ஒவ்வொருவராக
வந்தார்கள்
யாரும் யாரையும் பார்க்க
விரும்பவில்லை
பாதிமுகத்தை மறைத்துக்கொண்டார்கள்
மீதி வார்த்தைகளில் மறைந்துகொண்டார்கள்
எப்போதும் இல்லாத
இடைவெளிகொண்டவர்களாய்
நடந்துகொண்டார்கள்
அக்கம் பக்கத்தை புதிதாய்
சுழன்றுகொண்டது விழிகள்
வார்த்தைகளற்ற தலையசைப்பில்
மௌனத்தின் சலசலப்பு
அலைபேசிகள் மட்டுமே
இடைஇடையே அலறிக்கொண்டது
காலத்தின் வேகம் வெற்று நாற்காலியில்
அமர்ந்துகொண்டது
அடுக்களையின் மனம்
இடைவெளியை உடைத்துக்கொண்டதில்
உதிர்ந்துகொண்ட வார்த்தைகள்
மனிதனின் ஒவ்வாமை
தாளாமல் ஒருவருடத்திற்கு
முன்பே சட்டகத்தில்
இடம் கொண்டு
படையலுக்கு முன்
சிரித்துக்கொள்ளும்
முனுசாமியின் செவிகளில்
இனி கேட்க வாய்ப்பில்லை…
- சன்மது