கைவிடப்பட்ட
எனக்கான பொழுதில்
உன்னை
தேடிக் கண்டடைவதே
வழக்கமாகிப் போனது..
ஆழிப்பேரலையென
சுழன்று, சுழன்று
எனக்குள் சுழியென
நிறைந்திருக்கும்
அன்பை
நீ எப்படி தாங்கிக் கொள்வாய்?
துளித்துளியாய்
சேர்ந்து சேர்ந்து
நீள்கடலலையென
ஓயாது ஆர்ப்பரித்துக்
கொண்டிருக்கும் அன்பிற்கு
எவ்வித எதிர்பார்ப்புமில்லை..
அன்பின் நிமித்தம்
நீயறியாதோர் நிமிடத்தில்
முகந்தூக்கி நெற்றியில் முத்தமிட்டு
கணநேரம் தழுவி
விலகுகிறேன்...
ஒரு மௌனத்தால்
ஒரு துளி கண்ணீரால்
ஒரு எமோஜி முத்தத்தால்
சற்றே உன் தோள் சாய்ந்து
முகம் அழுந்த பதித்து
உன் உள்ளங்கையை
ஒரே ஒரு முறை பிடித்தழுத்துகிறேன்.
நிறைவேறா ஆசைகளும்
கனவுகளும் புதைந்த
கண்களோடு உன்னை
பார்க்கையில் கசிந்து பெருகும்
அன்பை கையிலேந்தி நிற்கிறேன்..
உன்முன் ஒருபோதும்
கண் கலங்கிடக் கூடாதெனும்
நினைவை உடைப்பதில்
இருக்கிறது
நெகிழ்ந்து பேசுகிற
உன் சொல் அத்தனையும்...
நான்
தோற்கிற இடமும்
ஜெயிக்கிற இடமுமாய்
நீயே தானிருக்கிறாய்!
நீ
என் பலமா? பலவீனமா?
காற்று
கடத்திச் செல்கிற
காகிதம் போல்
நானிருக்கிறேன்.
இங்கு
நீ காற்று..
பிழையொன்றுமில்லை
இன்னுமிருக்கும் வாழ்வை
இன்னுமின்னும்
நகர்த்திக் கடத்த..
நீ இரு..
என்னவாக வேண்டுமானாலும்
இருந்து போ!
நொடிக்கொரு முறை
நீ எனக்கிருப்பதை
நினைவுபடுத்தியபடியே!
- இசைமலர்