vithai functionபாலக்காட்டில் "விதை" இலக்கிய அமைப்பின் சார்பாக எனது "நிழல் தேசத்துக்காரனின் சித்திர பறவைகள்", "ஊதா நிறக் கொண்டை ஊசி கதைகள்" மற்றும் "எறும்பு முட்டுது யானை சாயுது" ஆகிய மூன்று நூல்களின் பனுவல் நயம் 15.02.2020 பாராட்டப்பட்டது.

மிக அற்புதமான அனுபவமாக இருந்ததை மீண்டும் மீண்டும் விரும்பும் மனதோடு இங்கே சில குறிப்புகளும்... சில பகிர்தல்களும்.

நம் புத்தகங்கள் பற்றி பேசுகிறார்கள் என்ற பிரமிப்பு கொஞ்ச நேரத்தில் போய் விட்டது. எத்தனை நுணுக்கமாக பேசுகிறார்கள் என்பது தான் கூட்டம் முடியும் வரை மனதுக்குள் ஓடிய சப்தங்களாக இருந்தன.

நிகழ்வில் கலந்து கொண்டு பேசியவர்கள் அனைவருமே கல்லூரி மாணவி மாணவர்கள். சிலர்... முனைவர் பட்டத்துக்கான ஆய்வை மேற்கொண்டிருப்பவர்கள். நான் மிகவும் ரசித்து பார்த்தது அவர்களின் அந்த இளமைப் பருவம். இனம் கண்டு கொள்ள முடியாத துறு துறு நிறைந்த அந்த முகங்களில் அன்பின் சுவடுகள்.. ஆசுவாசத்தின் நிறைவுகள். ஆகச் சிறந்த கவிதைகளை சுமந்தலையும் கணத்தின் அழகியல்களை வைத்த மனம் வாங்காமல் பார்த்தேன். இப்படி ஒரு காலத்தில் இருந்து வெகு தூரம் வந்து விட்டதை நினைத்து சற்று தவிப்பாகவும் இருந்ததை சொல்ல வேண்டும்.

ஒரு தோழி "எறும்பு முட்டுது யானை சாயுது" கவிதை தொகுப்பைப் பற்றி பேச ஆரம்பித்ததும் முதலில் திக் என்று இருந்தது. என்னடா உருகி உருகி காதலை கொண்ட கவிதையில் அந்த அப்பெண் வேறு பார்வை கொண்டு காதல் தவிர்த்து குழந்தைதனத்தை கைக்கொள்கிறாளே என்று. ஆனால் அவள் பேசிய பிறகு, "ஆமா... அதை அப்படியும் எடுத்துக் கொள்ளலாம் தானே" என்று புதிய பார்வையை உணர முடிந்தது. மாற்று சிந்தனை எந்த கோணத்தில் இருந்தும் வரும் என்பதை உணர்ந்த போது..... உள்ளிருக்கும் மாணவன் விழித்துக் கொண்டான். தொடர்ந்து மாணவனாக இருப்பவனே மாஸ்டர் ஆக இருக்க முடியும் என்பது உறுதிப்பட்டது. திறந்த மனமும் மூளையும் தான் ஒரு படைப்பாளனுக்கு மிக அவசியமாக இருக்க வேண்டும் என்று இன்னொரு முறை புரிந்து கொள்ள முடிந்தது.

இறுக மூடி இருக்கும் ஜன்னலுக்குள் தென்றல் எப்படி வரும். இறுக மூடி இருக்கும் இதயத்துள் காதல் எப்படி வரும். காதலில் உள்ள குழந்தைமையை மிக அழகாக ஒரு குழந்தையின் முக பாவனையோடு சிரித்துக் கொண்டே பேசியது....எழுத்தில் வராத குறுங்கவிதை.

நிகழ்வுக்கு தலைமை ஏற்ற நண்பர் அம்ரேஷ்-ன் பேச்சில்..... அழகியல் அலை அடித்தது. தமிழும் மலையாளமும் கலந்து.... அது ஒருவகை புது மொழியாக இருந்த போது ரசனை தானாக சேர்ந்து கொண்டது. வெள்ளை புறாக்கள் பறக்கும் வெற்றிடத்தில்.. வியாக்கியானத்துக்கு இடமில்லை. அப்படித்தான் இவரின் தலைமை பேச்சும்.. இடையிடையே கொடுக்கும் கமெண்டுகளும். சிரிக்க நேர்ந்த தருணங்கள் எல்லாம் அம்ரேஷ் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட தருணங்கள் தான்.

எல்லார் பேச்சிலும் மிக அக்கறையான உண்மை இருந்தது. ஜோடனை இல்லை. பாவனை இருந்தது. ஒப்பனை இல்லை. ஆரம்ப கட்ட பேச்சாளர்களும் இருந்தார்கள். எழுதி வைத்து படித்தவர்களும் உண்டு. எல்லாமே உள்ளம் கொண்ட தெளிவின் தீர்க்கத்தை வெளிப்படுத்தியவை. நகர்ந்து கொண்டே இருக்கும் அறிவின் கனலை பற்ற வைத்தவை. அமர்க்களப்படுத்திய ஸ்டாலினின் பேச்சில்... நிதானமும்.. கன்டென்டை உள்வாங்கும் நுட்பமும் இருந்ததை மெச்சத்தான் வேண்டும்.

ஸ்டாலின் பேசுகையில்...வெறும் காதல் கவிதைகளில் உடன்பாடு இல்லை... அதனால்... கிட்டத்தட்ட புத்தகத்தை மூடி வைத்து விடலாம் என்று நினைத்த போது கடைசி பக்கத்தை புரட்ட நேர்ந்தது... அங்கே சமூக கவிதை பளிச்சிட......பிறகு முழு புத்தகத்தையும் ஒரே வீச்சாக படித்ததாக கூறினார். காதலில் ஆரம்பித்து..... எனது எல்லாமும் காதலால் தான் ஆரம்பிக்கிறது. காதல் என்பது பெண் மீதானது மட்டும் என்று சுருக்கிக் கொள்ள விரும்பா உலக காதலனாக இருப்பதால்... மானுட காதலனாக இருப்பதால்....சமுதாயம் பற்றிய.......சமத்துவம் பற்றிய சிந்தனை இயல்பாக என்னுள் இருப்பதை இன்னும் கொஞ்சம் கூர்ந்து எனது படைப்புகளை படிக்கையில் உணர்ந்து கொள்ள நேரிடும். எனது மொழி கொஞ்சம் சிக்கலான மொழியாக இருப்பினும்.. எங்கு எது தேவையோ அங்கு தேவை கருதி மொழியின் வடிவம் தானே மாறிக் கொள்ளும் பயிற்சியை பெற்றிருப்பதை அழகாக உள் வாங்கிக் கொண்ட தோழிகள்... குறுங்கவிதைகள் அனைத்துமே யதார்த்த மொழியில் இருந்ததாக கூறியது ஆறுதலாக இருந்தது.

"ஊதா நிறக் கொண்டை ஊசி கதைகள்" சிறுகதை தொகுப்பைப் பற்றி பேசுகையில்.. தோழி சித்ராவின் உள்வாங்கல் பாராட்ட வேண்டியது. கிட்டத்தட்ட பெரும்பாலான.....முக்கியமான கதைகளை எல்லாமே மிக நேர்த்தியாக ஒப்பீட்டு அளவிலும்.. உட்கருத்து கொண்ட அளவீட்டு வகைமையிலும் அலசி ஆராய்ந்திருந்தது...அலாதியானது. நானே மறந்த இடங்களை எல்லாம் சுட்டிக்காட்டி இது எப்படி....இங்க ஏன் போன்ற கேள்விகளால் மீண்டும் கதைக்கு உயிரூட்டிய போது..... கைக்கு வந்ததையெல்லாம் எழுதிவிட முடியாது. இந்த உலகம் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்ற எச்சரிக்கை என்னுள் சூழ்ந்தது. கவிதைகளைப் பற்றி பேசுகையில் இருந்ததை விட கதைகளை பற்றி பேசுகையில் இருக்கும் நான் எனது தாண்டிய என்னுள்ளம் கொண்ட நானாக இருந்ததை மிக ரகசியமாக ரசித்தேன்.

" நிழல் தேசத்துக்காரனின் சித்திர பறவைகள்" கவிதை தொகுப்பில் இருந்து "எங்க ஊர் ராஜகுமாரி" கவிதை பற்றி தோழர் பேசுகையில்... உள்ளே பிரம்மாண்டமாய் பீறிட்டுக் கொண்டிருந்த பழைய நினைவுகளை அடக்கவே முடியவில்லை. அடங்காமல் கொட்டியது... ஆசுவாசம். மரணம் பற்றிய ஆய்வு செய்யும் தோழரின் பேச்சில்.... மரணத்துக்கே உண்டான வெளிச்சம் இருந்ததைக் கண்டேன். மரணம் மிக சிறந்த அமைதியை தரும் கவிதைக்கு சற்று மேலானது என்று சிந்திக்கையில்..... வண்ணமயமான கவனம் அவர் மீது குவிந்தது.

நிறைய பெயர்களை வழக்கம் போல மறந்து போனேன். ஆனாலும் எல்லோரின் முகமும் வார்த்தைகளால் என்னுள் பதிந்து விட்டது. மிக குதூகலமான கூட்டமாக இருந்தது. இலக்கியம் அழுவதற்கு மட்டுமா என்ன. கொண்டாடுவதற்கு தான். கூத்தடிப்பதற்கும் தான். அது அந்த மரங்கள் சூழ்ந்த மாடி கூரையில்... "விதை" நட்டுக் கொண்டேயிருக்கிறது. இது 16 வது கூட்டம். தகுதியான தரமான நடுதலை நேர்த்தியான திட்டமிடுதலில் செய்து கொண்டிருக்கும் கதிரவன் சாருக்கும் ஜானகிப்பிரியா மேடத்துக்கும் கன்னல் இளம்பரிதிக்கும் எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும். எத்தனை பாராட்டினாலும் போதா. இவர்களுக்கும் மாணவ மாணவியருக்கும் உள்ள நெருக்கம் அட்டகாசமானது. அப்பட்டமான புரிதலைக் கொண்டது. ஒரு குடும்பமே இலக்கிய வாழ்வை கொண்டாடி தீர்வது கற்றுக் கொள்ள வேண்டியது. காலம் மலர மலர வாழ்த்தும் குவியும். மிக சுவையான மதிய உணவில் வயிறும் நிறைந்தது. ஒரு படைப்பாளனுக்கு முதலில் மனது நிறைய வேண்டும். மனம் நிறையா இடத்தில் வயிறு நிறைவதில்லை. இங்கே இரண்டும் நிறைந்தது. பெண்களின் பரிமாறும் அழகை நீண்ட நாட்களுக்கு பின் மிக அருகில் கண்டேன். ஒப்புக்கொடுத்தலுடைய பரிமாறல்.

பாதியில் ஆரம்பித்து பாதியிலேயே முடித்துக் கொண்ட "கள்வனின் காதலி" கதையை சொன்ன தோழி அத்தனை மிருதுவான ஆதுர மென்மையான பாவனையோடு பேசியது அழகியல் நிறை. ஒரு குழந்தையின் வெள்ளந்தி முகத்தைக் கொண்டிருந்தது... சோ க்யூட். அப்பளத்துக்கு கண்கள் கலங்கிய "அச்சோ" வில் வாழ்வு அன்பால்தான் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆழமாய் புரிந்தது. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசினால் அது பிழைத்தல். உள்ளொன்று கண்டு அதையே வெளியொன்றில் நிரப்பினால் அது தான் வாழ்தல். அழுகைக்கும் சிரிப்புக்கும் அப்படி அப்படியே பொருந்தும் முகத்தில் தான்.. நிம்மதி இருக்கிறது.

உலக சினிமாக்கள்... உலக இலக்கியங்கள் என்று எதைத் தொட்டு வந்தாலும்...சுவாரஷ்யம் நீள்கிறது. அறிவு சார்ந்த தேடல் உள்ள கூட்டத்தில் நேற்றைய விதியாக இருந்தது ஆக சிறந்த அனுபவம். கதிரவன் சார் கேட்ட "கவிஜி யார்...?" கேள்வியில்.. மிக வேகமாய் என் ரயில் பின்னோக்கி சென்றதை.... அப்படியே அதே சத்தத்தில் உணர்ந்து கொட்டினேன். ஜானகிப்பிரியா மேடத்தின் மனம் திறந்த பாராட்டை... பொக்கிஷமாக என்னுள் வைத்துக் கொண்டிருப்பதை எவ்வித முரணும் இல்லாமல் சிரித்துக் கொண்டே சொல்லலாம். ஒவ்வொரு முகத்திலும் ஒரு படிப்பினையைக் கண்டேன். பரிசு பொருள்களாக கவிதை நிறைந்தபோது...... புத்தககங்கள் நிறைந்தபோது.....ஏதோ ஒரு பிடித்த வரியாக மாறிப் போனேன்.

மேடை கலாச்சாரம் இல்லை. கீழே அமர்ந்திருப்போர் கை தட்டுதலுக்கு மட்டுமே என்ற தோற்றப் பிழை இல்லை. எல்லாரும் சமம். படிப்பவன் இல்லையென்றால் எழுதுபவனுக்கு என்ன வேலை என்று அந்த தொடர்பை மிக துல்லியமாக புரிய வைத்தது அந்த வட்டம். எங்கிருந்து வேண்டுமானாலும் வந்த கேள்விகளே எனக்கு மிக பொருத்தமான நிறைவைத் தந்தது. தனியாக பேச ஒன்றுமில்லாத போது கேள்வி பதில்களில் விளங்கி கொள்தலும் விளக்கிக் கொள்தலும் மிக பிரம்மாண்டமாக நிகழ்ந்தது. ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு மாணவியும்.. அசுர வேகத்தில் தெரிகிறார்கள்.

எவனுக்கு என்ன பலம் எவனுக்கு என்ன குணம் கண்டதில்லை ஒருவருமே..
ஒரு விதைக்குள்ள அடைபட்ட ஆலமரம் கண் விழிக்கும் அது வரை பொறு மனமே...

வைரமுத்துவின் வரிக்கிணங்க இந்த "விதை" இலக்கிய அமைப்பின் விருட்சம் மிக பெரிதாகும். நானும் ஒரு கிளையாகி போனேன் என்பது திருப்தி. அது பொறுப்பும் கூட.

எழுத்தாளன் பெரிதாக என்ன கேட்டு விட போகிறான்...? போகிற போக்கில் இதுபோன்ற சில கை தட்டல்கள் தான்...!

- கவிஜி

Pin It