இந்த வாழ்வு சக மனிதர்களால் ஆனது. மானுடத்தின் கவசம் நம்மை சுற்றி இருக்கும் உறவுகளாலும்...நட்புகளாலுமே பலமாகிறது. இலக்கியம் மானுடத்தின் நேர்த்தி. மானுடம் இலக்கியத்தையும் சேர்த்தி.
மணிக்கொடி காலம் தொட்டு வானம்பாடி காலம் கடந்து இதோ இப்போது காற்றுவெளி என்று மின்னிதழ் காலம் வரை இலக்கியம் தன்னை எப்படியும் தக்க வைத்துக் கொள்ளும் வல்லமை பெற்றிருக்கிறது. தமிழின் விரல் பிடித்தோர் வழி தவறியது இல்லை என்பதாகவே நாம் எழுதும் வரலாறு இருக்கட்டும். அந்த வகையில்...காற்றுவெளி மின்னிதழ் பல வருடங்களாக அச்சிதழாகவும்...காலத் தேவைக்கு தகுந்தாற் போல தன்னை தகவமைத்துக் கொண்டு மின்னிதழாகவும் வெளிவருவது நாம் அறிந்ததே.
கவிதை... சிறுகதை... நூல் அறிமுகம்... இலக்கிய ஆய்வுகள் என படைப்புகள் நிறைந்த பொக்கிஷமாகவே தான் ஒவ்வொரு மாதமும் நான் அதைக் காண்கிறேன். இந்த மாதத்தில் நம்ம படைப்பு எதுவும் வந்திருக்கிறதா என்று ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஆவலை அதிகப்படுத்தும் வகையில் அதன் கட்டமைப்பு அமைத்திருப்பது இலக்கிய தரத்துக்கு சான்று. அவ்வப்போது சிறுகதைச் சிறப்பிதழ்... சிற்றிதழ் சிறப்பிதழாகவும் வருவது இலக்கிய இணைப்பு...இல்லை இல்லை... இலக்கிய இனிப்பு.
படைப்புகள் மானுட சமூகத்தின் கண்ணாடி. முடிந்தளவு நம்மை நாமே பிரதிபலிக்கும் தத்துவத்தை வடிவமைத்துக் கொண்டே இருக்க... கலை இலக்கியம் உதவுகிறது. தன்னை தானே உணர்தல் மூலமாக பிறரையும் உணர செய்யும் வடிவத்தை எழுத்துக்கள் மூலமாகத் தான் கண்டடைய முடியும் என்பது எழுத்தால் ஆன மனம் நம்பும் இயல்பு. அகம் நோக்கி நகரும் அதே வேளையில் புறம் நோக்கியும் நகரும் எழுத்துக்கள் தான் காலம் தாண்டியும் நிற்கும். ஏதோ ஒரு வகையில் மனித குலத்திற்கான தத்துவ விசாரணையை தொடர்ந்து எழுத்து நிகழ்த்த வேண்டும். அத்தகைய நகர்வுக்கு அடித்தளம் அமைத்து தந்திருக்கிறது காற்றுவெளியின் காகித வெளி. ஆரம்ப கட்டத்தில் இருந்து அடுத்த கட்டம் நகர நினைக்கும் படைப்பாளிகளுக்கு ஆசிரியராக மாறும் காற்றுவெளி ஒவ்வொரு பக்கத்திலும் மொட்டவிழுந்த மலரினைப் போல சொற்களைக் கொண்டிருக்கிறது.
தொடர் வாசிப்பு தான் தொடர்ந்து இலக்கிய உலகத்தில் இயங்க வைக்க ஏதுவாகும். அப்படி காற்றுவெளி இதழின் வழியே ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு துளிர் விடுகிறது... படித்துணரும் மானுடம். அதன் தொடர்ச்சியில்... மனதின்.....அறிவின்.... விசாலம் பெருகும் என்பதில் ஐயமில்லை. இலக்கியமே இந்த வாழ்வின் முரண்களை களையும் மானுட மொழி. அதன் உருவம் உடமை... உயிர் எல்லாமே மனித நேயம் தான். அதன் தீர்க்கத்தின் தீஞ்சுவாலைகள் எழுத்துக்களின் வழியே தன்னை நிகழ்த்தி நிகழ்த்தி சரி செய்து கொண்டே இருப்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம். பொதுவில் போட்டு பொதுவில் கிடைக்க செய்யும் அறிவின் தீர்க்கமே இங்கு ஆதுரம். பொதுமையில் தான் புதுமைகள் நிகழ வாய்ப்பிருக்கிறது. அந்த புதுமைகளை சத்தமில்லாமல் நிகழ்த்திக் கொண்டிருக்கும் காற்றுவெளி இதழ் நமக்கெல்லாம் நமக்கு நாமே எழுதும் அன்பின் மடல்.
வாசகர்களின் அலைபேசியில் உருகும் காற்றுவெளி ஒவ்வொரு மாதமும் அந்த மாதம் முழுக்க ஓடி உழைத்த மனங்களில் உற்சாகம் ஊற்றுகிறது என்றால் மிகை என்று நினைப்போர் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. அதன் அமுதம் பருகியோர்... ஆம் என்பார்கள். ஒவ்வொரு பக்கத்திலும் பார்த்து பார்த்து செதுக்கிய பவள கூடுகள்... பாறை நடுவே செய்து பார்த்த சித்திர வேலைகள்... இலை உதிர்த்த மரங்களின் தனித்த சொல்லாடல்கள்... நதி ஓட நாள் ஓடும் கரையின் தவிப்புகளென சிறுகதைகளும் கவிதைகளும் அமர்க்களப் படுத்துவதை யாம் அறிவோம். நேர்த்தியான வடிவமைப்பும் நெகிழ்வான கருத்தியல்களும் கோலோச்சும் காற்றுவெளி ஏனோ தானோவென எழுதுவோருக்கு ஒருபோதும் இடம் கொடுப்பதில்லை. தரத்தினால் தாகம் தீர்க்க எண்ணுவோருக்கு தன்னையே நீராக்கி பக்கம் பக்கமாய் சொட்டுவதில் காற்றுவெளி வான மழை. தெளிவான இடைவெளியில்... தெவிட்டாத சொல்வனத்தில்... சொற்களுக்கான வடிவம் நுண்ணிய தொழிநுட்பத்தை லாவகமாக கையாண்டிருக்கும்.
ஒவ்வொரு படைப்புக்கும் நேர்த்தியாய் நெய்யப்பட்ட நெருப்புத்துண்டு போல ஒவ்வொரு ஓவியமும் கோடுகளால் அந்தந்த படைப்பின் பொருள் பாடியிருக்கும். மெனெக்கெடாமல் அது சாத்தியமில்லை. கருப்பொருளுக்கு தக்க கனப்பொருளென ஓவியத்தை வடிவமைத்தல் பெருங்காற்றில் படபடக்கும் பச்சை இலை மினுங்கல் என்கிறேன். ஆசிரியர் சோபா அவர்களுக்கும்... வடிவமைப்பு செய்யும் தோழர் நெகிழன் அவர்களுக்கும் மற்றும் இந்த காற்றுவெளியில் சிறகடிக்கும் அத்தனை இசைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒன்று கூடி தேர் இழுப்பதை விட கடினம்... நன்று கூடி தமிழ் காப்பது. அதை செவ்வெனே செய்து கொண்டிருக்கும் இந்த சித்தம் எந்த யுத்தத்திலும் நின்று விட கூடாது. சிந்தாந்தங்கள் வேறுபடலாம். சிந்தனை வேறுபடலாம். எல்லாமே தமிழின் வேர் பற்றி நகர வேண்டும் என்பது தான் நாடு கடந்தும் நாம் கண்ட திரவியம்.
சிற்றிதழ்கள் குறித்து பேசுவதும்.. கலந்துரையாடுவதும்.... காலத்தின் தேவை என்றே கருதுகிறேன். ஏனென்றால் சமூக புரிதலின் ஓர் அங்கமாகவே தான் சிற்றிதழ்கள் இருக்கின்றன. மனிதன் தன்னை தொடர்ந்து பண்படுத்திக் கொண்டே இருக்க கலை இலக்கியம் மிக அவசியம். அந்த கலை இலக்கியத்தின் முக்கியமான வடிவம் சிற்றிதழ்கள் என்று நம்புகிறேன். என்னை பொறுத்த வரை... வளர்ந்து வரும் எழுத்தாளனுக்கு சிற்றிதழ்களின் பங்கு மிக அலாதியானது. ஆழம் காண சொல்வது சிற்றிதழ்கள் தான். அடிப்படை வாதத்தில் இருந்து விலகி வேறொரு கோணம் காண செய்வது சிற்றிதழ்கள் தான். மேம்போக்காக நுனிப்புல் மேய்தல் சிற்றிதழ்களில் நிகழாது. அந்த வகையில் காற்றுவெளி... கவிதைக்கு... கதைக்கு... ஓவியத்துக்கு... நூல் விமர்சனத்துக்கு... நூல் அறிமுகத்துக்கு... என்று தன் ஆக்கபூர்வமான பக்கங்களை கருப்புவெள்ளை கிளாஸ்க்கில் கண்கள் கவர தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது.
சமகாலத்தில் கொலுசு மின்னிதழ்... தகவு மின்னிதழ் என்று ஆங்காங்கே தரமான மின்னிதழ்கள் தனது சேவையை செவ்வனே செய்து கொண்டிருக்கின்றன. அதன் வரிசையில் காற்றுவெளி தனக்கான இடத்தை மிக நுட்பமாக பெற்றிருக்கிறது. காற்றுவெளியில் தன் படைப்பு வருவதை அங்கீகாரமாக நினைக்கும் எத்தனையோ நண்பர்களை அறிந்ததால் அதை உறுதிபடவே பதிகிறேன்.
சிற்றிதழ்கள் நடத்துவது அத்தனை எளிதான காரியம் அல்ல. மாதம் ஒரு முறை வந்தாலும் அந்த மாதம் முழுக்க வேலை வாங்கும். ஒவ்வொரு பகுதியும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். அதே சமயம்....சுவாரஷ்யம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாகரீமும் இருக்க வேண்டும். அதில் நவீனமும் கலந்திருக்க வேண்டும். அட்டைப்படத்தில் இருந்து.. எண்டு கார்ட் வரை.. பரபரவென அறிவு பூர்வமான... உணர்வு பூர்வமான விஷயங்களை சேர்த்து அசல் இலக்கியத்தை வாசகனுக்கு மடை மாற்றி விடுவது மிக ஈடுபாட்டுடன் செய்ய வேண்டிய பணி. அதை காற்றுவெளி அற்புதமாக செய்து கொண்டிருப்பது கண்கூடு. பொழுது போக்க படிப்பது அல்ல சிற்றிதழ். பொழுதை ஆக்க படிப்பவை. சம கால தத்துவங்களின் கோர்ப்பு சிற்றிதழ்களில் தான் செவ்வனே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. கால பிரதியாய் எல்லா பிரதிபலிப்பும் இப்படி படைப்புகளாகி சேமித்து வைக்கப்படுவது சிற்றிதழ்களில் தான்.
அந்த மாதம் ஒருவர் படைப்பு வருகிறதென்றால் அவருக்கே அந்த மாத மாதிரியை அனுப்பி அந்த குறிப்பிட்ட படைப்பில் எதுவும் எழுத்துப் பிழை இருக்கிறதா என்று சோதித்து தரும்படி கேட்பது... அந்த குறிப்பிட்ட படைப்பாளியை இன்னும் கூர்மையாக அணுக பழக்குகிறது. அடுத்த முறை அந்த தவறு நிகழாமல் இருக்க பார்க்கிறது. அந்த வகையில் இந்த- முறை இதுவரை காற்றுவெளியில் தான் முதல் முறை. கவிதை எனப்படுவது கால சீற்றத்தில் எழும் முன் பின்னற்ற ஒரு நொடி. அதை பத்திரப்படுத்தி அதை மேடையேற்ற பார்க்கும் எத்தனையோ கவிஞர்களுக்கு அது தரமாக இருப்பின் தாராளமாக இடம் தரும் காற்றுவெளி தன் பெயரிலேயே கவிதையைத் தான் வைத்திருக்கிறது. கவிதைகளின் கூட்டில் காணும் கண்ணெல்லாம் காதல் வண்டுகள் தான். தீராத தேன் கூடென இந்த காற்றுவெளி... காலத்துக்கும் வேண்டும் என்பது தான் ஆவல்.
இத்தனை காலமாக லண்டனில் இருந்து வெளிவரும் ஓர் இதழை எந்தவித பலனும் எதிர்பாராமல் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் முல்லை அமுதன் ஐயாவுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும். தமிழ்பால் அவர் கொண்டுள்ள தொண்டுள்ளம் மீண்டும் மீண்டும் அவரை வணங்க செய்கிறது. பாகுபாடோ.. செல்வாக்கோ அவரிடம் செலுத்த முடியாது என்று தான் நினைக்கிறேன். நன்றாக எழுதுபவர் நன்றாக எழுதவில்லை என்றாலும் அது இடம் பெறாது. யார் எழுதினாலும் அதில் அறமும் கூற்றும் ஆதி தமிழின் மடியில் தவழ்ந்தால் மட்டுமே அந்த மாதம் உங்கள் பெயர் காற்று வெளியில் இடம் பெரும். அதை நானே கண் கூடாக எனக்கே உணர்ந்திருக்கிறேன். கடமைக்கு அனுப்பிய எதுவும் இதுவரை வந்ததில்லை. கண்ணும் கருத்துமாக பார்த்து பார்த்து பக்குவமாய் சொல் அடுக்கி வார்த்தை கோர்வையில் வாக்கிய சேவை இருக்க... இந்த கருத்து சமூகத்துக்கு போக வேண்டும் என்று நினைத்ததெல்லாம் வந்திருக்கிறது.
எந்த ஒரு சுயநல தவிப்புக்கும் "காற்றுவெளி" வீசாது. மாறாக பொதுநல தகிப்புக்கு அதன் இறக்கைகள் கண்டிப்பாக அசையும்.
- கவிஜி