இந்த கோவிலில் கடவுள் இல்லை
என்றார் அந்த முனிவர்!
அரசன் ஆத்திரமடைந்தார்
என்ன? கடவுள் இல்லையா?
ஓ முனிவரே!
நீங்கள் ஒரு நாத்தீகன் போல்
ஒலிக்கவில்லையா?
அந்த ஓளிரும் தங்கச் சிலை;
அந்த கிரீடம் விலை உயர்ந்த
வைர வைடூரிய கற்களால்
அலங்கரிக்கப்பட்டிருக்கிறது!
இருப்பினும் அதனை
ஒன்றுமில்லை (வெற்றிடம்) என்கிறீர்ளே?!
இல்லை மன்னா அது வெற்றிடமில்லைதான்
அது அரச பெருமையாலும்
பெருமிதத்தாலும் நிறைந்து கிடக்கிறது!
மன்னா! நீ உன்னையே ஈந்திருக்கிறாய்!
பெருமைபடுத்திக் கொண்டிருக்கிறாய்;
இந்த உலகத்திற்குத் தேவையான கடவுளை அல்ல.

“இந்த வானத்தையே
முத்தமிட்டுக் கொண்டுருக்குமிந்த
மாபெரும் கோபுரத்தின்மீது
இருபது லட்சம் தங்கக் காசுகள்
பொழியப்பட்டிருக்கின்றன”
உறுமினார் மன்னர்!
"இவையத்தனையும்
தேவையான எல்லா
சாத்திர சம்பிராதயங்கள்படி
கடவுளுக்கு அர்ப்பணித்துள்ளேன்!
இருப்பினும்
இந்த மாபெரும் கோவிலில்
கடவுள் இல்லை என்கிறாயே?!!"
முனிவர் அமைதியாக பதிலளித்தார்
"ஆம் மன்னா
உமது இருபது லட்சம் குடிகள்
வறட்சியால் உண்ண உணவின்றி
இருப்பிடமின்றி உதவிக்காக
உம்மை நாடி வந்து
விரட்டப்பட்ட அந்த வருடம் தான்
அவர்கள் காட்டிலும், மேட்டிலும்,
குகைகளிலும், சாலையோர சகதியிலும்
பழைய கோவில்களினிடிபாடுகளிலும்
தஞ்சம் அடைந்தனர்!
அந்த வருடத்தில்தான்
நீ 20 லட்சம் தங்கக் காசுகளைப் பொழிந்து
இந்த மாபெரும் கோவிலைக் கட்டினாய்!
அந்த நாள்தான் கடவுள் அறிவித்தார்:
"என் நிரந்தர இல்லம்
வானத்தில் என்றும் ஒளிரும்
விளக்குகள் சூழ்ந்தது.
அது அன்பு, பாசம், நேசம்,
அரவணைப்பு போன்ற
அற விழுமியங்களால் கட்டமைக்கப்பட்டது”
தம் சொந்த குடிமக்களுக்கு
புகலிடம் தராத ஒருவனாலா
எனக்கு இல்லத்தை தர முடியும்
என வினவினார்!
அந்த நாள்தான் அவர்
உன்னுடைய கோவிலை விட்டு வெளியேறினார்!
சாலையோர மக்களோடு மரத்தின் கீழே
தஞ்சம் அடைந்தார்"
ஆத்திரமடந்த அரசன் சீறினான்
“ ஓ! அற்பப் பதரே!
இந்த நொடியே
என் நாட்டைவிட்டு வெளியேறு”
மீண்டும் முனிவர் பதட்டப்படாமல்
பதில் அளித்தார்
“நீ எங்கே இங்கே இருந்த புனிதத்தை வெளியேற்றினாயோ
அங்கேயே அன்புடன் இந்த பக்தனையும் அனுப்பிவிடு”

(ரவீந்திரநாத் தாகூர் 120 ஆண்டுகளுக்கு முன் கோவிலைப் பற்றி எழுதிய கவிதை.
வங்காள மூல மொழியிலிருந்து ஆங்கில மொழிக்கு சந்திப்தோ தாஸ் குப்தா.
வெளியீடு நன்றி: MainstreamVOL LVIII NO.34, New Delhi dated August 8, 2020.
ஆங்கித்திலிருந்து தமிழில்: பொன்.சந்திரன், கோவை)

Pin It