும் பாக்கிறம்.’

ஆம் நல்ல செம்பாட்டு மண்ணில் அடுப்பு பிடித்து விறகு மூட்டி சமையல் செய்யும் எங்கள் வழக்கு ஒழிந்துபோகுமோ?

“எங்கட கிராமத்தில வெறும் தரையென எதுவும் இருக்கக்கூடாது. வீட்டு வளவுக்குள்ள பனைமரங்கள் அவசியம். கல்லுப் பூமியிலையும் பனை வளரும். வேலியோரங்கில் முருங்கையை நடுங்கோ, வேறை பயன் தாற மரங்களையும் நடுங்கோ.” எனத் தொடங்கு கின்றனர் தங்கள் பணி.

இவர்களது பாத்தீனிய ஒழிப்பாக பணி மேலும் கோப்பாய் வட்டாரத்துக்கு விரிவுபடுத்த வேண்டியதா கின்றது. சூழலுடன் சமூகப் பேணுகைக் கழகமாக உருவெடுக்கின்றனர்.

பூங்குன்றன் வாயிலாக நாவலாசிரியர் கூறுகிறார்: இந்திய அமைதிகாக்கும் படையினர் ஈழத்தினுள் 1987ல் புகுந்தபோது அவர்களோடு சேர்ந்தே பாத்தீனிய விதைகளும் இங்கு வந்து சேர்ந்தன. அவர்களுடைய வாகனங்கள், இறைச்சிக்காகக் கொண்டுவரப்பட்ட செம்மறி ஆடுகள், கடுகு விதைகள் போன்றவற்றோடு இணைந்து வந்து இம்மண்ணில் குடியேறின.

இந்தியாவிலிருந்து இந்த நச்சுச் செடி இங்கு வந்திருந்தாலும் இதன் தாயகம் இந்தியாவல்ல; மெக்சிக்கோ வளைகுடாக்கரையை அண்டிய அயன மண்டல நாடுகளே இதன் தாயகம். 1954இல் அமெரிக் காவில் அளவுக்கு அதிகமாகக் கோதுமை விளைந் திருந்தது. அதை வழமைபோல் கடலில் கொட்டாது,  வறுமையான ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு இனாமாக வழங்கினர். இவ்வழியில் மும்பைத் துறைமுகத்தில் வந்திறங்கிய கோதுமைத் தானியங்களோடு வைத்தபடி பாத்தீனிய விதைகளும் இந்தியாவிலிருந்து வந்து சேர்ந்தன...

பாத்தீனியத்தின் அசுரவளர்ச்சியினால் உள்ளூர்ச் செடிகளினால் வாழமுடிவதில்லை. இவை தண்ணீருக் காகவும், வேர்ப்பிடி மண்ணுக்காகவும், வெளிச்சத்திற் காகவும் போராடுகின்றன. இறுதியில் அழிந்தும் விடுகின்றன. இவற்றின் மீது பாத்தீனியம் நஞ்சூட்டியும் வருகின்றது...

இந்தியா இதன் ஆக்கிரமிப்பால் திணறுகிறது. இருப்பினும் ஈழத்தில் இவை பரவக் காரணமாக இருந்தமை கொடிய செயல்.

இந்த பாத்தீனியத்தை ஒழிப்பதில் ஈடுபடும் அவர்களது நோக்கை எவ்வாறு அடைகிறார்கள், இந்த சமூக நோக்கில் எவ்வாறு எல்லோரையும் ஒன்றிணைக் கின்றார்கள், தொடரும் சமூகப்பணிகள், அதில் ஏற்படும் இடையூறுகள், தொய்வுகள், இயலாமைகள் என நகர்கின்றது நாவல். வெறுமனே சமூகப்பணி மூலம் திருப்தியடைய முடியுமா?

இந்தப் பணியில் இஸ்லாமிய நண்பர்கள் தோள் கொடுப்பதும் சிங்கள நண்பர்கள் கலப்பதும் இன மத முரண்களுக்கு அப்பால் பொது நோக்கில் ஐக்கியத்தின் தேவைப்பாட்டை உணர்கின்றனர்.

இந்தப் பணியில் மகளிரை இணைப்பதில் மிகவும் கவனமாக நடந்துகொள்கின்றனர். அதில் வெற்றியும் காண்கின்றனர்.

இந்திய இழுவைப் படகுகளில் வந்தவர்கள் வடமாராட்சியில் மீனவர் வலையை அறுத்தமை, சுன்னாக நிலத்தடி நீரில்  எண்ணைக் கசிவு என நடப்பு பிரச்சனைகளூடே அடிப்படையான வர்க்க வேறு பாட்டை பூங்குன்றன்  புரிந்துகொள்கிறான்.

கழகத்தின் வளர்ச்சிக்கட்டத்தில் மே தினம் கொண்டாட முடிவெடுக்கின்றார்கள்.

அரசியல் ஒரு சாக்கடை என கருதியவர்களில் மனமாற்றமா?

சபாபதி கூற்றாக நாவலாசிரியர் கூறுகிறார்: Òஅரசியல் ஒரு சாக்கடை எண்டு சொல்லிச் சின்னவயதில் மாணவர் மனங்களில் நஞ்சை விதைக்கிற வித்தைக் காறங்கள்தான் அந்தச் சாக்கடையில குளிக்கிறாங்கள். தம்பி... உண்மையில அரசியல் ஒரு சாக்கடை இல்லை. அரசியல் தான் எல்லாம்.Ó

அதுக்குப் பதிலாக பூங்குன்றன் குரல் : “அரசியல் ஒரு சாக்கடை...! அப்பிடிச் சொல்லிக் கலகக் குரலை மௌனிக்கச் செய்யிறாங்கள்”

பாத்திரங்களின் பெயர்களைச் சுத்தத் தமிழில் தந்து இடையிடையே இலக்கிய விசாரம் செய்யும் நாவலில் ஆங்காங்கே இடதுசாரித் தத்துவக் கருத்துகளை விதைத்துச் செல்லும் ஆசிரியர் தமிழ் தேசியவாதிகள் ஏகாதிபத்திய நாடுகளை தமக்கு தீர்வு தருமாறு இறைஞ்சி நிற்கும் நிலையை நாசூக்காக சாடுகிறார்.

செவ்வொளியைச் சுரந்து மேல் வானம் ஆதவனின் ஓய்வை அறிவித்தது என ஆரம்பித்து சொவ்வொளியை சுரந்து கீழ்வானம் சபாபதியின் ஓய்வை அறிவித்தது! என நிறைவுறும் இந்த நாவலின்  தொனிப்பொருளான மாக்ஸிசத்தின் வழிகாட்டலின் அருட்டுணர்வில் ஏகாதிபத்தியத்திற்கெதிராக யாவரும் கேளிர் என எழுந்திடவேண்டாமா?

யாவருங் கேளிர்

சிவ ஆரூரன்

வெளியீடு: பூமகள் வெளியீட்டகம்,

நிலாவில், அல்வாய் வடமேற்கு, அல்வாய்

Pin It