lady on railway trackகணப்பொழுதுகளில்
நெருங்கி வருகின்றாய்,
கண்ணிமைக்குமொரு இடைவெளியில்
காற்றாய் கலந்து மறைகிறாய்
பார்வை வீச்சுகளில் போதையேற்றி
பித்தாக்குவதில் உனக்கேன் இத்தனை ஆவல்...

சருகுகளடர்ந்த
சாலையோர மரநிழலிலும்
ஆற்றங்கரையோரத்து
ஈர மணற்பரப்பிலும்
உன் பாதச் சுவடுகள் தேடி
நடக்க முற்படுகின்றேன்.
எனினும் இதில் பேய்க்காதல் ஒன்றுமில்லை
உன்னைப் பின்தொடர விரும்புவதின்
வெளிப்பாடென புளுகித் தள்ளுகிறேன்.

எனக்கே எனக்கானதெரு
தனித்துவப் பிரியங்களோடு
நீ மொழிந்திடும்
கரிசனம் பொதிந்த வார்த்தைகளெல்லாம்
நெஞ்சுக்கூட்டினது ரகசியப் பெட்டகத்தினுள்
கூரிய ஆணிகொண்டு ஆளப் பதித்திட விரும்புகிறேன்.
ஆயினும்
நீ எனது ஆத்மார்த்த நலம்விரும்பி மட்டுமே
என்று புரட்டிப் பேசித் திரிவதில் பேரானந்தம் கொள்கின்றேன்.

காத்திருந்த இளநேரமும்
கடந்துசென்ற பாதைகளும்
நினைவுகளைக் கீறிவிட்டு
தீராக் காதலொன்றின் ரணங்களை
வெந்தழலில் விம்மிப் பெருக்க செய்கிறது.
சொல்லித் தீர்த்திடவியலாத பெருநேசத்துடன்
இணைந்திடவியலாதெரு குறுகிய இடைவெளியுடனே
ஒரு நெடுந்தொலைவைப் பயணித்து விட்டிருந்தோம்
இந்தத் தண்டவாள கம்பிகளைப் போன்றே நாமும்...

- எஸ்.ஹஸீனா பேகம்

Pin It