என் வீட்டிற்கும்
உன் வீட்டிற்கும்
சில வயல்வெளிகளே
தூரம் இருப்பதாக சொன்னாய்
இரயில் எஞ்சினின்
பெருமூச்சு
உன் வாசலில் கேட்கும் போது
கடைசிப் பெட்டி
என் வீட்டைக்கடந்து செல்லக்கூடும்
என்று அடிக்கடி சொல்வாய்..!
உன் அப்பாவும்
என் அப்பாவும்
ஒரே துறையில்
வேறு வேறு அலுவலகங்களில்
இணையான அதிகாரிகளாக
பதவி வகித்திருக்கிறார்கள்..!
உன் தெருவில் பெய்த
மழையின் சாரல்
என் வாசலில்
ஈரம் சொட்டுவதை
நெடுநாள் இரசித்திருக்கிறேன்..!
ஆனாலும் -
உன் நெஞ்சில் பொங்கி
பிரவகித்த காதலை
கண்களால் அன்றி
சொற்களால்
சொல்ல முடியாமல் போனதற்கு
காரணங்கள் நான் அறிவேன்..!
தண்டவாளங்களில்
நம் உடல்கள்
வெட்டுண்டுக் கிடக்காமல்
வேறு வேறு குடும்பங்களாய்
வாழ்ந்திருந்து நலம்
விசாரித்துக் கொள்கிறோம்..!
ஊரும் சேரியும்
ஒன்றாகும் காலத்தில்
நாம் மீண்டும்
காதலிக்கலாம் அன்பே..!
- அமீர் அப்பாஸ்