'நிழலாய் தொடர்வேன்' அப்டின்னு ஒரு வித்தியாசமான நேம்ல பிரண்ட். ரிக்வெஸ்ட் வந்துச்சு. கன்பார்மா ஃபேக் ஐடிதான்.

lady ghostஉள்ள போய் பாத்தா புல்லா நேச்சர் ஸ்டில்ஸா இருந்திச்சி. ஜென்டர் பொண்ணுதான்.

வழக்கம்போல லைட்டா செக் பண்ணி 'வில்லங்கம்' எதுவும்.இல்லன்னு அக்சப்ட் பண்ணேன்.

அப்பயிருந்து ஒரே லைக் மழைதான். எண்ணெய் வழியற என் புரொபைல் போட்டாவுக்கும் கசாமுசா கவர்போட்டாவுக்கும் எனக்கே வெளங்காத என் இத்துப்போன போஸ்ட்டுகளுக்கும்.தேடித்தேடிவந்து லைக் போட்டுட்டு போவா.

சூப்பர் பிரமாதம் பின்னீட்டிங்க என கமென்ட்கள் வேறு.

கொஞ்சநாள்லயே அவ நேம் எனக்கு நல்லா மைன்ட்ல ரிஜிஸ்ட்ராயிடுச்சி. எந்த போஸ்ட் போட்டாலும் அவ லைக் போட்டுட்டாளான்னு பார்க்க ஆரம்பிச்சேன்.

எத்தனைvபேர் பாராட்டி கமென்ட் பண்ணாலும் அவ வந்து கமென்ட் பண்ண மாட்டாளான்னு ஏங்க ஆரம்பிச்சேன்.

அவளை இம்ப்ரஸ் பண்றதுக்காகவே கன்னாப்பின்னான்னு மண்டையச் சொறிஞ்சி புண்ணாக்கி கவிதை கண்ராவியெல்லாம் போஸ்ட் பண்ண ஆரம்பிச்சேன்.

திடீர்னு சிலசமயம் டியாக்டிவேட் பண்ணிட்டு காணாம போயிருவா.
அவ பேரைப்போட்டு சர்ச் பண்ணி சர்ச் பண்ணி தவியாத் தவிப்பேன்.

அப்பத்தான் ஒருநாள் இன்பாக்ஸுக்கு வந்து 'ஹாய்' அப்டீன்னா.

பொதுவா எனக்கு சேட்டிங்கே புடிக்காது. அதிகம்போனா நாலு கான்வர்சேசன். அவ்ளவுதான்.

என் ஒய்புக்கு எம்மேல இருக்கிற ஒருகோடி பிராதுல இதுவும் ஒன்னு. நா அவகூட சாட் பண்றதில்லைன்னு.

அட ஆமாங்க எனக்கு கல்யாணமாயிருச்சி. ஸோ வாட். உங்க நியாயதர்மத்தை எல்லாம் ஓரமாவச்சிட்டு கதையக் கேளுங்க. இல்லாட்டி பேக் பட்டன் அமுக்கி வெளிய போயிருங்க.

ஆச்சா ? அவ சாட்டுக்கு வரவும் எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. ரொம்ப வருஷமாச்சு. இதுமாதிரி பீல் பண்ணி. ட்வெல்த் படிக்கிறப்ப பிரியாகிட்ட பீல் பண்ணது, காலேஜ் பர்ஸ்ட் இயர்ல சரண்யாகிட்ட பீல் பண்ணது.

அட போங்கய்யா. இன்னும் வெளக்கமா வேற சொல்லனுமா.

எனக்கு அவளை ரொம்ப புடிச்சிருச்சி. ஒருமாதிரி லவ்வுக்கு முன்னாடி ஸ்டேஜின்னு வச்சிக்கங்களேன்.

நானும் ஹாய் சொன்னேன். அப்பறம் நார்மலான நலம் விசாரிப்பெல்லாம் முடிஞ்சு. நாந்தான் கேட்டேன்.

உங்க ஜென்டர்ல பொண்ணுன்னு இருக்கு. உண்மையில நீங்க பொண்ணுதானான்னு நா எப்டி நம்பறது ? என் நம்பருக்கு போன் பண்ணி பேசுங்க இல்லாட்டி இந்த சாட்லாம் வேணா. எப்பவும் போல லைக் கமெண்ட்டோட நிப்பாட்டிக்குவம். அப்டி இப்டின்னு பிட்டுகளை அள்ளிவுட்டேன்.

கொஞ்சநேரம் ஸைலன்ட்டா இருந்துச்சி.

அப்பறமா, நிஜமா நா பொண்ணுதான். பசங்க டார்ச்சருக்கு பயந்துகிட்டுதான் ஃபேக் ஐடில இருக்கேன். ப்ளீஸ் என்னை நம்புங்க அப்படீன்னா.

அப்ப எங்கிட்ட மட்டும் ஏன் உண்மைய சொல்ற ? என்னயிருந்தாலும் நா ஒரு ஆம்பளைதானேன்னு கேட்டேன்.

இல்ல நீங்க வேறன்னு சொன்னா.

வேறன்னா ? அப்டீன்னேன் உள்ளுக்குள்ள ஒரே குஜால் கும்மாளம்.

வேறன்னா வேறதான்னா.

நா ஒருமைக்கி தாவிட்டேன். ப்ளீஸ் ப்ளீஸ் சொல்லு. அப்டின்னா என்ன அர்த்தம் ?

அப்டீன்னா அப்டீன்னா அப்டித்தான்.

எனக்கு டவுட்டு தீரல. சரி அப்ப உன் நம்பர் சொல்லு. கால் பண்றேன்னேன்.

அவ தயங்கிட்டு, சரி தரேன். பட் இப்ப வேணாம். டாடி மம்மிலாம் இருக்காங்க. சன்டே பேசலாம்னா.

அது போதுமேன்னு நெனச்சிக்கிட்டேன். நா உமனைசர்லாம் இல்லங்க. ஒரு பொண்ணை இம்ப்ரஸ் பண்ண நெனைக்கிற, அவளோட ஜாலியா பழக நெனைக்கிற சாதாரணமான ஒரு ஆண்.

எப்ப வரும்னு பரபரப்பா காத்திருந்தேன். அந்த சன்டேயும் வந்துச்சி. அவ சொன்ன ஐடியாப்படியே அவ குடுத்த நம்பருக்கு, காலைல பத்துமணிக்கி ஒருவாட்டி மிஸ்கால் குடுத்தேன்.

ஒடனே கால் வந்துச்சி. அட்டன்ட் பண்ணி ஹாய் சொன்னேன்.

செம்ம பீமேல் வாய்ஸ்ல 'எஸ் யார் வேணும்' ன்னு கேட்டுச்சி.

நா ரகசியமா எம்பேரைச் சொல்லி தெரியலியான்னு கேட்டேன்.

அவ என்ன சொன்னான்னு நீங்க நெனைக்கிறீங்க?

அப்டிலாம் எனக்கு யாரையும் தெரியாதுன்னு சொல்லி பட்டுன்னு போனைக் கட் பண்ணிட்டா.

எனக்கு டென்சன்ல கையெல்லாம் நடுங்குது. வேர்த்துக் கொட்டுது.

சனியன் புடிச்சவ ஒரிஜினல் பேர் கேட்டதுக்கு நாம நேர்ல மீட் பண்றப்ப சொல்றேன்னாளே. நாமளா போயி வழிஞ்சோம்.

ஈத்தரை தானாத்தானே வலிய வந்துச்சி. இனிமேப்பட்டு இன்பாக்ஸ் வரட்டும் வச்சிக்கிறேன்னு, என் கடுப்பையெல்லாம் அடக்கிக்கிட்டு கெடக்கேன்.

அன்னிக்கி ராத்திரியே இன்பாக்ஸுக்கு வந்தா. கோவமான்னு கேட்டா. நான் என்ன சொல்லிருப்பேன்னு சொல்லுங்க. ரொம்பக் கோவமா ரிப்ளையே பண்ணாம, இருக்கனும்னுதான் நெனச்சேன். பட் பாழாப்போற மனசு கேக்கல.

ஏன் போன்ல எங்கிட்ட தெரியாத மாதிரி பேசி இன்ஸல்ட் பண்ண ? ஒன் கொரலை கேக்கனும்னு எவ்ளோ ஆசையாயிருந்தேன். இப்டி ஏமாத்திட்டியேன்னு பொலம்பி அவ இன்பாக்ஸை ஈரமாக்கினேன்.

அதுக்கு அவ செல்லமா கொஞ்சலா வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணி 'இல்லப்பா. வீட்ல எல்லாரும் இருந்தாங்க. ஏற்கனவே சண்டை. அதான் பேசமுடியல.. ப்ளீஸ் கோவிச்சிக்காதடா' ன்னா.

அந்த 'டா' வுல எவனாயிருந்தாலும் கரைஞ்சுதான் போவான். நானும் கரைஞ்சேன்.

அதுக்கப்பறம் நாங்க ரொம்ப நெருக்கமாயிட்டோம். எங்க இன்பாக்ஸ் புல்லா காதலும் முத்தமும் பொங்கிவழிஞ்சுது. எனக்கிருந்த ஒரே கொறை, எப்ப போன்ல பேசனும்னு சொன்னாலும், எதாச்சும் சாக்குசொல்லி தட்டிக்கழிச்சா.

என்னதான் காதல்போதைல தலைகுப்புற கெடந்தாலும். எனக்குள்ள ஒரு வண்டு கிர்ர்ர்ர்ர்ர்ருன்னு சந்தேகமா கத்துச்சி. இந்தப் பக்கம் லவ்விகிட்டே அந்தப்பக்கம் அவளைப் பத்தி துப்பறிய ஆரம்பிச்சேன்.

அவ குடுத்த செல்நம்பரை பிரண்டு மூலம் ட்ரேஸ் பண்ணி, அட்ரஸ் பேர்லாம் கண்டுபுடிச்சேன். பேரு 'வெண்பா'. சொல்றப்பவே காதுல கவிதை வழியுதுல்ல ?

அட்ரஸ் நா இருக்கிற ஊர்லருந்து 100 கிமீ தள்ளி இருந்துச்சி.

அவளுக்கே தெரியாம அவளை பாக்கனும்னு துடிச்சேன். அந்த வீக் என்ட்லயே அபீஷியல் ட்ரிப்புன்னு வீட்ல பொய் சொல்லி அவளைத்தேடி போனேன்.

அவ வீட்டைக் கண்டுபுடிச்சேன். பட் என்ன சொல்லி உள்ள போறதுன்னு கொழம்பிட்ருந்தப்பதான், அவ வீட்டு மாடில டூலெட்னு தெரிஞ்சது. சரி வீடுபாக்கற மாதிரி போய் நோட்டம் போடலாம்னு கேட்டைத் தட்டினேன்.

நடுவாந்தரமா ஒரு அம்மா வெளிய வந்துச்சி. அவ அம்மாவாயிருக்கும்போல.

மெல்ல, வீடு காலின்னு பாத்தேன். உள்ள வரலாங்களான்னு பவ்யமா கேட்டதும், உள்ள கூப்டாங்க. நொழைஞ்சதும் முன்னாடியே சிட்டவுட் சேர்ல உக்காரச் சொல்லி குடிக்க தண்ணி குடுத்தாங்க.

என்னைப்பத்தி புல்லா விசாரிச்சாங்க. எல்லாம் சொல்லிட்ருந்தப்பதான், வீட்டுக்குள்ளருந்து அந்தப் பொண்ணு வந்துச்சி. அவளாயிருக்குமோன்னு ஒரு செகன்ட் நெனச்சேன்.

அவதான் பேஸ்புக்ல என் போட்டோல்லாம் பாத்துருக்காளே. பட் இந்தப் பொண்ணு என்னைப் பாத்த பார்வையிலயே தெரிஞ்சிருச்சி. இது அவ இல்லைன்னு.

என்னடா இதுன்னு யோசிச்சிட்ருக்கேன். வாங்க மாடிக்கிபோயி வீட்டைப் பாக்கலாம்னு கூப்பிடுறாங்க.. மாடியேறி கதவைத் தொறந்தப்பறம் உள்ள நொழைஞ்சதும் மனசு ஹேஹேய் ஹூர்ர்ர்ர்ர்ர்ரேன்னு சந்தோசத்துல கூத்தாடுறதை கஷ்டப்பட்டு கன்ட்ரோல் பண்ணிக்கிட்டேன்.

ஏன்னா அவ டைம்லைன்ல இருக்கிற அத்தனை நேச்சர் ஸ்டில்ஸும் அங்க சொவத்துல போட்டோவா தொங்கிட்ருக்கு. கரக்டாதான் வந்துருக்கேன்னு தோணுச்சி.

மெல்ல அவங்ககிட்ட, "இந்த போட்டோஸ்லாம் நல்லாருக்கேங்க எங்க வாங்கினதுங்க"ன்னு கேட்டேன். அம்மாவும் மகளும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துகிட்டாங்க.

அந்த பொண்ணுதான் சொல்லுச்சி. "இதெல்லாம் எங்க அக்கா எடுத்த போட்டோங்க"..

"ஒ அப்டீங்களா ? அவங்ககிட்ட நல்ல திறமையிருக்குங்க. பாத்துக்கங்க. எங்க அவங்க இல்லிங்களா" ?

அந்தம்மா கொஞ்சம் அழுதுக்கிட்டே சொன்னாங்க. "அவ ஒரு வருசம் முந்தி செத்துப்போயிட்டா".

எனக்கு டார்ச்சாயிருச்சி. ஒரே கொழப்பம் பயம் டென்சன். "அய்யோ என்னாச்சிங்க" ன்னு கேட்டேன்.

"நல்லாதாங்க இருந்தா. உங்க மாதிரிதான். ஐடி கம்பெனில வேல பார்த்துட்ருந்தா. பேஸ்புக்ல எவனையோ லவ் பண்ணிருக்கா. கடைசில அந்த பாவிப்பய ஏற்கனவே கல்யாணமாயி கொழந்தையெல்லாம் இருந்திருக்குன்னு தெரிஞ்சதும்"...

பாவம் சூஸைட் போல.. அவங்களால பேசமுடியாம கதறியழுதாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. அப்ப அவ யாரு? எதுக்கு இந்த செல்நம்பர் குடுத்தா?

கெளம்பறப்ப அந்த பொண்ணு குடுத்த கான்டாக்ட் நம்பரும், அவ குடுத்த நம்பரும் ஒண்ணுதான். நல்ல பேன்ஸி நம்பர்னு நா சொன்னதும், இது எங்கக்கா யூஸ் பண்ணிட்ருந்ததுன்னு விரக்தியா சொல்லிச்சி.

எனக்கு உள்ளுக்குள்ள கொலநடுக்கம். ஏதோ பெரிய சதிவலைல மாட்டிகிட்டனோன்னு பீதியாவுது. அப்ப அவகிட்டருந்து மெஸெஜ் வருது.

"கோவமா"?

நா அல்லுகலங்கிப் போயி அர்ஜன்ட்டா அவ ஐடியை பிளாக் பண்ணிட்டேன். அஞ்சு நிமிஷம் கழிச்சி, பிளாக் பண்ண அந்த ஐடிலயிருந்து மறுபடி வந்த மெசெஜ்ல இப்டி இருந்துச்சி.

"u never stop me
come to inbox”

- ஸ்ரீரங்கம் மாதவன்

Pin It