பாச்சை ஒன்று
பட்டாம் பூச்சியாய்
வண்ணம் தீட்டிக் கொண்டது.. 

இயற்கை உறுப்பை வெட்டி
இறக்கைகள் ஒட்டி
செயற்கையாய்த் திரிந்தது... 

சிலர்
பாச்சையின் பூச்சுகண்டு
மயங்கி நின்றனர் 

அதன்
அசைவுகள் ஒவ்வொன்றையும்
வியந்து போற்றினர்
நாட்கள் நகர்ந்தன.. 

பாச்சை
எச்சில் தொட்டி ஒன்றில்
சிதறிக் கிடந்த
துணுக்குகளைச் சுவைக்கக்
கால்கள் படபடத்ததைக்
காண நேர்ந்தது.. 

பாச்சையைப் பட்டாம்பூச்சியென்று
நாத்தமுழ்பேறப் புகழ்ந்தவர்
நாணிக் குறுகினர் 

பாச்சைக்கோ நாணமில்லை
எச்சில் பொறுக்கலை - அது
நிறுத்தவுமில்லை 

எச்சிலில் பாச்சை
இதமாய்க் கிடப்பதை
மெச்சவும் விருப்பின்றி
தூற்றவும் துணிவின்றி
வாய்மூடிக் கிடந்தனர்
பாச்சை பாடிகள்... 

வெட்கமிலாப் பாச்சை
வெட்கமின்றிப் பாடுகிறது
பட்டாம் பூச்சி
நானொரு
பட்டாம் பூச்சி... 

நான்
உட்காரும் இடமெங்கும்
பூக்கள் மணக்கும்
நான் உதிர்த்தால்
மொழியெல்லாம்
பாக்களாய் மிதக்கும்
பட்டாம் பூச்சி..!
நானொரு
பட்டாம் பூச்சி..! 

மூடா வாயொடு
மொழிந்தது பாச்சை
இமயம் வரை சென்று
எச்சில் பொறுக்குவேன் - என்
குஞ்சுகளுக்கும் ஊட்டி
குதூகலித் திடுவேன் 

பாச்சையின் செயல்கண்டு
பதைத்தவர்கள் சொன்னார்கள்
எச்சில் பொறுக்கலை இது
என்றும் விடாது
ஏற்றி விட்ட இடத்தையும்
தூய்மையாய் வைக்காது... 

பாச்சைகள் அறவே
ஒழிக்கப்பட வேண்டின்
தூய்மையே இங்கு
துலங்கிட வேண்டும்
துடைப்பங்கள் கையில்
நிமிர்ந்திட வேண்டும்

Pin It