பெயர்கள் வைக்கும் கலையை
நான் என்
எஜமானரிடமிருந்தே
கற்றுக் கொண்டேன்

எஜமானனின் வாயால்
வைக்கப்படும் பெயர்களுக்காக
அடிமைகள் தங்களுக்குள்
அடிபட்டுக் கொள்கின்றார்கள்

இன்னும் சிலர் சிறப்பான
பெயரை பெற
காட்டிக்கொடுக்கின்றார்கள்
ஏன் கூட்டியும் கொடுக்கின்றார்கள்.
எஜமானனின் காலை நக்கி
கதிமோட்சம் அடைய
போராடுகின்றார்கள்

அடிமைகளுக்கு வைக்கப்படும்
பெயர்களில் அதிகாரம்
ஒளிந்திருக்கின்றது
அடிமைகளுக்கு வைக்கப்படும்
பெயர்களில் ஆணவம் ஒளிந்திருக்கின்றது
எனவே எஜமானனால் இடப்படும் பெயர்கள்
வெறும் பெயர்கள் மட்டுமல்ல…

ஆள்காட்டிகளுக்கு ஆபிசர்
என்றோ அடிமுட்டாள்களுக்கு
மேனேஜர் என்றோ,
கழுத்தறுபவனுக்கு
மனிதவளம் என்றோ நீங்கள்
ஒரு எஜமானனாக இருந்தால்
பெயர் வைக்கலாம்.

நேற்று புதிதாக வாங்கிய
நாய்க்கு நான் அதன்
எஜமானன் என்ற
அடிப்படையில் மேனேஜர் என்று
பெயரிட்டேன்

அது வாலாட்டுவதும் குரைப்பது
ஆகா என்ன விசுவாசம்…

அதனை செல்லமாக
டே மேனேஜர் நாயே
இங்க வாடா…..

டே மேனேஜர் நாயே
அங்க போடா…..
என்றே அழைக்கின்றேன்

ஒரு எஜமானனாக இருப்பதில்தான் எவ்வளவு பெருமை!.

- செ.கார்கி

Pin It