முந்தைய பகுதி - பொதுவுடைமை தான் என்ன? - 3. நிலப் பிரபுத்துவச் சமூகம்
அடிமைச் சமூகத்திலும், நிலப் பிரபுத்துவச் சமூகத்திலும் உழைக்கும் மக்கள், தங்கள் எஜமானர்களின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் இருந்தனர். முதலாளித்துவச் சமூகமோ சுதந்திரம் என்ற ஆராவாரத்துடன் உதித்தது. யாரும் யாரையும் வேலை செய்யும்படி, கட்டாயப் படுத்த முடியாது. யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம். சொந்தமாகத் தொழில் செய்யலாம். வேலை செய்யாமலும் இருக்கலாம். “எல்லாவற்றிற்கும்” சுதந்திரம் உண்டு என்று முதலாளித்துவம் பறைசாற்றியது. ஆனால் காலப் போக்கில் இயந்திரங்களுடன் போட்டி போட முடியாமல் கைத்தொழில்கள் நசிந்தன. முன்பு விவசாயமே தலைசிறந்த தொழிலாக இருந்தது. ஆனால் இப்பொழுது அது இரண்டாம் தரத் தொழில் ஆகி விட்டது. இதனால் ஒரு மனிதன் வாழ்வதற்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றைப் பெற வேண்டும் என்றால், அவன் இயந்திரங்களை உடைமையாகக் கொண்ட யாராவது ஒரு முதலாளியிடம் வேலைக்குச் சென்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதாவது முதலாளித்துவத்தில், உழைக்கும் மக்களுக்குச் சுதந்திரம் கிடைப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டதற்கு மாறாக, அது உண்மை அல்ல; மாயை என்று மிக விரைவிலேயே தெரிந்து விட்டது.
‘தாங்கள் போராடியது அனைத்தும் வீண்’ என்று உழைக்கும் வர்க்கம் தெரிந்து கொண்ட நிலையில், அதை விடப் பெரிய அதிர்ச்சி ஒன்று உழைக்கும் வர்க்கத்தினரை மட்டும் அல்லாது முதலாளிகளையும் சேர்த்து ஒரு சேரத் தாக்கியது. அது தான் பொருளாதார நெருக்கடி. முந்தைய சமூகங்களில், இயற்கை உற்பாதங்களினாலோ, உழைக்கும் மக்களின் போராட்டங்களினாலோ உற்பத்தி குறைந்தால் பஞ்சம் ஏற்படுவது இயல்பாக இருந்தது. ஆனால் முதலாளித்துவச் சமூகத்தில் உற்பத்தி அதிகமாகச் செய்யப்பட்ட காரணத்தினாலேயே பஞ்சம் ஏற்பட்டது. பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், அவற்றை விற்க முடியாத போது, மறு உற்பத்தி செய்வது தடை பட்டது. மறு உற்பத்தி செய்ய முடியாத நிலையில் தொழிலாளர்களுக்கு வேலை அளிக்க முடியவில்லை. வேலை இல்லாத தொழிலாளர்களால் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வாங்க முடியவில்லை. இந்த விஷச் சக்கரத்தில் மாட்டிக் கொண்ட முதலாளித்துவம் புதிய சந்தைகளைத் தேடியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்படிப் புதிய சந்தைகளைத் தேடும் போது நாடுகளுக்கு இடையே போர்கள் தவிர்க்க முடியாமல் போயிற்று. போர்களினால் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அழிவுற்ற நிலையிலும், புதிய சந்தைகளைக் கைப்பற்றியதிலும் புதிய பொருட்கள் உற்பத்தி செய்யக் கிடைத்த வாய்ப்பினால், மீண்டும் உற்பத்திச் சக்கரம் சுழல ஆரம்பித்தது. ஆனால் இந்த விஷச் சக்கரம் சிரஞ்சீவியாகவே இருப்பதால், பொருளாதார நெருக்கடியும் போரும் முதலாளித்துவத்தின் பிரிக்க முடியாத அம்சங்களாக உள்ளன.
ஒரு பொருளின் மதிப்பு அதில் அடங்கியுள்ள உழைப்புக்குச் சமம். ஆகவே அதை உருவாக்கிய உழைப்பாளிக்குத் தான் மொத்த மதிப்பும் சேர வேண்டும். அடிமைச் சமூகத்தில் ஆண்டான் பறித்துக் கொண்டதைப் போலவும், நிலப் பிரபுத்துவச் சமூகத்தில் நிலப் பிரபு பறித்துக் போலவும், முதலாளித்துவச் சமூகத்தில் முதலாளி உழைப்பின் மதிப்பைப் பறித்துக் கொண்டார் / கொள்கிறார். முந்தைய சமூகங்களில் உழைப்பின் மதிப்பைப் பறித்துக் கொண்டது தவறு / குற்றம் / கொடுமை என்பதை இப்போது தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அன்றைய அறிவு ஜீவிகளால் அன்றைய சூழ்நிலையில் அக்கொடுமைகளைப் புரிந்து கொள்ள “முடியவில்லை”.
ஆளும் வர்க்கத்தினரின் செல்வச் செழிப்பைப் பார்த்து, நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுவதாகப் பதிவு செய்து வைத்து உள்ளனர். அதுவும் வறுமையில் வாடிய நிலையிலேயே அவ்வாறு எழுத வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இன்றும் முதலாளித்துவத்தில் மக்கள் படும் கொடுமைகளைக் கண்டும், எல்லாம் சரியாக இருப்பதாகக் கூற வேண்டிய கட்டாயத்தில் பல அறிவு ஜீவிகள் உள்ளனர். உண்மையைக் கூறுபவர்கள் இருட்டடிப்பே செய்யப்படுகின்றனர்.
முதலாளித்துவப் பொருளாதாரம் அனைத்து மக்களுக்கும் சுதந்திரத்தை அளிக்கிறது என்றும் சந்தை விசை அதை உறுதி செய்கிறது என்றும் முதலாளித்துவ அறிஞர்கள் கூறுகிறார்கள். ஒருவன் சந்தையில் அளவுக்கு மீறி இலாபம் வைத்து விற்க முயன்றால், இன்னொருவன் அவனுக்குப் போட்டியாக வரும் பொழுது விலையைக் குறைத்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும், ஆகவே ஏற்ற இறக்கம் என்பது ஒரு சிறிய கால கட்டத்தில் வேண்டுமானால் இருக்கலாம்; ஆனால் நீண்ட காலத்திற்கு அவ்வாறு இருக்க முடியாது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் பண்டங்களின் மதிப்பில் ஒரு பகுதியை மட்டும் அளித்து விட்டு மீதம் உள்ளதை (அதாவது மிகை மதிப்பை) இலாபமாக முதலாளிகள் வைத்துக் கொள்வதால் உற்பத்திப் பொருட்களின் மதிப்புக்கும் சந்தையில் புரளும் பணத்திற்கும் பொருத்தம் இல்லாமல் போய், மக்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய முடியாமலும் மக்களுக்குத் தேவை இல்லாத பொருட்கள் உற்பத்தி செய்யப் படுவதுமாக மனித இனத்திற்குச் சற்றும் பொருத்தம் இல்லாத நிலைக்குக் கொண்டுபோகிறது.
முதலாளித்துவம் மனித இனத்திற்குச் சற்றும் ஒவ்வாத முறை என்பதை இன்றைய உலக நிகழ்வுகள் தெளிவாக எடுத்துக் காட்டவே செய்கின்றன. இதற்குக் கணக்கின்றி எடுத்துக் காட்டுகளைக் கூறலாம். ஒரு சில மட்டும் இங்கு காட்டப்பட்டு உள்ளன. உலகில் கோடிக் கணக்கான் மக்கள் பசியால் வாடுகின்றனர். ஆனால் உணவு உற்பத்தியில் மூலதனம் ஈடுபடுத்தப் படுவது இல்லை. அது மட்டும் அல்ல. கிடங்குளில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ள தானியங்கள் எலியினங்களுக்கும் மற்ற பறவைகளுக்கும் உணவாகியும் மக்கிப் போகவும் விடப்பட்டாலும், அவற்றைப் பசியால் வாடும் மக்களுக்குக் கொண்டு போய்க் கொடுக்க முடியவில்லை. ஏனெனில் அவ்வாறு மூலதனத்தை ஈடுபடுத்துவதற்கு, முதலாளித்துவ முறை வழி விடுவது இல்லை. அவ்வாறு செய்ய வேண்டும் என்று கடுமையான முறையில் ஆணையிட்ட உச்ச நீதிமன்றமும், தன் ஆணை நிறைவேற்றப் படவில்லை என்று கவலைப் படவில்லை; நீதிமன்ற அவமதிப்பு என்ற பேச்சும் எழவில்லை.
உழைக்கும் மக்களிடம் இருந்து சுரண்டிய பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல், அண்ட வெளிச் சுற்றுலா (space picnic) போன்ற பைத்தியக்காரத்தனமான களியாட்டங்களில் செலவு செய்து கொண்டு இருக்கிறார்கள். முதலாளிகளின் பணம் இலாபகரமாக ஈடுபடுத்தப் புதுப் புது வழிகளைக் கண்டு பிடிக்கும் உத்திகளாக, குடி நீர் விலைப் பொருளாக மாற்றப்பட்டு உள்ளது; நெடுஞ்சாலைகள் சுங்க வரிச் சாலைகளாக மாற்றப்பட்டு உள்ளன. மருத்துவம் வணிக மயமாக்கப்பட்டு ஒரு மனிதனின் நோய்க்கு ஏற்றாற் போல் சிகிச்சை அளிப்பதற்குப் பதிலாக, அவனுடைய செல்வ நிலைக்கு ஏற்றாற் போல் சிகிச்சை அளிக்கப் படுகிறது. இது போன்ற மனித சமூகத்தின் பெருமையைக் குலைக்கும் செயல்களை மாற்ற முடியாத படி தடுத்து நிற்பது, அதிக இலாபம் தரும் தொழில்களில் தான் மூலதனத்தை ஈடுபடுத்த வேண்டும் என்ற முதலாளித்துவ உற்பத்தி முறை தான்.
முதலாளித்துவ அமைப்பின் இன்னும் ஒரு தவிர்க்க முடியாத அம்சம் வேலை இல்லாத் திண்டாட்டம். அனைவருக்கும் வேலையைத் தருவது என்பது முதலாளித்துவ அமைப்பினால் முடியாது என்பது மட்டும் அல்ல; வேலை இல்லாப் பட்டாளம் உயிர்ப்புடன் இருந்தால் தான் முதலாளிகளால் தொழிலாளர்களை மிரட்டிப் பணிய வைக்க முடியும். ஆகவே இந்த அமைப்பில் அடிமைத்தனத்தை ஒழிப்பது என்பது கனவிலும் நடவாத செயல். இது போன்ற, மனித இன மாண்பைச் சிதைக்கும் சக்திகளைக் களைந்து, மனித இனத்தின் சுதந்திரத்தையும், மாண்பையும் காக்க, சோஷலிச சமூகத்தினால் முடியும். எப்படி என்பதை பொதுவுடைமை தான் என்ன? - 5. சோஷலிச சமூகம் என்ற அடுத்த கட்டுரையில் காண்போம்.
(தொடரும்)
- இராமியா