இன அழிப்பு என்றால், அது மனிதர்களைக் கொன்று குவிப்பது மட்டுமே அல்ல. பல்வேறு வடிவங்களில், இன அழிப்பு நிகழ்கிறது. இலங்கையில் இத்தகைய இன அழிப்புத் தொடங்கப்பட்டு,எத்தனையோ ஆண்டுகளாகி விட்டன. பல்வேறு வடிவங்களில் திட்டமிட்டு, அவை அரங்கேற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாக வெளிப்பட்ட உச்ச கட்டம் தான் முள்ளிவாய்க்காலில் மே மாதம் நடந்து முடிந்த இன அழிப்பு. 

1949 ஆம் ஆண்டு ஆக. 12 ஆம் நாள் இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச ஜெனிவா பிரகடனம் வெளியிடப்பட்டது. ஜெனிவா உடன் பாட்டுக்கு எதிரான போர்க் குற்றங்களை இலங்கை சர்வதேச ஆதரவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தமிழர்கள் மீது திட்டமிட்டு கட்டவிழ்த்துவிட்டது. இன அழிப்புகள் திட்டமிட்டு, எப்படி நடத்தப்படுகின்றன? இந்தக் கேள்விக்கான விடையைப் புரிந்து கொள்வதற்கு தொன்மங்களின் வேர்களைத் தேடிப் போக வேண்டும். அய்ரோப்பாவில் யூதர்கள் மீதான வெறுப்பு திடீரென்று வந்துவிடவில்லை. அதற்கு நீண்ட காலப் பின்புலம் உண்டு. அந்த வெறுப்பும் பகையும் காலம்காலமாக வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. அதேபோல் ஈழத் தமிழர்கள் மீது சிங்களர்களின் வெறுப்புக்கான மூலத்தை தொன்மங்களிலிருந்து தேட வேண்டியிருக்கிறது. இத்தனைக்கும் யூதர்கள் அய்ரோப்பாவில் குடியேறியவர்கள். ஆனால், தமிழர்களோ, ஈழத்தின் மண்ணின் மைந்தர்கள். சிங்களர்கள்தான் வந்தேறிகள். சிங்களர்களின் புனித நூலான ‘மகா வம்சம்’ இந்த வரலாற்று உண்மையை ஒப்புக் கொள்கிறது. ஆனாலும், அதே ‘மகாவம்சம்’ தமிழர்கள் மீதான வெறுப்பை விதைத்தது. சிங்கள பேரினவாதத்துக்கான ஊற்றுக்கண் மகாவம்சமேயாகும். காலம்காலமாக மகா வம்ச மன நிலைக்கு உள்ளான சிங்களர்கள், பூர்வீகத் தமிழர்களின் உரிமைகளைப் புறக்கணித்து, இலங்கையை ஒற்றைப் பிரதேசமாக்கி, புத்த சிங்களர்களின் நாடாக அறிவித்துவிட்டனர். மதச் சார்பற்ற கலாச்சாரத்தை மதித்து வாழ்ந்த தமிழர்களை வெறுப்புக்கும் பகைமைக்கும் உரியவர்களாக சிங்களம் நடத்தியதற்கு மகாவம்ச சிந்தனைதான் காரணமாகும். 

2002 ஆம் ஆண்டு உருவான போர்நிறுத்த ஒப்பந்தத்தை தன்னிச்சையாக முறித்தது இலங்கை அரசு. வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதலை நடத்தியபோது தமிழர்கள், அங்கிருந்து எங்கே பாதுகாப்பு தேடி ஓடினார்கள்? சிங்களர்கள் பகுதிக்கா? அல்ல; விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டின் கீழ் நிர்வகித்து வந்த பகுதியைத்தான் அவர்கள் தேடிப் போனார்கள். அங்கே நடந்த அறிவிக்கப்படாத தமிழ் ஈழ ஆட்சியைத்தான் ஆதரித்தார்கள். அதுவே அவர்களின் அரசியல் இலக்காகவும் இருந்தது. அப்படிச் சென்றவர்களும் தற்காலிகமாக குடியேறுவதற்குப் போகவில்லை. தங்களது உடைமைகள் எல்லாம் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் ஏதுமற்ற நிலையிலேதான்அவர்கள்  புலிகள் ஆட்சிப் பகுதிக்குப் போய் அங்கேயே தங்களை குடியமர்த்திக் கொண்டார்கள். ஆனால், அவர்களை உள்நாட்டிலே புலம் பெயர்ந்தவர்களாக இலங்கை அரசு கூறியது. அது உண்மையல்ல. அவர்கள் புலம் பெயர்ந்தவர்கள் அல்ல; உடைமைகள் முற்றாக அழிக்கப்பட்டு, ராணுவத்தால் விரட்டி அடிக்கப்பட்டவர்கள் என்பதே சரி. இப்படி, பொது மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து, அவர்கள் விருப்பத்துக்கு மாறாக,விரட்டி அடிப்பதே, மானுடத்துக்கு எதிரான குற்றம். அதாவது போர்க் குற்றம். 

பொது மக்களின் பாதுகாப்பு  வளையங்கள் மீது தாக்குதல் நடத்துவதும், குழந்தைகளையும், பெண்களையும் கொன்று குவித்ததும், உணவு கிடைக்காமல் பட்டினி போட்டதும் போர்க் குற்றங்கள்தான்.  இவற்றை நீண்டகாலத் திட்டமிடல் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். 

நீண்டகாலமாகவே தெற்கில் (கொழும்பு பகுதி) வாழும் தமிழர்கள் அச்சத்தின் பிடியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது,தமிழர் பகுதியில் வாழும் தமிழர்கள் உடைமைகள் அழிக்கப்பட்டுவிட்டன. வாழ்விடங்கள் பறிக்கப்பட்டன. இராணுவத்தின் பிடிக்குள் அவர்கள் தவிக்கிறார்கள். இது உளவியல் ரீதியான அழித்தல். 

மீண்டும் தமிழர்கள், தங்கள் பகுதியில் குடியமர்த்தப்படவில்லை. அவர் களுக்கான மீள் குடியேற்ற உரிமைகளை ராணுவம் பறித்து வைத்திருக்கிறது. வளர்ச்சிப் பணிகள் என்பதாகக் கூறிக் கொண்டிருக்கும் திட்டங்களை நிறைவேற்றும் உரிமையை ராணுவம் எடுத்துக் கொண்டு, அதற்காக சர்வதேச உதவிகளைக் கோருகிறது. இது கட்டமைப்புகளை அழித்தல் ஆகும். 

‘வளர்ச்சி’த் திட்டம் என்று கூறிக் கொண்டு தமிழர்களின் பாரம்பர்யப் பகுதியில் இராணுவம் சிங்களர்களைக் குடியேற்றுகிறது. இதனால் தமிழர் பகுதிகளிலேயே தமிழர்களை சிறுபான்மையினராக்கப்பட்டு,சிங்களர் வாழும் பிரதேசமாக மாற்றப்படுகிறது. மக்கள் தொகை வீதம் மாற்றியமைக்கப்படுகிறது. இனச் சமன்பாடுகள் மீதான அழித்தல். 

இப்போது அடைக்கலம் தேடி தமிழகம் வரும் தமிழர்கள், தமிழர் பகுதிகளில் புத்தர் கோயில்கள் கட்டப்படுவதாகவும், தமிழர் வாழும் ஊர்ப் பெயர், வீதியின் பெயர்களை மாற்றி சிங்களப் பெயரிடப்படுவதாகவும் கூறுகிறார்கள். இது கலாச்சார அடையாள அழிப்பு. 

இப்படி - இனப்படுகொலை என்ற அழித்தொழித்தல் வடிவம் மட்டுமின்றி உளவியலாகவும், இனச் சமன்பாடுகளைக் குலைத்தும்,கலாச்சார அடிப்படையிலும் வாழ்வியல் கட்டமைப்புகளை சிதைத்தும் அழிப்புகள் பல்வேறு வடிவங்களில் நிகழ்ந்து கொண்டிக்கின்றன.  இவை எல்லாமுமே ஜெனிவாவின் உடன்பாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளேயாகும். 

- டெல்லிக் கருத்தரங்கில் கொளத்தூர் மணி ஆற்றிய உரையிலிருந்து (ஏப்.15)

Pin It