00
கண்களைச் சாத்தி
இருளை மூடுகிறாய்
வகிர்ந்த ஒளிக்கற்றையில்
நான் வைரமென உயிர்த்திருப்பேன்
சட்டென்று விரியும் தனிப்பாதையில்
ஜீவிதத்தின் புறக்கணிப்புகள்
தேவையாயிருக்கிறது
அவை மழைப்பாதையின்
இரு தனித்த தண்டவாளங்களென
பிரிந்தே பயணிக்கின்றன
பனி உருகும்
சிகரங்களைப் போல
உன் மனதுள் ஒதுங்கி
சலனத்துள் உறைகிறது
மலையிரவின் காலம்
00
கூடிப் பிரியும் வேளை
உயிரடங்கிய கைகளுக்குள்
அழகேறிக் குளிர்த்திக் கொள்ளும்
இருள் முறுகி
விடிகாலையின் ஸ்பரிசத்தில்
இழையோடும் நின் அரூபம்
கொத்திக் கொத்தி உறையும்
கணங்களில்
நகரத் துவங்கும் வீதிகளில்
கடல்களை இடம்பெயர்த்த
சாத்தான்களின்வனம்
உதிர்ந்த சிறகுகளில்
உதிர்த்த பூக்களில்
கைதாகிய காற்றின் விடுதலையில்
வன்மம் தெறிக்கவில்லை
மரத்துப் போன இருளின் தீராப்பசிக்கு
மடிநுகரப் பரசளிக்கிறது
முதல் தோட்டத்தில்
என்னை விட்டுச் செல்கிறேன்
உவர்க்கும் கனிகளிலிருந்து
வெண்ணிற ஒளி வழிகிறது
இப்பிரபஞ்சத்தைத்துளைகளிட்ட
நதியின் பாடலாய்
00
இளைப்பாறவும்
இலை சிரம் கோதவும்
துயில்மர நிழலில்
ஓர் இருக்கையிட்டிருக்கிறேன்
இறக்கை நெரிந்து
நீயேன் துயர் படர்ந்திருக்கிறாய்
ஜி எம் ரி கடிகாரத்தின் இதயம்
துடிப்பை நிறுத்தவே இல்லை
காலத்தின் வெளி
கி.பி ஏழாம் நூற்றாண்டிற்கு
தன்னைக் கடத்துகிறது
ஆகாயத்தை நீலம் கொண்டு தீட்டிய
கிரேட் பிரிட்டனின்
வெண்தூரிகை கெக்கலித்துச் சிரிக்கிறது
விடிவின் வெளிர்மஞ்சள் துளிராய் உன்னை
என்னுள் கொணர்கிறது
இந்த மரங்களுக்கு துயரில்லை
வெட்டியதும் மீள் தளிர்க்கிறது
திசையேகும் உன் விரல்களில் இருந்து
பிரபஞ்சம் விரிகிறது
நீ ஓர் உயிர் என்பது
என் மீளமுடியாத சலனம் தானே
00
நேற்றில் புதையுண்ட
இன்றின் ஆதாரமான நிமித்தங்கள்
ஆகச்சிறந்த நாளைக்கான
இருத்தலின் சாத்தியக் கூறுகள் எனில்
இலையின் கடைசிச் சொட்டில்
கண் சாத்தும் ஒரு காடடர்வில்
திசை தெறிக்க வரையும் நீலநதியில்
முதல் பூவின் முகையுள்
இரையடக்கிக் கூடடையும் பறவையில்
கன்று முட்ட மடியிறங்கும் பாலில்
உயிர்த்தெழுகிறது
அனாதியின் வாஞ்சைமிகு நிமித்தங்கள்
00
மூன்றாம் நூற்றாண்டின்
உட் பொருந்திய கடிகையில்
கால உணர்வு துடிக்கிறது
அவர்கள் சாம்பல் நிறக் காலைகளை
குளிர்ந்த ஏரியில் மலர்த்துகிறார்கள்
சப்பள் ஸ்றீட் சென் ஜோசப் தேவாலயத்தின்
நிழலிருளில் உறங்கும் கல்லைத் துளைக்கும்
உளியின் கண்கள் விழித்துக் கொள்கின்றன
கழுகுகளின் சிறகொடித்து
வசீகரமிக்க ஆலயமணி கடைசிப்பாடலாய்
குடிசைகளை இரும்புக் கடிவாளமிடுகிறது
தோற்றுப் போகும் கணமொன்று
ஆறாவது மலையில் சிற்பமொன்றாய்
இலையற்றுப் பூத்த
சரக்கொன்றை நடுவே உருமாறுகிறது
அவன் காந்தள் விசிறும் செங்கண்கள்
இருளை மூடி படிகப் புலப்படலாய்
வனங்களை உதிர்த்தன
ஓர் இசைக்குள் மலைமுகட்டை
நகர்த்திக் கொண்டிருந்தான்
மகரந்தக் கனவுகளோடு உயிருற
குரவைமீன்கள்அலையின் கிளைகளைத்
தாவித் திறக்கின்றன
மெய்தழுவி உயிர் தளைக்கும் துயராழியில்
பவளப்படுகையாகிக்கொண்டிருந்தேன்
00
இடையறாத இருகணங்களுக்குள்
ஒரு சிறு சலனம்
சமன்குலைவை ஏற்படுத்திவிடுகிறது
எதிர்காலம் வசீகரிக்கிறது
இதோ அருகில் இருக்கிறது
என் முகம்
அழுவதற்கும் சிரிப்பதற்கும்
அக்குழந்தையின் கண்கள்
பனிப்பதைத் தான் செய்கின்றன
ரகசியங்களைக் கவிழ்த்து வைத்து
ஒரு மரத்தை எப்புறம் பார்த்தும்
வரலாற்றை அறிய முடிவதில்லை
கடலடியில் கிடக்கும்
கூர்மையற்ற பாறையும்
உரசியதும் கிழிக்கத்தான் செய்கிறது
எண்ணங்களுக்கு மொழியேது
எந்த மொழியில் மொழிபெயர்ப்பது
உங்கள் எண்ணங்களால்
மொழிபெயர்த்துப்பாருங்கள்
00
ஆளரவமற்ற சென் தோமஸ் தேவாலயத்தில்
நின்று உற்றுப் பார்த்தேன்
சவுக்கு மரங்கள்
நரைத்த காற்றில் முறிந்திருந்தன
போன்சாய் இலைகளின்
கூதலுற்ற சருமமாய்
ஒரு விளக்கு நடுங்கியது
மனிதர்கள் உயிருடன் புதைக்கப்பட்ட
நினைவுறு கணத்தின்
நாடிப்பிணைப்பென
உச்சியில் ஒரு வட்டக்கடிகாரம்
துடித்துக் கொண்டிருந்தது
ஐங்கோணக் கற்களால்
செதுக்கப்பட்ட அம்முற்றத்தில்
உயிர்ப்பின் ஓவியத்திற்கான
எவ்வித பரிமாணங்களும் இல்லை
வாசனையற்ற உதிராப் பூக்களின்
செடிகள் முளை விட்டிருந்தன
மெல்லென ஒலித்த மணி
அந்நகரத்தையே தொற்றிக் கொள்கிறது
மனமதிரும் என்னுள்
நழுவிச் செல்லும் ஆதிப்பேச்சொலி
தோற்றுக் கொண்டிருந்தது
கைவிடப்பட்ட வீடொன்றில்
கைவிடப்பட்ட நாளொன்றையும்
சிலுவையேந்திய கணமொன்றை விடுத்து
சிதையேற்றி விடலாம் தான்
இறுகும் வேர்களுடன்
அப்போது நிஜமாய்
பிறந்து கொண்டிருந்தேன்
- தமிழ் உதயா, லண்டன்