lovers 403யாரோ அனுப்பும்
காதல் கவிதைக்குள்ளெல்லாம்
நாமே இருப்பதாக நம்புகிறேன்...
நாம் மட்டுமே என்பது உன்
நம்பிக்கை....

மதிய இடைவேளையை
உன் அலைபேசி அழைப்பே
விருந்தாக்குகிறது...

முத்தத்துக்கு ஒரு முறை உதடுகள்
அனுப்பியும்
ஒரு முறை முத்தம் என்றனுப்பியும்
ஒரு முறை உன் பெயர் அனுப்பியும்
தியரி செய்கிறாய்....

தேடித் தேடி அனுப்பியதாக சொன்ன
உன் சிறுவயது புகைப்படத்தில்
இல்லாத என்னை
சந்தேகமெனில் இப்போது பார்
எதிர்காலத்தில் கிடைத்திருக்கிறேன்....

கொஞ்சம் சிரிக்கும் பேச்சில்தான்
ஆரம்பிக்கின்றாய்
எனைக் கொஞ்சி சிரிக்கும்
அன்றைய முத்தங்களை...

நாம் எப்போதும் வரும் வழியில்
எப்போதாவது தனித்து வருகிறேன்...
வழியெங்கும் விசாரிக்கிறது
குறிப்பாக நீ கொஞ்சம் நெருங்கியமரும்
இடத்திலிருக்கும்
பூட்டியே கிடக்கும் அந்த வீட்டு
இருட்டு வாசனைப் பூக்கள்...

எப்படி உளறுவாய் என் பெயரை
என்று உளறிப் பார்க்கும் உன் பெயரோடு
நள்ளிரவே விடிந்து விடுகிறது...
சரி வழக்கம் போல
இனி அது
உன் உன்னிரவு....!

- கவிஜி

Pin It