கேரளாவில் பௌத்தம் (Buddhism in Kerala) என்ற தலைப்பில் P.C. அலெக்ஸாண்டர் நிகழ்த்திய முனைவர் பட்ட ஆய்வு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நிகழ்த்தப்பட்டது. இவ்வாய்வு 1949ஆம் ஆண்டில் இப்பல்கலைக் கழகத்தாலேயே வெளியிடப்பட்டது. இந்நூல் பௌத்த ஆய்வாளர் மொழிபெயர்ப்பாளர் இ. ஜெயபிரகாஷ் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அறம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

keralavil bouthamபி.சி. அலெக்ஸாண்டர் கொல்லம் ஸ்ரீ நாராயண கல்லூரியில் வரலாற்றுத் துறை மற்றும் பொருளாதாரத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஆவார்.

முன்னுரையோடு 13 இயல்களைக் கொண்ட இப்புத்தகம் ஆய்வாளரால் ஆய்வு நேர்மையோடு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. நமக்கு சில இடங்களில் மாறுபட்ட கருத்திருந்தாலும் அவர் தன்னிலையில் எது சரி என்று நினைத்தாரோ அவற்றை எழுதிச்செல்கிறார்.

ஒவ்வொரு இயலையும் வாசிக்கும்போது ஆய்வுத் தன்மையோடு ஒரு இலக்கியப் படைப்பை நகர்த்திச் செல்வதைப் போல எழுதுகிறார்.

தமிழகத்தில் சமணம் என்ற சொல் எவ்வாறு அனைத்து மதக்குருமார்களையும் குறிக்கக் கூடிய பொதுச்சொல்லாக இருக்கிறதோ (மயிலை சீனி. வேங்கடசாமி) அது போல அலெக்ஸாண்டர் எழுதிய புத்தராக மாறிய பெருமாள் என்ற ஆய்வுக்கட்டுரையில் பௌத்த மார்க்கம் என்ற சொல் இந்து மதத்தைத் தவிர்த்து அனைத்து மதமார்க்கங்கங்களையும் குறிக்கும் பொதுச்சொல்லாக கேரளாவில் இருந்ததைக் குறிக்கும் ஆய்வாளர் அச்சொல் கேரளாவில் மதங்கள் சார்ந்து ஏற்படுத்திய பல்வேறு கதையாடல்களில் சிக்குண்டிருந்த முடிச்சை மிகவும் நேர்த்தியான முறையில் கட்டவிழ்க்கிறார். பெருமாள் ஒருவர் பௌத்த மார்க்கத்தைத் தழுவினார் என்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களும் அவர் தங்கள் மதத்தைதான் தழுவினார் என்று வாதிக்கின்றனர். அதற்கான கதையாடல்களையும் அவர்கள் கொண்டிருக்கின்றனர். பௌத்த மார்க்கத்தைத் தழுவினார் என்றால் அது கிறித்தவப் பௌத்த மார்க்கமா? இஸ்லாமியப் பௌத்த மார்க்கமா? ஜைனப் பௌத்த மார்க்கமா? அல்லது பௌத்தப் பௌத்த மார்க்கமா? என்பதுதான் மிகவும் அடிப்படையான கேள்வி. இந்த கேள்விக்கு மிக நேர்த்தியாக ஆதாரங்களோடும் தர்க்கத்தோடும் ஆய்ந்துள்ளார் அலெக்ஸாண்டர்.

ஸ்ரீமூலவாச பௌத்த விகாரைப் பற்றி அவர் எழுதிய மற்றொரு கட்டுரை மிகவும் முக்கியமானது. கேரளாவில் இருந்த ஸ்ரீமூலவாச பௌத்த விகார் பண்டைய காலத்தில் மத்திய ஆசியாவிலும் அறியப்பட்டிருந்தது என்பதற்கு ஆதாரம் காட்டும் அலெக்ஸாண்டர் இன்று அதன் இல்லாமல் இருக்கும் நிலையில் கேரளாவில் அதன் மிகச் சரியான அமைவிடத்தைக் காண முயல்வது இக்கட்டுரையின் சிறப்பம்சம் என்பதோடு மட்டும் இல்லாமல் பண்டைய காலத்தில் ஸ்ரீமூலவாசம் காஞ்சியைப் போல பௌத்தத்திற்குக் கேரளாவில் அமைந்திருந்த பௌத்தப்பூமி என்பது நம் கவனத்தை மிகவும் கவர்ந்திழுக்கிறது.

பண்டைய திருவாங்கூரை மையமாக வைத்து எழுதப்பட்ட பௌத்தச் சுவடுகள் பற்றிய கட்டுரை சிற்பக் கலையியல் நோக்கிலும் சமூகவியல் நோக்கிலும் முக்கியமாக அமைந்துள்ளது. பண்டைய இந்திய வரலாற்றை அறிபவர்கள் அவைதீக மரபைச் சார்ந்த மன்னர்கள் பிரம்மதேயம் என்கிற பெயரில் பார்ப்பனர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலம் சார்ந்து அதற்கு எதிராக நடந்து கொண்டார்கள் என்பதை நாம் அறிவோம். இதற்குப் பால அரசவம்சம், கர்நாடாகவிலிருந்த ஒரு ஜைன அரசு, களப்பிரர்கள் ஆகியோர்களை நாம் உதாரணம் காட்டலாம். இதைப் போலவே கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலத்தைப் பௌத்த மன்னன் வரகுணன் திரும்பப் பெற்றுக் கொண்டதை அலெக்ஸாண்டர் செப்பேடுகளின் ஆதாரங்களோடு நிறுவுகிறார்.

ஈழவர்களும் பௌத்தமும் என்கிற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட கட்டுரை வரலாற்றியல், சமூகவியல், மதவியல் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது. சிலோனிலிருந்து கேரளாவுக்கு வந்த பௌத்த ஈழவர்கள் என்று இவர்களைப் பற்றி ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட வரலாற்றை மறு ஆய்வுக்கு உட்படுத்துகிறார். அவர்கள் சிலோனிலிருந்து வந்தவர்கள் என்பதில் சந்தேகம் கொள்ளும் அலெக்ஸாண்டர் அவர்கள் பூர்விகப் பௌத்தர்கள் என்பதை உறுதி செய்கிறார்.

கேரள சாஸ்தாவாகிய அய்யப்பனையும் புத்தரையும் ஒப்பிட்டு அவர் எழுதிய கட்டுரை மிகவும் முக்கியமானதாகும். கேரளாவின் அய்யப்பன் இந்து மயமாக்கப்பட்ட புத்தர் என்கிற கருத்தை அலெக்ஸாண்டர் மிகக் கடுமையாக மறுக்கிறார். அய்யப்பன் வேறு புத்தர் வேறு என்கிற நிலைப்பாட்டை எடுக்கிறார். அவருடைய தர்க்கவியல் முறையில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும் ஒருபக்கச் சார்புநிலை எடுக்க வேண்டும் என்கிற எண்ணமில்லாத நேர்மையான ஆய்வாளர் என்றே நான் அவரைக் கூறுவேன். தமிழகத்தில் வழிபடப்படும் அய்யனாரும் கேரளாவில் வழிபடப்படும் அய்யப்ப சாஸ்தாவும் ஒன்றே என்று அவர் தக்க ஆதாரங்களோடு நிறுவுகிறார். அதற்காக தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் வழிபடப்படும் அய்யப்ப வழிபாட்டை ஆதாரமாகக் கொள்கிறார்.

பண்டைய இந்திய பௌத்த வரலாற்றை ஆராய்கிற ஆய்வாளர்களுக்குக் கிழக்காசிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு யாத்ரீகம் வந்த பயணிகளின் குறிப்பு மிக முக்கிய ஆவணமாகத் திகழ்கிறது. அந்த வகையில் அலெக்ஸாண்டர் கேரளாவைப் பற்றி எழுதப்பட்ட சீன யாத்ரீகர்களின் குறிப்புகளை மிகத் தீவிரமாக தனி இயலில் ஆராய்ந்துள்ளார்.

பௌத்த வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்து கட்டமைக்கும் ஆய்வுப்புத்தகங்களில் P.C. அலெக்ஸாண்டரின் கேரளாவில் பௌத்தம் என்கிற இப்புத்தகத்திற்கு மிக முக்கியமான ஒரு இடமுண்டு. அவர் மேற்கொண்ட இவ்வாய்விற்காக அவரை நெஞ்சாரப் பாராட்டுகிறேன். 

பௌத்தம் சார்ந்தும் தென்னிந்திய பௌத்தம் சார்ந்தும் வாசிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான நூலாகும் கேரளாவில் பௌத்தம்.
 
- இ.ஜெயபிரகாஷ்

Pin It