இந்தியாவெங்கும் எழுச்சியான மே நாள் ஆர்பாட்டங்களும், பேரணிகளும்!

தில்லியில் கூட்டாக மே நாள் பேரணி!

தில்லியில் சர்வ தேச மே நாளைக் கொண்டாடுவதற்காக மே 1, 2017 அன்று ராம்லீலா திடலிலிருந்து சாந்தினி சவுக் வரை, தில்லியில் உள்ள எல்லா தொழிற் சங்கங்களின் கூட்டு மே நாள் குழுவின் தலைமையின் கீழ் எழுச்சிகரமான பேரணி நடத்தப்பட்டது. அது ஒரு பொதுக் கூட்டத்தில் முடிவுற்றது.

delhi may 600

தில்லியில் கூட்டாக நடத்தப்பட்ட மே நாள் பேரணி

பல்வேறுபட்ட தொழில் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்தப் பேரணியில் தங்களுடைய செங்கொடிகளையும், தங்கள் தொழிற் சங்கத் தட்டிகளையும் ஏந்தியவாறு பெருமையோடு பங்கேற்றனர். வங்கி மற்றும் காப்பீடு, போக்குவரத்து, இரயில்வே, துப்புறவு, தொழிற்சாலைகள், கட்டுமானம், ஆங்கன்வாடி, ஆஷா, மதிய உணவுத் திட்டம் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், மாணவர்களும், இளைஞர்களும் பேரணியில் பங்கேற்றனர்.

“மே நாள் வாழ்க! முதலாளித்துவம் ஒழிக! புரட்சி வாழ்க! தனியார்மயத்தை நிறுத்து! நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர்களே ஆட்சியாளர்களாக ஆக வேண்டும்! ஒருவர் மீது தாக்குல், அனைவர் மீதும் தாக்குதலாகும்! மாருதி-சுசூகி தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்க் குற்றச்சாட்டுகளை பின்வாங்கு! தண்ணீர், மின்சாரம், பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து எங்களின் மறுக்க முடியாத உரிமைகள் – அவற்றைத் தனியார்மயப்படுத்துவதை நிறுத்து! விதி விலக்கின்றி, எல்லாத் தொழிலாளர்களையும் தொழிற் சட்டங்களின் கீழ் கொண்டு வர வேண்டும்! ஒப்பந்தத் தொழில் முறையை ஒழித்துக் கட்டு! இது மக்களுடைய ஆட்சியல்ல, மூலதனத்தின் ஆட்சியாகும்!” போன்ற முழக்கங்களையும் தட்டிகளையும் ஏந்தித் தொழிலாளர்கள் அரசின் தொழிலாளர் விரோத, தேச விரோத, சமூக விரோத கொள்கைகளுக்கு எதிராகத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

இதே முழக்கங்களை எழுப்பியவாறு தொழிலாளர்கள் ஐந்து கிமீ தூரம் கொண்டப் பேரணியில் பங்கேற்றனர்.

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் மே நாள் அறைகூவலின் ஆயிரக் கணக்கான நகல்களை கட்சியின் தொண்டர்கள் பேரணியில் பங்கேற்றவர்களிடையே வினியோகித்தனர். தொழிலாளர் ஒற்றுமைக் குரல் இதழும் விற்கப்பட்டது.

பெரு நகர் வளாகத்தை அடைந்தவுடன் பேரணி ஒரு பொதுக் கூட்டமாக மாறியது. கூட்டத்திற்கு தோழர்கள் ஜே.பி.ஷர்மா(ஏஐபிஇஏ), அருண் ஷர்மா (ஏஐஆர்எப்) மற்றும் இரகுநந்தன் (பிஇஎப்இ)ஆகியோர் தலைமை வகித்தனர்.

கூட்டத்தில் தோழர்கள் சந்தோஷ் ராய் (ஏஐசிசிடியு), டி.எல். சச்தேவா (ஏஐடியுசி), ஆர்.கே. சர்மா (ஏஐயுடியுசி), அனுராக் சேக்சனா (சிஐடியு), நாராயன் சிங் (எச்எம்எஸ்), சந்தோஷ் குமார் (தொழிலாளர் ஒற்றுமை இயக்கம்), ஏகே மிஷ்ரா (டியுசிசி) மற்றும் அசிட் கங்குலி (யுடியுசி) ஆகியோரும் உரையாற்றினர்.

சிஜிபிஐ தில்லி மத்திய அலுவலகத்தில் மே நாள் விழா

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் மத்திய அலுவலகத்தில் மே நாள் விழாவை ஒரு பெண் தோழர் செங்கொடியை ஏற்றி வைத்துத் துவக்கி வைத்தார். அங்கு கூடியிருந்த அனைவரும் இன்குலாப் ஜிந்தாபாத்! மே நாள் வாழ்க! சிகாகோ தியாகிகளுக்கு செவ் வணக்கம்! தொழிலாளர்கள், உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் – நாமே இந்தியா நாமே அதன் மன்னர்கள்! ஆகிய முழக்கங்களை எழுப்பி செங்கொடிக்கு வணக்கம் செலுத்தினர்.

மே நாளின் முக்கியத்துவத்தை விவரித்த கட்சின் செய்தித் தொடர்பாளர், முதலாளித்துவ – ஏகாதிபத்திய அமைப்பிற்கு எதிராக நமது நாட்டிலும் உலகெங்கிலும் வலுத்துவரும் போராட்டங்களை விவரித்தார். தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பைத் தூக்கியெறிந்து, உழைக்கும் மக்களுடைய ஆட்சியதிகாரத்தை நிறுவும் கண்ணோட்டத்தோடு நாம் நம்முடைய வேலையை முன் கொண்டு செல்ல வேண்டும். தொழிலாளி வகுப்பின் அதிகாரம் மட்டுமே சமுதாயத்தை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீட்டு அனைவருக்கும் வளமையையும் பாதுகாப்பையும் அளிக்கும் என்றார். புரட்சிகர பாடல்களோடும், முழக்கங்களோடும் கூட்டம் நிறைவுற்றது.

சென்னையில் மே நாள் பேரணிகளும் கூட்டங்களும்

சென்னையிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் பல்வேறு தொழிற் சங்கங்களும், தொழிலாளர் அமைப்புக்களும் இந்த ஆண்டு மே நாளில் எதிர்ப்பு ஆர்பாட்டங்களையும், கூட்டங்களையும் நடத்தினர். தொழிலாளர்கள் தத்தம் தொழிற்சாலைகளில் செங்கொடி ஏற்றி கூட்டங்களை நடத்தினர். மாலையில் பல தொழிற் சங்கங்கள், முக்கிய இடங்களில் பேரணிகளையும், பொதுக் கூட்டங்களையும் நடத்தினர்.

chennai may func 600

சென்னை விஎச்எஸ் மருத்துவமனையின் நுழைவாயில் கூட்டம்

 விஎச்எஸ் மருத்துவமனைத் தொழிலாளர்களும், மருத்துவப் பணியாளர்களும் தங்கள் மருத்துவ மனையின் நுழை வாயிலில் செங்கொடியை ஏற்றினர். மே நாள் கூட்டத்தில் விஎச்எஸ் தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் எஸ்.மணிதாசனும், பிற தலைவர்களும், தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் செயல் வீரர்களும் உரையாற்றினர். அவர்கள் நிர்வாகமும், அரசாங்கமும் தொழிலாளர்கள் மீது நடத்திவரும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்தனர். நம்முடைய உரிமைகளுக்காகப் போராடுவதற்கு ஒற்றுமையின் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். தங்களுடைய தொழிற் சங்கத்தை வலுப்படுத்தி, தங்களுடைய உரிமைகளுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் போராடுவதென அவர்கள் உறுதியேற்றனர்.

மே நாளை ஒட்டி தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் வெளியிட்ட அறிக்கையை மறைமலை நகரில் போர்டு, யுசிஏஎல், சியுஎம்ஐ ஆகிய தொழிற் சாலைகளிலும், தாம்பரம், கிண்டி தொழிற் பேட்டையிலும், ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையிலும், கேளம்பாக்கத்தில் உள்ள தொழிற்சாலைகளிலும், ஆடைத் தொழிற்சாலைகளிலும், தொழிலாளர்களின் பேரணிகளிலும், கூட்டங்களிலும் தொழிலாளர்களிடையே தோழர்கள் வினியோகித்தனர். தங்களுடைய வாழ்வாதாரத்தின் மேலும், உரிமைகள் மீதும் அரசாங்கமும், முதலாளித்துவ நிர்வாகமும் நடத்திவரும் அதிகரித்தத் தாக்குதல்கள் குறித்து தொழிலாளர்கள் மிகவும் கோபத்தோடு இருந்து வருகிறார்கள். அவர்கள் இந்தத் தாக்குதல்களை எதிர்த்து ஒற்றுமையோடு போராடுவதென மே நாளில் உறுதி ஏற்றனர்.

ஆம்பூரில் மே நாள் பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம், ஆம்பூரில் மே நாள் பொதுக் கூட்டத்தை மே 27 அன்று நடத்தினர். நூற்றுக் கணக்காக திரண்டிருந்த தொழிலாளர்களிடையே த.நா.தொ.ச.ந-த்தின் பொதுச் செயலாளர் தோழர் ரூபன் தலைமையுரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து தட்சணா மூர்த்தி, சங்கர், தங்கவேலு ஆகிய தோழர்களும், தோழர்கள் எஸ்.பாலன், ஆர். சங்கரசுப்பு, வி.பாலு, ஆர்.டி.மூர்த்தி, ஏ.கபிலன், மு.பிரதாபன், செந்தமிழ்முருகன் ஆகியோரும் சிறப்புரையாற்றினர். தொழிலாளர்கள் மீது முதலாளிகளும், அரசும் நடத்திவரும் தாக்குதல்களைப் பேச்சாளர்கள் வன்மையாகக் கண்டித்தனர். உரிமைகளுக்காகப் போராடவும்,  ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றவும் தொழிலாளர்கள் அணி திரள வேண்டிய அவசியம் குறித்தும், ஒற்றுமையை வலியுறுத்தியும் அவர்கள் பேசினர்.

நாட்டின் பிற பகுதிகளில் மேநாள் பேரணிகள்

உத்திராகண்ட் ருத்திராபூரில் உத்தம் சிங் நகரின் தொழிலாளர்களின் கூட்டு முன்னணி மே நாளில் சிட்குல் தொழிற் சாலைப் பகுதியில் ஒரு கூட்டத்தையும் நடத்தினர். அவர்கள் சிட்குல் பேருந்து நிலையத்தை நோக்கி பேரணியையும் நடத்தினர்.

பிரிட்டானியா தொழிற் சங்கம், ரானே மெட்ராஸ் ஊழியர் சங்கம், பான்ட்நகர் மற்றும் லால்பூர் இடங்களைச் சேர்ந்த மகேந்திரா சிஐஇ தொழிலாளர் அமைப்புக்கள், டெல்பி, டிவிஎஸ் கூட்டுத் தொழிற் சங்கம், தாய் சுமிட் நீல் ஆடோ தொழிற் சங்கம், மேன்டிரி மென்டாலிக்ஸ், ஆடோ லைன் ஊழியர் சங்கம், டாடா மோட்டார்ஸ் தொழிற் சங்கம், டெல்டா ஊழியர் சங்கம், டாடா ஆடோ காம் சிஸ்டம்ஸ் தொழிற் சங்கம், வோல்டாஸ் ஊழியர் சங்கம், எல்ஜிபி தொழிற் சங்கம், என்எம்பிஎஸ், டிஎஸ்என், ஆர்ஏபி டிரான்ஸ்மிஷன்ஸ், பிடியுஎஸ்எஸ்கேயு, எம்கே ஆடோ, பான்ட்நகர் மற்றும் கிசிசா இடங்களில் உள்ள இன்டார்ச் தொழிற் சங்கங்கள், இரா தொழிலாளர் அமைப்புக்கள், டாடா யாஸிகி, பாட்வி சங்கம், என்பிஎல், சிஐஎஸ் சங்கம், இன்குலாபி மஸ்தூர் கேந்திரா, மஸ்தூர் ஸாயோக் கேந்திரா, ஏஐசிசிடியு, சிஐடியு, கிசார் மோர்ச், சிபிஐ ஆகியோர் தலைமையின் கீழுள்ள தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.

 

Pin It