வீட்டுப் பக்கத்தில் ஓங்கி வளர்ந்திருக்கும் பூவரசன் மரத்திலிருந்து பறவைகள் கூச்சலிட்டு பறக்கும் முன்பே ஊருக்கு வடக்கால இருக்கும் முச்சந்திக்குப் போய் பாழடைந்த ராட்டினக் கிணற்றிற்கு பக்கத்தில் அறுக்கும் மாட்டுக்கறியை வாங்கி வந்து, சூரியன் முளைக்கும் முன்பே அடுப்பில் வேக வைத்துக் கொண்டிருந்தாள் சிவகாமி.

நேற்று இரவு அவள் வாங்கி வைத்திருந்த மிளகாய் பட்டாசை எடுத்துக் கொண்டு அது வெடிக்க, அவள் எரித்துக் கொண்டிருந்த அடுப்பில் இருந்து கொள்ளிக்கட்டை ஒன்றை உருவினான் சிவகாமியின் மகன் வீரன்.

"ஆமாண்டா இத்தன நாள் சூரியன் வந்து சூத்துல சுல்லுன்னு குத்தற வரைக்கும் தூங்குவ... இன்னைக்கு மட்டும் எது வந்து எழுப்பிச்சு உன்ன" என்று கொஞ்சல் கலந்த வார்த்தைகளால் அவனை சிவகாமி சீண்டிக் கொண்டிருக்கும் போதே ஒரு மிளகாய் பட்டாசை கொளுத்தி வெடி போட்டான் வீரன்.

"டேய் நெஞ்சி தீரம் புடிச்ச பயலே... அப்படி தூரமா போய் வெடிடா. பட்டாசு வந்து கொயம்புல கியம்புல ஊந்துட போது... இந்த கரிய எடுத்தார நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும். வழியில வந்து போற சூதருங்க மனங்கோனக் கூடாதுன்னு தூம பசங்க வெள்ளி மொளக்கிறதுக்கு மின்னாடியே மாட்ட வெட்டி கூதக் கொடலு மொதக்கொண்டு காக்கா குருவி எந்திருக்கிறதுக்குள்ள வித்து வழிச்சி எத்துறானுங்க. நான் எடுக்குற இந்த ஒரு கிலோ கறிக்கு நடுராத்திரி எல்லாம் கொட்ட கொட்ட முழிச்சி இருந்து வாங்கி வர வேண்டிருக்கு" என தனக்குத்தானே பினற்றிக் கொண்டு வேலையை பார்க்கத் தொடங்கினாள் சிவகாமி.

உடல் முழுக்க அம்மா தேச்சு விட்ட நல்லெண்ணெய் பூசிக்கொண்டு, கால் சட்டையோடு ஊர் முழுக்க சுற்றி வெடி போட்டவனை இழுத்துப் பிடித்து, சுடுதண்ணி வளாவி தலைக்கு ஊற்றி குளிப்பாட்டி முடித்த உடனே, நடு வீட்டில் இருந்த புது சட்டையை எடுத்து உடுத்திக் கொள்ளப் போனான் வீரன்.

"டேய் கொஞ்சம் பொறுடா. ஆக்கி வச்சது நடு வீட்டுல போட்டு கற்பூரம் கொளுத்தி செத்தவங்கப் பட்டவங்களுக்கு  கும்பிட வேணாமா?" என்று அவன் ஆசையை கொஞ்சம் இறுக்கிப் பிடித்தாள் சிவகாமி 

பருவம் எழுதிய குமரிகள் முதல் இரண்டு, மூன்று பிள்ளை பெற்ற நடுத்தர வயதுப் பெண்கள் வரை வரப்பு கால்வாய் ஓரம் இருக்கும் வயலில் அறுவடைக்கு மனை பிரித்து நின்றவர்களுடன் சரிசமமாக தானும் ஒரு மனை பிரித்து, நின்று கொண்டிருந்த பதிமூன்று வயது சிறுமியான பார்வதியின் மனதுக்குள், இதுக்குத்தான் இந்த மாதிரி சின்ன பசங்கள வேலைக்கு கூட்டி வரக்கூடாதுன்னு யாரும் நாக்கு மேல பல்ல போட்டு பேசிடக் கூடாது என்ற எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது 

குனிந்த தலை நிமிராமல் வேகமாக அறுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஈடாக போட்டி போட்டு அறுத்துக் கொண்டிருந்த பார்வதியின் இடது கையில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. பக்கத்தில் அறுத்துக் கொண்டிருந்த ராசாத்தி அதைக் கவனித்து விட்டு "அய்யோ அய்யோ! ஏண்டி ரத்தினம் பெத்த மவளே! என்னை நெஞ்சி தீரம் உனக்கு இப்படி ரத்தம் ஊத்திகினு இருக்குது. அதைக் கூட கவனிக்காம சரிக்கு சரி அறுத்துகினுக் கீர.. வாடி இங்க" என்று அழைத்து பார்வதியின் கையில் கொஞ்சம் பக்கத்தில் இருந்த காய இலையை உருவி கசக்கி வைக்கோல் பிறியில் கட்டி விட்டபடி பேசினாள்.

"ஊர் சனத்துக்கு கூலி பத்தலன்னு போராடி அலைஞ்சு உசுர விட்டான் உங்கப்பன். அன்னையிலிருந்து கூடை சொமந்து காப்பாத்துறா உங்கம்மா. நீ பள்ளிக்கொடம் போற வயசுல அம்மா பாரத்தை பங்கு போட்டுக்க படிப்ப நிறுத்திட்டு வந்துட்டே. சரி அதுக்காக நேத்து அறுத்துக்குன கையோடு இன்னைக்கு வேலைக்கு வரணுமா என்ன?" என்று கேட்டாள் ராசாத்தி.

"அது வந்துக்கா.. ஆம்பள புள்ள கோமணத்தோடு கூட இருக்கலாம். பொட்ட புள்ளைங்க மானம்மரைக்க துணி வேணும்னு எப்பாடு பட்டாவது அம்மா எங்களுக்கு புது துணி எடுத்து கொடுத்துடுது. ஆனா தம்பிக்கு போட்டுக்க ஒரு நல்ல சட்டக் கூட இல்ல. அதான் வார தவணக்கி துணி போடுற அந்த அண்ணன் கிட்ட வர தீபாவளிக்காக தம்பிக்கு ஒரு புது சட்டை எடுத்து தக்க கொடுத்து இருக்கேன். அதுக்கு வேலை இருக்கும்போதே செஞ்சுக்கிட்டா தானே தவணை கட்ட முடியும்.. அதான்" என்று தழுதழுத்தாள் பார்வதி.

"அடி என் செல்லம்" என்று பார்வதியை வாரி அணைத்துக் கொண்டு,

"சரி நீ கொஞ்சம் உட்காரு... நான் பாத்துக்குறேன்" என்று பார்வதியின் மணையையும் சேர்த்து அறுக்கத் தொடங்கினாள் ராசாத்தி.

ரெண்டு ஆல் மணையை ராசாத்தி ஒத்தாளா அறுப்பது பொறுக்க முடியாமல் அறுபட்ட கையோடு இறங்கி அறுக்கத் தொடங்கினாள் பார்வதி.

நடு வீட்டில் காமாட்சி விளக்கை ஏற்றி அதற்கு முன்னால் வாழை இலையை விரித்து வருசத்துக்கு ஒரு முறை சுடும் இட்லியை எடுத்து வைத்து, நல்லா எலும்பும் சதையுமாய் இருக்கும் மாட்டுக்கறி குழம்பு ஊற்றி கற்பூரத்தை ஏற்றி தேங்காய் உடைத்து, "அப்பனே முனுசாமி என் பிள்ளைகளுக்கு பக்கத்துணையாக இருப்பா" என்று சிவகாமி வேண்டிக் கொண்டிருக்கும்போதே, நடுவீட்டில் படையலுக்கு முன்பு வைத்திருந்த புது சட்டையை எடுத்து உடுத்திக் கொண்டான் வீரன்.

"ஏண்டா அவசரத்துக்கு பொறந்த மவனே! ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கலயா.. கற்பூரம் அணையிற வரைக்கும் பொறுத்தாதான் என்ன?' என்று கடிந்தாள் சிவகாமி.

"ம்மோ போம்மா... என்னமோ நீ எடுத்து கொடுத்தாப் போல பேசுற? எங்க அக்கா எடுத்து கொடுத்த சட்ட.. நான் எப்ப வேணா போட்டுப்பேன்" என்றான்.

"பாத்தியாடி இவன" என்ற அம்மா சிவகாமியையும், தம்பி வீரனையும் பார்த்து பக்கத்தில் இருந்தபடி சிரித்துக் கொண்டிருந்தாள் பார்வதி.

அக்குள் தையல் கிழிந்தும், பொத்தான்கள் அறுந்தும் கிடக்கும் தன் சித்தி மகன், பெரியம்மா மகன்களுடைய பழைய சட்டையை ஒட்டுப் போட்டு தன் உருவத்திற்கு சரியாக பொருந்தாமல் போனாலும், ஏதோ பெயருக்கு ஆடை என்று இத்தனை நாள் உடுத்திக் கொண்டு உலவிய வீரன், இன்று தன் அக்கா எடுத்துக் கொடுத்த புது சட்டையை உடுத்திக் கொண்டு மிளகாய் பட்டாசோடு ஊரில் இருக்கும் தெருக்கள் முழுக்க மிடுக்காக வலம் வந்தான்.

அவன் உடலுக்கும் உருவத்திற்கும் கச்சிதமாகப் பொருந்தி வீரனின் அழகை இன்னும் கொஞ்சம் கூட்டி இருந்தது அவன் அக்கா வாங்கிக் கொடுத்த அந்த தீபாவளி சட்டை.

- சென்னை தமிழன் ப.சுபாஷ்

Pin It