உலகம் முழுவதிலும் நொடிதோறும் விந்தைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆறறிவு உள்ளதாகச் சொல்லப்படும் மனிதன் ஒரே பூமியில் வாழ்ந்தாலும் ஒவ்வொரு நிலம் சார்ந்த மக்களுக்கு என்று தனிப்பட்ட ரசனைகளும், பழக்க வழக்கங்களும், பண்பாடும் காணப்படுவது இயல்பு. அவற்றை அறிந்து கொள்ள இலக்கியங்கள் துணை செய்கின்றன. எனவே இலக்கியம் படைப்பவர் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்.

thoppil mohammed meeran bookமிகுந்த பொறுப்புடன், எந்தச் சார்பும் இல்லாமல், நடுநிலையுடன் படைப்புகளைத் தந்து காலத்தால் அழிக்க முடியாத எழுத்தாளர் தோப்பில் முகமது மீரானின் ‘ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்’ என்ற சிறுகதைத் தொகுப்பு இந்த நூற்றாண்டிலும் சிலர் நம்பிக் கொண்டிருக்கும் ஆவி, செய்வினை போன்ற மூட நம்பிக்கைகள் மீதான வலிமையான சமாதியை எழுப்பியுள்ளது.

சூழலியலின் அவசியத்தைக் காலம் கடந்த பின் பேசிக் கொண்டிருக்கிறோம் நாம். ஆனால் இயற்கையின் அழிவை எடுத்துச் சொல்லிச் சுற்றுப்புறத்தைப் பேணிப் பாதுகாக்கும் விழிப்புணர்வை இந்தத் தொகுப்பின் பல கதைகள் விளக்குகின்றன. ஏரிகளைக் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குப் பட்டா போட்டு விற்று விட்ட உண்மையை ‘மிஸ்டர் மார்ட்டின்’ என்ற கதை சொல்லாமல் சொல்கிறது.

வீர ராஜமார்த்தாண்டன் ஏரியில் கால்நடைகள் இறங்கித் தண்ணீர் குடிப்பதற்கெனத் தனியிடம், குளிப்பாட்டுவதற்குத் தனியிடம். அதில் யானை தண்ணீர் குடிப்பதற்கெனத் தனியிடம், குளிப்பாட்டுவதற்கும் தனியிடம். குளிக்கும் படித்துறைகளில் இருந்து சற்றுத் தூரத்தில் சிலர் மீன் வலை வீசிக் கொண்டிருந்தனர். ஏரியின் ஒரு பகுதியில் வாத்துகள் இராணுவ அணி வகுப்பாக நீந்திக் கொண்டிருந்தன. மேகம் இழையாத நீல ஆகாயம் ஏரிக்குள். வானத்தில் ஏரிக்கு மேல் பகுதியில் சூரிய ஒளியை நுகர வரும் மீன்களைக் கால் நகத்தால் கொத்திக் கொண்டு போகப் பருந்துகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. எந்தக் கொடும் வறட்சியிலும் வற்றாத ஏரி என்ற வர்ணனை தமிழ்நாட்டின் நில வளத்தை உலகத்திற்குப் பறைசாற்றும் இனிய பகுதி.

மருத்துவ வசதி இல்லாத காலங்களில் மதிய வேளைகளில் அல்லது இரவு நேரங்களில் வயல் வெளிக்குச் சென்ற மனிதர்கள் உடல் உபாதையால் இறக்க நேரிடும் பொழுது முனி அடித்து விட்டது, காத்து கறுப்பின் சேட்டை என்றெல்லாம் நம்பின கிராமங்கள். ஆனால் அறிவியல் முன்னேற்றத்தால் மின்சாரம் பரவி எங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்ட பின் அது மாரடைப்பால் வந்த மரணம் என்பதை உணர்ந்து அது நடக்காமல் தடுக்கவும் வழி வகைகள் செய்து விட்டனர்.

‘அடையாளங்கள்’ என்ற கதையில் மூதாட்டி ஒருத்தி இறந்தபின் ஆவியாக அலைவதாகச் சொல்லப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அந்தப் பக்கம் வருவோரைச் சுண்ணாம்பு கேட்பாள் என்று மக்கள் பேசிக் கொள்வதாகப் பின்னப்பட்ட கதையில் “இருட்டுவதற்கு முன் சாலி மாமா கடையை அடைத்து விடுவது அவள் சுண்ணாம்பு கேட்பாள் என்றல்ல. அவருக்கு மாலைக்கண்ணு” என்று எழுதியிருப்பது சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.

உணவைக் குனிந்து உண்டு உணவு தந்த பூமிக்கு நன்றி சொல்லும் மரபில் வந்த நாம் இன்று ‘யூஸ் அண்ட் த்ரோ’ பண்பாட்டைத் தத்தெடுத்துக் கொண்டதை மிகுந்த வலியோடு பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர். மனைவியைப் பறிகொடுத்த ஒருவர் தன் மகனின் நல்வாழ்வுக்காக வேறு துணையைத் தேடிக் கொள்ளாமல் அவனுக்காகவே தன்னை மெழுகுவத்தியாக்கிக் கொண்ட போதும் அரபு நாடுகளில் வேலை பார்க்கும் மகன் திருமணம் முடிந்த பிறகு எப்போதாவது தந்தையைப் பார்த்து விட்டுச் செல்வான்.

ஒருநாள் கடைசியாகக் குடும்பத்துடன் அப்பாவைப் பார்க்க வந்த மகன் வீட்டைத் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டு வெளிநாட்டுக்குப் புறப்படுகிறான். வாப்பாவும் வழியனுப்பி விட்டு வீட்டிற்கு வரும் வழியில் பள்ளிவாசலிலேயே இறக்கிவிடப்படுகிறார். காரணம் கேட்டதற்கு உங்கள் மகன் தான் உங்களை இங்கே இறக்கிவிட்டுச் செல்லும்படி உரைத்தான் என்ற இடத்தில் கண்கள் குளமாகின்றன.

பணத்தைக் கொண்டாடும் மனிதர்கள் மனத்தைப் பற்றிக் கவலைப்படாமல் போய்விட்ட உண்மையை உரக்கச் சொல்கின்றன கதைகள். தம்பி மகளின் திருமணத்திற்காகப் பெரிய தொகையை அதிக சிரமப்பட்டுச் சம்பாதித்துத் தரும் அந்தப் பெரியப்பாவை ஒரு வாரம் தன் வீட்டில் வைத்துப் பராமரிக்க விருப்பமில்லாத நிஷாவைப் பார்க்கும் போது உறவுகள் மீது கோபமே பிறக்கிறது. இப்படித்தான் ‘ஒரு சவ ஊர்தியின் நகர்வலம்’ என்ற கதையிலும் குளிப்பாட்டி அடக்கம் செய்யப்பட வேண்டிய சவத்தை வைத்துக் கொண்டு ஊர்தியில் அந்த உடலைக் குளிப்பாட்ட உறவினர் வீட்டில் இடம் கிடைக்காதா என்று வீடு வீடாக அலைந்து கடைசியில் பள்ளிவாசலுக்கே சென்று விடும் காட்சி மனத்தைப் பிழிகிறது.

ஆங்கில வழித் தனியார் பள்ளிகளால் அரசுப் பள்ளி மூடப்படும் நெருக்கடியில் தொடங்கி, உடம்புக்குக் கேடு விளைவிக்கும் குளிர் பானங்கள் மீதான மோகம், மம்மி என்று அழைப்பதில் மகிழும் உம்மாக்கள், பிறந்த மண்ணில் வேலை பார்த்துப் பிழைக்க முடியாத அவலம், உயிரை விட பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நவீன மருத்துவமனைகள், காசு உள்ளவர்களுக்குத்தான் இலவச அவசர ஊர்தி என்று பல சூழ்ச்சிகளை அம்மணமாக அலையவிட்டிருக்கின்றன சிறுகதைகள்.

உலகமயமாக்கல் தொடங்கப்பட்டதன் விளைவாக விளிம்பு நிலை மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிய போராட்டத்தில் கிடக்கிறது. இந்தப் புரிதல் இல்லாமல் சென்னையில் “பூமிக்கடியில் இருக்கும் தண்ணீர் முற்றிலும் உறிஞ்சப்பட்டதால் மழையும் பொய்த்துப் போனதால் இங்கு வாழ வசதிபடாது. ஏதாவது கிராமம் நோக்கி உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்” என்று என் தோழர் சொன்னதும், “அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை, எங்கு இருந்தாவது சென்னைக்குத் தண்ணீர் கொண்டு வந்து ஊத்துவாங்க” என்று நான் ஆணவத்துடன் சொன்னதை இந்தச் சிறுகதைகளைப் படித்தபின் மறுபரிசீலனை செய்து பார்க்கிறேன்.

பணம் வைத்திருந்தால் எல்லாம் சாத்தியப்படும் என்ற என் கருத்தோட்டத்திற்கு அடித்தளமான செய்திகளை அம்பலமாக்கிக் காட்டுகின்றன கதைகள். மொத்தத்தில் அடித்தட்டு மக்களின் குரலாக ஒலிக்கின்றன கதைகள். சங்க இலக்கியங்களில் காணப்படும் காதலர்களின் பிரிவைப் பற்றிப் பேசும் பாலைத் திணைப் பாடல்களில் அவலச் சுவை மிகுந்திருக்கும். அப்படிப்பட்ட அவலச் சுவையை ஒவ்வொரு சிறுகதையிலும் பார்க்க முடிகிறது. அவலம் மிகுந்த பாலைப் பாடல்கள் நம் உணர்வுகளோடு பின்னியிருப்பது போல மீரானின் சிறுகதைகளும் நம்முடன் பயணப்படுகின்றன.

நூல்: ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்
ஆசிரியர்: தோப்பில் முஹம்மது மீரான்
விலை: ரூ.70 மட்டும்
வெளியீடு: அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம்

-  முனைவர் சி.ஆர்.மஞ்சுளா, தமிழ்ப் பேராசிரியர், சென்னை சமூகப்பணி கல்லூரி, எழும்பூர், சென்னை

Pin It