மரண வீட்டு வாசலில்
என்னை எதிர்பார்த்துக் கிடந்தாய்
நடுநிசி தாண்டியும் கண்ணிமைக்காது காத்திருந்தாய்
நான் கட்டுண்டு கிடப்பது தெரிந்தும்
என் வருகையை அடிக்கடி வீதிவந்து
எட்டி எட்டிப் பார்த்தாய்
வந்த திரளில் தேடித்தேடி நோட்டமிட்டாய்

ஆயிரம் ஆறுதல் உனக்குக் கிடைத்தன
எப்படி இந்த ஒன்றேயொன்றை ஆயிரத்துக்குச் சமனாக்குகிறாய்...!
எனது கட்டுகளை உடைத்து
அல்லது, குறைந்தபட்சம் அனுமதியேனும் பெற்று
உன் வாசல் வந்து,
ஒரே ஒரு வார்த்தை
கூறிப்போக முடியாது போகும்
தவிப்பும் ஊமையும்
உனக்கெங்கே புரியப்போகிறது
ஆயிரத்தையே என்னில் வைத்திருக்கும் போது

போடி, பைத்தியக்காரி
உன் வாங்காக் கண் ஈர்ப்பு முன்
இங்கு உறக்கமில்லாத் தவிப்பும் அவஸ்தையும் சமன் ஆகா

சமன்பாடுகளே தோற்றுப் போவதுதானே உறவு
உனது நீண்ட இரவில் இவனை வாசலாகவோ,
ஜன்னலாகவோ இப்போதைக்கு வைத்துக்கொள்
வெளியில் ஏங்கும் நிலவில் நான் வருவேன்
கடக்கும் வழியில், நான் வீசும் நட்சத்திரம் ஆறுதலாகும்.

- கே.முனாஸ்

Pin It