அன்றைய இரவு

பழக்கமற்ற தோரணைகள்
இருந்தது.
சுற்றிப் பார்த்துவிட்டு
கதவைத் திறந்து
மேலே சென்றவரின்
நடை
தயங்குமாறு.

முன்னறிந்ததுபோல
கதவு திறந்தது.
பிறருக்கான
அச்ச மேலீட்டால்
விரைவாக
உள் நுழைவதாக.

சந்தேகமற
உறுதியானது
சற்றேறக்குறைய
யாவரின்
பார்வைக்கும்
அறமற்ற
ஏதோவொன்று
நிகழப் போவதாக.
அன்றைய பொழுது
இரவாகிப் போனதால்.

இப்படியாகவே
முடித்திருக்கலாம் தான்
இந்தக் கவிதையை
யாவரையும்போல
புறப்பார்வை கடந்து
பொருள் தேடுபவனாக
நான்
இல்லாதிருந்தால்.

***

ஞாயிறைத் தேடும் திங்கள்கள்

வேலைக்குச் செல்லும் கணவர்கள்
விரும்பியதாகக் காட்டுவது
மனைவிகளிடம்
அன்பொழுக
'ஞாயிற்றுக்கிழமை
பார்க்கலாமென.'
சொல்வதில்.

ஞாயிறு நாட்கள்
சனிக்கு அடுத்ததாக
அமைந்தது
தற்செயலானதல்ல
ஞாயிறன்று
ஞாயிற்றுக்கிழமை
பார்க்கலாமென
சொல்லும்
கணவர்களுக்கு.

திசைகள் தெரியாமல்
திரியும் கணவர்கள்
சொன்னார்கள்
திங்களுக்கு முன்
ஞாயிறெனப்
புலம்பி.

ஒவ்வொரு முறையும்
உணர்த்துகிறார்கள்
கணவர்கள்.
புறவெளியில்
மனைவியுடன்
சுயாதீன
புகைப்படங்கள்
எடுக்கும்பொழுதெல்லாம்
உலகமொரு
நாடக மேடை
என்பதனை.

***

மறைய மறுக்கும் மகிழ்விலொரு
மன வாடல்

இன்றைக்கும்
இருக்கிறது.
எப்பொழுதும் போல
வீட்டு விழாக்களில்
பந்தல்
படாடோப
பாச ஈர்ப்புகளின்
மகிழ் கொண்டாட்டங்கள்.
வருத்தமான
உறவொன்று
முகம் வாடி
மூளையில்
இருக்குமாறு.

பகலைப் போர்த்தியவனின் தூக்கம்

தூக்கம்
தழுவவில்லை.
எல்லோரையும்போல
இருள் போர்த்திய
இரவோடு
பேசுமாவல் மேவியதால்.

நிமிட முற்கள்
நின்றபாடில்லை
காலச் சம்பவங்களில்
கவனம்
வைத்துத் தொலைத்ததால்.

புதிய ராகத்தில்
பூபாளமிசைத்தது
எக்காளமாக.
என்றைக்கும் போல
இன்றைக்கும்
பறவைகள்
என்னை வெல்ல முடியாத
ஈனத்தை நினைத்து.

சமிக்ஞைகள் எல்லாம்
சாதகமாகவே இருந்தது
விடிவதற்கான
வேளையாக....
வேலைகள் தொடங்கி
வீழ்ந்து போக.

இரவிடம்
இருக்கிறது
பகலைப் போர்த்தியவனின்
விழிப்பு
சுயாதீனமாக
சுடர்விட.

சுட்டெரிக்கலாம்
சூரியன்
சூழ்ந்த மேகம்
அழுது புலம்பலாம்
பம்பரமாக சுழலும்
பகலைப் போர்த்தி
தூக்கப் போகிறவனை
பார்க்கச் சகிக்காமல்
எப்பொழுதும் போல.

***

வானத்திற்கு வண்ணம் தீட்டி...

இப்படியாகத்தான்
எழுதி முடிக்க நினைப்பேன்
எதார்த்தத்தில்
சுவாரசியம் கூட்ட
பொய்யைக் கொஞ்சம்
கலக்கத்தான்
வேண்டியதாகிறது
அசலுடன்
அணுக்கமற்றுப் போனதால்.

- ரவி அல்லது

Pin It