எங்கள் தெருவில்
நிறைய தெருநாய்கள்,
தனியாக, குழுவாக
கூட்டணி அமைத்துக்
கொண்ட குழுக்களாக
எப்பொழுது எதற்காக
சண்டையிட்டுக் கொள்ளும்
என்றெல்லாம் அனுமானிக்கவே
இயலாது அலைந்து திரியும்.

இரவு நேரங்களில்,
சீருடையணியாத காவலர்களாய்,
ரோந்துப் பணியிலிருக்கும்
இவைகளுக்குப் பயந்து
கையில் குச்சியுடன்
வீடு திரும்பும் தெருவாசிகளின்
பின்னாலேயே
சிறிது இடைவெளியில்,
வன்மத்துடன் குரைத்தவாறே
வாசல்வரை வந்து திரும்பும்.

அழுக்குக் கந்தல் ஆடைகளோடு
அலையும் பிச்சைக்காரர்கள்,
மனநலம் பிறழ்ந்தவர்கள்
என்றால் அனைத்தும்
ஒற்றைக் கூட்டணியில் இணைந்து
ஆக்ரோசமாய் துரத்தியடிக்கும்.

ஒருமுறை, தெருவில் நடந்த
பல திருட்டுகளில்
தொடர்புடையவனை காவலர்கள்
விசாரணைக்கு அழைத்து வர,
அத்தனையும் அவனைச்
சூழ்ந்து கொண்டு
சினேகமாய் வாலாட்டும் பொழுதுதான்
வெளிச்சத்துக்கு வந்தது..
பிஸ்கட்டும் இனிப்புகளும்
வழங்கி வந்த அவனுடனான
இவைகளுகளின் 'கள்ள உறவு' ..!

- ஆதியோகி

Pin It