அதிகாலை அந்திமாலை
முன்னிரவு பின்னிரவு
நடுநிசி
எப்போதும் அவள்
காணக்கிடைப்பாள்

குளிரூட்டிய முகத்தோடு தான்
வலம் வருவாள்
மணக்கும் கனவுகள்
அவளுடையவை

தெருக்குழாயில் அவள் முறைக்கு
தேன் சொட்டுவதாக
வீதிப்பெண்கள் கற்பனை

சுங்கிடிப் புடவை மிடி
குட்டைப்பாவாடை
தாவணி, சுடி, பேண்ட் சட்டை
அவரவர் சார்ந்தது அவளாடை

இளையராஜா ரஹ்மான் தேவா
சில நாட்களில் எம் எஸ் கூட
வீடெங்கும் இசையாகும்
வீணை அவள் பாடு

ஜன்னல் திறந்திருந்தால்
விடுமுறை என்று அர்த்தம்
தலை விரிந்திருக்கும்
தவம் கலைந்திருக்கும்

அவள் வாசலை ஆண்
பாதங்களே முப்பொழுதும்
அளவெடுக்கின்றன

அள்ள அள்ள குறையாத
அந்த பாதங்களை
மாதம் மூன்று நாட்கள் மட்டும்
அள்ளி எடுத்து சுத்தம் செய்கிறாள்

அதாகப்படுகிறது
அவளாக்கப்பட்டது...!

- கவிஜி

Pin It