கீற்றில் தேட...

மார்க்சியம் என்பது, மனித சமுதாயங்களின் இயங்கியலை அறிவதற்காக உருவாக்கப்பட்ட கொள்கை யாகும். இது, சமூகங்களின் இயக்கத்தை வர்க்க உறவுகளின், வர்க்கமுரண்பாடுகளின் அடிப்படையில் விளக்குகின்றது. வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் இயக்கவியல் பொருள்முதல்வாதமும் மார்க்சியத்தின் அடிப்படைத் தத்துவங்களாகின்றன. மார்க்சியத் தத்துவத்தை ஜெர்மன்நாட்டைச் சேர்ந்த கார்ல்மார்க்சும் ஃபிரடெரிக் ஏங்கல்சும் 19ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் தோற்றுவித்தனர். இத்தத்துவம் பின்னர், ருஷ்யப்புரட்சியைத் தோற்றுவித்த லெனினாலும் சீனத்தில் மாபெரும் புரட்சியை உருவாக்கிய மாசேதுங்கினாலும் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது. மார்க் சியத்துக்கு முன்பிருந்த தத்துவங்களெல்லாம், உலகத்தை விளக்கத்தான் செய்தன. மார்க்சியம் மட்டும்தான் உலகத்தை மாற்றுவதற்கு வழிகாட்டியது. ஏங்கல்ஸ் குறிப்பிட்டதுபோல மார்க்சியம் என்பது, வெறும் கோட்பாடு மட்டுமன்று; அது, செயல்முறைக்கான தத்துவமாகும்.

marx and engels

இலக்கியத்தை ஆராயும் பல்வேறு அணுகுமுறை களுள், மார்க்சியத் திறனாய்வு அணுகுமுறையும் ஒன்றாகும். மார்க்சிய அணுகுமுறை, கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் வரலாற்றியல், பொருளாதார வியல், சமூகவியல் கொள்கைகளை ஆதாரமாகக் கொண்டமைந்துள்ளது. மார்க்சியத்தின் சோசலிசம் மற்றும் இயக்கவியல் கொள்கைகளின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

  1. கம்யூனிஸ்ட் கொள்கை பிரகடனம் (1848)
  2. அரசியல், பொருளாதார விமர்சன பங்களிப் பிற்கான முன்னுரை (1859)
  3. மூலதனம் (1867)
  4. ஜெர்மானிய கருத்துநிலை (1845-66)

ஆகிய நூல்கள் மார்க்சியத்தின் அடிப்படைத் தத்துவங் களை விளக்குவதாக அமைந்துள்ளன. மார்க்சியம் இலக்கியத்தைச் சமுதாயத்தின் பிரதிபலிப்பாகவும் சமுதாய வாழ்வியலிலிருந்து மேலெழுகின்ற மேற்கட்டு மானத்தின் ஒரு பகுதியாகவும் கருதுகின்றது. மார்க் சியத்தின் இலக்கியப் படைப்பாக்க முறையாக சோசலிச யதார்த்தவாதம் அமைந்துள்ளது.

மார்க்சியத் திறனாய்வு இலக்கியத்தை அது தோன்றிய வரலாற்றுச் சூழல்களின் அடிப்படையில் ஆராய்கின்றது. வரலாற்றுக்காரணிகளைக் கருத்திற் கொள்ளாத திறனாய்வு போதாமையுடையது என்று ஹங்கேரிய நாட்டு மார்க்சியத் திறனாய்வாளர் ஜார்ஜ் லுக்காச் குறிப்பிடுகின்றார். இலக்கியத்தை ஆராய் வதற்கான கொள்கைகளைத் தனியாக மார்க்சும் ஏங்கல்சும் உருவாக்கவில்லை. ஆனால். கலை இலக்கியம் பற்றிய அவர்களுடைய விமர்சனங்கள் பல இடங்களில் துண்டுதுண்டாகச் சிதறிக்கிடக்கின்றன. கம்யூனிஸ்ட் கொள்கைப் பிரகடனத்தில் ‘உலக இலக்கியம்’ என்ற கருத்தாக்கத்தை விளக்கியுள்ளனர். மேலும் மிலின், ஷேக்ஸ்பியர், பல்சாக் முதலான படைப் பாளர்களின் படைப்புக்கள் குறித்த விமர்சனக் குறிப்புக்கள் இவர்களது எழுத்துக்களில் விரவிக் கிடக்கின்றன. இருப்பினும், மார்க்ஸ் உருவாக்கிய வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கொள்கை, இலக்கியத்தை ஆராய்வதற்கான பல அடிப்படைக் கருத்தாக்கங்களைக் கொண்டுள்ளது. பிரித்தானிய மார்க்சியத் திறனாய்வாளரான டெர்ரி ஈகிள்டன் குறிப்பிடுவதைப்போல, ‘மார்க்சியத் திறனாய்வு என்பது, இலக்கிய உற்பத்தி, அதன் பகிர்வு, புத்தக வெளியீடு, படைப்பாளர்கள் மற்றும் வாசகர் களின் சமுதாயக்கூட்டமைவு ஆகியவற்றை விளக்கு கின்ற வெறும் இலக்கியத்தின் சமூகவியல் அல்ல.’ மாறாக, அது இலக்கியப்படைப்பினை மிக முழுமையாக விளக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மார்க்சியத் திறனாய்வு என்பது, இலக்கியம் பற்றிய வரலாற்றியல் அணுகுமுறை மட்டுமன்று; அது, இலக்கியத்துக்குள் இருக்கும் வரலாற்றைப் புரட்சிகர நோக்கில் புரிந்து கொள்ள முயற்சிசெய்கின்றது. இலக்கியத்தை மார்க்சியக் கொள்கையின் அடிப்படையில் அணுகுவதற்கு, பின்வரும் வினாக்கள் துணைபுரியும்.

  • · இலக்கியத்தில், வர்க்கச்செயல்பாட்டின் பங்கு யாது?
  • · வர்க்க உறவுகளைப் படைப்பாளர் எங்ஙனம் பகுப்பாய்வுக்குட்படுத்தியுள்ளார்?
  • · ஒடுக்குமுறை குறித்துப் படைப்பாளர் கூறுவது யாது?
  • · வர்க்கமுரண்பாடுகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனவா? அல்லது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளனவா?
  • · கதைமாந்தர்கள் ஒடுக்குதலை எவ்வாறு வென்றெடுக்கின்றனர்?
  • · இலக்கியப்படைப்பு, சமூகப்பொருளாதார நிலைமையை அங்ஙனமே பேண விரும்பு கின்றதா? அல்லது மாற்றத்தை முன்மொழி கின்றதா?
  • · சமூகம், பொருளாதாரம், அரசியல் குறித்த படைப்பாளியின் கருத்துநிலைகள் யாவை?

சுருங்கக் கூறின், இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள சமூகப் பொருளாதார அரசியல் கூறுகளான, வர்க்கப் பிரிவினை, வர்க்க முரண்பாடு, ஒடுக்குதல் ஆகியவற்றை ஆராய்வதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - அடித்தளமும் மேற்கட்டுமானமும்

மார்க்சியத் தத்துவத்தின் மிக முக்கியமான பகுதி வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஆகும். மனித சமூகத்தையும் அதன் வரலாற்று முன்னேற்றத்தையும் அவற்றின் உற்பத்தி உறவுகளின்வழிப் புரிந்துகொள்வதே வரலாற்றுப் பொருள்முதல்வாதமாகும். வரலாற்றுப் பொருள்முதல்வாதம் சமுதாயஅமைப்பை, அடித்தளம் (Base), மேற்கட்டுமானம் (Super Structure) என இரண்டாகப் பிரிக்கின்றது. நமது புறவயமான சமுதாய வாழ்வியலை - சமுதாய இருப்பை அடித்தளமாகக் கொள்கின்றது. இது, உற்பத்தி சக்திகள், உற்பத்திக் கருவிகள் மற்றும் உற்பத்தி உறவுகள் செயல்படுகின்ற பொருளாதார அமைப்பைப் பற்றியது. பொருளாதார அடித்தளம் என்பதிலிருந்து மேலெழுகின்ற அரசியல், சட்டம், சமயம், கலை, இலக்கியம் என்பனவற்றை மேற் கட்டுமானமாகவும் வரையறுக்கின்றது. பொருளாதார உற்பத்தி உறவுகளின் சாராம்சமான அடித்தளம் என்பதைச் ‘சமுதாய இருப்பு’ (Social Being) என்றும் மேற்கட்டுமானம் என்பதைச் ‘சமுதாய உணர்வுநிலை’ (Social Consciousness) என்றும் அது மேலும் விளக்கு கின்றது. இதற்கடுத்தநிலையில், சமுதாயஇருப்பு என்கின்ற அடித்தளம்தான், சமுதாய உணர்வுநிலை என்கின்ற மேற்கட்டுமானத்தைத் தீர்மானிக்கின்றது என்று அடித்தளத்தின் தீர்மானகரமான பாத்திரத்தை மார்க்சியம் வரையறுக்கின்றது. உணர்வுநிலை வாழ்வைத் தீர்மானிப்பதில்லை; மாறாக, வாழ்க்கையே உணர்வு நிலையைத் தீர்மானிக்கின்றது. மார்க்சும் ஏங்கல்சும் ‘ஜெர்மானியக் கருத்துநிலை’ என்ற நூலில் இதனை விளக்கியுள்ளனர். எனவே, இலக்கியம் என்பதை மேற்கட்டுமானத்தின் ஒரு பகுதியாக மார்க்சியம் வரையறுக்கின்றது. இதன் காரணமாக, இலக்கியமும் சமுதாய இருப்பிலிருந்து உருவாகியுள்ள சமுதாய உணர்வுநிலைகளுள் ஒன்றாக அமைகின்றது.

அடித்தளத்திற்கும் மேற்கட்டுமானத்திற்குமான உறவை ஒன்றிலிருந்து ஒன்று என எந்திரகதியாக விளக்கு வதை ஏங்கல்ஸ் மறுத்துரைத்ததாக ‘டெர்ரி ஈகிள்டன்’ குறிப்பிடுகின்றார் (2002:ப.9). அடித்தளத்திலிருந்து மேற்கட்டுமானத்தின் பகுதிகள் உருவானாலும் அவை தம்மளவில் தனித்த சார்பியலான சுதந்திரம் கொண்டவை. அதுமட்டுமின்றி, அடித்தளத்திலிருந்து உருவாகும் மேற் கட்டுமானம் மீண்டும் அடித்தளத்தைப் பாதிக்கிறது; அதில் மாற்றத்தைக் கொணர்கிறது. பொருளியலான உற்பத்திக்கும் அழகியல் உற்பத்திக்கும் இடையில், சமச்சீரற்ற உறவுநிலை இருப்பதாக மார்க்ஸ் கருது கின்றார் (மேலது,ப.10). எனவே, மார்க்சியம் மனிதனை அவனது சமுதாய உறவுநிலைகளில் வைத்துப் பொருத்திப் பார்ப்பதைப் போலவே, இலக்கியத்தையும் அதன் விளைநிலமாகிய சமூகத்துடன் பொருத்திப்பார்க்கிறது. இலக்கியம் மேற்கட்டுமானத்தின் பகுதி என்றாலும், அது படைப்பாளியின் மனத்தை ஊடுருவி உருவாகும் அழகியல் வெளிப்பாடாக இருப்பதால் அதன் சார்பியல் சுதந்திரம், சட்டம், சமயம் முதலான பிறவற்றைவிடக் கூடுதலாகவே இருக்கின்றது.

மார்க்சுக்குப் பின்னர், அடித்தளம் மேற்கட்டு மானம் என்கிற கருத்தியல் வகையினங்கள் குறித்து புதிய விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக,

‘பிரெஞ்சு மார்க்சியப் பள்ளி’யைச் சார்ந்த அல்தூஸர், ‘அடித்தளம் பொருளாதார செயல்முறை, சட்ட அரசியல் செயல்முறை, கருத்தியல் செயல்முறை எனும் மூன்று வழிமுறைகளில் கட்டமைக்கப்படுவதாக’க் குறிப்பிடுகின்றார். மேலும், மேற்கட்டுமானத்தின் பகுதிகளுள் ஒன்றான அரசினைப் பின்வரும் இரண்டு வகையினதாகப் பகுத்துக்காட்டுகின்றார். அவை:

  1. கருத்துநிலைசார்ந்த அரசுக் கருவிகள் (Ideological State Apparatus)
  1. ஒடுக்குமுறைசார்ந்த அரசுக் கருவிகள் (Repressive State Apparatus)

கருத்துநிலைசார்ந்த அரசுக் கருவிகளுள் பள்ளி, கல்வி, மதம் முதலிய நிறுவனங்கள் அடங்கும். ஒடுக்கு முறை சார்ந்த அரசு கருவிகளுள் சட்டம், இராணுவம், காவல், நீதிமன்றம் என்பன அடங்கும்.

அடித்தளம், மேற்கட்டுமானம் என்ற வகைப்பாடு வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் மையமான பகுதியாக விளங்குகின்றது. இலக்கியத்தை அது தோன்றிய சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுத் தளத்தில் வைத்துப் பார்ப்பதுதான் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தின் அடிப்படை ஆகும். இவ் வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறையை சரித்திரவியல் - சமூகவியல் கண்ணோட்டம் என்று தொ.மு.சி.ரகுநாதன் குறிப்பிட்டு அதனைப் பின்வருமாறு விளக்குவார்.

“காலத்தைக் கடந்துநிற்கும் இலக்கியத்தைப் படைக்கும் காவியகர்த்தாவும்கூட, தான் வாழ்ந்த காலம், அந்தக்காலத்துச் சமுதாய நிலை, அந்தச் சமுதாயத்தில் நிலவிய அரசியல், பொருளாதார, சமூக உறவுகள், இவற்றின் விளைவாக எழுந்த சிந்தனைகள், தத்துவங்கள், போராட்டங்கள், அவற்றின் ஒட்டுறவு, முரண்பாடு மற்றும் வளர்ச்சி, வீழ்ச்சி ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டவனே. அவற்றை மறந்தோ, துறந்தோ அவனால் இலக்கியம் படைக்க முடியாது... தான் சார்ந்து அல்லது தேர்ந்து நிற்கும் கருத்துகளையும் சக்தி களையும் அறிந்தோ அறியாமலோ இனம்காட்டுவான்” (இளங்கோவடிகள் யார்?, முன்னுரை, ப.7).

“வரலாற்றுப் பொருள்முதல்வாதம் நம்மைப் பொருத்தமட்டில், வெறும் அணுகுமுறை வாய்ப்பாடல்ல; எண்ணித்துணிந்த ஒரு கருத்தியல் நிலைப்பாடு” (பாரதி மறைவு முதல் மகாகவி வரை, ப.9) எனக் குறிப்பிடும் ஈழத்துப் பேராசிரியர் கா.சிவத்தம்பி, வரலாற்றுப் பொருள் முதல்வாத அணுகுமுறை இலக்கிய ஆய்விற்குப் பயன் படுத்தப்படுகின்றபோது, படைப்புக்கு வெளியே துருத்தாமல் உள்ளார்ந்து நிற்கவேண்டும் என்று கூறுகின்றார். மேலும், “இலக்கியத்தின் தளத்தில் நின்று கொண்டு வரலாற்றை ஆராய்ந்து அறிந்துகொள்ளவும் இம்முயற்சியில் வரலாறு, அரசியல் தொடர்பியல், பொருளியல், சமூகவியல் போன்ற சமூக அறிவியல் புலமைப்புலங்கள் யாவும் இடம்பெறும். மேலும், ஆய்வுமுறை என்பது பாலுள் நெய்யாக உள்ளார நிற்கவேண்டும்” (மேலது, ப.10) என வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறையை இலக்கியத்தில் பொருத்திப் பார்க்கும்போது பின்பற்ற வேண்டிய முறைமையை நுட்பமாக விளக்குகிறார்.

பிரதிபலித்தல் கோட்பாடு

மார்க்சியத் திறனாய்வுக் கொள்கையில், பிரதி பலித்தல் கோட்பாடும் மிக முக்கியமான ஒன்றாகும். ‘இலக்கியம் சமுதாயத்தின் பிரதிபலிப்பு’ என்கிற பிரதிபலித்தல் கோட்பாடு மார்க்சிய அழகியலில் முதன்மையானதாகும். புறவயமான அறிதல்மூலம், இலக்கியத்தில் படைக்கப்படும் உலகம் சமுதாயத்தின் பிரதிபலிப்பு ஆகும். முகம்பார்க்கும் கண்ணாடியின் பிரதிபலிப்பு அன்று; இது வித்தியாசமான பிரதிபலிப்பு; இது படைப்பாளியின் மனத்தை ஊடுருவி நிகழ்த்தப் படும் பிரதிபலிப்பு; முப்பட்டகக் கண்ணாடி வழியாக ஊடுருவும் சூரிய ஒளியின் ஒளிவிலகல் விரிவைப் போன்ற பிரதிபலிப்பு இது. ‘புறவயஉலகின் அகவயப் படிமம்தான் இலக்கியம்’ என்பது, லெனினின் பிரதி பலிப்புக் கோட்பாடாகும்.

மார்க்சும் ஏங்கல்சும் ‘பிரதிபலிப்பு’ என்கிற உருவகத்தை இலக்கியத்திற்குப் பொருத்திக்காட்ட வில்லை. ஆயின் அறிவுத்தோற்றவியலில் ‘மனித உணர்வு நிலையானது. சுற்றுப்புறத்தைப் பிரதிபலிக்கிறது’ என்றும், ‘புலன்உறுப்புக்கள் புறப்பொருள்களைப் பிரதி பலிக்கின்றன’ என்றும் ‘அடிப்படை மேற்கட்டு மானத்தில் பிரதிபலிக்கின்றது’ என்றும் பேசியுள்ளனர். (மேற்கோள்:தோதாத்ரி:1991:ப.46) லெனின்தான் இயங்கியல் பொருள்முதல்வாத அறிதல் கோட் பாட்டுடன் பிரதிபலித்தல் கருத்தினை இணைத்துப் பிரதிபலித்தல் கோட்பாட்டினை உருவாக்கினார். மேலும் ருசிய நாவலாசிரியர் ‘தல்ஸ்தோயினை 1905இல் நிகழ்ந்த ருசியப் புரட்சியின் கண்ணாடி’ எனக் குறிப்பிட்டார். பியர் மாஷெரி புறவய யதார்த்தத்தின் ஒருபக்கம் ஒரு கோணத்தில் பிரதிபலிக்கப்படுகிறது என விவாதித்தார். மேலும், ‘ஓர் உடைந்த கண்ணாடி அதன் பிம்பங்களை சிதறுண்ட வடிவத்தில்தான் தோற்று விக்கும். அது எதைப் பிரதிபலித்தது எதைப் பிரதி பலிக்கவில்லை என்பது வெளிப்பாட்டுத் தன்மையானது’ எனக் கூறினார். ஜெர்மானிய நாடகாசிரியரான பெர்தோல் பிரெக்ட், ‘கலை வாழ்வைப் பிரதிபலிக்கிறது என்றால், அது தனிச்சிறப்பான கண்ணாடிகள் வழியே தான் நிகழ முடியும்’ என்றார். ஜார்ஜ் லுக்காச், ‘புறவுலகைப் பற்றிய எல்லாப் புரிந்துகொள்ளுதலும் மனித உணர்வுநிலையில் பிரதிபலிப்பதன் வாயிலாக நிகழ்கிறது’ என்கிற லெனினின் பிரதிபலித்தல் பற்றிய அறிவுத்தோற்றவியல் கொள்கையை ஏற்றுக்கொள் கின்றார். உணர்வுநிலை ஒரு செயல்பாட்டு ஆற்றலாக விளங்குவதாகக் குறிப்பிடும் அவர், ‘அழகியல் உணர்வு நிலை என்பது வெறுமனே உலகைப் பிரதிபலிக்கிறது என்பதைவிட உலகின்மீது படைப்பாக்க இடையீடு செய்கிறதென’ விளக்குகின்றார். லியோன் பிராட்ஸ்கி, ‘அழகியல் படைப்பென்பது கலைக்குரிய தனிச்சிறப்பான விதிகளின்வழியே புறவய யதார்த்தத்தை வளைக்கிறது, மாற்றுகிறது மற்றும் உருமாற்றுகிறது’ என்கிறார். (டெர்ரி ஈகிள்டன்: ப.47) இதற்கு மேலாக பியர் மாஷெரி ‘இலக்கியத்தின் விளைவு என்பது அடிப் படையில் போலச்செய்தல் என்பதைவிட உருச்சிதைவு’ ஆகுமென்கிறார்.

யதார்த்தவாதம்

மார்க்சியத்தின் இலக்கியப் படைப்பாக்க முறையாக நடப்பியல் - சோஷலிச நடப்பியல் அமைகிறது. இலக்கியத்தில், சமூக யதார்த்தம், சத்தியம், சமூக மெய்ம்மைகள் ஆகியவை பிரதிபலிக்கப்பட வேண்டும் என்று மார்க்சியம் கோருகிறது. ‘இலக்கியத்தில் நடப்பியல் அல்லது யதார்த்தவாதம் என்பது, வாழ்க் கையின் உண்மையான மெய்ம்மைகளை அணுகுகிறது என்று மக்சீம் கோர்க்கி கருதுகின்றார். இலக்கியத்தில் சோஷலிச நடப்பியல் என்பது நடைமுறையிலுள்ள சோஷலிசப் படைப்பாக்கத்தின் மெய்ம்மைகளைப் பிரதி பலிப்பதாகும் என்று, கோர்க்கி மேலும் விளக்குகின்றார் (1982: ப.304). சோஷலிஸ நடப்பியல் என்பது 1917இல் ருசியப்புரட்சி நிகழ்ந்தபோது அங்கு உருவெடுத்த ஓர் இலக்கியப் படைப்பாக்க முறையென்றாலும், அது சோஷலிஸத்தை உலகில் விரும்பிய, வரவேற்ற - எல்லோராலும் பின்பற்றப்பட்டது. வாழ்க்கையின் உண்மையான, நேர்மையான பிரதிபலிப்பாக அமையும் சோஷலிஸ யதார்த்தவாதத்தை டிமிட்டி மார்கோவ் என்கிற திறனாய்வாளர் பலவிதமான அழகியல் வெளிப் பாடுகளை அனுமதிக்கும் திறவைத்தன்மை கொண்ட முறைமையாகப் பார்க்கின்றார். மேலும், அதனைத் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிற - காலத்தின் போக்கிற்கேற்ப தன்னைச் செழுமைப்படுத்திக் கொள் கின்ற இயங்கியல் தன்மைகொண்ட அழகியல் அமைப்பாக விளக்குகின்றார் (1984: ப.15).

சோஷலிஸ நடப்பியல் என்கிற, அழகியல் அமைப் பிற்குள் படைப்பாளி தனது படைப்பிற்கான பாடு பொருளைத் தெரிவு செய்வதிலும், அழகியல் அனுபவத்தை வெளிப்படுத்தும் பன்முகப்பட்ட உருவ உத்திமுறைகளைச் செய்வதிலும் - சுதந்திரமான வனாகவே திகழ்கின்றான். பாத்திரங்களையும் சூழல் களையும் வகைமாதிரிகளாக்கிப் படைத்தல், மார்க்சிய அழகியலின் ஒரு குறிப்பிடத்தக்க தன்மையாகும். இதன் காரணமாகவே ஏங்கெல்ஸ் “வகைமாதிரியான சூழல் களில் வகைமாதிரியான பாத்திர வார்ப்புகளை நிகழ்த்திக் காட்டுவதுதான் நடப்பியல்” என வரையறுத்துக் காட்டினார்.

தமிழ்ச்சூழலில் தொடக்கத்தில் சோஷலிஸ யதார்த்த வாதத்தை மார்க்சியத்தின் படைப்பாக்க முறையாக - இலக்கிய அணுகுமுறையாக - முன்னிறுத்தியவர், தொ.மு.சி.ரகுநாதன் ஆவார். இவரது ‘பஞ்சும் பசியும்’ நாவல் தமிழின் முதல் சோஷலிஸ யதார்த்தவாத நாவலாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து இதே பாணியில் டி.செல்வராஜ், ‘மலரும் சருகும்’, ‘தேநீர்’ முதலான பல நாவல்களை உருவாக்கினார். ஈழத்துப் பேராசிரியர் கா.சிவத்தம்பி தமிழ்ச்சூழலுக்கு விமர்சன யதார்த்தவாதமே (Critical Realism) பொருத்தமானதென விவாதித்தார். “யதார்த்தம் என்பது வெறுமனே உள்ளது அன்று. உள்ளதன் உண்மையைக் குறிப்பது. யதா-அர்த்தம் - எது பொருளோ, உண்மையோ அது. அது பற்றிய தெளிவு இருத்தல் வேண்டும்” எனக் குறிப்பிட்டு அவர் யதார்த்தவாதத்தின் பண்பினைப் பின்வருமாறு விளக்குகின்றார்: “சமூக இருப்புக்கும் மனித அசை வியக்கத்திற்குமுள்ள உறவுகளைத் தெளிவுபடுத்துவதே யதார்த்தவாதத்தின் பண்பு.” மேலும் அவர் “யதார்த்த வாதத்தின் சாரம் சமூகப் பகுப்பாய்வு ஆகும். சமூகத்தில் மனிதன் இயங்குவதையும் சமூக உறவுகளையும் தனிமனிதனுக்கும் சமூகத்துக்குமுள்ள உறவையும் சமூகத்தின் கட்டமைப்பை ஆராய்வதும் சித்திரிப்பதும் இதன் பணி” என்று தெளிவுபடுத்துகிறார். புரட்சியே நடக்காத நாட்டில் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டு வர முடியாது. சமூகத்தின் முழுமையான தரிசனத்தையும் கண்டு உண்மையான, நிலையான, சாத்தியமான வழி களைச் சுட்டுவதற்கு விமர்சன யதார்த்தவாதமே பயன்படும் என்பது பேராசிரியர் கா.சிவத்தம்பியின் கருத்தாக அமைகின்றது.

இலக்கியமும் கருத்துநிலையும்

கருத்துநிலைக்கும் (Idealogy) இலக்கியத்துக்குமான உறவுநிலை குறித்தும், ஊடாட்டம் குறித்தும் மார்க்சியத் திறனாய்வாளர்கள் விளக்கியுள்ளனர். “கருத்துநிலை என்பது ஒருவர், தமது சமூகநிலை காரணமாக உருவாக்கிக் கொள்ளும் கருத்து நிலைப்பாடு ஆகும். இந்த நிலைப் பாடே அவர் உலகத்தைப்பார்க்க, அதனை விளங்கிக் கொள்ள இயலும்” (2011: ப.2) எனப் பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிடுகின்றார். மார்க்ஸ் கருத்துநிலை என்பதனை, நம்பிக்கைகளின் தொகுதி, மதிப்புகள் (Values), மனிதர்கள் புறவுலக யதார்த்தம் எனக் கருதியவற்றைக் காண்பதற்கும் விளக்குவதற்குமான சிந்தனை முறை என வரையறுத்தார். அல்தூஸரின் மார்க்சியத் தத்துவத்தில் கருத்துநிலை முதன்மையான இடத்தைப்பெற்றுள்ளது. அவர் “இதனை ஒரு சமூகத்தில் தொழிற்படும் ஆதிக்க அரசியல் மற்றும் பண்பாட்டு நம்பிக்கைகள், மதிப்புகள் மற்றும் விதி முறைகள் அல்லது தனிமனிதர்களுக்கும் அவர்களது உண்மைச்சூழ்நிலைகள் சார்ந்த இருப்பிற்குமான கற்பனையான உறவுநிலையின் பிரதிநிதித்துவம்” என்று கருத்துநிலை குறித்து விளக்குகின்றார். ஏங்கல்ஸ், கலைக்கும் கருத்துநிலைக்குமான உறவு, மிகவும் சிக்கலானது எனக் குறிப்பிடுவார். இலக்கியத்துக்கும் கருத்துநிலைக்குமான உறவை இரண்டு எதிரெதிர் நிலைகளிலிருந்து விளக்குவதை டெர்ரி ஈகிள்டன் எடுத்துக்காட்டியுள்ளார்.

  1. இலக்கியம் என்பது, ஒரு குறிப்பிட்ட கலை வடிவிலான கருத்துநிலை அல்லாது வேறொன்றுமில்லை. அதாவது, இலக்கியம் என்பது, வெறும் அது தோன்றிய காலத்தின் கருத்துநிலைகளின் வெளிப்பாடுகளே! இலக்கியப் படைப்புகளை வெறுமனே ஆதிக்கக் கருத்துநிலைகளின் வெளிப்பாடாகப் பார்க்கும் இப்பார்வையை ‘மலினமாக்கப் பட்ட மார்க்சியத் திறனாய்வு’ என்று அவர் குறிப்பிடுவார்.
  2. இதற்கெதிரான மற்றொரு நிலைப்பாட்டி லிருந்து இலக்கியம் என்பது, எப்பொழுதும் கருத்துநிலையின் காலவரம்பினைக் கடந்து செல்வது என்று ‘எர்னஸ்ட் ஃபிஷர்’, ‘கருத்து நிலைக்கு எதிரான (Art Against Ideology) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் (மேற்கோள்: டெர்ரி ஈகிள்டன், ப.16).

அல்தூஸர், ‘கலை என்பதனை வெறும் கருத்தியலாகக் குறைத்துவிட முடியாது. கலை என்பது, கருத்தியலுடன் ஒரு குறிப்பிட்ட வகையான உறவுநிலையைக் கொண்டு உள்ளது’ என்கிறார். அல்தூஸரின் சகாவான பியர் மாஷெரி, இலக்கியத்துக்கும் கருத்துநிலைக்குமான உறவை, ‘மாயத்தோற்றம்’ (Illusion), புனைகதை (Fiction) என்ற இரண்டு கலைச் சொற்களின்வழி விளக்குகின்றார். மாயத்தோற்றம் மனிதனின் சாதாரண கருத்துநிலை அனுபவம் சார்ந்தது. படைப்பாளி தம் அனுபவத்தை வேறுபட்ட உருவத்திலும் கட்டமைப்பிலும் உரு மாற்றிக் கட்டமைக்கிறான். அவருடைய கருத்தின்படி, கலை என்பது கருத்துநிலை மாயத் தோற்றத்திலிருந்து நம்மை விடுவிக்க உதவுகின்றது என்பதாகும். இலக்கியத் துக்கும் கருத்துநிலைக்குமான உள்ளுறவைக் கா.சிவத்தம்பி மிகநுட்பமாக விளக்குகின்றார்: “இலக்கியமும் அவ்வாறு தான்; அது கருத்துநிலைக்குள் தோய்ந்துகிடக்கின்றது. விறகில் தீ போல, பாலிற்படு நெய்போல” (2011: ப.2).

தொடரும்...