வேலையாள் கொடுத்த காப்பியை ஒரு வாய் குடித்தபடி சுற்றிலும் பார்த்தேன். இந்த பெரிய பங்களாவைப் பற்றி எனக்கு வர்ணிக்கத் தெரியவில்லை. அதற்கெல்லாம் இப்போது நேரமும் இல்லை. இந்த கதையின் கிளைமேக்ஸில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் மயில்வாகனம் என்னை உள்ளே அழைக்கக்கூடும். அதற்குள் கொஞ்சம் முன்கதை சுருக்கம்.

man moneyநான் ஒரு சீக்ரெட் ஏஜண்ட். உடனே கத்தி, ரத்தம், துப்பாக்கி, போதைமருந்து கும்பல், மாபியா, கடத்தல், மும்பை, டெல்லி, கொலைகள், சேஸிங் என்றெல்லாம் சாகசங்கள் எதிர்பார்த்து ஏமாறாதீர்கள். இது வேறு. பணிக்கு சேர்ந்த இந்த மூன்று ஆண்டுகளில் மொத்தமே ஒரு வருடம்தான் வேலை பார்த்திருப்பேன்.

திடீரென்று பிரைவேட் நம்பரிலிருந்து அழைப்பு வரும். கோட்வேர்ட் சொல்வார்கள். நானும் சொல்வேன். ஒரு முகவரி தந்து போகச் சொல்வார்கள். அங்கு சென்று பார்த்தால் அனாதையாக ஒரு கார் சாலையோரம் சாவியுடன், 'பார் ரிஜிஸ்ட்ரேஷன்'னுடன் நின்று கொண்டிருக்கும்.

அடுத்த அழைப்பில் அதை கொண்டு சேர்க்க வேண்டிய முகவரி தருவார்கள். அந்த முகவரியில் காரை விட்டுவிட்டு, கையயை துடைத்துக்கொண்டு கிளம்பி பஸ்ஸோ ரயிலோ பிடித்து வீட்டிற்குச் சென்றுவிடலாம்.

திடீரென்று ஒருநாள் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்ட கவர் வரும். உள்ளே போட்டோக்களும் சுருக்கமான சங்கேத குறிப்புகளும் இருக்கும். அடுத்த ஓரிரு வாரத்திற்கு கவரில் வந்த போட்டோவிலுள்ள நபரை அவரறியாமல் பின் தொடர்ந்து விவரம் சேகரித்து, சங்கேதக் குறிப்புகளோடு ஒரு கவரிலிட்டு, குறிப்பிட்ட தபால்பெட்டியில் சேர்த்துவிட்டு சிவனே என வீட்டிற்கு சென்றுவிடலாம்.

இவ்வளவுதான் என் பணி. ஆபீஸில்லை. அட்டனென்ஸ் இல்லை. பரிஷன் இல்லை. சபரிங் பிரம் பீவர் கடிதத்திற்கெல்லாம் வேலையேயில்லை. மாதம் பிறந்தால் டனாலென்று அக்கவுண்டில் சம்பளம் சேர்ந்துவிடும். மற்றபடி டீவி, சினிமா, டிராமா என ஜாலியாக பொழுதுபோகும்.

அப்படியும் போகாவிட்டால், கதை, கவிதைகள் எழுதி விகடனுக்கோ, குமுதத்திற்கோ அனுப்பிவிட்டு காத்துக்கொண்டிருப்பேன். திருமணமாகவில்லை. பெற்றோர் தூரத்து கிராமத்தில். பாங்கில் வேலை பார்ப்பதாகத்தான் பொய் சொல்லி வைத்திருக்கிறேன். சீக்ரெட் சீக்ரெட்.

இப்படித்தான் ஒருமுறை வந்த கவரில் மயில்வாகனத்தின் புகைப்படங்களுடன் சில குறிப்புகளும் இருக்க, சென்ற நான்கு மாதங்களாக நாய்போல அவரைத் துரத்தி சேகரித்த விபரங்கள் இன்றைய தொழில்நுட்ப உலகில் சாத்தியம்தான். மூடிவைத்திருப்பதாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் எல்லாவற்றையும் யாரோ எங்கோ உடைத்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே மயில்வாகனம் பற்றிய தகவல் சேகரிப்புகளுக்கான என் செயல்பாடுகள் எதுவும் நிச்சயம் ஜேம்ஸ்பாண்ட் வகையில் சேருமென்று நான் நம்பவில்லை.

இதோ மயில்வாகனம் பற்றி.

1 ) கி்பி் 1961 ல் திருநெல்வேலி அருகில் ஒரு கிராமத்திலிருந்து தன் மனைவி மகனுடன் சென்னைப்பட்டணம் வந்து, கானா மூனா லேனா செட்டியாரின் பலசரக்கு கடையில் கணக்குப்பிள்ளயாக பணிபுரிகின்றார் பொன்னைய்யன். செட்டியார் தயவால் பொன்னைய்யன் மகன் வேலப்பன் நன்றாகப் படித்து சிவில் எஞ்சினியராக ஆகிறார். அவர் தலைமையிலேயே திருமணமெல்லாம் முடிக்கிறார் வேலப்பன். அவருக்கு மயில்வாகனம் பிறந்த மறுமாதம் பொன்னைய்யன் காலமாகிறார்.

2 ) பொன்னைய்யன் காலமான பின்பு ஒரு பிள்ளையை வைத்துக்கொண்டு திண்டாடும் வேலப்பன்மீது கருணைகொண்ட செட்டியார், காலம் முழுக்க பொன்னைய்யனின் உழைப்பிற்கான நன்றியாக ஒரு பெருந்தொகையை வேலப்பனிடம் கொடுத்து, கொஞ்சநாளில் தானும் பொன்னைய்யனைப் பார்க்க கிளம்பிவிடுகின்றார்.

3 ) வேலப்பனின் நல்லநேரமோ அவர் உழைப்போ அல்லது அப்போதைய காலகட்டத்தின் சூழல் காரணமாகவோ வேலப்பனுக்கு தொழிலில் சூடுபிடித்தது. சர்க்கார் உத்தியோகத்தில் உள்ள அனைவருக்குமே இருந்த சொந்தவீடு எனும் கனவை காசாக்கிக் கொண்டார். நேர்த்தியாகவும் நவீனமாகவும் பிளான்கள் போட்டு சென்னையில் தனக்கென ஸ்திரமான ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டார். மயில்வாகனத்தையும் ஒரு எஞ்சினியராக்கினார். மகன் ஓரளவு தொழில் சூக்குமங்களெல்லாம் கற்றுக்கொண்டபிறகு ஒருநாள் அவரும் இயற்கை எய்தினார்.

4 ) தந்தையின் பெயரை நன்றாக பயன்படுத்திக்கொண்ட மயில்வாகனம், சென்னையிலேயே மிகப்பெரிய பில்டராக உருவானார். இன்று அந்த நகரத்திலிருக்கும் கட்டிடங்களில் பத்துசதம் அவர் நிறுவனம் கட்டியது. இன்னொரு இருபது சதம் கட்டிடங்கள் அவர் பினாமி நிறுவநங்கள் கட்டியது. கன்ஸ்ட்ரக்ஷன் மட்டுமல்லாது லிஸ்ட் போடுமளவிற்கு கன்னாப்பின்னாவென ஏகப்பட்ட தொழில்கள். கோடி கோடி கோடிகளில் பணப்புழக்கம்.

அதாவது என்னதான் உழைப்பு, விளம்பரம், அதிர்ஷ்டம் என்றெல்லாம் கூறினாலும், இரண்டே தலைமுறையில் இத்தனை பணங்காசு சேர்வதெல்லாம் சாத்தியமேயில்லை என்பதை சர்க்காரிடம் யாரோ போட்டுக் கொடுத்திருக்க வேண்டும். சர்க்காருக்கும் அதிலிருந்த லாஜிக்கற்ற தன்மை உறைத்திருக்க வேண்டும். அதனால்தான் நான்.

இப்போது இன்னும் சில விஷயங்கள்.

கோடிக்கணக்கான வெளிநாட்டு பணத்தை வைத்துக்கொண்டு ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் நடக்கின்றன நம் தேசத்தில். இவற்றில் எதுவும் பெரும்பாலும் வெளியில் கசியாது. உதாரணத்திற்கு ஒன்று.

1 ) அமெரிக்காவில் வசிக்கும் வசதியான ஒரு நிறுவனம். இந்தியாவில் ஒரு பினாமியை வைத்துக்கொண்டு போலியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதன்பேரில் மிகப்பெருந்தொகை ஒன்றினை இன்வெஸ்ட் செய்கிறது. சிலவருடங்கள் அந்த போலி நிறுவனத்தை நடத்துவதுபோல பாசாங்கு செய்து சட்டென்று ஒருநாள் இல்லாத அந்த நிறுவனம் நஷ்டத்தில் போண்டியாகிவிட்டதாக்க் கூறி மொத்த பணத்தில் குறிப்பிட்ட சதவிகித்த் தொகையை பினாமிக்கு கொடுத்துவிட்டு, மிச்சத்தை தனது பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறது.

2 ) அதேபோல வரி ஏய்ப்பிற்காகவோ, அல்லது நிஜமான மனிதாபிமானம் காரணமாகவோ ஏழ்மையில் கிடக்கும் தேசங்களின் நலன்களை முன்னிட்டு சில வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிதிதிரட்டி காத்திருக்கும். அவற்றிற்கு நம்தேசத்தில் எந்த குப்பனும் சுப்பனும் சிரமதசையில் இருக்கிறான் என்று தெரியாதல்லவா ? அதனால் இவை தங்களுக்கென்று சில ஏஜன்சிகளை வைத்திருக்கின்றன. அந்த ஏஜன்சிகள் இங்கிருக்கும் அறக்கட்டளை அமைப்புகளை கண்டுபிடித்து அவற்றிற்கு பணம்கொடுத்து சில நலத்திட்டங்களை நிறைவேற்றுகிறது. இவ்விதமான வெளிநாட்டு பணப்பரிமாற்றத்தில் வரக்கூடிய பெருந்தொகையில் சில பர்சண்டேஜ்களை மத்திய அரசும், மாநில அரசும் எடுத்துக்கொண்டு அப்ரூவல் தருகின்றன. இங்குதான் மயில்வாகனம் போன்ற ஆட்கள் நுழைகிறார்கள்.

அதாவது சென்னையில் ஒரு குப்பத்தினை தேர்ந்தெடுத்து, வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் ஜனங்களை வீடியோ பேட்டியெல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு, வெளிநாட்டு ஏஜன்சிகளை அணுகி, குப்பத்து மக்களுக்காக ஒரு பிராஜக்டை கொடுக்கிறார்கள். அந்த மக்களுக்கு குடியிருக்கும் வீடுகளோ, கல்விக்கூடமோ கட்டித்தருவதுதான் பிராஜக்ட். அட நல்ல விஷயம்தானே, இதிலென்ன ஊழல் என்கிறீர்களா ? சற்று பொறுங்கள்.

வீடுகள் கட்டித்தருவது தொடர்பாக ஒரு பிராஜக்ட். அதன் செலவுத்தொகை முப்பத்தியைந்து கோடிகள். ஆனால் பிராஜக்ட் வேல்யு என்று நூறுகோடி காட்டுகிறார். அதில் சர்க்கார் ரொம்ப ஜாஸ்திப்பா என்று இருபதுகோடிகளை கழித்துவிட்டு எண்பது கோடிகள் சாங்ஷன் செய்கிறது. அதில் தோராயமாக மத்திய, மாநில அரசிற்கும், சர்க்கார் இயந்திரத்திற்கு அங்கங்கே எண்ணெய்விடவும், இடைத்தரகர்களுக்குமாக இருபதுகோடி செலவாகிறது. மீதமிருக்கும் அறுபதில் முப்பதுகோடிகள் செலவுசெய்து பிராஜக்டை முடித்துவிட்டு மிச்சத்தை தன் அன்றாயரில் போட்டுக் கொள்கிறார். சிம்பிள்.

அந்த ஏஜன்சிகளிடம் பணம் பெறவென்றே போலியாக சில டிரஸ்டுகளை உருவாக்கி, பிராஜக்டுகளை சமர்ப்பித்து டிரஸ்டிற்கு பணத்தை மாற்றிக் கொள்கிறார் மிஸ்டர் மயில்.

இவையெல்லாம் தெரிந்துகொண்டபோது பணம் பற்றிய, வாழ்வு பற்றிய என் பார்வையே ச்சீயென்றாகிவிட்டது இங்கு தேவையற்றது. ஆயிற்றா ? டேப் செய்யப்பட்ட சில போன் உரையாடல்கள், டிரஸ்டுகள் குறித்த சந்தேகத்திற்குரிய சில ஆதாரங்கள், தகவல்களையெல்லாம் திரட்டி காத்திருக்கிறேன். காலையில் போன்வருகிறது. அந்த்த் தகவல்கள் அடங்கிய பென் ட்ரைவை கொண்டுபோய் மயில்வாகனத்திடமே ஒப்படைத்துவிடும்படி கட்டளை. அதிர்ச்சி், ஆச்சரியம், ஏமாற்றம் எல்லாம் கலந்த என் பதிலை கேட்க எதிர்முனையில் யாருமில்லை.

எனக்குப் புரிந்தது. எனக்கு மேலுள்ளவர்களுக்கு அவர்களுக்கு மேலுள்ளவர்கள் கட்டளையாக இருக்கும், அவர்களுக்கு மயில்வாகனத்தின் கட்டளையாக இருக்கும். எத்தனை அக்கவுண்டுகளுக்கு எத்தனை பணம் போயிற்றோ யாருக்குத் தெரியும்.

காய்ந்துவிட்ட காப்பிக்கோப்பையின் நுனியில் ஈக்கள் மொய்த்ததை ஆர்வமின்றி பார்த்துக் கொண்டிருந்தபோது வேலையாள் வந்து அழைத்துச் சென்றான். வீட்டின் ஒவ்வொர் செண்டிமீட்டரிலும் பணம் பணம் பணம்...

அலுவலக அறையில் உட்கார்ந்திருந்த மயில்வாகனம் என்னையே சற்றுநேரம் உற்றுப் பார்த்தார். பதிலுக்கு நானும். படபடவென அவர் கைதட்டியதும் பக்கத்து அறையிலிருந்து பத்துபேர் என்னைக் கொண்டு செல்வார்கள் என்னும் என் பயத்திற்கு பலனில்லை. சட்டென்று செக்புக்கை எடுத்து எழுதிக் கையெழுத்திட்டு என்னிடம் நீட்டினார். என் புருவச் சுருக்கத்திலிருந்த குழப்பம் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.

"உனக்குத்தான். நாலுமாசமா நெழல்மாதிரி எம்பின்னாடியே சுத்தி வந்தியே... அதுக்கு சன்மானம்"

அதை கையில் வாங்கிப் பார்த்தேன். ஏகப்பட்ட எண்களுடன்கூடிய பெருந்தொகை. நான் அவரிடம் "ஏன் சார் இவ்ளோ பணம் ? எதுக்கு இவ்ளோ பணம் ? ஒரு மனுஷனுக்கு ஒரு வாழ்க்கைக்கு இவ்ளோ பணம் தேவையா சார் ? போரடிக்கலையா சார்?” என்றெல்லாம் கேட்க நினைத்ததை கேட்காமல்,

"எனக்கு எதுக்குங்க இவ்ளோ பணம்"? என்று மட்டும் கேட்டேன்.

அவர் சலனமின்றி என்னைப் பார்த்தார். பிறகு, "மது.... மாது..... சூது.... " என்றெல்லாம் ஏதேனும் அட்வைஸ் செய்து வீரப்பா சிரிப்பு சிரிப்பாரென்ற என் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. மவுனமாக எழுந்து நகர்ந்தார். நான் பாக்கெட்டிலிருந்த பென் டிரைவை அவரிடம் நீட்டினேன். துளிகூட பதட்டமின்றி,

"அதை நீயே டிஸ்போஸ் பண்ணிரு" என சொல்லிவிட்டு திரும்பாமல் சென்றுவிட்டார்.

செய்வதறியாமல் சிலவிநாடி நின்றுவிட்டு அங்கிருந்து வெளியேறி தெருமுனையிலிருந்த டீக்கடையில் வந்து உட்கார்ந்து கொண்டேன். ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு நெற்றியில் வழிந்த வியர்வையை வழித்தெறிந்தேன். "வெயில் ரொம்ப ஜாஸ்தியில்ல"? என்று கேட்டபடி துண்டால் தன்முகம் துடைத்துக் கொண்டார் டீ மாஸ்டர்.

பக்கத்தில் கழண்ட லுங்கியும் கறைபனியனுமாக இளநீர் வெட்டிக் கொண்டிருந்தார் ஒருவர். சாலையில் ஐஸ்வண்டி ஓட்டிச்சென்றான் ஒரு சிறுவன். படுவேகமாக பைக்கில் பறந்தான் ஒரு பீட்ஸா டெலிவரி இளைஞன். இடுப்பில் குழந்தையுடன் சிக்னலில் கைநீட்டிக் கொண்டிருந்தாள் ஒரு பெண். பார்வையற்றவர் வாகனத்திலிருந்து கரகரப்பான குரலில் வழிந்தது ஒரு பழைய பாடல். எதிர்ப்புறத்து செருப்பு தைப்பவர் பக்கத்தில் கோணிச்சாக்கில் கூறுபிரித்து வெள்ளரிக்காய் விற்றுக் கொண்டிருந்தாள் ஒரு கிழவி.

சிகரெட்டின் கடைசி இழுப்பை முடித்து காலால் நசுக்கி அங்கிருந்த நகரும்போது பாக்கட்டில் கைவிட்டு அந்த செக்கை எடுத்தேன்.

- ஸ்ரீரங்கம் மாதவன்

Pin It