கோயம்புத்தூர்ல கிளம்பும் போதே
சொல்லியிருந்தாலும்
எதிர்பாராது வீட்டுக்கு வந்த குலசாமியை
வரவேற்கும் ஆராவாரம் தான்
ஒவ்வொரு முறை அப்பாவிடம்...

தோசை இட்லியோடு
ஒரு பூரி உப்பி சிரிக்கும்
காலைத் தட்டில்
அப்பா கை தொடாமல் எதுவும் இருக்காது...
சாப்பிட்டு முடிக்க முடிக்க
சமையல் அறைப் பக்கமிருந்து
அப்பா மொழியில்
நல்லதா குட்டி தோசை ஒன்னு
வந்தே தீரும் சற்று மொருகலாய்...

மதியம் மிளகு சூப்பில் ஆரம்பித்து
இலை நிரப்பிக் கிடைப்பவையில்
மீன் ஒன்று கண்ணடிக்கும்
இரண்டு மஞ்சள்கரு உருண்ட பின்
இருக்கும் மிச்சவைகள்
சொல்லிற்கு அப்பாற்பட்டவை...

மறுநாள் அவருக்கு லீவ் இல்லைப்பா
வெள்ளனே கிளம்பிடறேன்பா என்றாலும்
காலாற நடந்தா பசிச்சிரும்னு
இரவு உணவுக்கு தயாராக்கும் அப்பாவுக்கு
சம்மணம் போட்டு உக்கார சிரமம் தான்...
சின்ன பிள்ளையில அவரின் தொப்பை மேல
தட்டு இருப்பதுபோல
பாவலா பண்ணிக்கிட்டு சாப்டுவேன்...

எதுவும் சாப்பிட முடியாத இரவை
கடைசிக்கு ரசம் சோறாச்சும்னு
வாய் நிறைத்துவிடும் அப்பாவுக்கு
நாளை சாமி கும்படனுமாம்....
விஜியண்ணன் வரச் சொல்றான்
நா வந்தாதா காக்கா சோறு எடுக்குமாம்...

- இந்து

Pin It