mulachiparambu murali paintings

முன்னோடி வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள், மார்பகத்திற்கு வரியும் அதனை மூடி மறைப்பதற்கு வரியும், விதித்த வரலாற்றை தன்னுடைய கட்டுரையில் விரித்துரைத்துள்ளார்கள்.

அண்மையில் ஓர் அரிய வரலாறு கண்டறியப்பட்டுள்ளது. அது ஆட்சியாளர்கள் மார்பக வரியை வசூலிப்பதில் காட்டிய வேகத்தையும், ஆதிக்க ஜாதியினரின் இந்த வரியை எதிர்த்த வீராங்கனையின் வரலாறும் ஒன்று போலவே உலகறியச் செய்தது.

இந்த வரலாற்று நிகழ்வு நடந்தது வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள் குறிப்பிடும் அதே திருவிதாங்கூர் இராஜியம்தான்.

நடந்த காலம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன். இடம் திருவிதாங்கூர் இராஜ்யம், நாங்கிலி கிராமம், சேர்த்தலா வட்டம். இப்போது கேரள மாநிலத்தில் இருக்கின்றது. ‘நாங்கிலி’ என்ற சொல்லுக்கு ‘அழகு’ எனப் பொருள். ‘நாங்கிலி’ என்பது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் பெயர்.

இவர் முப்பது வயதை அடைந்த அழகிய மாது. ஒரு கட்டத்தில் இவர் தன்னடைய மார்பகத்திற்கு விதிக்கப்பட்ட வரியைச் செலுத்துவதில்லை என உறுதி கொண்டாள். ஆனால், திருவிதாங்கூர் இராஜ்யத்தின் உயர்ஜாதி ஆட்சியாளர்கள் விடுவதாக இல்லை.

தொடர்ந்து மார்பக வரி வசூலிப்பவர்களை நாங்கிலியின் வீட்டுக்கு அனுப்பி வரியைச் செலுத்தக் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், அழகி நாங்கிலி இந்த வரியைச் செலுத்துவதை மிகப் பெரிய அவமானமாகக் கருதினார். அதனால் மார்பக வரியை தருவதில்லை என்ற தனது உறுதியில் தளராமலிருந்தாள்.

இந்த மார்பக வரிக்கு மலையாள மொழியில்  முலைக்கர்ணம் என்று பெயர்.

தொடர்ந்து வரியைக் கட்டிட அவள் மறுத்து வந்ததால் வரி பாக்கி அதிகரித்துக் கொண்டே சென்றது. மார்பகம் பெரியதாக இருந்ததால் வரியும் அதற்குத் தகுந்தாற் போல் அதிகமாக இருக்கும். அழகியின் மார்பகங்கள் பெரியவை. அதனால் விதித்த வரியும் அதிகம்.

‘முலைக்கர்ணம் பார்வத்தியார்’ அதாவது மார்பக வரியை வசூல் செய்யும், பார்வத்தியார் ஒரு நாள் நாங்கிலியை தேடிப் போய்விட்டார்.

நாங்கிலி தன் வீட்டுக்கு வந்த அவரை, சற்றுப் பொறுங்கள் இதோ வரித் தொகையோடு வருகின்றேன் என்று வீட்டிற்குள் சென்றாள்.

ஓர் வாழை இலையை எடுத்து விரித்தாள். விளக்கொன்றை ஏற்றி வைத்தாள். தன் மார்பகங்களை ஒவ்வொன்றாக அறுத்து வைத்தாள். அப்படியே சாய்ந்து இறந்தாள்.

மார்பக வரியை வசூலிக்க வந்த பார்வத்தியாருக்கு இந்த மார்பகங்களைத் தந்தாள். மார்பக வரிக்கு எதிராகத் திப்பு சுல்தானின் கடும் நடவடிக்கைகளுக்குப் பின், அது சமுதாயத்தில் ஒழிக்கப்பட்டது.

நூறு ஆண்டுகளுக்கு முன் அழகி நாங்கிலி அறுத்து வைத்த மார்பகங்கள் தாம் ‘முலைவரி’ என்ற மார்பக வரிக்கு எதிராக எழுந்த முதல் எதிர்ப்பலை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

இந்த அதிர்வான நிகழ்ச்சிக்குப் பின் அவள் வாழ்ந்த இடம் ‘முலைச்சிபரம்பு’ (மார்ப்கப் பெண் வாழ்ந்த இடம்) என்றே வழங்கப்பட்டது.

பின்னர் இந்த போராட்ட வரலாற்றை வரலாற்றுச் சுவடுகளிலிருந்து மறைத்திட விரும்பினார்கள் ஆதிக்க ஜாதியினர். அதனால் அந்த இடத்தை ‘முலைச்சிபரம்பு’ என்பதற்குப் பதிலாய் ‘மனோரமா காவலா’ என மாற்றினார்கள்.

ஆனால், அவள் வாழ்ந்த அந்த ஓலைக்குடிசை இடிபாடுகளுடன் அதே இடத்தில் இருக்கின்றது. முரளி என்ற ஓவியர் இந்த வரலாற்றைச் சித்திரமாகத் தீட்டி அந்த இடத்தில் வைத்திருக்கின்றார். அந்த ஊர் மக்கள் ஒவ்வொருவரும் “நாங்கள் இந்த வரலாற்றை செவி வழி செய்தியாகக் கேட்டு வளர்ந்தோம். இப்போது எங்கள் உள்ளக் கிடக்கையை அப்படியே சித்திரமாக வரைந்துள்ளார் முரளி’’ என அவரை பாராட்டுகின்றார்கள்.

இந்த இடம், இடம்பெறும், சேர்த்தலாதான் முன்னாள் இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி அவர்களின் சொந்த ஊர்.

இந்த வரலாறு பேணப்பட வேண்டும், அழகி நாங்கிலிக்கு நினைவிடம் ஒன்றும் எழுப்பப்பட வேண்டும் என்பது அந்த மக்களின் வேண்டுகோள்.

(நன்றி - டைம்ஸ் ஆஃப் இந்தியா, 7.3.2016)

- மஞ்சை வசந்தன்

Pin It