பிரபஞ்சம் முரண்பாடுகளில்

உழன்று கொண்டிருந்தபோது

நீண்ட ஆயுள் தவ வலிமைகளோடு

எல்லா இடங்களிலும் பதுங்கியிருந்தன தவளைகள்.

பிரபஞ்சத்தின் கூறாய்

மண்ணில் சரிந்தான் கடவுள்

அத்தருணங்களில் கோப்பைத் தேநீர் எட்டாத

ஆழத்தில் போய்விடுகிறது.

யாருமற்ற வெளியில் ஓடுகிறேன்

குறியில் இருந்துகொண்டிருக்கின்றன விரல்கள்

வெள்ளைத்தேவதை கட்டிலில் ஊர்கிறாள்

பச்சைப் பெண் தடவ

சப்த நீர் பரவுகிறது முகாந்திரங்களில்.

மூன்று காகங்கள் கிளம்பிப் போகின்றன

நான் காகமாய்

நீ காகமாய்

அவன் காகமாய்

காகங்கள் இடறியபோது கட்டிலில் விழுந்தன

உடைத்துக்கடித்து தின்கிறது நாக்கு.

தாகம்.. தாகம் தண்ணீர் தாகம்

தாகத்தை தீர்க்க ஓடி வந்தது அருவி

அள்ளுங்கையில் ஓட்டைச்சிரட்டைகள்.

அழுகிய பிணத்தைத் தின்று நிணம் வழிய

ஐந்து மொட்டைகள் வந்தன அதில்

பேச்சிழந்த மொட்டைகளின்

கைகளில் உருவகங்கள்

உருவகங்கள் நெளிகின்றன சர்ப்பங்களாக.

மூளையைக் குடைகின்ற ஓர் வண்டாக நெஞ்சில்

விந்திவிந்தி நாற்காலி நகர்ந்து கொண்டிருக்கிறது

எலும்புகள் பாறைகளாகித் தள்ளின

வெறும் காற்றை.

எதுவுமற்ற இருட்டு இரவைத்தின்று

அள்ளிப்பருகிறது கனவை

தேவதைகளால் புறக்கணிக்கப்பட்ட குறி நீரில்

எனது விரல்கள் பிசுபிசுத்துக்கொண்டிருக்க

அங்கே மிச்சமாக இருப்பது நான்.

- மருதம் கேதீஸ்

Pin It