தொழிலாளர் தோழர்களே,

நாம் இன்று கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறோம். நாட்டின் அனைத்துச் செல்வங்களையும் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் நம்முடைய அடிப்படை உரிமைகள், சங்கம் அமைக்கும் உரிமை, கோரிக்கைகளுக்காக போராடும் உரிமை, வேலை நிறுத்தப் போராட்ட உரிமை, தொழிலாளர் நலச் சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவை கூட முதலாளிகளாலும், அரசாங்கத்தாலும் காட்டுமிராண்டித்தனமாக மறுக்கப்பட்டு வருகிறது. பல நூற்றாண்டுகளாகப் போராடிப் பெற்ற 8 மணி நேர வேலை, ஓவர்டயம் ஊதியம், ஓய்வூதியம், வைப்புநிதி, மருத்துவ வசதிகள், மற்றும் பிற பயன்கள் மறுக்கப்படுகின்றன.

நிரந்தத் தொழிலாளர்கள் நீக்கப்பட்டு, அனைவரும் தற்காலிகத் தொழிலாளர்களாகவும், ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் மாற்றப்படுகிறார்கள். அமைப்பு சார்ந்த, அமைப்பு சாரா தொழிலாளர்கள், நடுத்தட்டு வர்க்கம், அரசுத் துறை, தனியார் துறை, நிரந்தர, தற்காலிக, ஒப்பந்த, பயிற்சித் தொழிலாளர்களென பல்வேறு வழிகளில் தொழிலாளி வர்க்கம் பிளவுபடுத்தப்பட்டு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அரசின் தொழிலாளர் துறையும், நீதி மன்றங்களும், காவல்துறையும் தொழிலாளர்களுடைய நலன்களையும், தொழிற் சட்டங்களையும் பாதுகாப்பதற்கு பதிலாக, முதலாளிகளுடைய கொள்ளைக்கும், அநீதிக்கும் துணை போகும் துறைகளாக செயல்பட்டு, தொழிலாளர்களை வஞ்சித்து வருகின்றனர்.

மொத்தத்தில் தொழிலாளி வர்க்கமானது கடுமையாக சுரண்டப்படுகிறது. தொழிலாளர்களுடைய உரிமைகளும், மனித உரிமைகளும் காலில் போட்டு நசுக்கப்படுகின்றன. நம்மைச் சுரண்டிக் கொள்ளையடித்து சேர்த்த மூலதனத்தைக் கொண்டு, இந்திய முதலாளிகள் உலகெங்கிலும் பல கம்பெனிகளை நிறுவி வருகிறார்கள், உலக அரங்கில் மிகப்பெரிய பணக்காரர்களாகக் கொழுத்து வருகிறார்கள்.

கடந்த பல்லாண்டுகளாக முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் சூழ்ச்சிகள் காரணமாக நம்முடைய ஒற்றுமை பல்வேறு வழிகளிலும் பிளவுபடுத்தப்பட்டு, தாக்கப்பட்டு வருகிறது. முதலாளி வர்க்க அமைப்புக்களும், ஊடகங்களும் திட்டமிட்ட முறையில் நம்முடைய சிந்தனையையும், போராட்ட உணர்வையும் மழுங்கடித்து வருகிறார்கள். போராட்ட ஒற்றுமையின்றி முதலாளி வர்க்கத்தின் தாக்குதல்களுக்கு முன்னால் நாம் நிராயுதபாணிகளாக இருக்கிறோம். முதலாளிகளும் அவர்களுடைய அரசாங்கமும் நம்முடைய எல்லா தொழிற் சங்க உரிமைகளையும், வாழ்வுரிமையையும், கடுமையாகத் தாக்கி எவ்வித பாதுகாப்புமின்றி ஒடுக்கப்பட்டும் கடுமையாகச் சுரண்டப்பட்டும் வருகிறோம்.

இந்த நிலைக்கு நாம் ஒரு முடிவு கட்ட வேண்டாமா? முதலாளிகளுடைய மூலதனத்தையும், இலாபத்தையும் பெருக்குவதே தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கை நோக்கமாக இருக்க வேண்டுமென்ற முதலாளி வர்க்கத்தின் பிற்போக்கான சுயநலமான கருத்தை உடைத்தெறிந்து விட்டு தொழிலாளி வர்க்கத்தின் முன்னேற்றத்தையும், சமூக வளர்ச்சியையும் நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டாமா? இந்த 21-ஆம் நூற்றாண்டின் வளர்ச்சிகேற்ப நம் வாழ்க்கைத் தரம் உயர வேண்டாமா? பல்வேறு வழிகளில் நம்முடைய ஒற்றுமையை உடைத்து முதலாளி வர்க்கத்தின் நோக்கங்களுக்குச் சேவை செய்யும் கட்சிகளையும், அமைப்புக்களையும் நாம் புறக்கணித்து உருக்கு போன்ற நம்முடைய ஒற்றுமையைக் கட்டிட வேண்டாமா?

வாருங்கள் தோழர்களே, தொழிலாளர் தினமான இந்த மேதினத்தில், நம் மீது நடத்தப்படும் சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் பிற அநீதிகளுக்கும் முடிவு கட்டுவோமென உறுதி ஏற்போம்.

முதலாளி வர்க்கம் சுரண்டுவதற்கும், ஒடுக்குவதற்கும், நம்மை ஆள்வதற்கும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் சேவை செய்யும் எல்லா சக்திகளையும் முறியடிப்போம்!

பிளவுகளை உடைத்தெறிந்து, தொழில் துறை, சங்கம், கட்சி வேறுபாடுகளைக் கடந்த அளவில் தொழிலாளர்களின் பரந்துபட்ட ஒற்றுமையைக் கட்டுவோம்!

மத்திய மாநில அரசுகளே,

• அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம், மருத்துவ வசதி, ஓய்வுகால வைப்பு நிதி மற்றும் சமூகப் பாதுகாப்பு கொடு!

• எல்லாத் தொழிலாளர்களுக்கும் பணி நிரந்தரமும், பாதுகாப்பும் வழங்கு! அனைவருக்கும் முழு ஊதியத்தோடு, நாளுக்கு அதிகபட்சமாக 6 மணி நேர வேலை என்ற நிலையைக் கொண்டு வா!

• குறைந்தபட்ச ஊதியமாக ரூ10,000 நிர்ணயம் செய்!

• தொழிற் சங்கம் அமைக்கும் உரிமையையும், வேலை நிறுத்தப் போராட்ட உரிமையையும் நிலைநாட்டு! தொழிற் சங்க உரிமைகளை நடைமுறைப்படுத்து! தொழிலாளர்களுக்கு ஆதரவாக சட்டங்களைத் திருத்து!

• ஒப்பந்தத் தொழில் முறைக்கும், கொத்தடிமைத் தொழில் முறைக்கும் முடிவு கட்டு!

• பெண் தொழிலாளர்களுக்கு ஆடவருக்கு சமமான ஊதியமும், பேறுகால விடுப்பும், பிற வசதிகளையும் உறுதி செய்!

• விலைவாசியைக் கட்டுப்படுத்து. தொழிலாளர்களுடைய ஊதியத்தை விலைவாசிக்கு ஏற்ப உயர்த்திடு!

• தனியார்மயம், தாராளமயம் மூலம் உலகமயமாக்குவதற்கு முடிவு கட்டு!

தொழிலாளர் தோழர்களே வாரீர்,

• சுரண்டல் அமைப்புக்கு முடிவு கட்டுவோம்!

• தொழிலாளிகள் - விவசாயிகளின் ஆட்சியதிகாரத்திற்காகப் போராடுவோம்!

• புரட்சி ஓங்குக!

மே தின ஆர்பாட்டம்
 நாள்   - மே 1, 2013. புதன் கிழமை
 நேரம் - காலை 10 மணியிலிருந்து 1 மணிவரை
 இடம் - கிண்டி தொழிற் பேட்டை வளாகம், சென்னை - 32
அனைவரும் திரண்டு வாரீர்!

பங்கேற்கும் சங்கங்கள்

வி.எச்.எஸ் மருத்துவமனைத் தொழிலாளர் சங்கம், ஏர் இந்தியா ஐக்கியத் தொழிலாளர் சங்கம், புரட்சிகர மக்கள் பாசறை, தமிழ்நாடு புரட்சிகர தொழிலாளர்கள் சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு, மக்களாட்சி இயக்கம், தொழிலாளர் வாழ்வுரிமை சங்கம், தக்ஷண் இரயில்வே எப்பிளாயிஸ் யூனியன், ஆல் இந்தியா லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசியேசன், இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற் சங்கம் மற்றும் பல தொழிற் சங்கங்கள்

- தொழிலாளர் ஒற்றுமை இயக்கம்
4/795, அண்ணா நகர், கொட்டிவாக்கம், சென்னை 600041 கைபேசி 7598069667, 8015660325

Pin It