எப்பொழுதும்போல
இல்லாமல் போனது
இன்றைய இரவின் பொழுது.

சுவரேறிக் குதித்து
கத்திச் செல்லும் பூனை.
பூனையின் சத்தம் கேட்டு
மூடாமல் விட்டோமாவென
வீட்டிற்குள் ஓடும் பாட்டி.

தோழியாக நினைக்கும்
கசங்கிய பூக்களும்
கலைந்த முடியுடன் செல்லும்
பின்னிரவுப் பெண்.

துண்டாகி தொங்கும் வால்
இன்றாவது விழுந்திருக்குமாவென
தேடுகின்ற
சாக்கடைக்குள்ளிருந்து வரும்
பெருத்த எலி.

பெரியவரற்ற
கடையின் படியும்
அவர் இழுத்துவிடும் சுருட்டின் ஒளியும்.

சன்னல் தொட
மறந்த காற்றென
மனம் புளுங்கிக் கிடக்கிறது
யாவையும்
நோக்கியே.

வெளிவர முடியாத
ஊனமாய்
தூக்கம் தொலைத்தவனையும்
யாரேனும்
கவனித்திருப்பார்களாவென
ஏங்குகிறது
மனம்.

**

சும்மா

சூரியனை ஏன்
கோள்கள் சுற்றுது.
பூமி ஏன்
தன்னைத்தான்
சுற்றுது.
வியாழனின்
சுற்றில் ஏன்
வினோதம் உள்ளது.
சூரியன் ஏன்
இன்னொன்றை
சுற்றுது‌.
இன்னொன்று
ஏன் மற்றொன்றை
சுற்றுது.
எல்லாவற்றி
னொன்று
ஏன்
சும்மா
விரியுது.
பாட்டியின் குரல்
தூரமாகக் கேட்டது.
சும்மா இருவேடா.
இப்போது
எல்லாம் புரிந்தது.

***

பரிகாரம் தேடும் கங்கை நீர்

நேர்மையாளர்கள் பற்றி நிற்கிறார்கள்
இறையியலின்
இறுதி எதார்த்தங்களை
ஆன்மீக அயோக்கியர்கள்
கண்டுபிடித்தார்கள்
பரிகாரக் குப்பைகளை

தீண்டாமையுடைய தர்மம்
போதிக்கிறது
தீண்டாமையை
மனித‌ தர்மம்
அலைகிறது
மன அரிப்பெடுத்து.

சிதைத்துவிட்ட பின்
சீரழிந்து கிடக்கிறது
இளந்தளிர்
அவமானங்கள் சுமந்து
அயோக்கியர்களின்
படாடோபங்களுக்கு முன்.

சாமியார்கள் காத்துக் கிடக்கிறார்கள்
பரிகார சுத்தம் செய்ய
கங்கைக் கரையோரம்
கறைபடிந்த பணத்திற்காக
கைகள் ஏந்தி.

மனிதமறியா மனிதனின்
தர்ம சாஸ்திரமெல்லாம்
வன்புணர்வில்
வாழ்விழந்தவர்களின்
கடை மயிரிடம்
வெட்கிக் கிடக்கிறது
வெகுநாளாய்.

***

மகன் விரும்பும் மனம்.

கட்டுரை எழுதுங்கள்
கவிதையாகவும் எழுதுங்கள்.
புரிந்து பேசுங்கள்.
புரியாமல் உளறுங்கள்.
சாமியைப் பற்றி பேசுங்கள்
சாமி இல்லை என்றும்
சொல்லுங்கள்
என்னிடம் மட்டும்
கிண்டலும் கேலியுமான
என் அப்பாவாகவே
பேசுங்கள்
அப்பா.

- ரவி அல்லது

Pin It