கோடு போட்ட சட்டை அல்லது
கட்டம் போட்ட சட்டை

அளவான மீசைக்குள்
அணைத்து வைத்திருக்கும் சிரிப்பை
காண்பது அபூர்வம்தான்

எந்நேரமும் தலை கலைக்காத
சிவாஜி தோற்றம்

டி வி எஸ் 50ல
போகப் போக
போர்மேன் சார்னு கூப்படறவங்களுக்கு
கை அசைத்தலில்
அழகும் மரியாதையும்

வீட்டில் படிச்ச முதல் பையன்
ஒருநாளும் தன் கிராமத்துக்குள்ள
நடை மாத்துனது இல்லை...

எல்லா தெருவுக்குள்ளும் ஏகபோக மரியாதையும்
வாஞ்சையான வார்த்தைகளும்தான் அவருக்கு

மூணு வாய் பேசமுடியாத
காது கேட்காத
கண்ணும் தெரியாத அக்காக்களுக்கும்
அண்ணன் தான்
ஆனா அப்பா

புடிச்ச பொண்ணுகிட்டருந்து புடிச்சிருக்குன்னு
வார்த்தை வாங்கிய அடுத்த நாளே கல்யாணம்

உண்மையாவே கட்டிய புடவையோடு்
ஆரம்பிச்ச வாழ்க்கை அற்புதம்தான்....
சாட்சி நாங்க ரெண்டு பேரும்

முழுசாய் பத்து வருசம் கழிச்சு
ஒரு மழைநாள்ல அந்த ஈரமனுசன்
வாழ்ந்த ஊருக்குப் போனேன்
அண்ணங்கூட

வரப்பு மேட்ல நின்னுட்ருந்த கூட்டத்துக்குள்ள
சின்ன சலசலப்பு

யாரும்யா இவுக....
சம்முவம் மவுளும் மவுனுமாய்யா...
நல்லா இருங்க எம்மக்களேன்னு
வந்த கரகரப்பு குரல்ல
அப்பாவின் குரலும்.....

- இந்து

Pin It