இன்றிலிருந்து
என் கவனிப்பு குறையத்தொடங்கிவிடுகிறது
உனது குறும்புகள் யாவும்
என் நூலகத்தில் அடுக்கிவிடப்படுகிறது
நீ எதையாவது தொட்டு
உடைக்கும் போது ஏசத்தோன்றுகிறது
விளையாட்டுப்பொருளும்
உன் குட்டையான பாவாடையும்
உனக்கான அலுமாரியில்
உறங்கிய தொட்டில்கூட
பழுதுபார்க்கபடுகிறது
மெல்ல மெல்ல
என் எண்ணத்தில்
உன்னை குடிபெயர்க்கிறார்
ஒரு சந்தர்ப்பத்தில்
கண்கள் நிறைக்க
குழந்தைத்தனத்துடன்
என் வயிற்றைதடவி
தம்பி பாப்பா என்று சொல்லிக்கொண்டு
முகம்கழிப்படைகிறாய்
நான் உன்னை சுமந்த
அதே நாளை
நெஞ்சில் சுமந்துகொண்டு
ஆரவாரப்படுகிறேன்
உனது பெண் உலகை
மறந்து
தன் ஆண் உலகை அடையாளப்படுத்துகிறார்
உன் அப்பா
நீ துயரத்தின்போது
நிவர்த்திசெய்த
அந்த மகிழ்ச்சிப்பழங்களை
இன்று தூரத்தில் எறிந்துவிட்டார்
ஏதாச்சும்
குழந்தை பற்றி கனவுகாணும்போது
அடிக்கடி ஆண்பிள்ளையென்று
வயிற்றை முத்தமிடும்
உன் அப்பாவிடம்
என் தாய்மையை எப்படி உணர்த்திச்செல்வேன்

- ஜெ.ஈழநிலவன்

Pin It