எல்லாத் துயரங்களையும்
கொஞ்சநேரம்
தனிமையின்
பரணிலிட்டு
இந்த நிலவொளியில் அமர்கிறேன்
ஆறுதலுரைக்கும் இரவின் சொற்களை மடியேந்த..
கடன் நிலுவையின் பாரத்தை
நோய்மையுற்றலின் மனவலியை
பணிச்சுமையின் ஆக்கிரமிப்பை
உறவுகள் தரும் துயரத்தையென
பரணிலிட்டவற்றின் பட்டியலை அடுக்கதலிலிருந்தும் சற்று இளைப்பாற
தேநீரின் ஆவியேறும் காற்றை
உள்ளிழுத்துக் காத்திருக்குமென்
கவனத்தில் புதிதாய் ஒரு சுமை சேர்க்கும் ஆவலில் எங்கோ தொலைதூரத்தில்
இருளை நீந்தியபடி
ஒலிக்கிறது
இணையைக் காணாத பறவையின்
இடைவிடாத ஓலம்.

- ந.சிவநேசன்