வந்த முதல் இரண்டு மூன்று நாட்களில் இருந்த சோர்வு
அடுத்தடுத்த நாட்களில்
சரியாகிப் போனது
அந்த எட்டு இலை உயிருக்கு

ஹரிகுட்டி என்னைவிடவும் நல்லா பார்த்துக்க ஆரம்பிச்சுட்டான்
சின்ன ஓடைக்கற்களோடு
பாத்தி கட்டி கொஞ்சம் தெம்பாக்கியிருந்தான்

வாசல்லதான் பந்து விளையாட்டு
பெரும்பாடு பட்டு போவான் அப்போதெல்லாம்

எப்பம்மா பெருசாகும் என்ற கேள்விக்கு
என் சீக்கிரமாய்ங்கிற பதில் போதவில்லை அவனுக்கு
அரிசி களைந்த தண்ணீரில்
முட்டைஓடு மிதந்தது

தூங்கி எழுந்து முதல்வேலை
கொஞ்சம் பேசனும் அவனுக்கு அதனுடன்
அதோடு ஒத்த ஜாடை வகையாறாக்கள்
பூக்க ஆரம்பித்த பின்
கேட்க ஆரம்பித்து விட்டான்
எப்பம்மா பூக்கும்...

என் உசரம் தட்டும் அந்த பச்சை உயிரிடம்
கேட்க எந்தக் கேள்வியும் இல்லை என்னிடம்

அரையாண்டு லீவுக்கு ஊருக்குப் போனாலும்
பேசற‌ வார்த்தையில் மொட்லிய பார்த்துங்கம்மா
பந்து பட்டுடப்போகுதும்பான்
தண்ணி ஊத்த மறக்காதிங்க
தினமும் பேசுங்கம்பான்

பத்து நாள் முடிந்து
ஒரு ஞாயிறு மதியம் வந்தவனின் கைகளுக்குள்
மினுக்கும் பச்சை மொட்டுகளை
தந்திருந்தாள் அவள்

நம்ம மொட்லியோட பூ பேரு தங்கஅரளின்னு சொல்றான்மா மனோஜ்...
நா சொல்லிட்டேன் மொட்லின்னுதான் கூப்படனும்ன்னு சொன்வனின் குரலில்
ஒரு அப்பாவின் பெருமிதம்...

- இந்து

Pin It