கழுத்து நிரம்ப
காதலை சுமந்து கொண்டு
கடற்கரையில்
நாம் இருவரும்
யார் முதலில்
சொல்வது என்று
விக்கித்து அமர்ந்திருக்கிறோம்.
வரம் வேண்டும்
பல நூற்றாண்டுகால
மோனநிலையின் அடர்த்தி
அந்த பொழுதுக்கு வாய்த்திருந்தது
பல நேற்றைகளை போல
இன்றும் சொல்லாத
காதலை சுமந்துதான்
வீடடைவேன் என்று
புகைந்துகொண்டிருந்த
தருணம்
நம்மைக் கடந்த
புல்லாங்குழல் விற்பவன்
என்றோ நாம் எதேர்ச்சையாக
பரிமாறிக்கொண்ட காதல்
பாடலை இசைக்க
எதிரெதிர் திசையில்
முகம் மறைத்து
புன்முறுவல் பூத்திருந்தோம்.
வழக்கம் போல காதலை சொல்லாமல்
வீடடைந்த நான் உறங்கும்முன்
அந்த புல்லாங்குழல் விற்பவனுக்கு
நன்றி சொன்னேன்.
நீயும் சொன்னாய் தானே?

- நெல்சன்